“அகிம்சை” … சிறுகதை …. 74 …. அண்டனூர் சுரா.
மரங்களில் திட்டுகளாக தீப்புண்கள். கிளைகள் முறிந்து, கிழிந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன. சாலைகளெங்கும் புழுதி வெள்ளம். சுவாசிக்கும் காற்றில் கார்பன் படிகம், நச்சுக்கலந்த புகை மூட்டம், கண்ணெரிச்சலைக் கொடுக்கும் கந்தக நெடி.
தரையிலிருந்து செங்குத்தாகப் பறக்கும் இயந்திரப் பறவைகள். தீபாவளி பட்டாசைப் போலப் புகையைக் கக்கிக்கொண்டு நான்கு திசைகளிலும் சீறும் ஏவுகணைகள். செவிப்பறையைக் கிழிக்கும் ‘கீரிச்’ சத்தம் . காற்றை அறைந்து நிசப்தத்தை விழுங்கி ‘விரீட், விரீட்’ எனப் பீறிடுகிறது குட்டி விமானங்கள்.
விண்ணைத்தொடும் தீப்பிழம்பு கொழுந்துவிட்டு எரிந்து , வாழ்வாதாரத்தை தின்று, உயிரிகளைப் பொசுக்கி கரும்புகையாக, பூதமாக, தூசியாக, நெருப்பாக, வெப்பச் சலனமாக மேலே எழும்புகிறது. கோழிகள் பறக்க இறக்கைகள் இருந்தும் எழுந்து பறப்பதற்குள் நெருப்பின் கோரப்பசிக்கு வெந்து மடிகின்றன. ஆடுகள், மாடுகள் கட்டுத்தறிகளில் நின்று, நின்றபடியே குடல் சரிந்து, கால்களை உதறி, மூச்சுமுட்ட உயிர் விடுகின்றன .
அவர் இவ்வளவையும் பார்த்துக்கொண்டு, எந்தச் சலனமுமின்றி நின்றுகொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு ஆயுதம் இருந்தது. தற்காப்பிற்காக. மிகவும் பழைய காலத்து ஆயுதம் அது. சாயம் இழந்து, கீறல் விழுந்து, தூக்கி எறிவதற்குமுன் கடைசி கடைசியாக இதற்காகவாவது பயன்படட்டும் என அந்த ஆயுதம் அவரது கைக்குக் கொடுத்திருந்தார்கள். அவருக்கு அந்த ஆயுதத்தைப் பயன்படுத்த தெரியாது. அவர் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துமளவிற்கு இந்தத் தேசத்தைச் சேர்ந்தவரல்ல. அவரது தேசம் வேறு. அவரது மொழி வேறு.
அண்டை நாட்டில் உள்நாட்டுப் போர் என்றால் உலக நாடுகளுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக மூக்கை நுழைக்கலாம் என எழுதப்படாத விதியின்கீழ் அவர் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தார். அவர் நாடு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களுக்குக் காவலாக நின்றுகொண்டிருந்தார். அவர்கூட வந்த மற்ற சிப்பாய்கள் அந்தப் போர் நடத்தும் தேசத்துக்கு ஆதரவாகத் துப்பாக்கி ஏந்திக்கொண்டு, அந்நாட்டு சிப்பாய்களுடன் இரண்டறக் கலந்து; போரை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர் மட்டும் ஆயுதங்களுக்குக் காவலாக நின்றுகொண்டிருந்தார்.
இராணுவச் சிப்பாயைப் போல இறுக்கமான சீருடையை அணிந்திருந்தார். அந்த ஆடை அவருக்கு அருவறுப்பைக் கொடுத்தது. அசூசையாகவும் வெட்கையாகவும் இருந்தது. அழுக்குப் படிந்தாலும் வெளியே தெரியாத கரும்பச்சை, சாம்பல் கலந்த சீருடை அது. அவருக்கு அந்த சீருடையை அணிவித்தவன் அவரது தலைமைச் சிப்பாய். “உனக்கு இந்த உடை பொருத்தமாக இருக்கிறது” என்று பாராட்டினான். மேலும் அவன் எல்லாருக்கும் கேட்கும்படியாக ஒரு கட்டளை பிறப்பித்தான்.
