சாம்பியா மக்களின் வாழ்க்கைக் கோலங்களை சித்திரித்த உஷா ஜவகார்! … முதல் சந்திப்பு… முருகபூபதி.
நாட்டுக்கு நாடு வேறுபடும் முருங்கைக்காயின் மகத்துவம் பேசிய கதையை எழுதிய படைப்பாளி ! !
முருகபூபதி.
இந்தப்பதிவிற்காக சாம்பியா நாட்டு தாய்மார், மற்றும் அவர்கள் பாசத்தோடு அணைத்து, சுமந்துவரும் குழந்தைகளின் படங்களைத் தேடினேன். கிடைத்தது. ஆனால், பதிவேற்ற உரிமம் தேவைப்பட்டது.
அதனால், தவிர்த்துக்கொண்டு அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து நீண்டகாலம் கலை, இலக்கிய, கல்விப்பணிகளையும் மேற்கொண்டவாறு, அங்கிருந்து ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் இளம் தலைமுறை படைப்பாளி உஷா ஜவகார் பற்றி எழுதுகின்றேன்.
இவர் பற்றிய குறிப்புகளுக்கு செல்வதற்கு முன்னர், உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்திகளை நினைவூட்டுகின்றேன்.
ஒரு புதிய நாட்டுக்குச்சென்றால், அந்த நாட்டின் பிரதான மொழி தெரியாவிட்டால் நாம் மிகவும் அவஸ்தைப்படுவோம்.
எனக்கு இந்தத் தவிப்பு ருஷ்யா, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி , பிரான்ஸ் சென்ற சந்தர்ப்பங்களில் நேர்ந்திருக்கிறது.
1985 இல் ருஷ்யா – மாஸ்கோ சென்றிருந்தபோது மொழிபெயர்ப்பாளர்கள் உடன் வந்தமையால் சமாளித்தேன். ஏனைய நாடுகளில் வசிக்கின்ற எனது உறவினர்கள், நண்பர்களின் தயவால் சமாளித்தேன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சிங்களம் தெரியாத தமிழ் அன்பர் வெள்ளவத்தை சந்தைக்கு காய்கறி வாங்க வந்து, தான் எடுத்துச்சென்ற பேக்கை காண்பித்து, அதிலே அவற்றை போடும்படி சொல்லும்போது சொன்ன வார்த்தையால் அங்கிருந்த சிங்கள அன்பர்கள் அட்டகாசமாக சிரித்தார்களாம்.
பேக்கை ( Bag ) தமிழில் பை என்பார்கள்.
இதற்குமேல் நான் எதுவும் சொல்லவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.
எழுத்தாளர் உஷா ஜவகார் பற்றிய இந்தப்பதிவை எனது முதல் சந்திப்பு தொடரில் எழுத முன்வந்தபோது, ஏன் இந்த மொழிப்பிரச்சினை விவகாரம் வந்தது..? என நீங்கள் யோசிக்கலாம்.
அதற்கு உஷா ஜவகார், சாம்பியா நாட்டில் சிறிது காலம் வாழ்ந்தபோது நடந்திருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தை அவரது வார்த்தைகளிலேயே தருகின்றேன்.
“அது 1987ஆம் ஆண்டு.ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் நாள். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை!
அப்போது நான் சாம்பியாவில் உள்ள சிங்கோலா (Chingola) என்ற சிறிய நகரில் என் அக்காவுடன் தங்கியிருந்தேன். அங்குள்ள அக்கௌன்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தின் பெயர் மசூத் ரவூப் அண்ட் கம்பெனி ஒரு பாகிஸ்தானியர்தான் அந்த நிறுவன உரிமையாளர்.
சிங்கோலா ஒரு சிறிய நகர். ஆதலால் ஒரே ஒரு போட்டோ ஸ்டூடியோதான் அங்கு இருந்தது.
என் அக்கா சில புகைப்படங்களை எடுத்துவிட்டு அந்த படச்சுருளை என்னிடம் தந்திருந்தார்.
நான் என் அலுவலகத்தின் மதிய போசன இடைவேளையின் போது அந்த ஸ்டூடியோவுக்கு சென்றேன்.
மிகவும் பருமனான ஒரு குஜராத்திப் பெண்மணி ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து,
“வாட் யு வாண்ட்?”(What you want?)
