“ஆகாயப் பந்தல்” … தொடர் நாவல் …. அங்கம் – 01 ….. ஏலையா க.முருகதாசன்.
(இந்தக் கதை ஒரு விஞ்ஞான ரீதியான கற்பனைக் கதை போலத் தோன்றினாலும் எதிர்காலத்தில் இந்தக் கதை நிஜமாகலாம்.கடந்த காலங்களில் சிந்திக்கப்பட்ட பல விடயங்களை ஏமாற்றுக் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் ஒரு போதும் அது நடைபெறாது என்ற பல விடயங்கள் இப்பொழுது சாத்தியப்படுகின்றது.ஒரு காலத்தில் ஊருக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெற்றன.பின்னர் ஒரு ஊரும் இன்னொரும் திருமண பந்தத்தை ஏற்படுத்தின.மாகாணத்துக்கு மாகாணம் திருமணத் தொடர்புகள் ஏற்பட்டன.பின்னர் நாடுகளுக்கிடையிலும் பின்னர் கண்டங்களுக்கிடையில் திருமணங்கள் நடைபெறுகின்றன.இனிவருங்காலத்தில் பூமி மனிதர்கள் வேற்றக்கிரக வாசிகளுடன் ஆகாயப் பந்தலில் திருமணம் நடத்தும் காலம் வரலாம்.அதுதான் இந்தக் கதை)
ஏலையா க.முருகதாசன்.
மட்டவியா கடுசாமி யாரிச்சு அரிக்கட்டி தேடியாவி ஆகிசு நிகினன்பி மாக் மேனசா வா தவிம்பு சாகி தாதவமிய சாம்படி (கனடாவை நோக்கிச் சென்ற பிரித்தானியாவின் போயிங் விமானம் அட்லாண்டிச் சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்த போது ஏற்பட்ட புயல் அழுத்தத்தால் நிலைகுலைந்தது)
-சரவணன்.
கூடத்தில் சோபாவின் ஒரு திட்டில் தலையை வைச்சப் படுத்துக் கொண்டிருந்த சகுந்தலா,ரிவியில் ஐரோப்பா தேர்தலில் ஜேர்மனிக் கட்சிகள் வென்ற வீதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஏ.எப்.டி கட்சி வென்ற வீதத்தை பாரத்து மிரண்டு போன கணவன் வேலானந்தன்,இஞ்சரப்பா ஏ.எப: டிக் கட்சிக்குத்தான் இப்ப செல்வாக்குக் கூடிக் கொண்டு போகுது போகிற போக்கைப் பார்த்தால் துவக்கெடுக்காத கிட்லர் மீண்டும் வந்துவிடுவார் போல இருக்கு என்கிறார்.
வெளிநாட்டவர் இஞ்சை கூடிப் போச்சுது.ஜேர்மன்காரற்றை மனமும் மாறுந்தானே.வேலையில்லாத வெளிநாட்டுக்காரர்களுக்கு சோசலாம்ற் கொஞ்சநஞ்சக் காசையே குடுக்கினம்,அதோடை வேற உதவிகளை அவையின்ரை பிள்ளைகளுக்குக் குடுக்கினம்,ஜேர்மன்காரரும் யோசிப்பினந்தானே என்று சொன்ன சகுந்தலா உதை விடுங்கோ எங்கடை பிள்ளை மதுசாவைக் கொஞ்ந நாளாக் கவனிக்கிறன் யாரோடயோ இரகசியமாக கன்டியிலை கதைக்கிறாள் என்னைக் கண்டதும் கட் பண்ணுகிறாள் எனக்கெண்டால் இவள் யாரோ பொடியனோடைதான் கதைக்கிறாளோ என்று ஐமிச்சமாயிருக்குது என்று சகுந்தலா சொல்லிக் கொண்டிருக்க,இஞ்சரப்பா எங்கடை காலம் மாதிரி இப்ப இல்லை,இப்ப
ஒன்றாய்ப் படிக்கிற ஆம்பிளைப் பிள்ளையளும் பொம்பிளைப் பிள்ளையளும் ஒருத்தருக்கொருத்தர் கதைக்கிறதும் கன்டியிலை கதைக்கிறதும் சாதாரண விடயம் என்கிறார்.
பொம்பிளைப் பிள்ளையளும் ஆம்பிளைப் பிள்ளையளும் குறூப்பாகச் சந்தித்து கோப்பி குடிக்கப் போவினம் படத்துக்குப் போவினம் அது இப்ப சாதாரண விடயம்,இந்தக் காலத்தப் பிள்ளையள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுவினம் கவனமாயிருப்பினம் நீ மதுசாவைப் பற்றி ஒன்றும் யோசியாi என்று சொல்லிக் கொண்டே ரிவி அலைவரிசையை மாற்றுகிறார்..
