“கனகர் கிராமம்” … தொடர் நாவல் … அங்கம் – 37 …. செங்கதிரோன்.
டாக்டர் உதுமாலெவ்வையையும் அவரது மனைவியையும் பொத்துவில் வாடிவீட்டில் விட்டுவிட்டுத் தன் இளையக்காவின் வீட்டையடைந்த கோகுலன் வந்ததும் வராததுமாக உடைகளை மாற்றிக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான். ஆனாலும் உறக்கம் வரவில்லை.
அன்று முழுவதும் டாக்டர் உதுமாலெவ்வையுடன் உரையாடிய விடயங்கள் அடுப்பில் நீர் கொதிக்கும்போது நீர் நிரம்பிய பாத்திரத்தின் அடியிலிருந்து நீரின் மேற்பரப்பை நோக்கி எழுகின்ற நீர்க்குமிழிகள்போல நெஞ்சில் மேலெழுந்து அலைமோதின.
தமிழ் பேசும் மக்களுடைய விடுதலைப் போராட்ட அரசியலில் தமிழ் முஸ்லிம் உறவு, அதிலும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் சீர் செய்யப்படவேண்டுமென்று கோகுலன் எண்ணினான். அதனைச் சுற்றியே அவனது சிந்தனைகள் வலம் வந்தன.
1970 இல் பதவிக்குவந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிக்குத் ‘தரப்படுத்தல்’ எனும் புதிய முறையொன்றினை அறிமுகம் செய்தது. இதன் நோக்கம் இலங்கையில் கற்றல் வசதிகள் குறைந்த பின்தங்கிய மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவேண்டுமென்பதே.
ஆனால், இந்தத் ‘தரப்படுத்தல்’ முறைமையினால் அதுவரையில் பல்கலைக்கழக அனுமதியில் பல அனுகூலங்களை அனுபவித்து வந்த யாழ் மாவட்ட அதிலும் குறிப்பாக யாழ்குடாநாட்டு மாணவர்கள் பாதிப்படைந்தார்கள். அதன் விளைவு யாழ்குடாநாட்டுத் தமிழ் இளைஞர்கள் அரச எதிர்ப்பில் ஈடுபட்டார்கள். தமிழரசுக் கட்சியும் அதனை ஊக்குவித்தது.
சத்தியசீலன் தலைமையிலே “தமிழ் மாணவர் பேரவை” எனும் அமைப்பு உருவாகி அந்த அமைப்பினால் அரச எதிர்ப்பு ஆரப்பாட்டங்களும் தரப்படுத்தலைக் கைவிடக்கோரிக் கண்டன நடவடிக்கைகளும் யாழ் குடாநாட்டில் முடுக்கிவிடப்பட்டன.அதன் ஒரு நடவடிக்கையாக
யாழ் முற்றவெளியிலே அப்போது கல்வியமைச்சராகவிருந்த பதியுதீன் மஃமூத் அவர்களின் ‘கொடும்பாவி’ கட்டி எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களெல்லாம் கோகுலனின் நினைவில் எழுந்தன. இவர் கம்பளையைச் சேர்ந்த முஸ்லிம்மாவார்,கம்பளை சாகிராக் கல்லூரியின் அதிபராகவும் முன்பு கடமையாற்றியவர். விடய அமைச்சராகவிருந்த அவர் அரசாங்கத்தின் கொள்கையைத்தானே நிறைவேற்றினார். ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏறத்தானே வேண்டும்’ என்றொரு கிராமத்துப் பழமொழியுண்டு. அரசாங்கத்தில் கல்விக்குக் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் ‘தரப்படுத்தல்’ கொள்கையை அமுல் செய்யத்தானே வேண்டும். எய்தவனிருக்க அம்பை நோவது முறையல்ல.
