பிரிட்டனில் மீண்டும் தொழிற்கட்சி: ரிஷி சுனாக்கின் எதிர்பார்க்கப்பட்ட தோல்வி!… ஈழத்தமிழ் பெண் எம்.பியின் வெற்றி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக தொழிற்கட்சியுன் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்கவுள்ளார்.
யார் இந்த கியர் ஸ்டாமர் ?
தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கியர் ஸ்டாமர் ஏப்ரல் 2020இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார்மருக்கு 61 வயது தான். வழக்கறிஞரான கியர் ஸ்டாமர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார்.
தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே கியர் ஸ்டாமர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தொழிற்கட்சியின் தலைவரான பிறகு, இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.
ரிஷி சுனக் வரலாறு காணாத தோல்வி:
நடந்து முடிந்துள்ள தேர்தலில் ரிஷி சுனக் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. 2022 ஆண்டில் பிரிட்டனில் சில வார இடைவெளியில் இரண்டு பிரதமர்கள் விலகிய நிலையில், அப்போது அங்கே அரசியல் ரீதியாக மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இளம் வயது பிரதமர், முதல் இந்து பிரதமர் எனப் பல சிறப்புகளை இவர் உலகளவில் அடையாளத்தை பெற்றார். ஆயினும் பிரிட்டன் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், அதைச் சரி செய்ய ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினார்.
ரிஷி சுனக் ஆட்சியில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவியது. இதனால் அங்கே ஆளும் அரசு மீது மக்களிடையே மிகப் பெரிய கோபம் நிலவியது. அதுவே இப்போது ரிஷி சுனக்கிற்கு பெரும் தலைவலியாக மாறி, பாரிய படுதோல்வியை சந்தித்துள்ளார்.
தொழிற் கட்சி பெரும்பான்மை:
இந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 411 இடங்களை இதுவரை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளது.
தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 411 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 119 இடங்களிலும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களிலும்
வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகஏ பல கருத்துக் கணிப்புகள் முன்பு வெளியாகின. அதற்கேற்ப இந்த தேர்தலில் தொழில் கட்சி வெற்றிபெற்று 14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்திவந்து. பலமுறை கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியமை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர்களும் மாறினர்.
பிரதமராக இருந்த ரிஷி சுனக் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் வைத்திருந்த போதிலும் பின்னர், அவரது செல்வாக்கு கடுமையாக சரிந்தது என கருத்துக் கணிப்புக்கள் முன்னரே தெரிவித்தன.
ஈழத்தமிழ் பெண் வெற்றி:
இம்முறை முதல் முறையாக பிரித்தானிய பொதுத் தேர்தலில் பல தமிழ் வேட்பாளர்கள்
போட்டியிடும் வாய்ப்பை பெற்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டியிட்டிருந்தனர்.
இவர்களுள் தொழிலாளர் கட்சியின் சார்பாக உமா குமாரன் (Uma Kumaran) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலை உற்று நோக்கி வந்தனர்.
உமா குமரன் வெற்றி :
இந்நிலையில், 19,145 வாக்குகளை பெற்று உமா குமரன் பெரும் வெற்றியடைந்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்று சாதனையை உமா குமரன் படைத்துள்ளார்.
எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ள இவ்வரலாற்று சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை லிபரல் கட்சி வேட்பாளரான லூக் டெயிலர் 17,576 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
கான்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட டாம் 13,775 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழ் பெண் வேட்பாளரான கிருஷ்ணி 8,430 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் ஆதரவு :
பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளமையால், அது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்கு வலுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பாரக்கின்றனர்.
அத்துடன் தொழில் கட்சி தமது தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தியுள்ளது.
உலக அரங்கில் கனடாவின் அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது. கடந்தமுறை ஹரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றத்துக்கு தெரிவானதுடன், அமைச்சுப் பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஓரளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். இம்முறை அமெரிக்க தேர்தலிலும் சில தமிழர்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் செயல்படும் தேவை எழுந்துள்ளது.
உலக அரசியலில் தமிழர்:
உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தற்போதய பிரித்தானியத் தேர்தல் வெற்றி, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களும் மேற்கத்திய அரசியலில் செல்வாக்கும் செலுத்தும் நபர்களாக உள்ளனர்.
இவர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களுக்கான பொது அரசியல் கோட்பாடுகளை வகுத்து செயல்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழர் உரிமைக்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா