உலகத் தமிழாராட்சி மாநாட்டில் நாத இசை முழங்கிய இசைப்பேரறிஞர் கலாநிதி கே.எம்.பஞ்சாபிகேசன்!; (ஐங்கரன் விக்கினேஸ்வரா)
( நாத இசை பேரொலி கே.எம். பஞ்சாபிகேசன் அவர்களின் நூற்றாண்டு விழா ஜூலை முதலாம் திகதி நடாத்தப்படுகிறது. அதனையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. 1974 உலகத் தமிழாராட்சி மாநாட்டில் இசை வழங்கிய சரித்திரப் பெருமை பெற்றவர். வாழ்வின் முதுமையிலும் கம்பீரம் குறையாமல் இறுதிவரை நாதஸ்வர மேதையான கே.எம். பஞ்சாபிகேசன் 26.06.2015 அன்று தன் மூச்சாகிய ஏழு ஸ்வரங்களுக்குள் மூழ்கிப்போனார்)
ஏழு விரல்களினால் வாசிக்கப் படுவதால் “ஏழில்’ என்றழைக்கப்பட் நாதஸ்வர கலையின் தனித்துவ ஆளுமையாக விளங்கியவரே கலாநிதி கே.எம்.பஞ்சாபிகேசன்.
காற்றிசைக்கருவி வகையைச் சார்ந்த இந்த ‘நாதஸ்வரம்’ மக்களின் அன்றாட வாழ்க்கையில் தினசரி இடம்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக ஈழத்தில் இசைக்கப்படுகின்றது.
தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது இந்த நாதஸ்வர இசைக்கருவியாகும். தமிழ் மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாதஸ்வரம் திருவிழாக்களிலும், திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும், இறைவனின் திருவீதி உலாக்களிலும், உறுமி மேளம், நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது.
இராஜவாத்தியமான நாகஸ்வரம்:
இராஜவாத்தியம் என்றும், மங்களகரமான வாத்தியம் என்றும் சிறப்பிக்கப்பட்டு, தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாதஸ்வர இசையை நாம் இனிதே கேட்கலாம்.
நாதஸ்வரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
ஈழத்து இசைப் பாரம்பரியத்தில் செழுமையாகத் தொடரும் பண்பாட்டின் அடையாளமாக நாதஸ்வரக்கலை விளங்குகின்றது. இந்தக் கலையின் தனித்துவ ஆளுமையாக விளங்கியவரே தென்மராட்சி மண் பெற்றெடுத்த கே.எம்.பஞ்சாபிகேசன்.
தெய்வீகமான இசையை இன்றளவும் பட்டிதொட்டி முதல் இசைவிழா வரையும் போற்றிக் காப்பவர்கள் நாதஸ்வரக் கலைஞர்களே.
இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி. அத்துடன் நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.
உலகத் தமிழாராட்சி மாநாட்டில் இசை முழங்கியவர்:
1974 உலகத் தமிழாராட்சி மாநாட்டில் இசை வழங்கிய சரித்திரப் பெருமை பெற்றவர் கே.எம்.பஞ்சாபிகேசன். பாரம்பரிய பேணுகை, கலை வாழ்வை, ஆன்மீகமாக கொண்ட பக்குவம் அவரது உயர் தனிப்பண்புக்களை தன்னகத்தே கொண்ட பெருமைக்குரியவர்.
பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்தான வித்துவானாக கௌரவம் பெற்றவர்.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்த வாசிப்பு, சபை அறிந்த கச்சேரி ஒழுங்கு, சாஸ்திரிய இசை துணுக்கம், எல்லையில்லாத மனோதர்மம் அவரது இசையின் தனித்துவங்கள் ஆகும்.
கோயில்களில் நாகஸ்வர இசையோடுதான் இறைவனின் நித்திய காலப் பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.
புலருமுன் நான்கு மணி தொடங்கி பூபாளம், பௌனி, மலைய மாருதம் வாசிக்கப்படும். உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும். அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இசை பயிற்சி:
உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தென்மராட்சியில் பிறந்தவர். தனது இசையாற்றலை வளர்த்துக் கொள்வதற்காக தமிழகம் சென்று நாதஸ்வர இசை மாமேதைகளான திருவாவடுதுறை ராஜரட்ணம்பிள்ளை “கக்காயி” நடராஜசுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் இசை பயின்றார்.
பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால்பிள்ளையிடம் பயிற்சி பெற்று பாரம்பரிய மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினை நன்கு பயின்று கொண்டார்.
ஈழமண் தந்த நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் தங்களது பெயர்களை இசையுலகில் மிக ஆழமாகவே பதித்துள்ளார்கள். கலைகளின் தாயகம் என நினைக்கின்ற தமிழகக் கலைஞர்கள் வியந்து நிற்கும் அளவு எங்கள் தேச இசைவேளாளர்களின் மரபும் வளர்ச்சியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு வியாபித்து இருக்கிறது.
