சி. மகேந்திரன் எழுதிய “ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்” … முருகபூபதி.
படித்தோம் சொல்கின்றோம் :
சி. மகேந்திரன் எழுதிய
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் !
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? !
முருகபூபதி.
“ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் இல்லை. மனிதர் செய்யும் இடையூறுகளை கடந்து அது புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து வாழ்ந்துகொண்டேயிருக்கும். இதைப்போலவே மரணசாசனம் என்பதும் ஒரு ஆதங்கம். நதிகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கை. ஆனால், நதி இன்னமும் மரணமுற்றுவிடவில்லை. மரணம் அடைந்துவிட்டதாக மனம் கொந்தளிக்கிறது. அவ்வளவுதான். “ என்று, வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்ற நூலை எழுதியிருக்கும் தோழர் சி. மகேந்திரன், ஏன் இதனை எழுதினேன் என்பதற்கான காரணத்தை சொல்கிறார்.
தலைப்பினைப் பார்த்ததும், இந்த நூல் ஏதோ கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவிருக்குமோ ? என்ற எண்ணம்தான் வாசகர்களுக்கு முதலில் வரக்கூடும்.
ஆனால், தமிழக நதிகளின் வரலாற்றையும் சுற்றுச்சூழலினால் மாறிவிட்ட அதன் கோலங்களையும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் ஊடாக ஆவணமாகவே இந்நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது.
நூலாசிரியர் , இந்தநூலின் 74 ஆவது அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் ஆதங்கத்தையே இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவரையில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூல் இந்திய சாகித்திய அகடமியின் தெரிவுக்குழுவுக்கு ஏன் எவராலும் பரிந்துரை செய்யப்படவில்லை..? என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழக நதிகளின் வரலாறு ஏற்கனவே ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் பிரபல ஓவியர் மருது வரைந்த வண்ணப்படங்களுடன் தொடராக வெளியாகியது.
நீரின் மரணம் என்ற முதல் அத்தியாயத்துடன் தொடங்கும் இந்த நூல் நதித்தாய் காப்போம் என்ற 74 ஆவது அத்தியாயத்துடன் நிறைவுபெற்றாலும், மேலும் சொல்வதற்கான செய்திகளை உறைபொருளாகக் கொண்டிருக்கிறது. தேடல் மனப்பான்மைகொண்ட தீவிர வாசகர்களுக்கு பல பாதைகளையும் திறந்துவிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த ஆர்வலர்களுக்கு பல செய்திகளையும் கூறுகின்றது.
மலைகளில் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதிகளாகி கடலோடு சங்கமிக்கும் வரையில், அவை தமது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அதன் கரைகளில் வாழ்ந்துவரும் மனிதக்கூட்டம் தனது தேவைகளுக்காக மாற்றுகிறது. அதன் விளைவுகளையும், அழிவுகளையும் சந்திக்கிறது.
தோழர் மகேந்திரன் தனது மாணவப்பருவத்திலிருந்தே முற்போக்குச்சிந்தனையுடன் வளர்ந்தவர். பின்னாளில் பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். தமிழ்நாட்டில் இடதுசாரித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தவர்.
பல நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு கலை, இலக்கியப்பெருமன்றத்தில் இணைந்திருந்தவர். தாமரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய இலக்கியவாதி.
தமிழக நதிகளின் வரலாற்றையும், அதற்கு நேர்ந்த அவலங்களையும் தேடி ஆராய்வதற்காக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்.
நீரியல் அறிஞர்கள் பலரையும் சந்தித்து மேலதிக தகவல்களை சேகரித்திருக்கிறார். இந்திய விவசாயத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்ந்திருக்கிறார்.
அத்துடன் மேலதிக தகவல் ஆதாரங்களுக்காக தமிழில் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களையும் ஆங்கிலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் படித்திருக்கிறார்.
அந்தவகையில் தோழர் மகேந்திரனின் கடின உழைப்பு போற்றுதலுக்குரியது.
அவர் நதிகளின் வரலாற்றை சொல்லும்போது, கதை சொல்லியாகவே மாறியிருக்கிறார். அதனால், சலிப்பின்றி வாசிக்க முடிகிறது.
ஓடும் நதிகளின் பின்னணியில் அவற்றின் தீரத்திலிருக்கும் ஊர்களின் பெயர்கள் தோன்றிய கதையையும் அழகாக சொல்கிறார்.
சில தமிழக ஊர்களின் முன்னைய பெயர்களையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.
மதுரையின் ஆதிப்பெயர் – கடம்பவனம்.
சிதம்பரத்தின் ஆதிப்பெயர் – தில்லைவனம்.
திருநெல்வேலியின் ஆதிப்பெயர் – வேணுவனம்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாநகரத்தின் பெயர்க்காரணம் ஒரு குறுங்கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இம்மாநகரம் ஒரு காலத்தில் வளம்கொழிக்கும் நெல்வயல்கள் நிறைந்த மருத நிலப்பகுதி. மக்கள் அறுவடை முடிந்தபின்னர் நெல்மணிகளை குவியல் குவியலாக களஞ்சியங்களில் நிரப்பி வைத்திருந்தனர். நதியில் பெருவெள்ளம் வந்து வீடு வாசல்கள் நகரம் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டது.
