“கனகர் கிராமம்” … தொடர் நாவல் …. அங்கம் – 36 … செங்கதிரோன்.
டாக்டர் உதுமாலெவ்வை கோகுலனிடம் “கோகுலன் காலம்பற நாம சாப்பிடக்கொள்ள நீங்க சொன்ன விசயங்களப் புறகு யோசிச்சுப் பாத்தன். நீங்க சொன்னதெல்லாம் சரிதான். மட்டக்களப்பில ராசதுர அண்ணனயும் காசிஆனந்தனயும் ரெண்டுபேரயும் போட்டு மட்டக்களப்புத் தொகுதித் தமிழ் மக்கள ரெண்டாப் பிரிச்சி அதுவும் ஒரே கட்சிக்காரர மோதவிட்டது பிழ. நீங்க சொன்னமாதிரி தமிழர் ஒருவருக்கும் முஸ்லிம் ஒருவருக்கும் உரிய ரெட்ட அங்கத்தவர் தொகுதியில கொண்டுபோய் ரெண்டு தமிழரையும் நிறுத்தினது முஸ்லிம்களிட்ட கட்சியப்பத்தி நல்லெண்ணத்தக் கொண்டு வராதுதான்” என்றார்.
“கனகரெட்ணமும் அதத்தான் சொன்னவர்” என்று கூறிய கோகுலன்,
“மூதூரில மத்த மாதிரி நடந்திது. மூதூர் ரெட்ட அங்கத்தவர் தொகுதியில ஏகாம்பரமும் அப்துல்மஜீத்தும் எம்.பி.களா இரிக்கக்கொள்ள ஏகாம்பரம் செத்துப்போனார். தமிழ் எம்.பிர வெற்றிடத்த நிரப்ப இடத்தேர்தல் நடந்திது. இந்த இடத்தேர்தலில தமிழரசிக்கட்சி மொகமட்அலிக்கு ‘ரிக்கற்’றக் குடுத்து – மொகமட்அலி அதற்கு முந்தின ‘எலக்சனி’ல யூ.என்.பியில நிண்டு தோத்தவர் – தமிழ் ஆக்களிர வாக்குகளால அவர வெல்லப் பண்ணி மூதூர்த் தொகுதியிர ரெண்டு எம்.பிமாரும் முஸ்லிம்களாக இரிக்கவச்சிது. இதால தமிழ்மக்களுக்கு முஸ்லிம் ஆக்களில எரிச்சல் வரும்தானே. அதுவும் கூடாதானே டொக்டர். அப்ப மூதூர்த் தொகுதியில தமிழரசிக்கட்சி செய்ததும் பிழ. இப்ப மட்டக்களப்புத் தொகுதியில கூட்டணி செய்திரிக்கிறதும் பிழ” என்று பழைய விடயங்களையும் கிண்டிக்கிளறி ஒப்பிட்டுப் பேசினான்.
இடையில் வேலைக்காரப் பொடியன் டாக்டர் உதுமாலெவ்வை – அவருடைய மனைவி -கோகுலன் மூவருக்கும் தேனீர் கொணர்ந்து தந்துவிட்டுப் போனான்.
தேனீர் அருந்தி முடிந்ததும் டாக்டர் உதுமாலெவ்வை கோகுலனிடம் “கோகுலன்! நாங்க இன்னும் ரெண்டுமூண்டு முஸ்லீம் முக்கியஸ்தர்களப் பொத்துவிலில சந்திக்கக் கிடக்கு. வெளியில போய் அவங்களச் சந்திச்சிப்போட்டு ஆறு மணிக்குள்ள திரும்புவம். இரவு கொஞ்சம் பிந்தித்தான் கல்முனைக்குப் புறப்படுவம். அதுவரைக்கும் உங்களோட இன்னும் நிறயப் பேசலாம்” என்று கூறி அவரும் மனைவியும் எழுந்து வெளியேறி வாகனமொன்றில் புறப்பட்டுச் சென்றனர்.
டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் கனகரட்ணத்திற்கு ஆதரவுதேடி பொத்துவிலிலுள்ள வேறு சில முஸ்லீம் பிரமுகர்களையும் சந்திக்கவென்று மீண்டும் பி.ப 3.00 மணிபோல் புறப்பட்டுச் சென்ற பின், கோகுலனுக்குச் சற்று ஓய்வெடுக்க வேண்டும் போலிருந்தது. நித்திரையும் அடிக்கடிவந்து கண் இமைகளை மூடியும் தலையைக் கீழ்நோக்கி ஆட்டியும் தனது ‘சேட்டை’யைக் காட்டத் தொடங்கிற்று.