நானும் நீயும் ஒருத்தரையொருத்தர் காதலிக்கேக்கை சும்மா பார்ப்பதும் கதைப்பதுமாகத்தானே இருந்தம்,செக்கல் பொழுதுகளில் உங்கடை வீட்டடியிலைச் சந்தித்த நாட்களில் வெறும் மற்றக் கிஸ்ஸோட கட்டுப்பாடாயிருந்தனாங்கள்; எல்லை மீறி அது இது நடக்கேலையே—-என்று கணவன் சொல்லி முடிக்கமுந்தி என்ன அது இது, உங்களுக்கு எப்ப பார் அந்த ஞாபகம்,பிள்ளை மதுசா வளர்ந்திட்டாள்.மதுசாவின் வயசில் நான் எப்படி இருந்தேன் என்பது எனக்குத் தெரியும்,அதுதான் எனக்கு ஒரே யோசனையாகவிருக்கின்றது.
ஒரு நாள் நீ யாரோடை அடிக்கடி கதைக்கிறாய் என்று கேட்டதற்கு தன்னோடை யூனிவேர்சிட்டியில் ஒன்றாகப் படிக்கிற பொடியன் என்று சொன்னாள்,முதலிலை ஒன்றாயப் படிக்கிற பொடியன் எனறு சொல்லுவினம் பிறகு பிரண்ட் என்று சொல்லுவினம் பிறகு கொஞ்சநாள் பொறுத்து லவ்வர் என்று சொல்லுவினம் இப்ப அதுதானே நடந்து கொண்டிருக்குது,மதுசாவும் அந்த வலைக்குள்ளை சிக்கக்கூடாது என்பதிலை நான் பதைபதைத்துப் போயிருக்கிறன்,நீங்கள் என்னடாவென்றால் நான் சொல்ற எதையும் காதிலை விழுத்திறதாகத் தெரியிவில்லை ஏ.எப்.டி கட்சி வென்றதைச் சொல்லிக் கொண்டிருக்கிறியள் என்று மனைவி சகுந்தலா சொல்ல,அதுக்கென்னப்பா அவளின்ரரை படிப்பு முடிஞ்சு ஒரு வேலைக்குப் போனதும் அவள் விரும்பிறவனையே கட்டி வைப்பம்,உதை விடு இப்ப ஜேர்மனியிலை பெரிய பிரச்சினை நடக்கப் போகுது,ஏ.எப்.டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜேர்மன் பாஸ்போர்ட் காரரையும் அனுப்பப் போயினம் என்று எங்கடை ஆட்களுக்குள்ளை ஒரு கதை நடக்குது அந்த யோசனையிலை நான் இருக்கிறன் என்று மீண்டும் ரிவியியல் கவனம் செலுத்துகிறார் வேலானந்தன்.
சில நாட்கள் சென்றன மதுசா தாயிடம் அம்மா என்னோடை படிக்கிற போய்பிரண்ட் எங்கடை வீட்டுக்கு வர ஆசைப்:படுகிறார் வரச்சொல்லவா என்று கேட்க,எதுக்கும் கொப்பாவைக் கேள் அவர் ஓம் என்றால் எனக்குப் பிரச்:சினை இல்லை என்று தாய் சொல்கிறாள்.
மதுசா அப்பாவின் செல்லம்.மதுசா அப்பாவிடம் போய் அப்பா என்னோடை யூனிவேர்சிட்டியில் படிக்கிற போய் பிரண்ட் எங்கடை வீட்டுக்கு வந்து உங்களையும் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் வரச் சொல்லவா என்றுஞ மதுசா கேட்க ஒரு பிரச்சினையும் இல்லை அவரை வரச் சொல் என்கிறார் மதுசாவின் தந்தை.
புகல் ஒரு மணிக்கு வருவதாக மதுசாசின் நண்பன் சொன்னதால்,மதுசாவின் தாய் மத்தியானச் சாப்பாட்டைச் சமைப்பதற்காக ஆயத்தப்படுத்தலில் ஈடுபடுகையில் ஆட்டிறைச்சியை குளிசாதனப் பெட்டிக்குள்ளிருந்து எடுக்கையில் அதைப் பார்த்துவிட்ட மதுசா அம்மா அவர் மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லையென்று சொல்லியிருக்கிறார்.காய்கறிச் சாப்பபாடுதான் அவர் சாப்பிடுவார் என்று சொன்னதும்,அந்தப் பொடியன் பிராமணப் பொடியனா இல்லாட்டி வீரசைவமா எனத் தாய் கேட்க,அவர் பிராமணனும் அல்ல வீரசைவமும் அல்ல ஆனால் அவர் மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லை என்று சொல்லத் தாய் காய்:கறிகளை வெட்டிச் சமைக்கத் தொடங்குகிறாள்.மகளோடு ஒன்றாகப் படிக்கிற பொடியனாகையால் மகளுக்கு பெருமையாக இருக்க வேண்டுமென்பதற்காக ருசியாகச் சமைத்து மேசையில் அழகான பாத்திரங்களில் அவற்றையெல்லாம் போட்டு வைக்கிறாள் தாய்.