வெள்ளம் வடிந்தபின்னர் உயிர்வாழ உணவு வேண்டும். அங்கிருந்த விவசாய பெருங்குடி மக்கள் நெல்லையப்பர் கோயிலில் வேண்டிக்கொண்டனர். அந்தக்கடவுள் தம்மை காப்பாற்றுவார் என நம்பியிருக்கிறார்கள். நெற்களஞ்சியங்களை நெல்லையப்பர் வேலிபோட்டு காப்பாற்றுவார் என நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயற்கையின் கருணையால் அந்த நெற்களஞ்சியங்கள் காப்பாற்றப்பட்டன.
அதனால், திருநெல்வேலி என்ற பெயர் காரணப் பெயராகியிருக்கிறது.
இந்தியா – இலங்கை – அவுஸ்திரேலியா உட்பட மலேசியா சிங்கப்பூர் முதலான நாடுகள் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பில் இணைந்திருந்த தேசங்கள்தான். அக்காலத்தில் தோன்றிய கடற்கோளினால் இவை பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரே நிலப்பரப்பில் இருந்தபோது, தமிழகத்தின் பிரசித்திபெற்ற தொன்மையான தாமிரபரணி நதி, இலங்கைக்குள்ளும் வந்திருக்கிறது.
இலங்கை வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரமாக கொள்ளப்படும் மகாவம்சம் மூல நூல் இலங்கைத் தீவை தாமிரபரணி என்றுதான் அழைக்கின்றது என்ற செய்தியையும் நூலாசிரியர் நினைவுபடுத்துகிறார்.
கிரேக்கத்தைச்சேர்ந்த மெகஸ்தனீஸ் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலில் இந்தியாவுக்கும் பின்னர் இலங்கைக்கும் வந்து இத்தீவை “ தாம்ரபனே “ என பதிவுசெய்திருக்கும் தகவலையும் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் ஓடும் களனி நதியின் ஆதிகாலப்பெயர் கல்யாணி, என்பதும், கொழும்பு கோட்டையிலிருக்கும் பழமையான தப்ரபேன் உணவு விடுதியும் எமக்கு நினைவுக்கு வருகிறது.
“ ஆழிப்பேரலைகள் விழுங்குவதற்கு முன்னர் தென்பாண்டிச்சீமைக்கும் இலங்கைக்கும் இடையில் நிலத்தொடர்புகள் இருந்தது என்பது தொல்நம்பிக்கையாகத்தான் இதுநாள்வரையில் கருதப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய புவியியல் ஆய்வு வளர்ச்சி, நில இணைப்பு இருந்ததற்கான ஆதாரங்களைக் கூடுதலாக்கியுள்ளது. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நிலத்தொடர்ச்சி இருந்தது என்பதையும் இவற்றின் மூலம் உறுதியாக நம்பமுடிகிறது. “ என்று தோழர் மகேந்திரன் மேலதிக விளக்கமும் தருகின்றார்.
எமது இலங்கை – இந்திய தமிழ்மக்கள் அடிக்கடி உதிர்க்கும் தொப்புள்கொடி உறவு என்ற வார்த்தைப்பிரயோகத்தை இந்தப்பின்னணியிலும் நாம் பார்க்கலாம்.
தமிழக நதிகளினதும் ஏரிகளினதும் வரலாற்றைச்சொல்லும் இந்த நூல், இவற்றின் கரைகளில் ஆட்சி புரிந்த மன்னர்கள் பற்றிய செய்திகளையும் சொல்கிறது.
தனது முப்பதாவது வயதில் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறில் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் வீரத்தையும் பதிவுசெய்துள்ளது.
ஊமைத்துரை பிறவியிலேயே வாய்பேசமுடியாத, செவிப்புலனற்ற வலதுகுறைந்த மாற்றுத்திறனாளி. எனினும் அவனது வீரம்செறிந்த கதையையும் இந்த நூலின் மூலம் நாம் தெரிந்துகொள்கின்றோம்.
சிறையிலிருந்து தப்பிச்சென்று, தூத்துக்குடியிலிருந்த கிழக்கிந்திய கம்பனி படையின் மீது தாக்குதல் தொடுக்கிறான். அந்தப்படையின் ஆயுதங்களையும் பறிக்கிறான். அவ்வேளையில் அந்த இராணுவப்படை அதிகாரி பாக்கட் என்பவனையும் கைதுசெய்துவிடுகின்றான்.
பின்னர், அவனை விடுவிக்குமாறு உயிர்ப்பிச்சை கேட்டு வருகிறாள் அவனது ஆங்கிலேய மனைவி. அவளது கண்ணீருக்கு இரங்கி, அந்தத் தளபதியை விடுவிக்கும் ஊமைத்துரைக்கு தமிழகத்தை ஆக்கிரமிக்க வந்த வெள்ளை இனத்து இராணுவம் இரக்கம் காண்பிக்கவில்லை.
