வெகுசன ஊடகங்களில் சமூகமயமாக்கல் செயற்பாடு… (ஹக்சனா)
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற அடிப்படையில் தனித்து வாழாது சமூகத்துடன் இணைந்து ஒன்றித்து வாழ்பவனாகக் காணப்படுகின்றான். மனிதன் தனது பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தான் வாழ்கின்ற சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றான். அவ்வகையில் ஆரம்ப காலத்திலிருந்து மனிதனுடைய தொடர்பாடல் செயன்முறையானது படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத் தொடர்பாடலாக வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்பாடல் செயன்முறையில் மாத்திரமல்லாது மனிதனுடைய கல்வி நடவடிக்கைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்று பாரியளவில் வளர்ச்சி கண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். அவ்வகையில் இன்றைய காலகட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் வெகுசன ஊடகங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகம் சார்ந்த இணையத்தளங்கள், வலைத்தளங்கள், இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன வெகுசன ஊடகங்களாகும். இவற்றினூடாக எவ்வாறு சமூகமயமாக்கல் செயற்பாடு இடம்பெறுகின்றது என்று பார்த்தோமானால் பிள்ளைகள் இத்தகைய ஊடகங்களின் வாயிலாக உலக நடப்புக்களை அறிந்து கொள்வதோடு தாம் அறிந்திராத பல விடயங்களையும் கற்றுக் கொள்கின்றார்கள். இருந்த இடத்திலிருந்து கொண்டே தாம் வாழ்கின்ற உலகம், அங்கு வாழ்கின்ற மக்கள், அவர்களினுடைய கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை சார்ந்த பல விடயங்களையும் அறிந்து கொள்கின்றார்கள்.
தொலைக்காட்சியின் ஊடாக மாணவர்கள் கல்வி கற்றுக்கொள்ளக்கூடிய நிலை இன்று காணப்படுகின்றது. கல்வி 13 போன்ற சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் மூலமாக மாணவர்கள் தாம் கற்கின்ற பாடங்கள் தொடர்பான பூரண விளக்கத்தையும், பூரண அறிவையும் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
அத்தோடு பயன் தரக்கூடிய பல்வேறு தகவல்களையும் தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வகையில் மருத்துவக் குறிப்புக்கள், உடல் ஆரோக்கியம் சார் தகவல்கள், சமையல் குறிப்புக்கள், விவசாயம் சார்ந்த தகவல்கள், அழகு சாதனக் குறிப்புகள் போன்ற பல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மேலும் தொலைக்காட்சி வாயிலாக மத நீதியான வழிபாடுகள், அறப் போதனைகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மாணவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றார்கள்.
கையடக்கத் தொலைபேசியை எடூத்துக் கொண்டோமானால் (0௦0816 போன்ற தேடல் பொறிகள், E – Library, E – Thaksalawa போன்ற கல்விசார் இணையத்தளங்கள் வாயிலாகவும், FaceBook, YouTube போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் கல்வி சார்ந்த பல தகவல்களைப்
பெற்றுக்” கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் கையடக்கத் தொலைபேசியின் பாவனை காரணமாகவே மாணவர்களிடத்தில் விரைவாக சமூகமயமாக்கல் ஏற்படுத்தப்படூகின்றது.
இலத்திரனியல் ஊடகங்களானது தொலைக்கல்வி மூலமான கற்றல், திறன் வகுப்பறை மூலமான கற்றல் போன்றவற்றை சாதகமாக்கி கல்விச் சமூகமயமாக்கலுக்கு வித்திட்டிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள், மாணவர்களின் தனிப்பட்ட திறன்கள், கல்வி சார்ந்த தகவல்கள் போன்றவற்றை பாடசாலைக்குரிய
வலைப்பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்து கொள்வதன் மூலமாக சிறந்த முறையில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்த முடிகின்றது.
வெகுசன ஊடகங்களின் வாயிலாக இன்றைய மாணவர்கள் விரைவான சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இருப்பினும் இத்தகைய வெகுசன ஊடகங்களின் பாவனை
மாணவர்கள் மத்தியில் பாதகமான விளைவுகளையும் தோற்றுவிக்கின்றது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் சமூகத்துடனான தொடர்பு மற்றும் குடூம்பத்துடனான உறவு என்பவற்றில் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கின்றது. கையடக்கத் தொலைபேசியை பாவிப்பதன் மூலமாக உலக நடப்புக்களை அறிந்து கொள்ளலாம் என்ற நிலை மாறி கையடக்கத் தொலைபேசியைக் கீழே வைத்தால்தான் வீட்டில் நடக்கின்ற விடயங்கள் தெரிய வரும் என்ற நிலைக்கு வந்து விட்டது.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக உணவு உண்டூ வாழ்ந்த நிலமை மாறி குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கையடக்கத்தொலைபேசியுடன் அன்றாட வாழ்வை
நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். இளம் பருவத்தினர் தங்களுடைய நண்பர்களுடன் வெளியில் சென்று ஒற்றுமையாகப் பேசிச் சிரித்து விளையாடிய நிலமை மாறி இன்றைய காலகட்டத்தில்
இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணைய விளையாட்டூக்களில் ஈடுபடுவது அதிகரித்து விட்டது. இதனால் விட்டுக் கொடுப்பு, ஒற்றுமையுணர்வு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு போன்ற
பண்புகள் இன்றைய மாணவர்களிடத்தில் விருத்தி பெறாத நிலை காணப்படூகின்றது.