தனது நண்பன் வருகிறானா என வீட்டு வாசல்:கதவைத் திறந்து வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்ப்பதும் பிறகு வாசல் கதவைச் சாத்திவிட்டு சோபாவில் சோர்வுடன் உட்காருவதுமாக இருந்தாள் மதுசா.
வருகிறன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுவர்னோ எனக் கவலையுடன் இருக்க தகப்பன்,மதுசா இண்டைக்கு வருவார் என்று திடமாய்ச் சொன்னவர்தானே எனக் கேட்க,தாயும் நல்லாயத் தெரியுமோ இண்டைக்குத்தான் வருகிறார் எனக் கேட்க,ஓமம்மா காலமையும் கன்டியிலை கதைச்சனான் எப்படியும் வராமல் விடமாட்டார் என்கிறாள் மதுசா.
அவள் சொல்லி முடிக்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே வேகமாகச் சென்று கதவைத் திறக்கிறாள் மதுசா.வெள்ளை நீளக் காற்சட்டை வெள்ளை நிறச் சேர்ட்டுடன் கையில் பூங்கொத்துடன் நின்றான் மதுசாவுடன் யூனிவேர்சிட்டியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் சரவணன்.கையை முக்கால்வாசி மடித்து விட்டிருந்தான்.வலது கொலரில் பூமியைப் போன்று கண்டங்களைக் குறிக்கும் சிறிய அளவிலான பொன்னிறத்திலான தட்டையான சின்னத்தைக் குத்தியிருந்தான்.
கலோ குட்மோர்கன் என்றவன் மதுசாவுக்கு கைலாகு கொடுக்கிறான்.கைலாகு கொடுத்துக் கொண்டே ,மதுசாவும் கலோ குட்மோகன் என்று சொல்லி உள்ளே வாருங்கள் என தமிழில் அழைக்கிறாள்.
உள்ளே ஒரடி வைத்து அடுத்த அடி வைக்கும் போது சோபாவின் அருகோடு எழுந்து நின்ற மதுசாவின் தந்தையையும் தாயையும் சரவணன் கண்டவுடன் வேகமாக அவர்களருகில் சென்று வணக்கம் என்று தமிழில் சொல்லி இருவருக்கும் கைலாகு கொடுக்கிறான்.
உட்காருங்கள் என்று மதுசாவின் பெற்றோர் சொன்னதும் தயக்கத்தடன் உட்காருகிறான் சரவணன்.கையிலிருந்த பூங்கொத்தை இத்தாருங்கள் என்று மதுசாவின் தாயிடம் கொடுக்கிறான்.
அவன் கொடுத்த பூங்கொத்தை பார்த்ததும் மதுசாவும் அவளின் தாய் தகப்பனும் வியப்படைகிறார்கள்.அப்படி ஒரு பூக்களை அவர்களின் அனுபவத்தில் எங்குமே கண்டதில்லை.
பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தாலும் அவை அடிக்கடி நிறம் மாறிக் கொண்டேயிருந்தன.பிளாஸ்ரிக் பூக்களாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் இந்தப் பூக்கள் பிளாஸ்ரிப் பூக்களா என்று மதுசா கேட்க, சரவணன் இல்லை இல்லை இவை நிஜப்பூக்கள்தான் என்று அவன் சொல்கிறான் இப்படியான பூக்களை நாங்கள் எங்கையுமே பார்க்கவில்லையே என்று அவள் சொல்ல இவை பூமிக்குரிய பூக்களல்ல எங்களுடைய பிளானட் பூக்கள் என்றவன் உடனேயே தான் யார் என்பதை இவர்கள் ஊகித்து விடுவார்களே என்ற பதட்டத்தில் இந்தப் பூக்களின் விதைள் பனிக்காலங்களில் பனியுடன் சேர்ந்து தரையில் விழுபவை.
இவ்விதைளை முகில்களுக்கும் மேலாகப் பறக்கும் சிவப்பு நீலம் கலந்த பறவைகள் ஆகாயத்தில் தானாக உருவாகும் ஒரு வகைப் பழத்தை சாப்பிட்டிட்டு விதைகளை அப்படியே ஆகாயத்தில் விட்டுவிடுகின்றன.