“சிப்பாய்களே, என்ன நிகழ்ந்தாலும், நானே சொன்னாலும் இந்த இராணுவ உடையை ஒரு போதும் நீங்கள் கழட்டக்கூடாது. இந்தச் சீருடைதான் சக சிப்பாய்களுக்குத் தானொரு சிப்பாய் என்று காட்டிக்கொடுக்கிறது. சீருடையை இழந்த இராணுவத் தளபதி தன் சக சிப்பாயால் சுடப்பட்டு, உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது..” என்றவாறு அந்த தலைமைச் சிப்பாய் அறிவுறுத்தினார்.
அவரை ஆயுதக் கிடங்கிற்குக் காவலனாக நிறுத்த தலைமைச் சிப்பாய்க்குத் துளியும் விருப்பமில்லை. அவர் வயதில் மூத்தவர். ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட வேண்டியவர். பழமைவாதி. அவருக்கு உலக நடப்புகளைப் பேசத்தெரியும், உலக சம்பவம்மீது கோபப்படத் தெரியும். கெஞ்சத் தெரியும். இதைத்தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. இருப்பினும் அவரது கையில் ஒரு ஆயுதம் கொடுத்து , உடை அவசியத்தை நினைவூட்டி அந்தக் கந்தகக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தான் தலைமைச் சிப்பாய்.
அவர் நின்றுக்கொண்டிருந்த கிடங்கிற்கு அடுத்தக் கிடங்கு, பாஸ்பரஸ் கிடங்கு. அதற்குக் காவலாக மற்றொரு சிப்பாய் துப்பாக்கியுடன் விறைப்பாக, திமிராக நின்றுகொண்டிருந்தான். அவன் நின்ற தொனியும் பணியில் காட்டிக்கொண்டிருந்த ஈடுபாடும் பார்க்க உள்நாட்டுச் சிப்பாய் என்று தெரியவந்தது.
“போர் இன்னும் உச்சத்தை எட்டவில்லை. எதிர்பார்த்த இலக்குகளைப் பிடிக்கவில்லை. உக்கிரமான போர் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படலாம்..” என்கிற செய்தி நிலப்பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தது. அதை அவர் சிப்பாய்கள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் ஊர்ஜிதப் படுத்திக்கொண்டார். நம்பத்தகுந்த அந்தச் செய்தி அவரது இதய வெண்ட்ரிக்கிளைக் குடைந்தெடுத்தது. நெஞ்சுக்கூட்டைப் பிளந்து இதயத்தை ஒரே பிடியில் நெறிப்பதைப் போன்றிருந்தது. “இந்தப் போர் இத்தனை உயிர்களைக் கொன்று குவித்திருக்கிறது என்றால் உச்சக்கட்டப்போர்?“ ஒரு கணம் கற்பனைசெய்து பார்த்தார். நினைக்கவே உக்கிரமாக இருந்தது.
இராணுவ லாரி ஒன்று சாலையை உராய்த்துகொண்டு அவர் நின்றிருந்த கிடங்கிற்கு அருகில் வந்து நின்றது. இரண்டு சிப்பாய்கள் லாரிக்குள்ளேருந்து வெளியே குதித்தார்கள். அசுர வேகத்தில் லாரியின் பின்புறம் ஓடி, ஓரே தாவலில் லாரியின் பின் அடைப்பைப் பற்றி இழுத்தார்கள். அடைப்பு திறக்க, மனித உடல்கள் குவியலாகக் கொட்டின.