பொத்துவில் வட்டிவெளியிலுள்ள தனது இளையக்காவின் வீடு சென்று குட்டித்தூக்கமொன்று போட்டு வரலாமென்று எண்ணிய கோகுலன் இருக்கையை விட்டெழுந்து கனகரட்ணத்திடம் வீட்டுக்குப் போய்விட்டு மாலை ஐந்து மணிபோல் திரும்பி வருவதாகச் சொல்லி வெளியேறினான்.
இளையக்காவின் வீடுசென்று அங்கு கட்டிலில் கெளிந்து அரை மணித்தியாலம் போல் அலுப்புத்தீர உறங்கினான். பகல்தூக்கம் போட்டுக் கண்விழித்தபோது நேரம் பி.ப 4.00 மணியாகிவிட்டிருந்தது. கண்விழித்துக் கொண்டாலும் கட்டிலைவிட்டு எழுந்துவிடாமல், டாக்டர் உதுமாலெவ்வையுடன் அன்றுகாலை மற்றும் மத்தியானச் சாப்பாட்டின்போதும் அதற்குப் பின்னரும் உரையாடிய விடயங்கள், நீருக்கடியில் அமர்ந்தி வைத்துக் கொண்டிருந்த ‘றப்பர்’ பந்து கையை எடுத்தால் மேலெழுவதுபோல நெஞ்சில் எழுந்தன. கட்டிலில் கால்களை நீட்டி மல்லாக்கக்கிடந்தபடியே, பகலெல்லாம் புல்மேய்ந்த மாடு சாயங்காலமானதும் மரமொன்றின்கீழ் படுத்திருந்து இரைமீட்பதைப்போலக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லீம் இன உறவு சம்பந்தமான விடயங்களைக் கோகுலன் நெஞ்சில் அசைபோடத் தொடங்கினான்.
மூத்தோர்களிடமிருந்து தான் கேட்டறிந்த மற்றும் தான் புத்தகங்களில் படித்தறிந்த விடயங்கள் சிந்தனையில் எழுந்தன. கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாற்றைத் தனக்குத் தெரிந்தவரை ஆரம்பித்திலிருந்தே அசைபோட ஆரம்பித்தான்.
இலங்கை அரசியல் வரலாற்றில் 1921 இலிருந்து 1931 வரை சட்டநிரூபண சபைக் காலமாகும். ஆங்கிலத்தில் ‘Legislative Council’ என அழைக்கப்பட்டது. 1921 இலிருந்து 1924 வரை முழுக் கிழக்குமாகாணமும் ஓரே தேர்தல் தொகுதியாகவிருந்தது. அப்போது முழுக் கிழக்குமாகாணத்தையும் சட்டநிரூபணசபையில் E.R.தம்பிமுத்து என்னும் தமிழரே பிரதிநிதித்துவம் செய்தார்.
பின்னர், 1923 இலே தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் நடைபெற்றபோது முழுக் கிழக்குமாகாணத் தொகுதியும் மட்டக்களப்பு இறைவரிமாவட்டம், திருகோணமலை இறைவரிமாவட்டம் என இரு தேர்தல் தொகுதிகளாகின.
1924 இலிருந்து 1931 வரை மட்டக்களப்புத் தொகுதியை E.R.தம்பிமுத்துவும்; திருகோணமலைத் தொகுதியை M.M.சுப்பிரமணியம் எனும் இரு தமிழர்களுமே சட்ட நிரூபணசபையில் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பின்னர், டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய சட்டநிரூபணசபையானது ‘State Council’ என ஆங்கிலத்திலும் சட்டசபையெனத் தமிழிலும் அழைக்கப்பட்ட சபையாக 1931 இலிருந்து 1947 சோல்பரி அரசியலமைப்புவரை விளங்கியது.
சட்டசபைக் காலத்தில் முழுக் கிழக்குமாகாணமும் மட்டக்களப்பு வடக்கு (இது திருகோணமலை – மட்டக்களப்புத் தொகுதி எனப் பெயரிடப் பெற்றது) மட்டக்களப்புத் தெற்கு என இரு தொகுதிகளாக வகுக்கப்பெற்றிருந்தன.
கல்லடிப் பாலத்திலிருந்து தெற்கே குமுக்கன் ஆறுவரையும் மட்டக்களப்புத் தெற்குத் தொகுதியாகவும் கல்லடிப் பாலத்திற்கு வடக்கே வெருகல் ஆற்றையும் கடந்து திருகோணமலை மாவட்டத்தையும் உள்ளடக்கி கொக்கிளாய்வரை மட்டக்களப்பு வடக்குத் தொகுதியாகவும் அதாவது ‘திருகோணமலை – மட்டக்களப்பு’ எனப் பெயரிடப் பெற்ற தொகுதியாகவும் விளங்கின.
டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சின் கீழமைந்த சட்டசபைக் காலத்தில் நடைபெற்ற மட்டக்களப்புத் தெற்குத் தேர்தல் தொகுதிக்கான 1931,1936,1938,1943 ஆண்டுத் தேர்தல்களில் முறையே H.M.மாக்கான்மாக்கார், S.O.கனகரெட்ணம், S.தர்மரெட்ணம், V.நல்லையா ஆகியோர் வெற்றியீட்டினர்.
அதுபோல் மட்டக்களப்பு வடக்கு அதாவது திருகோணமலை – மட்டக்களப்புத் தொகுதிக்கான 1931 மற்றும் 1936 ஆண்டுத் தேர்தல்களில் முறையே எம்.எம்.சுப்பிரமணியம் மற்றும் A.R.தம்பிமுத்து ஆகியோர் வெற்றியீட்டினர்.
அப்போதெல்லாம் வாக்காளர்களிடையே தமிழ் முஸ்லீம் என்ற இனப்பாகுபாடுகள் இருக்கவில்லை.
சோல்பரி அரசியலமைப்பின்கீழ் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1946 இல் முழு இலங்கையும் எண்பத்தியொன்பது தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றது. இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. அதற்கேற்ப முழுக்கிழக்குமாகாணமும் திருகோணமலை, மூதூர், கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் ஆகிய ஏழு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றில் திருகோணமலை மற்றும் மூதூர் ஆகிய தொகுதிகள் திருகோணமலை மாவட்டத்திலும் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் ஆகிய தொகுதிகள் தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியதாகவிருந்த அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைந்தன. அப்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களே இருந்தன.
1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் திருகோணமலை, மூதூர், கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் முறையே S.சிவபாலன், A.R.A.M.அபூபக்கர், V.நல்லையா, அகமட்லெவ்வை சின்னலெவ்வை, S.U.எதிர்மன்னசிங்கம், M.S.காரியப்பர், M.M.இப்றாகிம்ஹாஜியார் ஆகியோர் வெற்றியீட்டினர். அப்போது காரைதீவு கல்முனைத் தொகுதிக்குள்ளே இருந்தது. காரைதீவைச் சேர்ந்தவரும் ‘ஆனக்கிளாக்கர்’ என அழைக்கப் பெற்றவருமான கணபதிப்பிள்ளை என்பவரும் கல்முனைத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால் அவர் தோற்றுப்போனார். அப்போதும் அரசியலில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் இருக்கவில்லை.
இந்த விடயங்களையெல்லாம் அச்சொட்டாக மனப்பாடம் செய்ததுபோல் அசைபோட்ட கோகுலன், பின்னர் கட்டிலை விட்டேழுந்து குளித்து வெளிக்கிட்டு இளையக்கா தந்த தேனீரையும் பருகிவிட்டு மீண்டும் கனகரட்ணத்தின் வீட்டையடைந்தபோது மாலை 6.00 மணியாகிவிட்டிருந்தது. கோகுலன் கனகரட்ணத்தின் வீட்டையடைந்த சிறிது நேரத்தில் டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் சொன்னாற்போலவே நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
டாக்டர் உதுமாலெவ்வைக்கும் கோகுலனுக்குமிடையிலான உரையாடல் மீண்டும் தொடங்கிற்று.
தான் அன்று பின்னேரம் தன் இளையக்காவின் வீட்டில் கட்டிலில் படுத்திருந்து அசைபோட்ட விடயங்களையெல்லாம் டாக்டர் உதுமாலெவ்வையிடம் ஒப்புவித்த கோகுலன்,
“டொக்டர்! சட்ட நிரூபணசபைக் காலத்திலயும்சரி புறகு வந்த சட்டசபைக்காலத்திலயும் சரி அரசியலப் பொறுத்தவர தமிழ் முஸ்லீம் மக்களிட்ட இன முரண்பாடுகள் இரிந்ததாத் தெரியல்ல. புறகு சோல்பரி அரசியலமைப்புக்குக்கீழ முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947 இல நடக்கக்குள்ளயும் அது இரிக்கல்ல. நான் கேள்விப்பட்டமாதிரி 1954 இல சம்மாந்துற முஸ்லீம் ஆக்கள் சிலருக்கும், வீரமுனத்தமிழ் ஆக்கள் சிலருக்குமிடையில என்னமோ பிரச்சின வந்து வீரமுனக்கிராமத்த எரிச்சவங்களாம் முஸ்லீம்கள் எண்டு கேள்வி. அதப்பற்றிக் கவிஞர் ராஜபாரதி ‘தீயுண்ட வீரமுனை’ எண்ட காவியமும் பாடிப் புத்தகமாகப் போட்டதாம். அந்தப் புத்தகத்த எனக்குப் படிக்கக் கிடைக்கல்ல” என்று முடித்தான்.
