இந்தியாவால் இலங்கையில் நடத்திய ஆயுதப் போராட்டமே தமிழீழ விடுதலைப் போர்! … ஏலையா க.முருகதாசன்.
இலங்கையில் தமிழரின் உரிமைக்காகவென ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது.ஆயுதம் தாங்கிய பல அமைப்புகள் இதை நடத்தின.
முதல் வரியில் உரிமைக்காகவென என்ற ஒரு சொல்லைப் பாவித்திருக்கிறேன்.அதற்குக் காரணம்,தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட முப்பது வருடகால போராட்டம் ஈழத்தமிழருக்கான போராட்டமேயல்ல.
இப்பொழுது இலங்கை அனைத்து வங்குரோத்து நிலைமைகளையும் கொண்ட நாடாக யானை விழுங்கிய விளாம்பழமாக வந்து நிற்கின்றதே அதற்கான போராட்டந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற தலைப்பிட்டு இந்தியாவால் ஈழத்தமிழரை வைத்து நடத்திய போராட்டம்.
அதை இன்னும் இலகுவாக விளங்கும்படி சொல்வதானால் கட்டுரைத் தலைப்பு ஒன்றாகவம் கட்டுரையின் உள்ளீடு வேறொன்றாகவும் இருக்குமே அது போன்றதுதான் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டம்.
எடுப்பார் கைப்பிள்ளையாக தமிழீழ விடுதலைப் போராளிகள் மட்டுமல்ல முழுத்தமிழர்களும் குறிப்பாக வடக்கு கிழக்குத் தமிழர்கள் முழுமையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர முடிகின்றது.
இலங்கையை தமது ஆளுமைக்குட்படுத்துவதற்காக இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் போராளிகளை உருவாக்கி தனது சதியை ஆரம்பித்துள்ளது என்பதை பல ஈழத்தமிழ் அரசியல் அறிஞர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தினாலும் அதனை நம்ப மறுத்ததுடன் ஏற்றக் கொள்ளவும் ஈழத்தமிழ் மக்கள் மறுத்தனர்.புறக்குடத்தில் ஊற்றிய தண்ணீர் போன்றானது அந்த எச்சரிக்கை.
தமிழ் மக்களின் அரசியல் பார்வை என்பது வீரத்தை விதந்துரைப்பதும்,தமிழ் மன்னர்களின் வீரப்பிரதாபங்களை அசை போட்டு மகிழ்வதிலுமே இருந்தது.காலத்துக்கும் ஒரே விதமான அரசியல் சித்தாந்தங்களையோ கோட்பாடுகளையோ கடைப்பிடித்து அதன் வழி தமிழர்களின் அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கும் என்ற தப்பான கணக்கும் தமிழரின் ஒரு பலவீனமாகும் என்பதை தமிழர்கள் உணரவில்லை.பழம்பெருமை பேசி மகிழ்வதிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்.
ஈழத்தமிழர்கள் தமது அரசியல் கணீப்பீடுகளை தமது குணாம்சங்களுடன் ஒப்பீடு செய்யத் தவறினர்.இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளின் சிந்தனையும் செயல்பாடும் கடிவாளம் கொண்ட,கண்களை மூடிக்கட்டிய குதிரையாக வேகமெடுத்ததே தவிர வேறொரு கோணம் உண்டு எனச் சிந்திக்கவே இல்லை.
இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் பெரும்பிரிவுப் போக்கு இருப்பினும் எதிலும் ஒட்டிக் கொள்ளாமலும்,தேவையேற்படின் ஒட்டிக் கொள்ளும் பண்பு
முஸ்லீம் மக்களிடம் இருந்ததும் இந்தியாவின் காய் நகர்த்தலுக்கு இன்னும் சுலபத்தையும் பலத்தையும் கொடுத்தது.