அவை பூமியின் ஈர்ப்பு விசைiயும் எதிர்த்து ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருப்பவை.பனிக் காலங்களில் ஆகாயத்தில் மிதக்கும் பனித் திரள்களில் பொதிந்து தரையில் விழுந்துவிடுகின்றன.
இவை அரிதாகவே இருக்கும் எங்கள் வீட்டு முற்றத்தில் இவ்வாறு விதைகள் விழுந்து கிடந்தன.அதனை எடுத்து நட்டோம்.இவ்விதையிலிருந்து செடியாக வளர்ந்த போது அச்செடிகள் பழங்களைக் கொடுக்கவில்லை.
இப்படியான பூக்களைப் பூத்தன.பூமித் தரையில் அவற்றுக்குரிய இயல்பான குணம் மாறுபட்டு இப்படியான பூக்களைத்தான் பூக்கும் என்றவன் உன்னோடு படிக்கும் சினேகிதி வீட்டுக்கப் போகிறாய் இந்த அதிசயப் பூக்களைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடைச் செய் என அம்மாதான் இந்தப் பூக்களை தந்தவிட்டவா என சரவணன் சொல்ல அவன் சொன்ன சிவப்பு நீலநிறப் பறவைகள்,பூமியை நோக்கி வராத விதைகள் என எல்லாவற்றையும் புருவம் உயர்த்தி வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர் மதுசாவும் அவளுடைய பெற்றோரும்.
இது சாப்பிடுகிற நேரந்தான் கோப்பி தாறம் அதைக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிடலாந்தானே என மதுசாவின் தாய் சகுந்தலா சரவணனைக் கேட்க ஓம் மாவினி பிரச்சினையில்லை என்கிறான்.
தனது தாயை மாவினி என்று சொன்னதும் திகைப்படைகின்றனர் மதுசாவும் அவளின் பெற்றோரும்.
ஆச்சரியத்துடன் மாவினியா ஏன் இப்படிச் சொன்னனிங்கள் என்று மதுசா கேட்டதும் என்னுடைய அப்பாவின் தங்iiயான எனது மாமியை நான் சிறுவயதிலிருந்தே மாவினி என்று சொல்லிப் பழகிவிட்டன்,அந்தப் பழக்கத்திலை உங்களையும் அப்படிக் கூப்பிட்டுட்டன் என்கிறான் சரவணன்.
மதுசாவுக்கு வியப்புக்கு மேல் வியப்பு.பூக்களும் வித்தியாசமாக இருக்கின்றன.அம்மாவை விளித்ததும் வித்தியாசமாக இருக்கின்றதே இவன் யாராக இருக்கும்.இப்படி ஒரு வித்தியாசமான இளைஞன் எப்படி ஜேர்மனி யூனிவேர்சி;டடியில் படிக்க முடியும்,இவன் ஜேர்மனியில் எந்த நகரத்திலிருப்பவன்,இவனுடைய பெற்றோருடன்தான் இருக்கிறானா என்றவள்
மாவினி என்றாள் தமிழில் மாவன்னா வி னா னினா என்றா எழுதுவது என்று கேட்க இல்லை இல்லை இப்படித்தான் நாங்கள் எழுதுவோம் என்று அங்கிருந்த கடை விளம்பரத் தாளின் மூலை ஓரத்தில் அமினி என்று எழுத இப்படியா என மதுசாவும் பெற்றோரும் வியக்கின்றனர்.
அந்த வியப்புடனேயே சரவணனுக்கு கோப்பி வைப்பதற்காக அடுப்படிக்குள்இந்தப்: பொடியன் யாராக இருக்கும்,ஜேர்மனியில் எந்த நகரமாக இருக்கும் வித்தியாசமாக இருக்கிறானே என எண்ணியபடியே போகிறாள் மதுசாவின் தாய்.அவள் நெற்றியைச் சுருக்கி; பூக்களும் வித்தியாசமாக இருக்கின்றது,அவனுடைய பேச்சும் வித்தியாசமாக இருக்கின்றது. வேற்றுக்கிரக வாசிகள் பூமியில் பல நாடுகளில் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்.அவர்கள் தோற்றத்தில் மனிதர்கள் போலவே இருப்பதாக பிரபஞ்ச கோள்களின் பல ஆய்வாளர்களே சொல்லி வரகிறார்களே.
அவ்வப்போத இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வரும் வேற்றுக்கிரக வாசிகளென காட்டும் ஏலியன்ஸ் உருவப்படங்கள் பொய்யானவை எனத் தடுமாற வைக்கின்றன.