கோகுலன் கூறியவற்றையெல்லாம் கூர்ந்து செவிமடுத்த டாக்டர் உதுமாலெவ்வை “அந்த விசயம் எனக்குத் தெரியும். ஆனா அந்தப் பிரச்சனைக்கு அரசியல் காரணமில்ல. அது தனிப்பட்ட ஆக்களுக்கிடையில நடந்த பிரச்சன. அது என்னெண்டா வீரமுனயில இரிந்த ரெண்டு தமிழ்க் குடும்பங்களுக்குள்ள வந்த போட்டியாலயும் பொறாமயாலயும்தான் அது நடந்த. குடிவெறியும் அதுக்குக் காரணம்தான். இந்தப் பிரச்சனயத் தீர்க்கப் போன சீனிதம்பி விதானய மாணிக்கம் எண்ட ஒருவன் அடிச்சுப் போட்டான். அவனும் தூரத்து ஆளில்ல. வீரமுன ராமகிருஷ்ண மிஷன்
பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பிலிரிந்து அஞ்சாம் வகுப்பு வரைக்கும் சீனித்தம்பி விதானயோட – அவரிட பேர் முகமதலி- படிச்சவன். அவரிட நல்ல கூட்டாளி. ஊரில சண்டியன். இப்பிடி நடக்குமெண்டு ஒருதரும் எதிர்பார்க்கல்ல. புறகு சம்மாந்துற முஸ்லிம்களெல்லாம் கவலப்பட்டு ஊர்ப் பெரியாக்கள் போய் தமிழாக்களிட்ட மன்னிப்புக் கேட்டு நடந்த பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் முடிஞ்சளவு ஈடு செஞ்சவங்க” என்று நடந்ததை விளக்கமாகச் சொன்னார்.
“அப்பிடியெண்டா எப்ப டொக்டர் அரசியலில இந்தத் தமிழ் முஸ்லிம் பிரச்சனைகள் துடங்கின” என்று கேட்டான் கோகுலன்.
டாக்டர் உதுமாலெவ்வை வழமையான அவரது வஞ்சகமற்ற சிரிப்புடன் “நான் எதிர்பார்த்த மாதிரியே நீங்களும் சரியான கேள்வியத்தான் கேட்டீங்க” என்றவர், தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
“கோகுலன்! 1949ல தமிழரசிக்கட்சிய ஆரம்பிச்சாப் புறகு முதன்முதல் அக்கட்சி 1952ஆம் ஆண்டுத் தேர்தலில போட்டி போட்ட.அப்ப ஆக கிழக்கு மாகாணத்தில திருகோணமலத் தொகுதியில இராஜவரோதயமும் வடக்கு மகாணத்தில கோப்பாய்த் தொகுதியில வன்னியசிங்கமும் எண்டு ரெண்டுபேரும்தான் வெண்ட. தமிழரசிக் கட்சியத் துடங்கின செல்வநாயகம் ஜயாவும் இந்தத் தேர்தலில காங்கேசன்துறத் தொகுதியில நிண்டு தோத்துப் போனார். அப்பவும் தமிழ் முஸ்லீம் பிரச்சனைகள் அரசியலில பெரிசா இரிக்கல்ல. 1956 ஆம் ஆண்டுக்குப் புறகுதான் பிரச்சனைகள் துடங்கின” என்று இடைநிறுத்தினார்.
“அதச் சொல்லுங்களன் டொக்டர்” என்று ஆவலுடன் கேட்டான் கோகுலன். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் இப்படியான அரசியல் உரையாடலொன்றை நிகழ்த்துவதற்கு நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கப் போவதில்லை அல்லது கிடைப்பது கஸ்டம் என்று எண்ணிக்கொண்டான் அவன்.
“1956 ஆம் ஆண்டு ‘எலக்கசனி’ல கல்முனத்தொகுதியில தமிழரசிக் கட்சியியில எம்.எஸ்.காரியப்பர் கேட்டு வெண்டார்.அப்ப காரதீவு கல்முனத் தொகுதிக்குள்ளதான் இரிந்த எண்டு முந்தியும் ஒருக்காச் சொன்னநான்தானே. இந்த ‘எலக்சினி’ல கல்லாத்தச் சேந்த பிரான்சிஸ் சேவியர் என்றிரவர் லங்கா சமஜமாஜக் கட்சியில கேட்டவர். ஆனா தோத்துப் போனார். அப்ப தமிழாக்கள் தமிழ் முஸ்லிம் எண்டு பாக்கல்ல. தமிழரசிக் கட்சியில ஆருகேட்டாலும் அவருக்குத்தான் ‘வோட்’ டுப் போடுவாங்க. அதனாலதான் எம்.எஸ்.காரியப்பர் வெண்ட. தமிழர்களிர வோட்டுத்தான் அவர வெல்ல வச்ச. அதற்கு முந்தின 1952 ஆம் ஆண்டு ‘எலக்சினி’ல யூ.என்.பில கேட்ட இப்றாகிம் ஹாஜியாரிட்டத் தோத்தவர். 1956ஆம் ஆண்டு முஸ்தபாவும் பொத்துவில் தொகுதியில தமிழர்களிர வோட்டாலதான் வெண்ட.