இது முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்து அல்ல.திறந்த சிந்தனையுடன் எந்த இனப் பிரிவையும் குறைசொல்ல வேண்டுமென்பதற்காக குறை சொல்லாமையும் இலங்கையின் இன்றைய நிலைக்கு முழு இலங்கை மக்களுந்தான் காரணம் என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து விளக்குவதேயன்றி வேறொன்றுமில்லை.
சிங்களம் என்பதும் சிங்கள மக்கள் இலங்கையில் மட்டுமே இருக்கின்றார்கள் என்பதும்,முஸ்லீம் மக்கள் தாம் பேசும் மொழிக்கப்பால் மத ரீதியாக தமது பற்றை வெளிப்படுத்தலும்,தமிழர்களின் சாதியம் இன்னும் மேட்டுக்குடி மனநிலைகள் போன்ற இக்காரணிகளை வைத்து இந்தியா தனது இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுத்தது.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை பெரிய பதவிகளில் அமர்த்தி சிங்கள மக்களை ஆட்சி செய்ய வைத்தது தமிழர்களின் கல்வி சம்பந்தப்பட்ட தகுதியடிப்படையில் மட்டும் நடந்தது அல்ல.
பிரித்தானியர் இலங்கையைவிட்டுப் போனதற்குப் பின்னர் இலங்கையில் இரு இனங்களும் ஒற்றமையுடன் நாட்டைக் கட்டி எழுப்பக்கூடாது என்ற சூழ்ச்சித் தந்திரமே இதுவாகும்.
சிங்களவர்களை கல்வியில் ஏன் முன்னேற்றிச் செல்லவில்லை என்பதை ஆராயந்தறியும் போது தமிழர் மேல் ஒரு வெறுப்பு நீறுபூத்த நெருப்பாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
பெரும்பான்மையினரை சிறுபான்iயினர் அதிகாரம் செலுத்துவதை ஒரு குறிப்பிட்ட காலம்வரையுமே பெரும்பான்மையினர் சகித்துக் கொண்டிருப்பார்கள் உணராதவர்களாகவும் இருப்பார்கள். அது தொடர்ச்சியாக இருக்காது.சிறுபான்மை இனத்தவர் எம்மை அதிகாரம் செய்யட்டும் என்று அவர்கள் தம்மை அடிமைத்தனமாக நினைக்கவே மாட்டார்கள்.
தமிழருக்குள் இருந்த சாதியக் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு எவ்வாறு அடுத்தடுத்த அடக்கப்பட்ட தலைமுறையினர் தாம் ஏன் இப்படி அடக்கப்படுபவர்களாக இருக்கிறோம்;அதற்கெதிராக தாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்களோ அதே போன்றுதான் சிங்கள மக்கள் சிந்தித்தார்கள்.
பிரித்தானியர் இலங்கையைவிட்டுப் போனதன் பின்னரும்கூட சிங்கள அரசியல்வாதிகளோ சிங்கள மக்களோ அனைத்;துத் திணைக்களங்களிலும் காணப்பட்ட தமிழதிகார நிலையை பெரிதுபடுத்தவில்லை.
ஆனால் அதனைத் தமிழ் மக்கள் தாம் புத்திசாலிகள்: அறிவாளிகள் என அவர்கள் தம்மை நினைத்துக் கொண்டதுமல்லாமல் தாங்கள் பெரும்பான்மையினத்தை நிர்வகிக்கின்றோம் என்ற திமிர்த்தனத்தால் சிங்களமக்களை ஆத்திரம் கொள்ள வைக்கும் விதத்திலும் வெறுப்பேற்றும்
விதத்திலும் நடந்து கொண்டமையும் தமிழ்மக்களுடன் சிங்களவர்கள் முரண்படுவதற்கான காரணமாக அமைந்தது.
இன்று இலங்கையின் நிலைமை என்பது பொருளாதார வனப்பிழந்து தலைக்குமேல் பெரும் சுமையாக கடன்களை சுமந்து கொண்டும்,நாளாந்த வாழ்வுக்குத் தேவையான பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டு செல்லும் தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லினம் வாழும் நாடுகளில் நாட்டை ஆளும் அரசுகள் மிகவும் எச்சரிக்கையுடன் பல்லினங்களை ஒன்றுக்கொன்று வெறுப்படையாமலும் மோத விடாமலும் கவனமாக அரசாட்சியை நடத்த வேண்டும்.
