கவிதைகள்

“எண்ணி எண்ணி அழுகின்றேன்” … கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பார்த்தவர்கள் எல்லோரும்
பக்குவமாய் வந்தமர்ந்து
பலகதைகள் பேசிநிதம்
பானமெலாம் பருகிடுவர்

வேர்த்துதொழுகி நிற்பார்கள்
விரைந்தங்கே ஓடிவந்து
வியர்வைதனைப் போக்கிவிட்டு
வியந்தென்னை பார்த்துநிற்பர்

பெரியயவரும் சிறியவரும்
பேதமின்றி வந்திடுவார்
அருமையாய் பலகதைகள்
அவரங்கே பேசிடுவார்

உரசல்களும் வருமங்கே
ஊர்வம்பும் தேடிவரும்
பெருமளவில் சண்டைகளும்
பின்னேரம் நடக்குமங்கே

பஞ்சாயம் செய்வாரும்
பலகாதல் செய்வாரும்
பாங்காக என்னிடத்தை
தேர்ந்தெடுத்து நிற்பார்கள்

வெய்யில் நேரமானாலோ
விரைந்தங்கே கூட்டம்வந்து
பையவே அமர்ந்திருந்து
பரவசமே கொண்டுநிற்பர்

எங்கிருந்தோ பறவையெலாம்
எனைநாடி ஓடிவந்து
இங்கிதமாய் இருந்தபடி
சங்கீதம் பாடிநிற்கும்

குயில்கூவும் ஒருபக்கம்
குரங்கோடும் மறுபக்கம்
அணிலெல்லாம் அணிவகுத்து
ஆடியசைந் தோடிநிற்கும்

இளனிவெட்டி விற்பாரும்
இனிப்புச்செய்து விற்பாரும்
இருப்பதனைப் பார்த்துவிட்டு
எங்கிருந்தோ கூட்டம்வரும்

என்னிழலில் எல்லோரும்
இருப்பதனைப் பார்த்தவுடன்
எனக்குவரும் இன்பமதை
எண்ணிவிட முடியாது

ஊர்நடுவே நானிருந்தேன்
உதவிநின்றேன் யாவருக்கும்
யார்செய்த பொல்லாங்கோ
நானங்கே இல்லையிப்போ

புதுத்தலைவர் வந்தவுடன்
புதுத்திட்டம் போட்டார்கள்
திட்டம்வந்த காரணத்தால்
தீர்ந்ததுவே என்வாழ்வு

ஊர்நடுவேநான் நின்றால்
உபத்திரவம் எனச்சொல்லி
வேரோடுஎனைச் சாய்க்க
விரைந்தங்கே செயற்பட்டார்

வீதியைப் பெருக்குதற்கு
வில்லங்கம் நானென்று
வெட்டுதற்குத்  தீர்மானம்
விரைந்தங்கே எடுத்திட்டார்

வெட்டுகின்ற செயல்பற்றி
விவாதங்கள் நடந்தாலும்
வெட்டவேணும் எனும்கட்சி

      வெற்றியங்கே பெற்றதுவே

இரவோடு இரவாக 
எனைவெட்டி வீழ்த்தினரே
மறுநாளே விறகாக
மண்மீது நான்கிடந்தேனே

நிழல்கொடுத்து நின்றயெனை
நினைத்துமே பார்க்காமல்
எனையெடுத்து எரிப்பதற்கு
எல்லோரும் படையெடுத்தார்

இப்படியா இருப்பார்கள்
எண்றெண்ணிப் பார்க்கையிலே
மனிதமனம் மரத்துவிட்ட
வக்கிரத்தை நினைக்கின்றேன்

எப்படித்தான் இருந்தாலும்
எல்லோர்க்கும் நிழல்கொடுத்தேன்
எனும்நினைப்பு  எழும்போது
என்னளவில் மகிழ்கின்றேன்

 
  மரமாக இருந்தாலும்
  மனிதர்க்கெலாம் துணையானேன்
  என்னருமை உணராமல்
  எனைச்சரித்து விட்டார்கள் 
 
  மரமழிக்கும் அரக்கத்தனம்
  மனிதகுல இழுக்காகும்
  எனையழித்த மனிதர்தமை
  எண்ணியெண்ணி அழுகின்றேன் ! 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.