1801 ஆம் ஆண்டு அவன் தூக்கிலடப்படும்போது வயது இருபத்திரண்டுதான் !
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை உறுதியாக கட்டப்பட்டதன் பின்னணியையும் மகேந்திரன் ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறார்.
மண்சார்ந்த தொழில் நுட்பத்தை கையாண்டு ஊமைத்துரை அதனை நிர்மாணித்திருக்கிறான். பொருத்தமான மண்ணும் பனைமரத்திலிருந்து இறக்கப்பட்ட பதநீரும் கம்பு என்ற தானியத்திலிருந்து வரும் சக்கையையும் குழைத்து கட்டப்பட்டதனால்தான் அந்த ஆக்கிரமிப்பு படையினால் எளிதாக அந்தக்கோட்டையை சிதைக்க முடியவில்லை என்ற தகவலையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
திருநெல்வேலியின் அருகில் இருக்கும் ஊர் கங்கைகொண்டான். ராஜேந்திரசோழன் வெற்றிகொண்ட இந்தப்பிரதேசத்தைத்தான் தற்போது, அந்நிய குளிர்பானக்கம்பனி ஒன்று வெற்றிகொண்டுவிட்டதாக அங்கதமாக பதிவுசெய்கிறார்.
நதிகளை சாக்கடையாக்கியவர்கள் பற்றியும், நதிகளை உறிஞ்சிய காப்ரேட் நிறுவனங்கள் பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
“ காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு. “ என்று மகாகவி பாரதி அன்றே பாடி வைத்துவிட்டார் என்பது எமக்குத் தெரிந்ததுதான்.
பின்னாளில் நதிகளுக்கு நேர்ந்த அவலம் பற்றி, குறிப்பாக மணிமுத்தாறின் நிலைபற்றி கவிஞர் தமிழ்நாடன் எழுதிய கவிதையையும் மகேந்திரன் நினைவூட்டுகிறார்.
“ அசோகனுக்கு கங்கை
அக்பருக்கு யமுனை
எனக்கு திருமணிமுத்தாறு.
முதலில் ஆபரணம் கவர்ந்தார்கள்.
பின் ஆடை களைந்தார்கள்.
வெறிதீரக்கெடுத்தார்கள்.
அத்தோடு விட்டார்களா..?
துண்டு துண்டாய் வெட்டிப்போட்டார்கள்.
சண்டாளர்களே
இவள் தலை எங்கே ? கால் எங்கே ? “
தாமிரபரணி, வைகை, காவிரி, பவானி, வெண்ணாறு, மணிமுத்தாறு உட்பட பல வற்றாத ஜீவநதிகளின் மாறிவிட்ட இன்றைய கோலத்தையும் சித்திரிக்கும் இந்த நூல் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் கூவம் நதிபற்றியும் விரிவான தகவல்களை சொல்கிறது.
பிரான்ஸிஸ்டே என்ற பிரித்தானிய தளபதியின் தலைமையில் வங்கக்கடலில் மிதந்து வந்த கப்பலில் இராணுவத்தினர், மருத்துவர், எழுத்தர்கள், தச்சர்கள், கொல்லர்கள் சமையற்காரர்கள், மற்றும் இவர்களுக்கு உதவியாளர்கள் என ஒரு கூட்டம் வந்திறங்கி தோட்டை கட்டுவதற்கு நிலத்தை தேர்வுசெய்த இடத்தில்தான் கூவம் நதி ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் மூங்கில் காடுகளும் பனந்தோப்புகளும் நிறைந்திருந்த நதியும் கடலும் சங்கமிக்கும் அந்தப்பிரதேசத்தில் கட்டிய கோட்டைதான் செயிண்ட் ஜோர்ஜ் கோட்டை.
இக்கோட்டையை அமைப்பதற்கு அந்த நதிக்கரையை ஆங்கிலேயர்கள் யாரிடமிருந்து பெற்றார்கள் ? என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியையும் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் அவர் , தனது நீண்டகால உழைப்பிலும் தேடலிலும் எழுதித்தந்திருக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் நூல், தமிழக நதிகளின் கதைகளையும் அவை இன்று கொண்டிருக்கும் கோலங்களை மாத்திரமன்றி, தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும் முடிந்தவரையில் சுருக்கமாகத் தந்திருக்கிறது.
நதிகள் குறித்து அறிவதற்கும் ஆராய்வதற்கும் முன்வரும் மாணவர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இந்த நூல் சிறந்த உசாத்துணையாக விளங்கும்.
இந்நூல் ஆங்கிலம் உட்பட இந்திய இதர மொழிகளிலும் பெயர்க்கப்படல் வேண்டும்.
தோழர் மகேந்திரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—0— letchumananm@gmail.com
சிறப்பான கட்டுரை