ஆனால் அத்தகு புத்திசாலித்தனமான ஆட்சிமுறையோ,பல்லினங்கள் அனைவரும் தாம் அந்த நாட்டவர் என்ற உணர்வுடன் அந்த நாட்டின் குடிமக்களாக ஒரு பொதுப்பெயர் வரித்துக் கொண்டவர்களாக பல நாடுகளில் சுமூகமான இனச்சூழல் அங்கிருப்பதில்லை.
இனமுறுகலும் இன ரீதியான ஏற்ற தாழ்வுகளும் தொடர்ந்து இனங்களால் பேணப்படுவதும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு எதையுமே சிந்திக்காது இன முரண்பாடுகளை வளர்ப்பது தெரியபாமல் வளர்த்துவிடுவதாலும் ஒரு காலகட்டத்திற்கு மேல் அது இனமுரண்பாட்டின் அதிஉச்ச வன்முறைக் குணாம்சமாக தீவிரம் பெற்றுவிடுகின்றது.
சிங்கப்பூர் என்பது உலகப் பார்வையில் அது ஒரு நகரத்திற்குரிய பரப்பளவினையும்,மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் ஆட்சி அலகுகள் ஒரு பாரிய நாடு எவ்வாறு ஆட்சியை நடத்துவதற்கு எத்தகைய அணுகுமறையைக் கையாளுகின்றதோ அதனையே சிங்கப்பூர் அரசும் பின்பற்றி வருகின்றது.
பல்லினம் வாழும் நாட்டில் எதிர்காலத்தில் எதுவெல்லாம் ஏற்படுமோ அவற்றையெல்லாம் தூரநோக்குடன் எதிர்கொண்டும் அங்கு வாழும் பல்லின மக்களின் அவரவருக்கான குணாம்சங்களை, பண்புகளை கவனத்தில் எடுத்து, ஒரு இனத்துக்கும் இன்னொரு இனத்துக்குமிடையில் உரசல்கள் ஏற்படாதவகையிலும் குற்றங்களுக்கு கடும் சட்டங்கள் மூலம் தண்டனைகளை வழங்கி சிங்கப்பூர் மக்களை,சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருகின்றது.
இலங்கை நிலவரம் அதற்கு முற்றிலும் மாறாகவே இருக்கின்றது.இலங்கை அரச திணைக்களங்களில் மட்டுமல்ல,மலையகத்தின் தேயிலைத் தோட்டங்களிலும் அது சார்ந்த பாடசாலைகளிலும் தமிழர்களின் ஆதிக்கம் இருந்ததை மறுக்க இயலாது.
உதாரணமாக ஒரு திணைக்களத்தில் எண்பது வீதுமான தமிழர்கள் அதிகாரிகள் தொட்டு உத்தியோகத்தர்களாக பணியாற்றுகையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் இருபது வீதமானவர்களே உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்சத்தில் இந்நிலைமை ஒரு குறிப்பிட்ட காலம் வரையும் பெருபான்மையின உத்தியோகத்தர்கள் இவ்வீத வித்தியாசத்தைக் கணக்கிலெடுக்காது இயல்பாக இருப்பினும்,இளந்தலைமுறையினர் இத்திணைக்களங்களில்
உத்தியோகத்தர்களாக பணி ஏற்றவுடன் இவ்வித்தியாசத்தை அவர்கள் உற்று நோக்குவார்கள்,அது இயல்பானதே.