புறகு என்ன நடந்திச்செண்டா, எம்.எஸ்.காரியப்பர் – எம்.எம்.முஸ்தபா ரெண்டு பேருமே தமிழரசிக்கட்சிய உட்டு அரசாங்கக் கட்சிக்கு மாறித்தாங்க. அப்ப இவங்களுக்குத் தமிழரசிக் கட்சியில ‘எலக்சன்’ கேட்டதுக்காக “வோட்டுப் போட்ட தமிழாக்களுக்கு ஆத்திரம் வரும்தானே” என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“ஓம்! டொக்டர். நானும் இதக் கேள்விப்பட்ட. ‘எலக்சன்’ காலத்திலயும் ‘எலக்சன்’ வெண்டுவந்த நேரத்திலயும் கோயில்களுக்கெல்லாம் போய் முஸ்தபா சந்தனப் பொட்டு வச்சவராம். திருக்கோவில அவருக்குக் காசால மாலயும் ஊராக்கள் போட்டவங்களாம். புறகு இவர் கட்சி மாறுனொன்ன அதே ஆக்கள் திருக்கோவில இவரிர காறமறிச்சி செருப்பால மால போட்டவங்களாம்” என்றான் கோகுலன். அதற்கு டாக்டர் உதுமாலெவ்வை பதிலொன்றும் சொல்லாமல் அமைதி காத்தார். சிறிதுநேர அமைதிக்குப் பின்னர் “அதனாலதான் கோகுலன் தமிழ் முஸ்லிம் உறவில விரிசல்கள் உழத்துடங்கின” என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“அப்ப அரசியல்தான் தமிழ் – முஸ்லிம் உறவக்கெடுத்த என்றீங்க” என்றான் கோகுலன்.
“அரசியலும் ஒரு முக்கிய காரணம்”என்று முடித்தார் டாக்டர் உதுமாலெவ்வை.
ஆனாலும், கோகுலன் அவரை விட்டுவிடுவதாயில்லை.” எங்கட ஆக்களும் பிழ விட்டுத்தானே இரிக்காங்க டொக்டர்” என்று உரையாடலை இன்னொரு தளத்திற்கு மாற்றினான் கோகுலன்.
“எதச் சொல்றீங்க” என்று கேட்டார் டாக்டர் உதுமாலெவ்வை.
“1970 ஆம் ஆண்டு ‘எலக்கசனி’ல தமிழரசிக்கட்சியில யாழ்ப்பாணத் தொகுதியில கேட்டு வெண்டுவந்த சி.எக்ஸ்.மார்ட்டின் 1972 குடியரசு அரசியலமைப்பக் கட்சியிர பாராளுமன்றக் குழுத் தீர்மானத்த மீறி அரசாங்கத்தோட சேந்துநிண்டு ஆதரிச்சுக் கைய உயத்தல்லயா? அதத்தான் சொன்னநான்” என்றான் கோகுலன்.
“அப்பிடி ஒரு தமிழ்ஆளச் சொல்லலாம். எம்.எஸ்.காரியப்பர் – எம்.எம்.முஸ்தபா மட்டுமில்லக் கோகுலன், 1960 ஆம் ஆண்டு யூல மாசம் நடந்த ‘எலக்சனி’ல கல்முனத் தொகுதியில தழிழரசிக்கட்சியில கேட்டு வெண்டு வந்த எம்.சி.அகமட் புறகு 1961 ஆம் ஆண்டுத் தமிழரசிக் கட்சி நடத்தின சத்தியாக்கிரகத்தில இரிந்த தமிழரசிக் கட்சி முக்கியஸ்தர்கள அப்ப இரிந்த சிறிமாட அரசாங்கம் கைது செய்து கொண்டு போய் கொழும்பு பனாகொட இராணுவ முகாமில தடுப்புக் காவலில அடச்சிவச்சொன்ன அரசாங்கக்கட்சிக்கு மாறித்தார். இதுகளும் பிழதானே” என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“ஆரெண்டாலும் ஒரு கட்சியில எலக்சன் கேட்டுவெண்டு தன்ர சுயநலத்துக்காக அரசாங்கக்கட்சிக்கு மாறுதது பிழதான். தமிழரசிக்கட்சியிலயும் பிழ இரிக்கி. வேட்பாளர் நியமனம் குடுக்கக்குள்ள ஆளப்பாத்து அவரிர பின்னணியப் பாத்துக் குடுக்கோணும். கட்சியிர கொள்கய ஏத்து அதுக்கு விசுவாசமா இரிப்பாங்களா? மக்களுக்குச் சேவ செய்யக்கூடிய ஆக்களா? ஊழல் மோசடியில்லாத ஆக்களா? எண்டு அலசிப் பாத்துக் குடுக்கோணும். சும்மா கட்சிக்கு எம்.பி.வேணுமென்டிரத்துக்காக ஒருதருக்கும் குடுக்கக் கூடாது” என்றான் கோகுலன்.