இலங்கையின் சிறுபான்மைச் சமூகளிலொன்றான முஸ்லீம் தலைவர்களிலொருவராகக் கருதப்பெற்ற பதியுதீன் மஃமூத் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் கொடும்பாவி கட்டியெரிக்கப்பட்டமை. முஸ்லிம்களின் உணர்வைப் பாதிக்கின்ற விடயமாகவே கோகுலனுக்குப்பட்டது. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றே கோகுலன் இப்போது எண்ணினான். தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் மட்டக்களப்புக்கு வந்து மட்டக்களப்பு முற்றவெளியிலும் கல்வியமைச்சர் பதியுதீன் மஃமூத் அவர்களின் கொடும்பாவி கட்டியெரிக்க முயற்சித்ததும் கோகுலனின் ஞாபகத்திற்கு வந்தது.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்குக் கொடும்பாவி கட்டி எரிப்பதற்கு கல்முனையில் முஸ்லிம் குழுவொன்று முயன்றபோது அதனை அப்போது கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான எம்.சி.அகமட் தடுத்து நிறுத்தியமை கோகுலனுக்குத் தெரியும். அது நடந்திருந்தால் தமிழ்-முஸ்லிம் இனமுறுகல் ஏற்பட்டிருந்திருக்கும். அதனைத் தடுத்து நிறுத்திய அகமட்டைக் கோகுலனின் மனம் பாராட்டியது.
‘தரப்படுத்தல்’ முறைமை யாழ்குடாநாட்டுத் தமிழ் மாணவர்களைப் பாதித்திருந்தாலும்கூட கற்றல் வசதியில் பின்தங்கிய வன்னிப் பிரதேச மாவட்டங்களான வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களையும் அதுபோல கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் பலர் மாவட்ட அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பைக் கொடுத்தது. உண்மையில் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இம்மாவட்டங்களைச் சேர்ந்த அநேக மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர். இந்த உண்மையைக் கோகுலன் இப்போது உணர்ந்தான். ‘தரப்படுத்தல்’ தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பபட்டதல்ல. முழு இலங்கையையும் மனதில் வைத்து கற்றல் வசதிகள் குறைந்த பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவே அது அறிமுகம் செய்யப்பட்டது. அதனால் யாழ் மாவட்ட மாணவர்கள் மட்டுமல்ல கொழும்பு, கண்டி போன்ற நகரமயமாக்கப்பட்ட கற்றல் வசதிகள் உள்ள மாவட்ட மாணவர்களும்தான் அதாவது சிங்கள மாணவர்களும்தான் முன்பு அனுபவித்த சலுகைகளை இழந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கல்விஅமைச்சர் பதியுதின் மஃமூத் அவர்களுக்குக் கொடும்பாவி கட்டியெரித்தமை கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம்மக்களிடையே ஒரு மறைமுகமான அகவயப்பட்ட விரிசல் விழவும் காரணமாயிற்று என்றெண்ணிக் கோகுலன் கவலையும்பட்டான்.
உறக்கம்வராத நிலையில் இவற்றையெல்லாம் சங்கிலிக் கோர்வையாகச் சிந்தித்துக்கொண்டிருந்த கோகுலன், 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் இவற்றையெல்லாம் கடந்து தமிழ்-முஸ்லிம் உறவில் குறிப்பாகக் கிழக்கு
மகாணத்தில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்துமென நம்பிக்கைகொண்டான். அதற்குக் காரணமும் இருந்தது.
கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தைத் தளமாகக் கொண்டு நிந்தவூரைச் சேர்ந்த பஸீல் ஏ.மஜீத் தலைமையில் ‘முஸ்லிம் ஜக்கிய முன்னனி’ என்ற அமைப்பு உருவாகி அதன் முக்கியஸ்தர்களாக டாக்டர் உதுமாலெவ்வையும் எம்.எச்.எம்.அஸ்ரப்பும் இணைந்து கொண்டனர்.