என அசட்டையாக வினவினார்.
நான் படச் சுருளை அவரிடம் கொடுத்து,”இதைப் பிரிண்ட் பண்ணித் தர முடியுமா?”எனப் பணிவுடன் ஆங்கிலத்தில் வினவினேன்.
அவரோ உடனே என்னிடம்,”Yesterday giving today giving, Today giving no tomorrow giving” என்றார். எனக்குத் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.
பிறகு அங்கிருந்த முதலாளி ஓடி வந்து என்னிடம் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் இப்படித்தான் இருந்தது.
“நீங்கள் திங்கட்கிழமை படச் சுருளைக் கொண்டு வந்தீர்கள் என்றால் நாங்கள் லூசாகாவுக்கு
(Lusaka) அதாவது தலைநகருக்கு அனுப்பி படங்களை பிரிண்ட் செய்து உங்களிடம் எங்களால் செவ்வாய்க்கிழமை தரமுடியும்.
ஆனால், நீங்கள் செவ்வாய்க்கிழமை படச் சுருளைக் கொண்டு வந்து தந்தீர்கள் என்றால், எங்களால் உடனே அதை லூசாகாவுக்கு அனுப்ப வசதி இல்லை. எங்களுக்கு புதன்கிழமை உங்களிடம் படங்களைத் தர முடியாது.
இன்று செவ்வாய்க்கிழமை. நீங்கள் வந்திருக்கிறீர்கள்! அதுதான் என் மனைவி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.”
அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நான் அலுவலகத்திற்குத் திரும்பிவிட்டேன்.
பின்னர் அவரது விளக்கத்தை நான் என் அக்காவிடம் சொல்லி சிரித்ததை எத்தனை வருடங்கள் கழிந்தாலும், இப்போதும் என்னால் மறக்க முடியாதிருக்கிறது!
இப்போது உங்களுக்கும், “yesterday giving today giving. Today giving no tomorrow giving” இன் அர்த்தம் விளங்கியிருக்கும் என நம்புகிறேன். “
உஷா ஜவகார், இலங்கையில் கொழும்பு – வெள்ளவத்தையில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை வெள்ளவத்தை புனித லோரண்ஸ் பாடசாலையிலும், மேற்கல்வியை பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடக்கல்லூரியிலும் பயின்றவர்.
கணக்கியல்துறையில் மேற்கல்வியை நிறைவுசெய்துகொண்டு, சிறிதுகாலம் கொழும்பில் பணியாற்றியவர்.
இருப்பத்தியெட்டு வருடங்கள் கொழும்பிலும், ஒன்பது வருடங்கள் ஆபிரிக்க நாடான சாம்பியாவிலும், அதன்பின்னர், சுமார் ஒருவருடகாலம் இங்கிலாந்திலும் வாழ்ந்துவிட்டு, கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக சிட்னியில் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
உஷா ஜவகாரின் எழுத்துக்களை, சிட்னியிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இணைய இதழிலும் முன்னர் அச்சு ஊடகமாக வெளிவந்த கலப்பை மாத இதழிலும் பார்த்திருக்கின்றேன்.
இவர் பற்றி மெல்பனில் எம்மிடையே வாழ்ந்திருக்கும் எழுத்தாளர் ( அமரர் ) அருண். விஜயராணியும் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
இவரை நேருக்கு நேர் சந்திக்காமலேயே, தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரு புதிய சிறுகதையை கேட்டிருந்தேன். இது நடந்தது 2005 ஆம் ஆண்டு நடுப்பகுதி. அவ்வேளையில் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில், இங்கு வதியும் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.
உஷா ஜவகார், மலர் ஒன்று கருகுகின்றதே என்ற சிறுகதையை அனுப்பியிருந்தார்.
தலைப்பினைப்பார்த்ததும், இவரும் வானொலிக்கு இசையும் கதையும் எழுதும் எழுத்தாளர்தானோ.. ? என்றும் யோசித்தேன்.
ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இசையும் கதையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களில் சிலர் பின்னாளில் சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக மிளிர்ந்தார்கள்.
சிலர் காலப்போக்கில் காணாமல் போனார்கள் !
பதினான்கு வருடங்களுக்கு முன்னர் உஷா ஜவகாரிடமிருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற இச்சிறுகதையை இப்பொழுது வாசித்தாலும், புத்தம் புதிய கதையொன்றை வாசிக்கும் உணர்வையே எனக்குத் தந்திருந்தது.