“அதுக்கு ஆக்களுக்குள்ள பூந்தா பாக்கிற. பட்டிருப்பு எம்.பி.யா இருந்த ராசமாணிக்கம் ஆரம்பத்தில யூ.என்.பி யிலதானே இரிந்தார். 1956 இல நடந்த யூ.என்.பிர களனி மாநாட்டில சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இரிக்கோணும் என்ற தீர்மானத்த எதிர்த்துத்தானே அவர் யூ.என்.பி இல இரிந்து வெளியேறித் தமிழரசிக் கட்சியில வந்து சேந்தார். அவர் சாகும் வரைக்கும் கட்சியிலதானே இரிந்தார். அது ஆளப் பொறுத்து” என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“இல்ல டொக்டர்! அவதானமா இரிக்கோணும். 1947 ஆம் ஆண்டு பழய கல்முனத் தொகுதியில யூ.என்.பி யில ‘எலக்சன்’ கேட்டு வெண்ட எம்.எஸ்.காரியப்பர் 1952 ஆம் ஆண்டு நடந்த அடுத்த ‘எலக்சனி’ல சுயேச்சையாகக் கேட்ட ஏ.எம்.மேசாட்டத் தோத்துப்போனார். புறகு நடந்த 1956 ஆம் ஆண்டு ‘எலக்சனி’ல தமிழரசிக்கட்சி எம்.எஸ்.காரியப்பருக்கு ‘ரிக்கற்’ குடுக்குது. எம்.எஸ்.காரியப்பரிர பின்னணியத் தெரிஞ்சு கொண்டுதானே தமிழரசிக் கட்சி இதச் செய்த. தமிழரசிக்கடசியில கேட்டாத்தான் தமிழ் ஆக்களிர வாக்குகள எடுத்துக் கொள்ளலாம் எண்டுதான் எம்.எஸ்.காரியப்பர் வந்த. வேற அவரென்ன தமிழரசிக்கட்சியிர கொள்கய ஏத்து வந்தவரா? இல்ல. தமிழரசிக்கட்சிக்கு என்ன தேவப்பட்ட. கட்சிக்கு எம்.பி.கிடச்சாச் சரி. ரெண்டு பக்கத்திலயும் பிழ இரிக்கு டொக்டர். இது ஒரு உதாரணம்தான். கனக்கச் சொல்லலாம். ஏன் தூரப் போவான். இந்த முற என்ன நடந்திரிக்கி.
நீங்கதான் இப்ப சொன்னீங்க. 1960 ஆம் ஆண்டு யூலயில நடந்த ‘எலக்சனி’ல கல்முனத் தொகுதியில தமிழரசிக்கட்சியில கேட்டுவெண்ட எம்.சி.அகமட் 1961 ஆம் ஆண்டு சத்தியாகிரகத்தில கலந்து கொண்டதால அரசாங்கம் கைது செய்து தடுப்புக் காவலில வச்சொன்ன அரசாங்கத்திர பக்கம் மாறினவரெண்டு. சம்பந்தனும் அதத்தான செய்தவர்.
அவர் அப்ப எம்.பி. இல்ல. இளம் சட்டத்தரணியாக இரிந்தார். தடுப்புக்காவலில வச்சொன்ன நான் தமிழரசிக்கட்சிக் காரனில்ல. தெரியாம என்னத் தமிழரசிகட்சியெண்டு கைது செய்து கொண்டு வந்திட்டாங்க எண்டு சொல்லித்தானாமே வெளியில வந்தவர். இந்த முற திருகோணமலத் தொகுதிய தங்கத்துர அண்ணனுக்குக் குடுக்காம இப்பிடிப்பட்ட சம்பந்தனுக்குக் குடுத்தது பிழயில்லயா?
நீங்களும்தானே தமிழர் விடுதலைக் கூட்டணியிர தேர்தல் நடவடிக்கக் குழுவில உறுப்பினரா இரிக்கீங்க?” என்று கேட்டான் கோகுலன்.
வாய்விட்டுச் சிரித்த டாக்டர் உதுமாலெவ்வை “இதல்லாம் எப்பிடி உங்களுக்குத் தெரிய வந்த” என்றார்.
“எனக்கு எல்லாம் தெரியும். தங்கத்துர அண்ணணுக்கு ‘ரிக்கற்’ குடுக்கல்லெண்டு அமிர்தலிங்கத்திர காருக்குக் குறுக்காகக் கொழும்பு மருதான நொறிஸ்சனல் றோட்டில இரிக்கிற சிவசிதம்பரத்திர வீட்டடியில வைச்சுப் படுத்து பிரச்சனப்பட்ட மூதூர்ப் பொடியனுகள் சிலர எனக்குத் தெரியும். அவனுகள் எல்லாக் கதயும் எனக்குச் சொன்ன” என்றான் கோகுலன்.