இரத்தம், மூத்திரம், வியர்வை கலந்த துர்நாற்றம் அந்த இடத்தை மையம் கொண்டது. ஈக்கள் தாடியைப் போல மொய்க்கத்தொடங்கின. நாய்கள் சடலத்தை நுகர்ந்தன. கழுகு ஒன்று இறக்கையை விரித்துகொண்டு அந்த இடத்தில் இறங்கியது. இதை அவர் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
குவியல் குவியலாகக் கிடந்த சடலங்கள். அதில் படிந்திருந்த இரத்தக் கறைகள். சடல முகத்தில் தெரிந்த ஏக்கச் சுருக்கங்கள். நிர்வாண உடம்புகள். அதிலிருந்த காயங்கள்,…இவ்வளவையும் பார்த்தவராய் நின்றுகொண்டிருந்தார். சற்றுமுன் இறந்துபோன அந்தச் சடலங்கள் அவரது இதயத்தை முள்கம்பியாக இறுக்கி, இதயத்துடிப்பை நிறுத்த முற்பட்டன. சடலங்களைச் சற்று ஆழ்ந்துப் பார்த்தார். அத்தனை சடலங்களும் முப்பது வயதிற்குட்பட்ட நெஞ்சுரம் கொண்ட இளமையான கட்டைகள். ஒவ்வொரு சடலமாகப் பார்த்தார். வாயில் இரத்தம் காய்ந்துபோய் சில சடலங்கள், காதுகளில் இரத்தம் வழிந்து சில சடலங்கள். காலின்றி, நெஞ்சில் சுடப்பட்டு, மூக்கு அறுபட்டு…..எனக் அகோரமாய் கிடந்த சடலங்கள். கைகள் தனியாக, கால்கள் தனியாக என்று பல சடலங்கள். இன்னும் சற்று ஆழ்ந்துப் பார்த்தார். பல உடல்கள் நிர்வாணமாகக் கிடந்தன. உடம்பில் கடித்துக் குதறிய காயங்கள், ஆறாப் புண்கள், திரண்ட திசுக்கள். முகத்தைக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு மனதிற்குள் விசும்பினார். வலியின் ரணம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி முகத்தில், நாசியில், உதட்டில் துடித்தன. கையில் வைத்திருந்த துப்பாக்கியை மெல்ல நெறித்தார். தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன்னுயிரை மாய்த்துகொள்ளவேணும் போன்றிருந்தது.
சடலங்களை மீண்டும் பார்த்தார். நாய்கள் சதைகளைக் கடித்து இழுத்துக்கொண்டிருந்தன. ஒரு நாய் ஒரு சடலத்தை நக்கிக்கொண்டிருந்தது. அந்தச் சடலம் உயிருடன் இருக்கையில் அந்த நாய்க்குச் சோறு வைத்த உயிராக, உடலாக இருக்கக்கூடலாம். அந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு உமிழ்நீர் ஒழுக, தனக்குத்தானே குரைத்துக்கொண்டும் உள்ளுக்குள் கதறிக்கொண்டும், அந்த ஒரு சடலத்தை நக்கிக்கொண்டிருந்தது. அந்தக்காட்சி அவரது உடற்திசுக்களைப் பிழிந்தெடுத்தது.
இரத்தத்தில் தண்ணீரைப் போல ஓடும் பிளாஸ்மா கண்ணீராக, வியர்வையாக, கதறலின் ஊற்றாக அவரது உடம்பை நனைத்தது. பார்வையைச் சடலத்திலிருந்து எடுத்தார். வாயிற்குள் கைக்குட்டையை அமுக்கி விசும்பலை உள்ளுக்குள் அரைத்து எச்சிலாக, மூச்சாக, விம்மலாகத் தொண்டையில் இறக்கிக்கொண்டார்.
பக்கத்துப் பாஸ்பரஸ் கிடங்கில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த உள்நாட்டுச் சிப்பாய் சற்றே தணித்தக் குரலில் அவனது மொழியில் சொன்னான். “அதை ஏன் நீ பார்க்கிறாய்? உன் நாடு எதற்காக உன்னை இங்கே அனுப்பிவைத்திருக்கிறதோ, அதை மட்டும் செய்தால் போதும். இல்லையேல் உன் பக்கமாக நான் துப்பாக்கியைத் திருப்ப வேண்டியிருக்கும்..’’ அவன் அப்படியாகச் சொன்னது வேற்றுக்கிரகவாசி பேசியதைப் போன்றிருந்தது. அவர் அந்த சிப்பாயைப் பாவமாகப் பார்த்தார்.