ஒவ்வொரு சமகாலமும் எல்லாரிடத்திலும் புதிய எண்ணங்களை உருவாக்கும்.வாசித்தல் கலந்துரையாடல் நாட்டின் பல்வேறு கட்டமைப்புளைப் பற்றிச் சிந்தித்தல்,தமது நாட்டின் மக்கள் தொகையில் சிங்களவர்களாகிய தாங்கள் எவ்வளவு வீதம் இருக்கிறோம்,தமிழர்கள் எவ்வளவு வீதம் இருக்கிறார்கள்,சிறுபான்மையினமான தமிழர்கள் எவ்வாறு எல்லாத் திணைக்களங்களிலும் மலையகத்திலும் அதிகாரிகளாகவும் உயர்பதவிகளிலும் இருக்க அவர்களால் எப்படி முடிந்தது அதற்கான அடிப்படைக் காரணி என்ன என சராசரி ஒவ்வொரு சிங்கள இளைஞனும் சிந்திக்காமல் இருக்கமாட்டான்.
தமிழர்களுடன் நட்பாக இருக்கும் சிங்களவர்களே உள்மனதில் இதையும் சிந்திப்பார்கள்.இந்தச் சிந்தனை அறிவுஜீவிகளுக்கு கடத்தப்பட்டு இறுதியில் சிங்கள அரசியல்வாதிகளிடம் போய்ச்சேரும்.
நம்மினம் ஏன் தமிழர்களைவிட உத்தியோக ரீதியில் அதிகாரிகளாகவோ பொறுப்பு வாய்ந்தவர்களாகவோ இருப்பதற்கு தடையாக என்ன காரணிகள் இருக்கின்றன என்பதை சிங்கள புத்திஜீவிகளும்,அரசியல்வாதிகளும் காலப் போக்கில் பின்னாட்களில் புத்த துறவிகளும் சிந்திக்கத் தொடங்கினர்.
ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையினம் அதே நாட்டில் வாழும் பெரும்பான்மையினத்தைவிட அந்நாட்டின் அனைத்துத் திணைக்களங்களிலும் முன்னிலை வகிக்க வேண்டுமெனில் அது சிறுபான்மையினத்தின் கல்வியினாலும் புத்திக்கூர்மையினாலுமே சாத்தியமாகும்.
சிங்கள அரசியல்வாதிகளின் அறிவைத் தூண்டிய இச்சிறுபொறி காலஞ் செல்லச் செல்ல மெல்ல பெருந்தீயாக வளரத் தொடங்கியது.
இலங்கையில் இருக்கின்ற இரு இனங்களுக்குமிடையில் இன முரண்பாடுகள் தோன்றாத போதே இந்தியா இலங்கையை தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரவேண்டுமென்பதில் பெரும் இராஜதந்திர நகர்வுகளை நகர்த்தத் தொடங்கியது.
பெரும்பான்மையான சிங்கள இனம் சிறுபான்மையினரான தமிழர்களின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதை இருநிலை கொண்டு தூண்டிவிட்டது.
மெது மெதுவாக தமிழர்களை இலங்கை அரசு புறந்தள்ளிய போது தமிழ்த்தலைவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உட்பட இந்திய மத்திய அரசின் அரசியல்வாதிகள் வரை நாடிச் சென்று தமக்கு உதவி செய்யமாறு வேண்டிக் கொள்வதை ஊக்கப்படுத்தியதுடன் தாம் உதவி செய்வோம் என்ற வாக்குறுதிகளைக் கொடுத்ததுடன்,தமது இராஜதந்திரிகள் மூலமாக சிங்கள அரசியல்வாதிகளின் தமிழர்களுக்கெதிரான எண்ணங்களுக்கு ஆதரவாகவும் சிங்கள அரசியல்வாதிகளைச் செயல்பட வைத்தது.
மெல்ல மெல்ல சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் நட்பும் பகையுமாக ஒருவிதமான பனிப்போர் நடைபெற்;றுக் கொண்டிருந்த
நிலையில்,இந்தியாவிலிருந்து வணிகம் செய்ய வந்த மலையாளிகளையும் தமிழகச் செட்டிமார்களையும் இரு இனங்களுக்குமிடையிலான மனக்கசப்பினை அவர்களைக் கொண்டு உருவாக்கத் தொடங்கியது இந்திய அரசு.