சில வேளை வேற்றுக்கிரக இளைஞனாகவிருக்குமோ என்று குழப்பத்துடனேயே கோப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறாள் மதுசாவின் தாயான சகுந்தலா.
கோப்பியை இரண்டு மிடறு குடித்த சரவணன்,தொண்டை வரை வந்த மாவினி என்ற சொல்லை கஸ்டப்பட்டு அடக்கி,கோப்பி நல்ல சுவையாக இருக்கின்றது அன்ரி என்கிறான்.
அதிகம் பேசாது அமைதியாக இருந்த மதுசாவின் தகப்பன் வேலானந்தன்,சரவணனைப் பார்த்து நீங்கள் ஜேர்மனியில் எங்கே இருக்கிறீர்கள் என்றதும் போகும் நகரில் உள்ள ஒரு குறிச்சியைச் சொல்கிறான் சரவணன்.அவன் சொன்ன இடத்தை இதுவரையில் தான் அறியவில்லை என்கிறார் மதுசாவின் தகப்பன்.
அவர் தொடர்ந்து நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளையுர் எனக் கேட்க,இல்லை நாங்கள் இரண்டு பிள்ளைகள்,எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறாள் என்ற சரவணன் அப்பா போகும் நகர பஸ் டிறைவர் என்றதுடன் அம்மா வேலைக்குப் போவதில்லைஎன என்கிறான்.
சரவணன் இருந்த சோபாவில் அவனருகாக ஒரு தமிழ்ப் பத்திரிகை இருப்பதைக் கண்ட அவன் அதை எடுத்து மனதுக்கள் வாசித்தவன் அவனையறியாமலே மெதுவாக தனக்கு மட்டுமே கேடகத் தக்கதாக மட்டவியா கடுசாமி யாரிச்சு அரிக்கட்டி தேடியாவி ஆகிசு நிகிஎன்பி மாக் மேனசா வா தவிம்பு சாகி தாதவமிய சாம்படி என்று வாசித்ததைக் கேட்ட மதுசாவும் அவளின் பெற்றோரும் வியப்படன் அதனைக் கவனிக்கின்றனர்.சரவணன் என்னதான் வாசிக்கிறான் என அந்தப் பத்திரிகையை வாங்கிய மதுசா அவன் வாசித்த அதே செய்தியை உரத்து வாசிக்கிறாள்.
அதில,;கனடாவை நோக்கிச் சென்ற பிரித்தானியாவின் போயிங் விமானம் அட்லாண்டிச் சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்த போது ஏற்பட்ட புயல் அழுத்தத்தால் நிலைகுலைந்தது என்று தொடர்கின்றது அந்தச் செய்தி.
சரவணனைப் பார்த்து தமிழில்தானே செய்தி இருந்தது.நான் அதை தமிழில் வாசித்தேன்,ஆனால் நீங்கள் வேறொருரு மொழியில் வாசித்தீர்களே என மதுசா அவனைக் கேட்க அவன் கொஞ்சம் தடுமாறி நானும் தங்கச்சியும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக முயற்சித்து ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் ஒவ்வொரு புதுச் சொல்லை புது மொழியாக உருவாக்கியிருக்கிறோம்.அதைப் பழக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் தமிழ்ப் புத்தகங்களை இப்படித்தான் வாசிப்போம்.அப்பாவும் அம்மாவும்கூட எங்களைப் போல வாசிப்பார்கள் என்கிறான்.
மதுசாவுக்கும் பெற்றோருக்கம் வியப்புக்கு மேல் வியப்பு.ஆனால் சரவணனுக்கும் வேற்றுக் கிரகத்திற்குமிடையில் ஏதோ தொடர்பு இருக்குமோ எனச் சகுந்தலாவின் ; மனசில் சந்தேகம் அரும்பத் தொடங்குகின்றது.
அதை வெளிக் காட்டிக்: கொள்ளாமல் சாப்பிடுவோமா என அவள் கேட்க எல்லாரும் சாப்பிடுவதற்காக சாப்பாட்டு மேசையில் போய் உட்காருகிறார்கள்.
சரவணன் மதுசாவுக்கு எதிரில் தகப்பனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவனுடைய கண்களைப் பார்த்தவள் என்ன இது இவனுடைய கருவிழி வெளிர்நீலமாக இருக்கிறதே என வியந்த போதும் வேற்றின மரபணு கலக்கா ஜேர்மனியர்களுக்கு நீலநிறக் கண்கள் இருப்பரதைப் பார்த்திருக்கிறாள்.ஆனால் சரவணனின் கண்கள் வெளிர் நீலமாக இருந்தது மட்டுமல்ல அவை மின்னிக் கொண்டும் இருந்தன.