பாராளுமன்றக் கட்சி அரசியல்முறை ஆரம்பித்த காலத்திலிருந்தே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகள் பெரும்பான்மைத் தேசியக்கட்சிகளைச் சார்ந்தே இருந்து வந்தன. கிழக்கு மாகாணத்தில் அதுவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தென்கிழக்குப் பிரதேசத்தில் அவ்வப்போது தமிழரசுக் கட்சி சார்ந்ததாகவும் இருந்துள்ளது. எனினும், தமிழரசுக் கடசியைச் சார்ந்த அரசியல் நீடித்து நிலைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் வேட்பாளர்களாக நின்று தமிழர்களுடைய வாக்குகளால் வென்றுவந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் தமிழரசுக் கட்சியை விட்டுவிலகி ஆட்சியதிகாரத்திலுள்ள பெரும்பான்மைத் தேசியக் கட்சிகளுடன் இணைந்ததாகவே அது உள்ளது.
அதேவேளை, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் கொழும்பை மையமாகக் கொண்டிருக்ககூடாது. அது கிழக்கு மாகாணத்தைத் தளமாகக்கொண்டுதான் முகிழ வேண்டுமென்ற கருத்தியலும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருந்தது.
அதன் வெளிப்பாடாக 1960 இல் கல்முனையில் எம்.எஸ்.காரியப்பர் “அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி” என்ற பெயரில் கட்சியொன்றைத் தோற்றுவித்தார்.
ஆனாலும், கட்சியின் உருவாக்கத்திற்காக அவர் முன்வைத்த காரணங்களும் அவர் பிரகடனப்படுத்திய கட்சியின் நோக்கங்களும் தத்துவார்த்தப் பலவீனங்களைக் கொண்டிருந்ததால் இக்கட்சி நிலைத்து நிற்பதற்கான வாய்ப்பான சூழலை அது இழந்தது. ‘சூரியன்’ சின்னத்தையுடையதாக உருவான இக்கட்சியின் தோற்றதின்போது வெளியிடப்பட்ட பிரசுரம் அதன் அரசியல் தத்துவார்த்தப் பலவீனத்தைப் பறைசாற்றியது.
அரசியல் ஆவணங்களையும் சேர்த்து வைக்கும் பழக்கமுடைய கோகுலன், தனது இளையக்காவின் வீட்டில் தான் வைத்துள்ள கோவைகளுக்குள்ளிருந்து அந்தப் பிரசுரத்தைத் தேடி எடுத்துப் படிக்கும் நோக்குடன் கட்டிலை விட்டெழும்பி விளக்கைக் கொழுத்தினான்.
கோகுலன் எழும்பிய அசுப்பை உணர்ந்து கொண்ட அவனது இளையக்கா “என்ன தம்பி! இன்னும் நித்திர கொள்ளல்லயா?” என்று கேட்டார்.
கோகுலன் நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவு 12 மணியைத் தாண்டி விட்டிருந்தது கடிகார முள்.
“தேத்தண்ணி ஏதும் போட்டுத் தரட்டா?” என்று கேட்ட தனது இளையக்காவிடம் “ஓம்” என்று கூறிவிட்டு அடுக்கியிருந்த கோவைக்கட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துத் தனக்கு வேண்டிய பிரசுரத்தைத் தேடத்தொடங்கினான்.
அவனது இளையக்கா தேனீர்க் கோப்பையை நீட்டி ‘இந்தா’ என்று தருவதற்கும் அவன் தேடிய துண்டுப் பிரசுரம் கையில் கிடைப்பதற்கும் சரியாகவிருந்தது.
தேனீரை ஒரு மிடறுலேயே குடித்து முடித்துவிட்டு ஆர்வத்துடன் அத்துண்டுப் பிரசுரத்தை மனதுக்குள்ளே வாசிக்கத் தொடங்கினான்.
முஸ்லீம்களுக்கோர் வரப்பிரசாதம்
இலங்கைச் சரித்திரத்தில் இதுதான் முதல் முறை
அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி அதன் சின்னம் சூரியன்
முஸ்லிம் சகோதரர்களே!