ஒரு காலகட்டத்தில் பிழைப்புத் தேட வந்த சீமை என இந்திய வணிகர்களால் விருப்புடன் வியந்துரைக்கப்பட்ட நாடுதான் இலங்கை.
வணிகத்தின் மூலம் பெரும் செல்வந்த நிலைiயு அடைந்த மலையாள வணிகர்களும்,தமிழகச் செட்டிமார்களும் இலங்கையரசினை தமது பணத்தின் மூலம் தமக்கேற்றவாறு செயல்பட வைத்தனர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்கின்ற பொருட்களாகட்டும்,இலங்கைக்குள் இறக்குமதி செய்கின்ற பொருட்களாகட்டும் அவை யாவும் மலையாள வணிகர்களின் கைகளிலும் செட்டிமார்களின் கைகளிலும் மட்டுமே இருந்தன.
கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களான அரிசி மா இன்னும் பலவகையான இறக்கமதி உணவுப் பொருட்கள் போன்றவற்றை துறைமுக நகரங்களில் களஞ்சிய கிட்டங்கிகள் அமைத்து அதனை இலங்கையெங்கினும் செட்டிமார்கள் விநியோகித்து வந்தனர்.
மலையாளிகள் பெரும் வணிக நிறுவனங்களுடன் சிறு சிறு உணவுக் கடைகளையும் இலங்கை எங்கினும் நடத்திய போதிலும்,தமிழர் பகுதிகளிலேயே அதிகளவில் நடத்தி வந்தனர்.
இவ்விரு பகுதியினரும் வணிகத்தைத் தமது கையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இலங்கையில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவ்வாட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்கள் தொட்டு அதிகாரிகளை தமது கைக்குள் போட்டுக் கொண்டனர்.தமக்குச் சாhதகமாக தமது வணிகத்தை மேம்படுத்துவதற்காக கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.
மலையாளிகளுக்கு தமிழர்களைப் பிடிக்கவே பிடிக்காது.செட்டிமார்கள் தமிழராக இருந்த போதிலும் அவர்களுக்கும் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழர்களுடன் தாமரையிலைத் தண்ணீர் போலவே பழகி வந்தனர்.
வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழர்களில் உயர் பிரிவினரைக்கூட தம்மிலும் அவர்கள் குறைந்தவர்களே என்ற மனப்படிவம் அவர்களிடம் இருந்தது.
இதனை இன்னும் தெளிவாகக் கவனிப்:போமானால் இலங்கை பல்லினம் கொண்ட நாடு மட்டுமல்ல கலப்பினம் கொண்ட நாடுமாகும்.
வுட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த தமிழர்களின் பொது மனநிலை வேறாகவும்.
வவனியாவுக்கு அப்பால் உள்ள தமிழர்களின் மனநிலை புத்தளத்திலிருந்து வத்தளை வரையுள்ள கரையோரத் தமிழர்களின் மனநிலை இன்னொரு விதமாகவும் மலையகத் தமிழர்களின் மனநிலை இந்தியாவோடு இணைந்திருக்கின்ற மனநிலையைக் கொணடதாகவும் இருக்கும்.
இந்த வேறுபாட்டு நிலைமையும் இந்தியாவுக்குச் சாதமகமாக,இலங்கையை தமது கட்டுப்பபாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.
உலகில் வேறு எங்குமே சிங்களவர்களுக்கான தனிநாடு எதுவும் இல்லை.இலங்கை மட்டுமே அவர்களுக்கான நாடாக இருந்ததும் சிங்களவர்கள் இலங்கையைத் தமது நாடு என உரிமை கொண்டாட வைத்தது.
ஒரு இனம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையும் தம்மைப் பற்றியும் தமது தொன்மை பாரம்பரியம் போன்றவற்றை அறியாதிருப்பது போல எக்காலத்திற்கும் அறியாது இருக்க மாட்டார்கள்.