இரக்கம் கலந்த கனிவு குழைந்த ஈகைப் பார்வை அது. அவருக்கு யாரையும் அப்படியாகத்தான் பார்க்கத் தெரியும். கண்களில் ஈரம் கசியப் பார்த்தார். ஆனால் அவன் மனிதப் புழுவாக, உயிர்ச் சடலமாக, கண், காது, மூக்கு பொருத்தப்பட்ட தசைத் திரட்டாக, இரும்பு இதயம்கொண்ட மனிதனாக, மனித எந்திரமாகத் தெரிந்தான்.
குட்டி விமானம் ஒன்று நடு வானில் வெடித்துச் சிதற, நெருப்புக் குண்டுகள் பூமியை நோக்கி இறங்கின. ஈசலைப் போல ஏவுகணைகள் காற்றின் கற்பைக் கிழித்துகொண்டு அரைவட்டமடித்துக் குதித்தன. மரக்கிளைகளில் இரத்தம் தோய்ந்த மனிதப்பிண்டங்கள், இலைகளின் விளிம்பில் உயிர் குடிக்கும் விஷமிகள். குடிநீரில் கரைந்துபடிந்த நச்சுகள், சுவாசிக்கும் காற்றில் கதிர் வீச்சுகள்… இவ்வளவு நடந்தும் போர் இன்னும் உச்சத்தை எட்டவில்லை. ஒருவேளை எட்டினால் உயிர்ப்பலி எப்படியாக இருக்கும், என்று ஒரு கணம் மனதிற்குள் அசைபோட்டு பார்த்தார்.
புழுதியை வாரித் தலையில் கொட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தது ஒரு லாரி. சற்றுமுன் சடலங்களைக் கொட்டிச்சென்ற லாரி அது. அதைக்கண்டதும் அவருக்கு ஈரக்குலையில் ஒரு நடுக்கம். உதரவிதானம் வரைக்கும் பரவிய ரணம். கண்களைத் தன்விரல்கொண்டு குத்திக்கொண்ட தவிப்பு. பதற்றத்துடன் லாரியைப் பார்த்தார். அந்த லாரி, குவிந்து கிடந்த மனித சடலத்திற்குச் சற்றருகே கழுகுகளையும் நாய்களையும் விரட்டி புகை நக்கி நின்றது. இரண்டு சிப்பாய்கள் லாரிக்குள்ளேருந்து குதித்தார்கள். பழையபடி லாரியின் பின்அடைப்பைத் திறந்தார்கள். மனித சடலங்கள் கொட்டின. அதை அவர் பார்த்தார். அப்போது பாஸ்பரஸ் கிடங்கின் வாசலில் நின்றுகொண்டிருந்த உள்நாட்டு சிப்பாய், துப்பாக்கியைக் காட்டியபடி அவரை மிரட்டினான். “இனி அதை நீ பார்த்தால் உன்னைச் சுடுவேன்.“ சொன்னதோடில்லாமல் நாக்கை உருட்டித் திரட்டி மிரட்டினான்.
இந்த முறை சடலங்களைப் பார்க்க சில உத்திகளைக் கையாள வேண்டிருந்தது. அது அவருக்குப் பெரும்சவாலாகவும் இருந்தது. கண்களைத் துடைப்பதைப் போலவும் எச்சில் துப்புவதைப் போலவும் கால்களை உராய்த்து கொள்வதைப் போலவும் பாவனை செய்தவராய் பார்த்தார். அவரால் அதை முழுமையாகப் பார்க்கமுடியவில்லை.
அவரது உதடுகள் அடித்துகொண்டன. முகத்தில் வியர்வைக் காடுகள். எத்தனை முறை துடைத்தாலும் கைக்குட்டையை நனைக்கும் ஊற்றுகளாக ஈரப்பசைகள். விரல்கள் நடுங்கத் தொடங்கின. அப்பொழுது ஓர் அசைவை அவர் கவனித்தார். ஒரு சடலத்தின் விரல் அசைவு அது. கையும்கூட அசைந்தது. அடுத்தடுத்து மூன்று சடலங்கள். மூன்றும் பெண் சடலங்கள். பார்வையின் வீச்சை ஒற்றைப் புள்ளியில் குவித்தார். சடலங்கள் நிர்வாணமாகக் கிடந்தன. ஒரு சடலத்தின்மீது பார்வையைக் குவித்தார்.