கடந்த பல வருடங்களாக, முஸ்லீம்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து வந்திருக்கிறார்கள். எனினும் ஒத்திக் குடிசையில் வசிப்பது போன்றும், இரவல் வீட்டில் குடியிருப்பது போன்றும், தமிழர்களின் கட்சி நிழலிலும், சிங்களவர்களின் கட்சி நிழலிலும் வாக்குரிமை (வோட்) களை எடுத்துக்கொண்டு போய், குறித்த கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து, அக்கட்சித் தலைவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அமைந்தே கடமையாற்றி வந்துள்ளார்கள். இவ்விதம் அரசியல் அநாதைகளாக முஸ்லீம்களுக்கென ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையால் அதிகமான அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அது மட்டுமா? சிங்களவர்களின் கட்சியிலிருப்போர்களைச் சிங்கள முஸ்லீம்கள் என்றும், தமிழர் கட்சியிலிருப்போர்களைத் தமிழ் முஸ்லீம்கள் என்றும் நமக்குள் வேற்றுமைகள் உண்டாக்கப்பட்டும் பிரித்துவிடும் சூழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் நமக்கென ஓர் அரசியல் கட்சி இல்லாதிருந்தால், தமிழரசுக்கட்சி முஸ்லீம்கள் தங்கள் சாதியில் ஒரு பிரிவினைச் சேர்ந்தவர்கள்தான் என்றும், மதத்தால் மட்டும் வேறுபட்டிருக்கிறோம் என்றும் பொய்ப்பிரசாரத்தை நடத்திக்கொண்டு வருகிறார்கள். இப்பிரசாரம் காரணமாக இந்தத்தேசத்தில் சிங்களவர், தமிழர் எனும் இரண்டு சாதியினர் மட்டும்தான் இருப்பதாக ஏமாற்றப்படும் சந்தர்ப்பங்களும்
இடைக்கிடையே காணப்படுகிறது. ஆனால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஓர் தனிப்பட்ட கலாச்சாரம், தனிப்பட்ட கோட்பாடுகள், தனிப்பட்ட மார்க்கம் உண்டு. எனவே இந்நாட்டில் இரண்டல்ல மூன்று பெரும் சமுதாயங்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அரசியல் அரங்கங்களில் எடுத்துகாட்டவும், நம் சமுதாயத்தின் சரிசம பங்குரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், நமது சாதியினர் விரும்புவதில் எவ்வித தவறுமில்லை. கடந்த பல வருடங்களாக அடைந்த இன்னல்களை மனம்கொண்டு இழந்த நமது உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும், நமது சமுதாயமும் ஒரு தனிப்பட்ட சமுதாயம் என்பதை நிலைநாட்டி இலங்கை முஸ்லீம்கள் அரசியல் விழிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை எமது சகோதர இனத்தவர்களுக்கும் வெளித்தேசத்தவர்களுக்கும் எடுத்தோதுவதற்காக, எல்லாம் வல்ல இறைவனின் கடாட்சத்தால், “அகில இலங்கை இஸ்லாமிய முன்னணி” என்னும் ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் இனிமேல் அக்கட்சி மூலம் பாரளுமன்றத் தேர்தலுக்குப் போகலாம், பாராளுமன்றத்திற்குள், சிங்களவர், தமிழர்களின் அரசியல்கட்சிகளுக்கு எவ்விதம் கதிரைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ? அவ்விதம் நமது கட்சிக்கும் கதிரைகள் ஒதுக்கப்படும். அப்போது பிரதிநிதிகள், தனிப்பட்ட கீர்த்தியுடனும், சுயமரியாதையுடனும் நமது கட்சிக்கெனக் கொடுக்கப்படும் இடத்தில் ஒரே முகமாக அமர்ந்து கடமையாற்ற முடியும். மேலும் இக்கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இலங்கை சிங்கள நாடெனவும், தமிழ் நாடெனவும் பிரிவினை செய்யப்படும்போது,’ இஸ்லாமிஸ்தான்’ என்று மூன்றாவது நாடு ஏற்படவேண்டும் என்பதாகும். எனவே என் அருமை முஸ்லீம் சமுதாயமே, வாழ்வும் நம்கையில் தங்கியுள்ளது. எதிர் காலத்தில் நமது முஸ்லீம் சமுதாயத்தின் முன்னேற்றம் கருதி, அகில இலங்கை இஸ்லாமியர்களுக்காக, இலங்கைச் சரித்திரத்தில் இதற்கு முன்பு என்றுமே கண்டிராத, இஸ்லாமியரின் ஒரே கட்சியாகிய இக்கட்சியில் சேர்ந்து சமூக நலனுக்குப் பாடுபடுமாறும், உள்ளக்களிப்புடன் உதவி புரியுமாறும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்விதம் செய்வீர்களானால் மற்றச் சாதியினரும் நம்மை மரியாதையுடன் மதிப்பார்கள் என்பது உறுதி.