சிங்கள இனத்தில் தோன்றிய அடுத்தடுத்த பரம்பரையிலிருந்து புத்திசீவிகள் உருவாகுகையில் அவர்கள் தமது இனத்தின் நிலைப்பாட்டினையும்,மற்றைய இனங்களின் சமூக வாழ்வையும் ஒப்பிட்டும் எடை போட்டும் பார்ப்பார்கள்.
அப்படிப் பார்க்கையில், இலங்கை,தமிழ்நாடு,சிங்கப்பூர்,மலேசியா,போன்ற நாடுகளில் அந்நாடுகளைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் இனத்தை அவர்கள் உற்று நோக்குகையில் இலங்கை மட்டுமே தமக்கான நாடாக இருப்பதை உணர்ந்த அவர்கள் அதனைத் தக்க வைப்பதற்காக என்னென்ன வழிகள் இருக்கின்றதோ அவற்றையெல்லாம் கடைப்பிடிப்பார்கள்.
தம்மை அதிகாரம் செலுத்தும் சிறுபான்மையினரான தமிழர்கள் மீது பெரும் மனப்புகைச்சல் கொணடவர்களாகவும் இருப்பார்கள்.
சிங்கள அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை கடும்சிங்களப் போக்குவாதம் கொண்ட இடங்களில் சொல்லி,எமது நாடு இலங்கை மட்டுமே என ஆவேசமாகச் சொல்லும் போது அப்பாவிச் சிங்கள மக்கள் தமிழர்களிடம் தமது நாடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டேதானிருப்பார்கள்.
சிங்கள அரசியல்வாதிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டுமல்லாது அந்தந்த ஊர்களில் நடக்கும் கட்சி ஆதரவுக் கூட்டங்களில் தமிழர்களின் ஆளுமைத்தன்மைக்கான காரணங்களை கலந்துரையாடுவார்கள்,எடுத்து வைப்பார்கள்.
தமிழர்களும் இலங்கையில் தமது விகிதாசாரத்தை கணக்கிலெடுக்காது சிங்களவர்களுக்கு தாமே எஜமானர்கள் என்ற உளப்போக்கை வளர்த்துக் கொணடனர். பெருமை பேசியும் சிங்களவர்களை அறிவில் குறைந்தவர்கள் எனச் சொல்லியும் மகிழ்ந்தனர்.
பெரும்பான்மையான திணைக்களங்களில் தமிழர்களின் ஆளுமை இருக்கையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமது வணிகத்தை கொழும்பு உட்பட தென்னிலங்கை எங்கும் விஸ்தரிக்கத் தொடங்கினர்.
இந்த விஸ்தரிப்பினால் இதுவரை மலையாளிகளின் கைகளிலும் செட்டிமார்களின் கைகளிலும் இருந்த வணிகம் மெல்ல மெல்ல இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் கைகளுக்குச் செல்லத் தொடங்கியது.
இன்று இலங்கை எப்படி இருக்க வேண்டுமென்பதை அன்றே இந்தியா திட்டமிட்டு இருந்ததால்,அதற்கமைய இராஜதந்திர நடவடிக்கைகளை நகர்த்தியது.
தமிழ் அரசியல்வாதிகளை இந்தியாவுக்கு வரவழைத்து அவர்களோடு கலந்துரையாடுவது,இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகர்களுக்கு இந்தியாவிலிருந்து பொருட்களை மலிவு விலைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆதரவு வழங்குவது,இன்னொரு புறத்தில் புத்த பிக்குகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளையும் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைத் தூண்டிவிடுவதுமாக இந்தியா மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தனது அயல்நாட்டு அரசியலை நடத்தியது.
இலங்கையில் இலங்கை அரசிற்கெதிரான அயுதப் பேராட்டம் ஒன்றை தமிழரை வைத்து நடத்த வேண்டும் அதன் மூலம் சிங்களவர்களையும் தமிழர்களையும் எக்காலத்திலும் சமாதானமாகவிடாத நிரந்தர வைரம் பாய்ந்த பகையாளிகளாக மாற்ற வேண்டும் என்பதை இந்தியா எப்பொழுதோ தீர்மானித்துவிட்டது.