மதுசா இப்படியான கண்கள் உள்ளவர்களையும் பார்த்திருப்பகதால், அதைப்பற்றி எதுவுமே நினைக்காது அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மதுசாவின் தகப்பன் சரவணனிடம் நீங்கள் நெடுகவே மரக்கறிதான் சாப்பிடுபவர்களா என்க் கேட்டதும்,நானறிந்து என்னுடைய தாத்தாவின் தகப்பன் காலத்திலிருந்தே மரக்கறி சாப்பிடுகிறோம் என்கிறான் சரவணன்.
உயிர்களைக் கொலை செய்து சாப்பிட வேணுமா.அவைகளுக்கென்று வாழ்வு இருக்கின்றது,;அவைகளுக்கென்று,மொழி இருக்கின்றது,அவைகளுக்கென்று மகிழ்ச்சி இருக்கின்றது.எங்களைக் கொல்லாதீர்கள் என்று எங்களுடைய மொழியில் அவைகளால் பேச முடியவில்லையே தவிர அவை எம்மைப் பார்க்கும் பார்வைகள் அதை உணர்த்துவதை எனது முந்தைய பரம்பரை உணர்ந்ததால் உயிரைக் கொலை செய்து அவற்றின் ஊனை உன்பதை அருவருப்பாக நினைக்கிறோம் எனச் சரவணன் சொன்னதை மதுசாவின் பெற்றோரும் அது சரிதான் என ஏற்றக் கொண்டனர்.
உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனை உண்ணக்கூடாது என்று சரவணன் சொன்னது ஏனோ என்றுமில்லாவாறு மதுசாவின் பெற்றோர்களைச் சிந்திக்க வைச்சது.
தன்னை வெட்டி உண்ண வரும் மனிதனை தடுத்த நிறுத்த முடியாத நிலையிலிருக்கும் ஒரு விலங்கு எவ்வளவு வேதனைப்படும் என்பதை சரவணன் விளங்கப்படுத்தியதும்,அதனைத் தடுத்து நிறுத்த முடியாத அந்த விலங்குக்கு மனிதர்களின் மொழி தெரியாது துடிக்குமே என சரவணன் சொல்லச் சொல்ல தாமும் இன்றுடன் மச்சம் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவதாக அவன் முன்னாலேயே உறுதி எடுத்துக் கொண்டனர்.
சாப்பாடு நன்றாக இருக்கின்றது என்று இரசித்து இரசித்துச் சாப்பிட்ட சரவணன் மதுசாவின் தாய்க்கு நன்றி சொன்னான்.
எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சதும்,மதுசா நான்கு மாம்பழங்களைத் துண்டுகளாக்கிக் கொண்டு வந்து எல்லோருக்கம் கொடுத்தாள்.
மதுசாவின் தாயும் தந்தையும் சரவணன் கொண்டு வந்து கொடுத்த பூங்கொத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்தனர்.பூக்கள் நிறம் மாறிக் கொண்டேயிருந்தன.
இன்னொரு அதிசயமும் அந்தப் பூக்களில் நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்த நால்வரும் எதுவும் கதைக்காமல் இருக்கும் போதெல்லாம் பூக்களின் நிறங்கள் மெதுவாக மாறுவதும்,அவர்கள் கதைக்கும் போது பூக்களின் நிறங்கள் மிக வேகமாக மாற்றமடைவதையும் கவனித்தனர்.
அவர்களின் வீட்டுடுக்கு வெளியே முற்றத்தில் பூத்திருந்து பூக்களில் தேன் குடிக்க வந்த தேனீக்களில் ஒன்று திறந்திருந்த யன்னலூடாக வேகமாக வீட்டுக்குள் வந்து அந்தப் பூக்களின் நடுப்பகுதிக்குள் சென்று சென்று வந்தது.
அந்தத் தேனீ பூக்களில் மாறி மாறி இருக்கும் போதெல்லாம் பூக்களிலிருந்து மெலிதான கிண்கிணி ஓசை வந்து கொண்டே இருந்தது.நால்வரும் அந்தத் தேனீயை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.தேனீ கால்களில் மகரந்த தூள்களை ஒட்டிக் கொண்டு வெளியே பறந்து சென்றது.
அதைக் கவனித்த சரவணன்,மகரந்தத் துகள்களைக் கொண்டு சென்ற தேனீ வெளியே இருக்கும் பெண் பூக்களில் அவற்றைச் சொரியப் போகின்றது,காய்க்காத இயல்புடைய பூக்கள் காய்த்து பழமாகி விதைள் வரப் போகின்றன என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.