சமூக உறவைக் கட்டியெழுப்புவதிலும் இத்தகைய வெகுசன ஊடகங்கள் பாரிய தடையாகக் காணப்படுகின்றன. கையடக்கத் தொலைபேசியில் மே செய்வதன் மூலமாகவே இன்றைய தகவல் பரிமாற்றம் இடம்பெறுகின்றது. இதன் காரணமாக சமூகத்திலுள்ளவர்களுடன் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது, எவ்வாறு முகபாவனைகள் மற்றும் உடல்மொழியைக்
கையாள்வது போன்ற விடயங்களை அறிந்து கொள்ளத் தெரியாமல் போகின்றார்கள்.
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தொலைபேசியில் சர்வ சாதாரணமாக Blockசெய்து விட்டுப் போகலாம். ஆனால் சமூகத்தில் நேருக்கு நேராக வரும் பிரச்சினைகளைக் கையாள்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்படுகின்றது.
மேலும் இத்தகைய வெகுசன ஊடகங்களின் வாயிலாக மாணவர்கள் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் சினிமா மோகம் அதிகரித்துள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றில் காண்பிக்கப்படுகின்ற மது அருந்துதல், புகைத்தல், கொலை செய்தல், போதைப் பொருள் பாவனை போன்ற காட்சிகளின் வாயிலாக பிள்ளைகளும் அவற்றைக் கற்று தவறான
நடத்தைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
மேலும் மாணவர்கள் FaceBook, YouTube, Tiktokபோன்ற சமூக ஊடகங்களுக்கு அடிமையாகுதல், இணைய விளையாட்டுக்களுக்கு அடிமையாகுதல் போன்ற நிலமையும் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் மிக அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றில் 10
வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம்
வைத்தியர் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் பல சிறுவர்கள் இரவுநேரங்களில் தூங்காது அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பதாகவும், கையடக்கத்
தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள பல சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெகுசன ஊடகங்களின் அதிகரித்த பாவனை காரணமாக இன்றைய தலைமுறையினர் தடம் மாறிப் போகின்ற நிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக தற்கொலைகளின்
அதிகரிப்பிற்கு. இத்தகைய வெகுசன ஊடகங்களின் பாவனை பிரதான காரணமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன காலகட்டத்தில் இலத்திரனியல்
ஊடகங்களினுடைய பாவனை இல்லாமல் வாழ்வது அசாத்தியமான காரியம் என்பது உண்மையாகும். ஆனால் அதன் பாவனையை மட்டுப்படுத்திக் கொள்வதன் மூலமாக சிறந்த பயன்களைப் பெற முடிவதோடூ சிறந்த முறையில் சமூகமயப்படுத்தப்படவும் முடியும்.
எனவே வெகுசன ஊடகங்களின் பாவனையை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது தொடர்பான அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது பெற்றோரே
ஆவர். ஏனெனில் பிள்ளைகள் தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி போன்றவற்றின் பாவனையை முதன்முதலில் ஏற்படுத்திக் கொள்வது குடும்பத்திலேயாகும். எனவே பெற்றோர்
தமது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும் கால அளவு குறித்து எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட வயது வரும் வரையில் பிள்ளைகளுக்கு கையடக்கத் தொலைபேசி வாங்கிக் கொடுப்பதையும், தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே பயன் தரக்கூடிய விடயங்களுக்கு மாத்திரம் வெகுசன ஊடகங்களை உபயோகிப்பதன் மூலமாக சிறந்த பயன்களைப் பெற முடிவதோடு சரியான முறையில் சமூகமயப்படுத்தப்படக் கூடியதாக இருக்கும். பாலில் நீர் கலந்திருப்பினும் நீரை விட்டு பாலைப் பருகும் அன்னம் போல் பயன் தரும் விடயங்களுக்கு மாத்திரம் வெகுசன ஊடகங்களைப் பயன்படுத்தி நலன் பெற வேண்டும்.
நித்தியானந்தம் – ஹக்சனா,
கல்வியியல் சிறப்புக் கற்கை,
இறுதியாண்டு மாணவி,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.