அடிப்படை கட்சியின் நோக்கங்கள்
இலங்கை ஒன்பது மாகாணங்களிலும் பரத்து வாழும் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி, இந்நாட்டு முஸ்மிம்களின் ஏகோபித்த ஒரே குரலைக்கொடுக்கும் ஒரு கட்டுப்பாடான ஸ்தாபனமாகக் கடமை புரிதல்.
எங்கள் மதாச்சாரம். கலாச்சாரம் அரசியல், பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன துறைகளில் அபிவிருத்தி ஏற்படுத்தி, நாட்டில் வாழும் ஏனைய சமுதாய மக்களுடன் சரிநிகர் சமானமாக வாழும் உரிமையை நிலைநாட்டுதல்.
இந்நாட்டு இஸ்லாமியர்களின் குடியியல், அரசியல் உரிமைகள் கடந்த காலத்தில் இழக்கப்பட்டதை மீட்டல், எதிர்காலத்தைப் பாதுகாத்தல்.
சர்வதேச முஸ்லீம் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் எங்களின் நிலைமையைச் சகல துறைகளிலும் வளர்த்தல்.
காலத்திற்குக் காலம் இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயங்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமைகளுக்கும், இன மத வேறுபாடுகளின் காரணமாக, ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கும் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தும் முகமாக வாழ்க்கை நடத்தவும், எதிர்காலத்தில் ஓர் ஐக்கிய இலங்கை உருவாகவும் உழைத்தல். இக்கருத்து நிராகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்குச் சிங்கள நாடும் தமிழர்களுக்குத் தமிழ் நாடும் எனப்பிரிவினை ஏற்படின் “இஸ்லாமிஸ்தான்” எனும் முஸ்லீம் இராச்சியம் ஒன்றைப் பிரித்தெடுத்து இங்கு வாழ் சுமார் ஏழு லெட்சம் இஸ்லாமியர்களுக்கு ஒரு தாயகத்தை ஏற்படுத்திக் கொள்ளல்.
துண்டுப் பிரசுரத்தை ஆறுதலாக வாசித்து முடித்த கோகுலன், இப்போது உருவாகியுள்ள ‘முஸ்லிம் ஜக்கிய முன்னனி’ 1960 இல் எஸ்..எம்.காரியப்பர் உருவாக்கிய ‘அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி’ போன்றதல்ல எனத்தெளிவாக உணர்ந்தான்.
1976 மோதம் 14 ஆந்திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேசியமாநாட்டில் நிறைவேற்றப்பெற்ற ‘தமிழீழத் தனிநாடு’ அமைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில், அத்தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணைகேட்டு இத்தேர்தலைச் சர்வஜனவாக்கெடுப்பாகப் பிரகடனப்படுத்தித் தேர்தலில் நிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், அமையவிருக்கும் தமிழீழத்தில் முஸ்லிம்களுக்குரிய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஷரத்துக்களை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியும் கைச்சாத்திட்டு அதன் உள்ளடக்கங்களைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியும் ஒரு கொள்கையடிப்படையில் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ‘தமிழ் பேசும் மக்கள்’ எனும் வகையில் இணைந்து எதிர்கொள்ளும் தேர்தலாக அதன் முக்கியத்துவத்தைக் கோகுலன் உணர்ந்தான்.