சாம்பியா நாட்டில் வறுமைக்கோட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை. உள்ளத்தை உருக்கும் கதை.
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில்தான் உஷா ஜவகார் இதனை எழுதியிருக்கவேண்டும். இக்கதையின் ஊடாக சில சுவாரசியமான செய்திகளையும், ஆணாதிக்கத்திற்கு நிறம், இனம், மொழி, மத பேதம் இல்லை என்பதையும் சொல்கிறது.
இக்கதையில் வரும் விக்டோரியா என்ற வீட்டு வேலைகளுக்கு வரும் பணிப்பெண் பாத்திரத்தை உஷா ஜவகார் மிகவும் உருக்கமாகவும் உயிர்ப்போடும் சித்திரித்திருந்தார்.
ஒருவனை விரும்பி அவனுடன் இணைந்து வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டு, அவன் விட்டுச்சென்றபின்னர், அந்தக்குழந்தைக்காகவே வீட்டு வேலைகள் செய்து உழைத்த விக்டோரியா, மீண்டும் ஒருவனது துணை நாடி அவனாலும் ஏமாற்றப்பட்டு குறைமாத குழந்தையை இறந்த நிலையில் பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறாள்.
வாழ்க்கை அந்த விக்டோரியாவை என்ன பாடு படுத்தியிருக்கிறது என்பதை யதார்த்த பண்புடன் ஒரு சிறந்த கதைசொல்லியாகவே இச்சிறுகதையை உஷா ஜவகார் படைத்திருந்தார்.
இக்கதையில் எமக்கு முற்றிலும் வித்தியாசமான சுவாரசியமான செய்தியும் கிடைக்கிறது.
திரைப்பட கதாசிரியர், நடிகர், இயக்குநர் பாக்கியராஜுக்கு முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் பெரும் வசூலைப்பெற்றுத்தந்த பாத்திரம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
இத்திரைப்படம் வெளிவந்த காலப்பகுதியில் சென்னையில் பெண்கள் காய்கறி கடைகளில் முருங்கைக்காய் வாங்குவதற்கும் கூச்சப்பட்டார்கள் என்ற செய்தியும் கசிந்திருக்கிறது.
பாக்கியராஜ் தோன்றும் மேடைகளில் தற்போதும் ரசிகர்கள் இந்த முருங்கைக்காய் சமாச்சாரத்தைத்தான் பெரிதுபடுத்தி கேள்வி கேட்பார்கள்.
உஷா ஜவகாரின் குறிப்பிட்ட சிறுகதையில் வரும் சாம்பியா நாட்டின் விக்டோரியா, முருங்கைக்காய்களை கண்டு வெருண்டு ஓடுகிறாள்.
“ ஏன் ? “ எனக்கேட்டதும், “ அதுவா மேடம், இந்தத் தடிகளை டெவில்ஸ் ஸ்டிக்ஸ் ( Devil sticks ) என்றுதான் கூறுவோம். அதற்கு கிட்டவும் போகமாட்டோம். “ என்கிறாள் அந்த விக்டோரியா.
அதனை சமைத்துக் கொடுத்தபோது ரசித்து, சுவைத்து உண்கிறாள் அந்த சாம்பியா நாட்டுப் பெண்.
ஒரு சாதாரண முருங்கைக்காய் நாட்டுக்கு நாடு எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதைப்பாருங்கள் !
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஷ்ட்ரோ இந்தியாவுக்குச்சென்று, அங்கு விளையும் முருங்கை மரத்தின் மருத்துவ குணங்களை அறிந்து, நாடு திரும்பும்போது முருங்கை மரத்தடிகளுடன் சென்று தமது ஊரில் நட்டு வளர்த்தாராம்.
கியூபா மருத்துவத்துறையில் முன்னேறிய நாடுகளில் குறிப்பிடத்தகுந்தது.
இவ்வாறு உஷாவின் இச்சிறுகதை எனக்கு பல செய்திகளுக்கு வாசல் திறந்துவிட்டிருந்தது.
இவர் இதுவரையில் ஏழு நூல்களை வரவாக்கியிருப்பவர்.