14வது வயதில் முதல் நாதஸ்வரக் கச்சேரி:
தனது 14வது வயதில் முதல் நாதஸ்வரக் கச்சேரியை நிகழ்த்திய இவர் அன்று தொட்டு படிப்படியாகப் பெரும் புகழ்கொண்டார். தமிழகத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்களான திருவாரூர் இலட்சியப்பா திருநெல்வேலி பிச்சையப்பா கம்பர், மாசிலாமணி போன்றோரோடும் நம் நாட்டின் பிரபல கலைஞர் களான நல்லூர்சிவாசாமி, அளவெட்டி பத்மநாதன் போன்றோரோடும் இணைந்து பல கச்சேரிகளை இவர் வாசித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தட்சிணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இவர் செய்த கச்சேரிகள் மறக்க முடியாதவை.
இசைப்பேரறிஞர் விருது:
எம் மண்ணின் அரும் பெரும் சொத்தான நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்களான
மறைந்த கலைஞர்களான தவில்மாமேதை வி.தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் வரிசையில் சாவகச்சேரி தந்த எம்.பஞ்சாபிகேசன் அவர்களும் முக்கிய இடம் பெறுகிறார்.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருதினையும், கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” விருதினையும், யாழ். இந்து கலாசார சபையின் “சிவகலாபூஷணம்” விருதினையும் பெற்றவராவார். 1998 இல் வடகிழக்கு மாகாண சபையினால் இவருக்கு ஆளுநர் விருதும் வழங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்ததும் அறிந்ததே.
திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தினால் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” எனும் பட்டமும், கல்வி அமைச்சினால் “நாதஸ்வர கானவாரிதி” எனும் பட்டமும், இந்து கலாசார அமைச்சினால் “ஸ்வரஞானதிலகம்” எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன.
மலேசியா, சிங்கப்பூர், பாங்கொக், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இவரது இசைக்கச்சேரிகள் பல நிகழ்ந்துள்ளன.
யாழ் பல்கலைக்கழக கலாநிதிப் பட்டம்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010ம் ஆண்டு ஒக்ரோபர் 6ம் திகதி “கௌரவ கலாநிதி” பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தது. அப்போது அவர் வாழும் போதே ஒரு கலைஞன் கௌரவிக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதுமே அவன் கலைக்கு ஆற்றிய சேவையை உணர்ந்து கொள்ளப் போதுமானது.
இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைந்தது, இவரது வித்துவத்திறமையையும் தனியொழுக்க மாண்பையும் கருத்தில் கொண்டு
கௌரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தமைக்காக இசைக் கலைஞர்கள் சேர்ந்து நடாத்திய ஒரு கௌரவிப்பு விழாவில் பஞ்சாபிகேசன் அவர்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.
இணுவில் கலாமண்டபத்தில் பெரும் விழா நடந்தது. கல்விமான்கள், கலைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள் என அனைவரும் ஒன்றுகூடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு கலைஞன் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். வாழும் போதே கௌரவிக்கப்பட்ட ஒரே ஒரு நாதஸ்வரக் கலைஞர் அவராவார்.
தென்மராட்சி பெருவிழா:
சாவகச்சேரியூர் பெற்ற இசைப்பேரறிஞர் திரு. பஞ்சாபிகேசன் போற்றுதலுக்கு உரிய ஒப்பற்ற கலைஞன் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்கு தென்மராட்சியில் நடைபெற்ற பராட்டுவிழா பெருமெடுப்பில் நிகழ்ந்தது.
2011 பெப்ருவரி மாதம் 27ம் திகதி சாவகச்சேரி மண் பஞ்சாபிகேசனுக்கு பெருவிழா எடுத்து கௌரவித்தது. சாவகச்சேரி சிவன் கோவில் கலாசார மண்டபத்தில் தென்மராட்சி கல்விமான்கள், கலைஞர்கள், வணிகர்கள், கலாரசிகர்கள் என அனைவரும் திரண்டிருந்து வாழ்த்தினர். நாத இசைக்காக தன்னை அர்ப்பணித்த ஏந்தலை உள்ளத்தில் ஏற்றி வைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.
பெரும் திரளாகத் திரண்டு தங்கள் பிதாமகரை வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்ந்தனர்.
வாழ்வின் முதுமையிலும் கம்பீரம் குறையாமல் இறுதிவரை நாதஸ்வர மேதையாக விளங்கிய இசைப் பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 அன்று தன் மூச்சாகிய ஏழு ஸ்வரங்களுக்குள் மூழ்கிப்போனார்.