அதற்கமைய படிப்படியாக தனது அயல்நாட்டு அரசியலை நடத்தியது இந்தியா.சிங்களவர்களின் குணாம்சங்களுக்கேற்ப சிங்களவர்களையும் தமிழர்களின் குணாம்சங்களக்கேற்ப தமிழர்களையும் கையாண்ட இந்தியா தன்னை ஒரு போதுமே இலங்கைக்கு எதிரான நாடு என்பதைக் காட்டிக் கொள்ளவில்லை.
உலக நாடுகள் எங்கினும் அந்தந்த நாடுகளின் அரசியல் கோட்பாடுகள் எதுவாகினும் மக்களின் மனநிலையோடு அரசியல்வாதிகள் அண்மித்து நிற்பதன் காரணத்தாலுமே கட்சிகள் மக்களை ஆட்கொள்ள வழிவகுகின்றன.
இலங்கையிலும் தமிழ் அரசியல்வாதிகளும் சிங்கள அரசியல்வாதிகளும் இத்தகு அணுகுமறையைக் கைக்கொள்ளாமல் விடுவதால் நாட்டின் பொருளாதாரம் பற்றியோ,இலங்கையர்கள் என்ற பொதுநிலையில்அவர்களின் சுமுகமான வசதியான வாழ்வுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைச் சிந்திப்பதை அறவே தவிர்த்து தத்தமது தனித்தவம் பற்றி உணர்ச்சிகரமான பேச்சுக்களை பொதுவெளியிலும் நாடாளுமன்றத்திலும் பேசி ஒருவருக்கொருவர் முட்டிமோதுதலைக் காலம் காலமாகச் செய்து வருவதால் இது இந்தியாவுக்கு இலங்கையை தடுமாற வைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
எங்கேயோ ஒரு இடத்தில் இரு இனங்கiளிடத்திலும் மோதலை ஆரம்பித்து வைக்க வேண்டுமென்பதற்காக வணிகத்தில் பெரும் வெற்றியை அடைந்து வந்த செட்டிமார்களையும் மலையாளிகளையும் இதற்கு ஊக்குவிப்பாக இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது.
தமது பணச் செல்வாக்கினால் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து நின்ற இவ்வணிகர்கள் தாம் இலங்கை முழுவதிலும் தமது வணிகத்தை பரப்பி வைத்திருக்கிறோம் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் கவனிக்காத மாதிரி அவர்களின் மூளையைக் கழுவும் விதமாக அடிக்குமேல் அடித்தால் அம்மியம்
நகரும் என்பதற்கொப்ப இலங்கையை சொந்தத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் இலங்கை முழுவதும் தமது வணிகத்தை விஸ்தரித்துக் கொண்டு வருகிறார்கள் சிங்களவர்கள் தமது வாழ்வுக்காக கையேந்தி நிற்கிறார்கள் என்பது போன்ற பிரச்சாரத்தை சிங்கள அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவது போல சொல்ல ஏற்கனவே தென்னிலங்கையில் இருக்கும் அரச திணைக்களங்களில்கூட தமிழர்களே அதிகாரிகளாக, உத்தியோகத்தர்களாக தமிழர்கள் இருந்து வரும் நிலையில்,வணிகத்திலும் தமிழர்களின் கை ஓங்கி வருவதைத் தடுப்பதற்கு நடத்தப்பட்ட வணிகக் கலவரே அப்பப்ப நடந்த இனக்கலவரங்களாகும்.
இக்கலவரங்கள் வணிகக் கலவரங்களாக இருந்த போதிலும்,அதற்கு இரு இனங்களுக்குமிடையிலான இனக்கலவரம் என முத்திரை குத்தப்பட்டது.
வணிகக் கலவரங்கள் என்ற பார்வையில் இக்கலவரங்களைப் பகுத்தறிந்து பார்க்கும் திறனை இரு இனங்களுமே இழந்த நிலையில் சிறு தீப்பொறியொன்றை பெருங்காட்டில் எறிந்தது போல இக்கலவரங்களின் பிரதிபலிப்பு தமிழ் சிங்கள மக்களின் மனங்களினல் ஆழமாகப் பதியத் தொடங்கியது.
