சொல்லித்தான் ஆகவேண்டும்! …. சொல்-10 … ‘தீர்த்தத் திருவிழாவோடு காணாமல் போய்விடும் திருவிழாக் கடைகள்’ …. …………. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயத்தை முன்னெடுக்கும் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ யினர் இந்த விடயத்தை எதிர்க்கின்ற இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கூற்றுகளை மட்டுமே மையமாக வைத்துத்தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் தமது வாதங்களை முன்வைக்கின்றனர்.
இந்த விடயம் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே உள்ள எண்ணங்கள், அபிப்பிராயங்கள், நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டும் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இது வெறுமனே ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’யும் தமிழரசுக் கட்சியும் மட்டும் கயிறிழுக்கும் போட்டியல்ல.
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலுள்ள பல பாதகமான விடயங்களைக் கட்சி அரசியலுக்கும் அப்பால் பல அரசியல் பத்தி எழுத்தாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் தமிழ் மக்களின் நலன்களின் மீது அக்கறையுள்ள அரசியலாளர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவு என்ற பெயரிலும், மக்கள் மனு – வடக்குக் கிழக்குச் சிவில் சமூகம் என்று பெயரிலும் ஆரம்பித்து இப்போது ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ யென்று பெயர்ப்பலகையை மாற்றிக் கொண்டு மக்களின் கருத்தறிதல் எனும் போர்வையில் பொது மக்களின் கருத்தைப் பரவலாக அறியாது தங்கள் கருத்தைத் திணிக்கின்ற சில கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் நடத்திவிட்டு ஏதோ தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தின் பின்னால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அணிதிரண்டு ஒருமுகப்பட்டு நிற்கிறார்கள் என்றதொரு தோற்றப்பாட்டை இந்தப் பொது வேட்பாளர் விடயத்திற்குச் சார்பானவர்கள் சிலர் குரலெழுப்பி அதில் தற்போது அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த விடயத்தைச் ‘சீரியஸ்’ ஆக எடுத்துக் கொள்ளவேயில்லை.
தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கக் கோருவதால் அக்கட்சி பொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளே பலவிதமான அபிப்பிராயங்கள். அக்கட்சி இன்னும் ஒரு திட்டவட்டமான முடிவை அறிவிக்கவில்லை. இரா. சம்பந்தனும் சுமந்திரனும் பகிரங்கமாக இதனை எதிர்க்கிறார்கள். தமிழ்ப்
பொதுவேட்பாளர் விடயத்தை முதலில் முன்மொழிந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எவ்) இப்போது விடயத்தைச் சற்று அடக்கித்தான் வாசிக்கின்றார். அவரது கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிரான நிலைப்பாடுகள் நிலவுவதாகத் தகவல். அவருக்குத் தெரிந்து விட்டது போதும் இது சரிவராது என்று. அடைக்கலநாதனின் (ரெலோ) நிலைமையும் இதுதான். சித்தார்த்தன் இன்னும் தனது பூனையை முற்றாக அவிழ்க்கவில்லை. ஆனால் இவர்கள் எல்லோருமே தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அல்லது தயக்கம் காட்டுகிறார்கள். தமிழரசுக் கட்சி இது விடயமாக உத்தியோகபூர்வமாக எந்தத் தீர்க்கமான முடிவையும் அறிவிக்கப் போவதில்லையென்பது சாதாரண அரசியல் மாணவனுக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் உளப்பூர்வமான முழுமையான ஆதரவில்லாமல் தமிழ் மக்கள் பொதுச் சபையினால் தனித்து நின்று இவ்விடயத்தை முன் கொண்டு செல்ல முடியாது. உண்மையில் இந்த விடயம் சில ஊடகங்களில் பேசுபொருளான அளவுக்குச் சாதாரண தமிழ் மக்களிடையே இது பற்றிய பிரக்ஞை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தென்னிலங்கை வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்பது என்றுதான் தமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை. அல்லது விரக்தியும் வெறுப்பும் சலிப்பும் உற்ற நிலையில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் விடலாம். இதன் அர்த்தம் பரிஷ்கரிப்பு என்று இல்லை.
கவிழப்போகும் கப்பல் என்று தெரிந்தால் எந்தப் பயணிதான் கப்பலில் ஏறுவான். அது போல்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பிசுபிசுத்துப் போகின்ற ஒரு சமாச்சாரம் என்று தெரிந்த பின் மக்கள் இதில் ஆர்வம்காட்டப் போவதில்லை.
தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு திருவிழாக் கடைதான். ஜனாதிபதித் தேர்தல் (தீர்த்தத் திருவிழா) முடிந்த கையோடு இது காணாமல் போய்விடும்.