முகங்கள், உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. அது சடலமல்ல, உடல். அந்த உடலை அவர் பார்த்துகொண்டேயிருந்தார். விரல் அசைந்து, கை அசைந்து உடல் அசைந்துகொடுத்தது. கடைக் கண்ணால் அசைவை நெருக்கினார். உடல் அசைவில் உயிரின் துடிப்பு, கெஞ்சல், வேண்டல் இருப்பதை உணர்ந்தார். அந்த உடலை நோக்கிப் பாய்ந்தார். அவள் ஒரு பெண். என் தாயைப் போல, தங்கையைப் போல, மகளைப் போல ஒரு பெண். அவளது கால்களின் கட்டைவிரல் மேலும் கீழுமாக அசைந்து உயிரின் துடிப்பைக் காட்டியது. அவளை மிக அருகில் நெருங்கினார்.
அவள் தன்னைப் புரட்டிக் கொடுத்தாள். பிறந்த மேனி. மகளைப் போன்ற பரிதவிப்பு. அழகுகளைச் சிதைத்த பற்களின் ரணம், கடித்துக் குதறிய தசைகளின் பிழம்பு, இரத்தம் கட்டிய வீக்கம். அவளது இரு விழிகளில் ஒரு விழி சிதைந்து மண்ணில் உதிர்ந்து கிடந்தது. மற்றொரு விழியில் ஈரக்கசிவு. இரத்தமும் கண்ணீரும் கலந்த ஊற்று. இரத்தம் கன்னங்களில் வழிந்து காது வரைக்குமாக ஒழுகிக்கொண்டிருந்தது. குரூரமாக , சக்கையாக, நைந்துப்போன தசையாகக் கிடந்தாள்.
அவளது நிர்வாணத்தை வெறுங்கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. வேகமாக சட்டையைக் கழற்றினார் . அவனது தலைமைச் சிப்பாய் சொன்ன கட்டளை அவர் முன் வந்துநின்றது. “சீருடையை ஒரு போதும் கழட்டக்கூடாது“. அந்த உத்தரவை அத்தனை எளிதாக உதாசீனப்படுத்திவிட்டார். பொத்தான்களைக் கழற்றினார். அவை அவிழ மறுத்தன. சட்டையை இருபுறமும் பற்றி நெஞ்சைப் பிளப்பதைப் போல இழுத்தார். பொத்தான்கள் அறுந்து சிதறின. சட்டையை உடம்பிலிருந்து உருவி அவளது மேனிமீது வீசினார். அவளது பிஞ்சு உடம்பை மறைக்க அந்தச் சட்டை போதுமானதாக இருந்தது.
ஒரு விசை அழுத்தப்பட்ட பேரொலி அவரது காதை எட்டியது. அடுத்தக் கணம் அவரது முகுளத்தை என்னவோ ஒன்று துளைத்தது. ஒரு விழியைப் பிதுக்கி வெளியே தள்ளிய வன்மம் நடந்தேறியது. தலை இரத்தவாந்தி எடுத்தது. தலைக்குப்புற விழுந்தார். தன்னைச் சுட்டது யாரென்றுகூடப் பார்க்கவில்லை. அவரது கால்கள் இரண்டு முறை மண்ணை உதைத்தன. அவ்வளவுதான், அவ்வளவேதான்!
சுட்டவன் நாலாபுறமும் திரும்பிப் பார்த்துகொண்டான். தன் விரலை கீழே கிடந்தவரின் நாசித் துவாரத்திற்குக் கொண்டுசென்று சுவாசத்தைச் சோதித்தான். நாடிபிடித்துப் பார்த்தான். மார்பின் மீது காது வைத்து இதயத் துடிப்பைக் கேட்டான். அவனுடைய உயர்அதிகாரிக்கு அவன் அவசரமாக தகவல் தெரிவிக்கவேண்டியிருந்தது. மறுநாள் உலக பத்திரிக்கைகள் ஒரு பெட்டி செய்தியாக அவரது மரணத்தைச் செய்தியாக்கியிருந்தது..
“அகிம்சை இறந்துவிட்டார்.” .
(அண்டனூர் சுரா)