டாக்டர் உதுமாலெவ்வை ஒன்றும் பேசாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.
“இன்னொரு விசயத்தயும் உங்களிட்டச் சொல்லோணும் டொக்டர்! அதயும் ஒருக்காக் கேளுங்க” என்ற பீடிகையுடன் ஆரம்பித்த கோகுலன்.
“1956இல எம்.எஸ்.காரியப்பர் தமிழரசிக்கட்சியில வெண்டு புறகு அரசாங்கத்துக்கு மாறினதால அவரில தமிழரசிக் கட்சிக்கு ஆத்திரம். 1965 ஆம் ஆண்டு ‘எலக்சனி’ல கல்முனத் தொகுதியில எம்.எஸ்.காரியப்பர் சுயேச்சையாக் கேட்டு வெண்டவர். 1965 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி.சேனநாயக்கா தலமயில ஆட்சியமைச்ச யூ.என்.பி யோட தமிழரசிக்கட்சி கூட்டரசாங்கம் அமைச்சது உங்களுக்குத் தெரியும். இந்தக் கால கட்டத்திலதான் ‘தளுகொடபிட்டியவின் லஞ்ச ஊழல் ஆணைக்குழு’ வின் தீர்ப்பு வெளிவந்து யூ.என்.பி யோடு சேந்து ஆட்சியமச்சிரிந்த தமிழரசிக்கட்சி ‘தளுகொடபிட்டிய ஆணைக்குழு’ விர அறிக்கய அமுல்படுத்தச் சொல்லிப் பிரதமர் டட்லி.சேனநாயக்காவ நிர்ப்பந்திச்சி அதால எம்.எஸ்.காரியப்பரிர எம்.பி.பதவி பறிபோன.
எம்.எஸ். காரியப்பர் 1952 இல கல்முனப் பட்டின சபத் தலைவராக இரிக்கக்கொள்ளயும் புறகு 1956 இல கல்முனத் தொகுதியில தமிழரசிக் கட்சியில ‘எலக்சன்’ கேட்டு வெண்டு வந்து அரசாங்கத்துக்கு மாறின புறகும் கல்முனத் தமிழ் ஆக்களுக்குப் பல பாரபட்சமான நடவடிக்ககளச் செய்தவர். அது வேற விசயம். என்ன இரிந்தாலும் அவர் தமிழ் மக்களுக்குச் செய்த பாரபட்சங்களுக்கும் அப்பால முஸ்லிம்களிர மத்தியில மதிப்புமிக்க அரசியல் தலைவராக விளங்கினவர்.
காரியப்பரிர எம்.பி.பதவிய இழக்கச் செய்தது சரியா? பிழயா? என்றதிக்குள்ள நான்வரல்ல. இதால கல்முனத் தொகுதி முஸ்லிம்களுக்குத் தமிழரசிக்கட்சியில ஆத்திரம் வருமா? இல்லயா? அந்த ஆத்திரம் புறகு ஆரில திரும்பும். தமிழர்களிலதானே திரும்பும்.
இப்பிடித் தமிழரசிக்கட்சி தமிழ் பேசும் மக்கள் எண்டு சொல்லிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில தமிழ்-முஸ்லிம் உறவக் கெடுத்ததுதன் மிச்சம்” என்று முடித்தான் கோகுலன்.
“1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில வச்சி தொழுகயில இரிந்த ஒன்பது முஸ்லிம்களச் பொலிஸ் சுட்டுச் சாகவச்ச பிரச்சனயில பாராளுமன்றத்தில இரிந்த முஸ்லிம் எம்பி மாரெல்லாம் பேசாம இரிந்த நேரத்தில செல்வநாயகம் ஐயாவும் தமிழரசிக் கட்சியும்தானே குரல் குடுத்த” என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“அது உண்மதான் டொக்டர். ஆனா பாராளுமன்றத்தில பேசிறதால மட்டும் ஒண்டும் ஆகாது. மக்கள் மத்தியில களவேலகளச் செய்யோணும். அதத் தமிழரசிக் கட்சி ஒழுங்காச் செய்யல்ல” என்று பதிலிறுத்தான் கோகுலன்.
“அப்பிடியெண்டா ஏன் கோகுலன் நீங்க பதினெட்டு வயசில தமிழரசிக்கட்சியில சேந்து அத வளத்து இப்பயும் அதோடதானே நிற்கிறீங்க? என்று சிரித்துக்கொண்டு ஒரு அங்கதத் தொனியுடன் கோகுலனைக் கேட்டார் டாக்டர் உதுமாலெவ்வை.