சிறுகதைத் தொகுப்புகள்: அம்மா என்றொரு சொந்தம்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
சிறுவர் கதைகள் : மாயக்கிழவியின் மந்திரம் , குறும்புக்கார இளவரசியும் கனிவான தேவதையும், ஒரு கடற்கன்னியின் சாகசக் கதை, அதிசய உயிரினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும்.
கவிதைத் தொகுப்பு: சிதைகிறதே செந்தமிழ்.
இவ்வாறு தனது இலக்கியப் பணிகளுக்கும் அப்பால், சிட்னியில் இயங்கும் சில தமிழ்ப் பாடசாலைகளிலும் கற்பித்து வருகிறார்.
குடும்பத்தலைவியாக இயங்கியவாறு தொடர்ந்தும் கற்பதிலும் அதன் மூலம் தேடல்களிலும் ஈடுபட்டுவரும் இவரின் ஊக்கம் வியப்பினைத் தருகிறது.
பொதுவாக எம்மத்தியில் வாழும் பெண்களின் அன்றாடப் பொழுது குடும்பம், பிள்ளை பராமரிப்பு, தொழில் என்று இயந்திர வாழ்க்கையாகவே அமைந்துவிடுகிறது.
இவர்களுக்கு நேரம் ஓதுக்கி நூல்கள் படிப்பதற்கோ, இலக்கியப்பிரதிகள் படைப்பதற்கோ நேரம் அரிதாகவே கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் நேரத்தை, உஷா ஜவகார், பயனுள்ள முறையில் செலவிடுகிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சிட்னி கோம்புஷ் தமிழ்ப்பாடசாலையில் கற்பித்து வரும் இவர், சிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிக்கும் இன்பத்தமிழ் வானொலியில் பகுதி நேர ஒலிபரப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இயங்கியவர்.
அத்துடன் சிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிக்கும் A T B C வானொலியிலும் பகுதிநேர ஒலிபரப்பாளராக பணியாற்றுகிறார்.
இத்தனைக்கும் மத்தியில் கொவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர், குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான கற்கை நெறியையும் பூர்த்தி செய்திருக்கிறார். தற்போது பகுதி நேர Early childhood educator ஆக பணியாற்றுகிறார்.
2007 ஆம் ஆண்டு, நாம் சிட்னியில் எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் 75 ஆவது பிறந்ததின பவளவிழாவை கொண்டாடிய வேளையில்தான் உஷா ஜவகாரை முதல்முதலில் சந்தித்தேன்.
அவ்வாறு அன்று சந்திப்பதற்கு முன்பே இவரது படைப்பாற்றலை தெரிந்துகொண்டிருந்தேன். அதனால்தான் இவரது அச்சிறுகதையும் உயிர்ப்பு தொகுப்பில் இடம்பெற்றது.
காவலூர் இராசதுரை அவர்களின் பவளவிழாவின்போது எமக்கு பக்கத்துணையாக இயங்கியவர்கள்: செ. பாஸ்கரன், கானா. பிரபா, யசோதா பத்மநாதன். இவர்களுடன் உஷா ஜவகாரும் இணைந்து செயல்பட்டபோதுதான் முதல் முதலில் சந்தித்தேன்.
அப்போது மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்ட சிற்றுண்டிகள் போதுமானதாக இருக்கவில்லை. நாம் எதிர்பார்த்ததைவிட பலரும் வந்திருந்தார்கள். காவலூர் இராசதுரையின் முழுக்குடும்பத்தினரும் கலந்துகொண்ட சிறந்த விழாதான் அது. இதுபற்றி இலக்கிய நண்பர் கானா. பிரபாவும் தனது வலைப்பூவில் விரிவாக பதிவுசெய்துள்ளார்.
எடுத்துவரப்பட்ட சிற்றுண்டிகளை அனைவருக்கும் சமமாக பகிர்வது எப்படி ? என நான் யோசித்துக்கொண்டிருந்தபோது தனது சமயோசித
ஆலோசனையால் சமாளித்தவர்தான் உஷா ஜவகார். அவரது புத்திசாலித்தனத்தை என்னால் இன்றும் மறக்கமுடியாது! அவர் மறந்திருக்கலாம் !
உஷா ஜவகார் தொடர்ந்தும் இலக்கியப்பிரதிகள் எழுதவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
—0— letchumanam@gmail.com