சரித்திரம் கூறும் பெண்கள்… (தவமணிதேவி)
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.’ என்பதற்கு இணங்க பெண்களின் சிறப்பு பற்றி சற்று நோக்குவோம். பெண்கள் எனப்படுவோர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று செயற்படுபவர்களாக விளங்குகின்றனர். தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக செயற்படுகின்றனர். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் இவர்கள் ஆற்றும் பணி அளப்பரியது.
ஆரம்ப கால மனித வாழ்வியல் முறைகளுக்கும் தற்கால வாழ்வியல் முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இன்றைய காலம் இயந்திரமயமாகி விட்டது என்றே கூறலாம். எனினும் பெண்களின் பங்களிப்பு அதிகம். தன் உயிரைக் கொடுத்து ஒரு உயிரை இந்த உலகிற்கு தரும் பெண்ணினத்தின் பெருமை சங்ககாலம் முதல் இந்த நூற்றாண்டு வரை போற்றப்பட்டு வருகின்றது. அன்பு, கற்பு, மன உறுதி, பொறுமை, தூய்மை, வாய்மை, மனத்திறன், விருந்தோம்பல், பெரியோர் மதிப்பு, உபசரிப்பு போன்ற பண்புடையவர்களாக பெண்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும் என்றும் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்றும் ஆணுக்குப் பெண் சமம் என்றும் மகாகவி பாரதி கூறினார்.
ஆரம்பக் காலங்களில் மனித குலம் தாய்வழி சமூகமாக இருந்தது. வீடு, குடும்பம், குடும்பத்தைக் கவனித்தல் போன்றவற்றில் மாத்திரம் பெண்கள் ஈடுபட்டனர். ஆனால் தற்காலப் பெண்களோ இன, சமூக, கலாசார, மத எல்லைகளை கடந்து சமூகத்தின் எல்லா நடைமுறைகளையும் புரிந்து கொண்டு அவற்றைத் தாண்டி தமது இலக்குகளை அடைய கூடியவர்களாக உள்ளனர். அரசியல், பண்பாடு, பொருளாதாரம், ஆன்மிகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
பெண்கள் இச்சமூகத்தை மாற்றியமைக்கக் கூடிய ஆளுமை படைத்தவர்கள் என்பதை நிரூபிக்கின்றனர். இச்சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் என்பதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறாக பெண்களின் பெருமையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தனது குடும்பச் சுமைகளுடன் தனது சமூகத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இவர்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஏற்படுத்தி தருவதில் இவர்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. நாட்டின் பிரதான உற்பத்தி பொருட்களான தேயிலை, ஆடை போன்றவற்றில் பெண்களின் உழைப்பே அதிகமாக உள்ளது. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம் என்று கூறலாம்.
இவ்வாறான பெண்கள் மத்தியில் உடல், உள ரீதியில் அடக்கப்பட்ட பெண்களும் எமது சமூகத்தில் வாழத்தான் செய்கின்றனர். தொழில் நிமித்தம் தமது குடும்பங்களை பிரிந்து உறவுகளைப் பிரிந்து வெளிநாடு செல்லும் பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். ஒரு சிலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர்.
பெண்களுக்காக பெண்கள் உரிமைச் சட்டம், பெண்கள் உரிமை இயக்கம் என்ற பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இன்றைய சமூக சீர்கேடுகளை குறைக்க வேண்டுமானால் பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பும், உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அந்நாடு வளர்ச்சி அடைய முடியும்.
சங்கக்கால புலவரான ஒளவையார் ஒரு தமிழ் பெண் புலவராவார். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்களை உருவாக்கியவர். இந்நூல்கள் மனித வாழ்வியலை நெறிப்படுத்துபவையாக அமைகின்றன.
அன்னை தெரேசா ஊனமுற்றவர்களையும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும், சமூகத்திற்கு பெரும் பாரம் என ஒதுக்கப்பட்டவர்களையும் கவனிப்பதையே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர். இவ்வாறு உலக வரலாற்றையே திருப்பிய எத்தனையோ பெண்மணிகள் உள்ளனர். அவர்களின் தியாகமும் சாதனையும் போற்றி பின்பற்றக் கூடியவையே.
வீட்டில் அடைந்து கிடந்த பெண்ணியம் மறைந்து விண்ணைத் தாண்டி சாதனைகள் புரியும் பெண்களும் எம்மில் உள்ளனர். எனவே ஒவ்வொரு வீடுகளிலும் பெண்களுக்கான சுதந்திரம் ஏற்படுத்தப்பட வேண்டும். திறமையுள்ள பெண்கள் தனித்து செயற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
-முருகையா தவமணிதேவி.
வட்டகொட.