கிழக்கு மகாணத்தில் கடந்தகால அரசியல் கசப்புணர்வுகளைக் களைந்து தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் இறுக்கமாக இணைந்து கொள்வதற்கு இத்தேர்தல் வழிவகுக்கப் போகிறது என நம்பிக்கையோடு எண்ணிய கோகுலன் இறும்பூதெய்தினான்.
இக்கட்டத்தில் இத்தேர்தலுக்காக ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நினைத்துப் பார்த்தான்.
1970 இற்கும் 1977 இற்குமிடையில் ஆட்சியிலிருந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்க காலத்தில்தான் ‘பௌத்த மதத்தை’ அரசாங்க மதமாக்கிய -சிறுபான்மையினங்களுக்கு அரசியலமைப்புரீதியாகப் பாதுகாப்பு வழங்கிய சோல்பரி அரசியலமைப்பிலுள்ள 29 ஆவது ஷரத்தை நீக்கிய-தமிழ்மொழிக்குத் தேசியமொழி அந்தஸ்து வழங்காத புதிய குடியரசு அரசியலமைப்பு 1972 மே 22 இல் நிறைவேற்றப்பெற்றமை – 1974 ஜனவரியில்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நடந்த படுகொலை நிகழ்வு என்று, தமிழர்களைப் பாதித்த விடயங்கள் பல நிறைவேறியிருந்தன.
இத்கையதொரு பின்னணியில் வெளியிடப்பெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடந்த காலத்து அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காது அவர்களைப் பாரபட்சமாக நடத்திய காரணங்கள்தான் தமிழீழத் தனிநாடு கேட்குமளவுக்குத் தமிழ் மக்களைத் தள்ளியது என அதனை நியாப்படுத்திய ஜக்கிய தேசிக்கட்சி தாம் ஆட்சிக்கு வந்தால் எரியும் இலங்கை இனப் பிரச்சனைக்குச் ‘சர்வகட்சி மாநாடு’ மூலம் தீர்வைக் காணும் எனவும் உறுதியளித்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நினைவில் கொணர்ந்த கோகுலன், உத்தேச சர்வகட்சி மாநாட்டில் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியும் இணைந்து பங்குபற்றி ஒரே குரலில் ஒருமித்த கோரிக்கையை முன்வைக்கக்கூடும் என்றெண்ணி மகிழ்ந்த கோகுலன் அதற்கு இத்தேர்தல் வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை கொண்டான்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும்; முஸ்லிம் ஜக்கிய முன்னணியும் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழர்விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தில் கல்முனைத் தொகுதியில் சட்டத்தரணி சம்சுதீனையும் சம்மாந்துறைத் தொகுதியில் சட்டத்தரணி காசிம்மையும் மூதூர் தொகுதியில் மக்கீன் ‘மாஸ்ரரை’யும் புத்தளம் தொகுதியில் டாக்டர். இலியாசையும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்புவேட்பாளராக நிறுத்தியுள்ளதை நினைத்துப் பார்த்த கோகுலன்,
பொத்துவில் தொகுதியில் கனகரட்னத்தின் வெற்றிக்காக உழைப்பதுபோலத் தான் கல்முனை மற்றும் சம்மாந்துறைத் தொகுதிகளுக்கும் சென்று அங்கு முஸ்லிம் ஜக்கிய முன்னணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் சம்சுதீன் மற்றும் காசிம் ஆகியோரது வெற்றிக்காகவும் உழைக்க வேண்டுமென்று உறுதிபூண்டான். அடுத்த நாளிலிருந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றும் தீர்மானித்தான். பின்னர், தான் தேடிஎடுத்துப் படித்த துண்டுபிரசுரத்தைப் பாதுகாப்பாக அதற்குரிய கோவையிலிட்டுப் பத்திரமாக அடுக்கி வைத்து விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்து உறக்கத்திற்காகக் கண்களை மூடினான்.
(தொடரும் …… அங்கம் – 38)