“வேற வழியில்ல டொக்டர்! பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்குச் செய்யிற பாரபட்சங்கள அதனுடைய சரி பிழைகளுக்கு அப்பால அத எதிர்த்து நிற்கிற தமிழரசிக்கட்சிக்குப் பின்னால நிக்கவேண்டிக்கிடக்கு” என்று யதார்த்தபூர்வமாகப் பதிலளித்தான் கோகுலன்.
“பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்களிர ஒடுக்கு முறைக்கு எதிராகச் சிறுபான்மையினர்களான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒண்டுபட்டுப் போராடத்தானே வேணும். அதத்தானே தமிழரசிக்கட்சி சொல்லுது’ என்றார் டாக்டர் உதுமாலெவ்வை.
“நீங்க சொல்லிறது சரிதான் டொக்டர். ஆனா அதத் தமிழரசிக்கட்சி சரியாச் செய்யோணும் விசுவாசமாச் செய்யோணும். என்றிரதுதான் என்ர கொள்க.
தமிழ் – முஸ்லிம் ஒத்தும என்கிறது ‘எலக்சன’ மையமாக அல்லது சாதாரண சிங்களமக்களுக்கு எதிரான மனநிலயில வரப்படாது. அப்படிவாற ஒண்டும் நெடுநாளைக்கு நிண்டு பிடிக்காது. தமிழ் – முஸ்லிம் ஒத்தும மாதிரி தமிழ் – சிங்கள ஒத்துமயும் முஸ்லிம் – சிங்கள ஒத்துமயும் நாட்டுக்குத் தேவ. இத நோக்கமா
வச்சித்தான் நாம அரசியல் செய்யணும். நம்மடகட்சி அல்லது நம்மட ஆள் எலக்கசனில வெல்லோணுமெண்டு அரசியல் பண்ணக்கூடாது. அது பாவம்” என்றான் கோகுலன்.
“ஓம்! கோகுலன். கனநேரமாக் கதைச்சிரிந்திட்டம். இண்டைக்கு உங்களோட இரிந்து கதச்சது நல்ல பிரயோசனம். தமிழரசிக்கட்சியிர அரசியலயும் நல்லா எடபோட்டுப் பேசினீங்க. எல்லாம் உண்மதான். கட்சிக்குள்ளரிந்து நாமதான் கட்சியத் திருத்தோணும். எதுக்கும் இந்த ‘எலக்சன்’ முடியட்டும். எலக்சன் நேரத்தில ஒண்டும் செய்யேலாதுதானே. முதலில எப்படியாவது பொத்துவில் தொகுதியில இரண்டாவது எம்.பி.யாகவேணும் கனகரட்ணத்த வெல்லப் பண்ணோணும். அதுக்குப் புறகு கட்சியத் திருத்திற வேலயப் பாப்பம். நாங்க இனிப் புறப்படப்போறம்” என்றுகூறி டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் கல்முனைக்குப் புறப்பட எழுந்தனர்.
நேரம் அப்போது இரவு 8.00 மணியாகியிருந்தது. டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் கல்முனைக்குப் புறப்பட எழுந்ததைக் கண்ட கனகரட்ணம்,
“டொக்டர்! இந்த நேரத்தில போகாதீங்க. அறுபதாம் கட்டயில ஆன மறிச்சாலும் மறிக்கும். இரவு எல்லாருக்கும் சாப்பாடு ஒழுங்கு செய்திருக்கு. இரவு தங்கிறதுக்கு ‘ரெஸ்ற் ஹவுஸ்’ இல ஏற்பாடு பண்ணியிருக்கன். அங்கபோய்த் தங்கி காலம வெள்ளென்ன கல்முனைக்குப் புறப்படலாம்’ என்றார்.
கோகுலனும் கனகரட்ணத்துடன் சேர்ந்து “அதுதான் டொக்டர் நல்லம். இரவயில ‘ரிஸ்க்’ எடுத்துப் போகவேணாம்” என்றான்.
டாக்டர் உதுமாலெவ்வையும் “அதுக்கென்ன?” என்று கூறித் தலையாட்டிச் சம்மதித்தார்.
டாக்டர் உதுமாலெவ்வை – அவர் மனைவி – கனகரட்ணம் ஆகியோருடன் கோகுலனும் அமர்ந்து கனகரட்ணம் வீட்டில் இரவுச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு டாக்டர் உதுமாலெவ்வையையும் மனைவியையும் பொத்துவில் வாடிவீட்டில் கொண்டு விட்டுவிட்டு இராத்தங்கலுக்குத் தனது இளையக்காவின் வீட்டுக்குக் கோகுலன் வந்துசேரும்போது இரவு பத்துமணியாகிவிட்டது.
(தொடரும் …… அங்கம் – 37)