தான் யார் என்பதையோ,இனி என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பதையோ சொல்ல முடியாத நிலையிலிருந்த சரவணன் என்றோ ஒரு நாள் தான் யார் என்பதை மதுசாவுக்கு சொல்லத்தான் வேண்டும் என்பதையும் எண்ணிக் கொண்டான்.
மதுசாவைவிட அவளின் பெற்றோரோ சரவணனுடன் பேசிக் கொண்டனர்.மதுசா தமிழில் அவனுடன் கதைத்தாலும் அதிகமான ஜேர்மன் சொற்களைப் பயன்படுத்தியே அவனுடன் கதைத்தாள்.
மதுசா நோய்களுக்குக் கொடுக்கும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்ப்பது எப்படி,எந்த உணவை எந்த நோயாளிக்குக் கொடுத்தால் அதன் வேதியல் பொருள் அந்த நோயாளியைக் குணமாக்கும் என்ற படிப்பைத் தனது தேர்வாக எடுத்துப் படிக்கிறாள்.
அது சரவணனுக்கத் தெரியும்.அது சரியான தேர்வு என மதுசாவுக்கச் சொல்லியுமிருக்கிறான்.பூமியில் காணப்படாத பூக்களைத் தங்களுக்குப் பரிசளித்தமை அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
பூமியின் தரைக்கே வராது ஆகாயத்திலே வாழுகின்ற அதிசயப் பறவை.ஆகாயத்திலேயே பழுக்கும் பழம்.அதனைச் சாப்பிடும் அந்த அதிசயப்: பறவை அலகுகளை ஆகாயத்தில் உறைந்து நிற்கும் பனியில் தேய்ப்பதும்,உறைந்து இருக்கும் பனி நெகிழ்ந்து பூமிiயு நோக்கி விழும் போது அதனுடன் சேர்ந்து அந்த அதிசய விதைகள் விழுந்து முளைத்த செடியிலிருந்த இப்பூக்களைக் கொண்டு வந்தேன் என சரவணன் ஆரம்பத்தில் சொல்லியிருந்தான்.
பூமயில் வாழும் பறவைகள் அங்குள்ள மரங்களில் வாழுகின்றன.இனவிருத்தி காலங்களில் முட்:டையிடுவதற்காக கூடு கட்டுகின்றன,அது போல ஆகாயத்தில் வாழும் பறவைகள் எங்கு தங்குகின்றன.எங்கு கூடுகட்டுகின்றன என்று சரவணனை மதுசாவின் தந்தை வேலானந்தன் கேட்ட போது,அவை ஆகாயத்தில் உறைபனி காலத்தில் அங்கு கூடுகட்டுகின்றன.அவை முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதே இல்லை.தாய்ப்பறவையின் வயிற்றிலிருந்து குஞ்சாகவே வெளிவருகின்றன என்று சொன்னதும் மதுசாவும் அவளின் பெற்றோரும் வியப்படைகின்றனர்.
சரவணன் சொல்லச் சொல்ல இதுவரை கேள்விப்படாத செய்தியாக அது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
நீங்கள் என்ன படிப்புப் படிக்கிறீர்கள் எனச் சரவணனைக் கேட்கலாமா விடலாமா என மதுசாவின் தாய் யோசித்த போது தான் பிரபஞ்சமும் அவற்றில் மிதக்கும் கோள்கள் பற்றியும் படிப்பதாகவும்,இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கோள்கள் இருப்பதாகவும் அவற்றை ஆய்வு செய்யும் படிப்பையே தான் படிப்பதாகச் சரவணன் சொல்கிறான்.
மாலையாகியதும் சரவணன் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்வதற்கு ஆயத்hதமாகும் போது,ஏன் அவசரப்படுகிறீர்கள்,நாளைக்கு ஞாயிற்றக்கிழமைதானே ரீ குடிச்சிட்டுப் போங்கள் என மதுசாவின் தாய் சொல்ல சரவணன் அதற்குச் சம்மதிக்கிறான்.
சரவணனுக்கு ஏலக்காய் போட்ட மசாலா ரீயும்,கடலை வடையும் குடுத்து உபசரிக்கிறார்கள்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த சரவணன் அவர்களிடம் விடைபெற்றுச் செல்கிறான் வீட்டின் வாசல் கதவு வரை வந்து அவனை வழியனுப்பி வைக்கிறாள் மதுசா
அவன் நடந்து சென்று தனது காரில் ஏறி உட்கார்ந்து காரை எடுக்கும் வரை காத்திருந்த மதுசாவுக்கு தனது காரின் கண்ணாடியை இறக்கி வெளியே கையை நீட்டி போய்வருகிறேன் எனக் கையை அசைக்கிறான்,மதுசாவும் பதிலுக்கு யைசைக்கிறாள்.
அப்பொழுது வாசலுக்கு வந்த மதுசாவின் தாய் சகுந்தலா, சரவணன் காரிலிருந்தபடியே மகளுக்கு கையசைப்பதையும் பதிலுக்கு மகள் கையசைப்பதையும் பார்க்கிறாள்.
கதவைச் சாத்திய மதுசா தாயுடன் கூடத்துக்கு வருகையில் உன்ரை பிரண்ட் வித்தியாசமான ஆளாக இருக்கிறாரே.உனக்கு அந்த வித்தியாசம் தெரியுதா எனக் கேட்கிறாள்.
கொஞ்சம் தெரியுதம்மா,என்று மகள் சொல்ல இப்ப வெப்சைட்டுகளிலும் யூரிப்பூகளிலும் ஒரு செய்தி நாளுக்கு நாள் பிரபலமாகி வருகுது அது என்னென்று தெரியுமோ என்று தாய் கேட்க,வேறை பிளனட் ஆட்களைத்தானே நீங்கள் கேட்கிறியள்;, அவை மக்களோடு மக்களாக பல நாடுகளில் பலவாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற செயதியைத்தானேயம்மா நீங்கள் கேட்கிறியள் என்று தாயைக் கேட்க அதைத்தான் நானும் யோசிச்சனான் என்கிறாள் தாய்.
அம்மா டார்வின் உயிரியல் தத்தவம் பற்றிஉங்களுக்கத் ; தெரியுந்தானே.ஒரு கல உயிரினமான அமீபாவிலிருந்து படிப்படியாக பரிணாமம் பெற்று பல உயிரினங்களைத் தாண்டி மனித உயிரினம் தோன்றிய உயிரியல் வரலாற்றைத்தானே இன்றளவும் உலகம் எற்றுக் கொண்டிருக்கிறது என்று மதுசா சொல்ல அதை ஏற்றுக் கொண்ட உலகந்தான் வேற்றுக் கிரகங்களின் மொடல் கிரகந்தான் பூமி,பூமியில் மனிதர்களை அவர்களே உருவாக்கினார்கள் என்பதும் உண்மைதான்.ஏனென்றால் பூமியில் உள்ள மனிதர்கள் நாட்டுக்கு நாடு கண்டத்துக்கு கண்டம் வித்தியாசமாக இருக்கிறார்களே அது ஏன் என்பதை யோசித்தால் புரியாத புதிர்கள் நிறைய இருக்கின்றன என்ற சகுந்தலா எனக்க என்னமோ சரவணன் வேற்றுக்கிரக மனிதனின் பரம்பரையோ என யோசிக்க வைக்கின்றது.
இன்னொரு விசயம் கவனிச்சனியே இந்தப் பூ வித்தியாசமாக இருக்குது.ஆகாயத்தில் மட்டுமே முளைக்கும் செடியிலிருந்து பூத்துக் காய்க்கும் பழத்தைச் சாப்பிடும் ஒரு அதிசயப் பறவை ஆகாயத்திலேயே வாழ்வதாக சரவணன் சொல்கிறார்,சரவணன் பூமிக்குரிய ஆளல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது என்று தாய் முடிக்கமுந்தி அம்மா பயமுறத்தாதையம்மா என்கிறாள் மதுசா.
மதுசாவின் தாயும் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி,அதைவிட நிறைய விஞ்ஞானப் புத்தகங்களை வாசிப்பவள்.தகப்பனும் தாயும் மதுசாவும் பொதுவிடயங்களை கலந்துரையாடுவது உண்டு.
கூடத்திலிருந்து அறைக்குப் போக நடந்தவள் என்ன நினைச்சாளோ தெரியாது,மகளுக்குக் கிட்ட வந்து சரவணன் வெறும் பிரண்ட்தானே அதற்கு மேலே போகாதை,போனால் நீ வேறு கிரகத்தில்தான் வாழ வேண்டி வந்தாலும் வரலாம் என்று கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வும் கலந்து சொல்ல,அம்மா ! அப்படி ஒன்றும் நடக்காது பயப்படாதை என்கிறாள் மதுசா.
சரவணன் மதுசாவின் வீட்டுக்குஎ வந்து போனதன் பின் ஒரு கிழமைக்குப்: பிறகு யூனிவேர்சி;ட்டிச் சிற்றுண்டிச்சாலையில் மதுசாவைச் சந்திச்ச
சரவணன் மதுசாவிடம் அப்பாவும் அம்மாவும் உங்களைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர்கள் உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்கிறான்.
அவளால் அதனை மறுக்க முடியவில்லையென்றாலும் அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்க வேணும் என்கிறாள் மதுசா.நானே கேட்கிறேன் என்கிறான் சரவணன்.
(தொடரும்)