இரு இனங்களும் தமக்குள் பகையை வளர்க்கத் தொடங்கினர்.தமிழர்கள் எமது வசதியான வாழ்க்கையையும் எமக்கான சந்தர்ப்பங்களையும் பறிக்கிறார்கள் எனச் சிங்கள மக்களும்,தாம் ஒரு தேசிய இனம் தமது உரிமைகளை சிங்கள அரசாங்கம் மறுக்கிறது என இரு இனங்களும் சிந்திப்பதும் செயலுமாக தமது அரசியலை எந்நாளும் பிர்ச்சினையாக்கி அரசியல் செய்யத் தொடங்கினர்.
உரிமைப் பிரச்சினைச் சிந்தனை தீவிரமடைந்து அறவழிப் போராக மாறியது.அறிவழிப் போருக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக தம்மைக் காட்டிக் கொண்டே,இலங்கை அரசுக்கு சார்பான ஆலோசனைகளையும் வழங்கியது.
இந்தியாவின் முழுக் கவனமும் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகிவிடக்கூடாது என்பதேயாகும்.
சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் தமது உரிமை சம்பந்தமாக என்ன சிந்திக்கிறார்கள் என்பதில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வித கவனமும் செலுத்தாது ஆண்ட இனம்,தேசிய இனம்,வடக்கு கிழக்கு தமிழரின் சொந்த மண்,உலக இனங்களில் தொன்மைமிகு இனம் என்றெல்லாம் சூத்திரமாடு மாதிரி ஒன்றையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் பற்றியோ, நாடு எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினைகள் பற்றியோ,அது சிங்கள மக்களைச் சார்ந்ததெனினும் அவர்களுக்காகவும் பேச வேணுமே என்ற அரசியல் புரிந்துணர்வு அற்றவர்களாகவே இருந்தார்கள்.
இந்தியாவின் எண்ணத்தை ஈடேற்றுவதிலேயே சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைப்புடன் செயல்பட்டனர்.
சிறுபான்மையினமான தாம் ஆளுமையுள்ளவர்களாக இருப்பதால் சிங்கள மக்கள் மத்தியில் என்ன எண்ணங்கள் தோன்றும் என்பதைச் சரியாகக் கணிக்கத் தவறியது மட்டுமல்லாது,பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்கள மொழியறிவே இல்லாதிருந்தமை தமிழர் பக்கத்து பலவீனமாகும்.
இலங்கையில் இரு இனங்களுக்குமிடையில் நடந்து கொண்டிருக்கும் இன முரண்பாடுகளை இந்தியா குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை தனது அளுமைக்குள் இலங்கை வரவேவ்டுமென்பதில் மீனுக்குத் தலையையம் பாம்புக்கு வாலையையும் காட்டிக் கொண்டது.
இரு நாட்டுக்குமிடையில் இன்று பாலம் கட்டும் நிலைக்கு இரு நாடுகளுமே முற்றுமுழுதாக வந்துவிட்டன.யூரோப் பணம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒருங்கிணைப்பு வாயிலாக புழக்கத்தில் உள்ளதோ அது போன்று இலங்கை,மாலைதீவு நாடுகளில் இந்திய ரூபாயும் பொதுப்பணப் புழக்கமாக வரவைக்கின்ற நிர்ப்பந்த அந்நாடுகளில் பொருளாதார பலவீன நிலையை நோக்கியே இந்தியா நகர்கின்றது.
நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதது என்ற எல்லையைத் தொடும் போது அது இயல்பானதாக மாறிவிடும்.இனிவருங்காலங்களில் இந்தியாவுடனான நட்பாகட்டும் இலங்கை மீதான ஆளுமையாகட்டும் அவை எதையுமெ இலங்கையால் நிராகரிக்க முடியாத தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
இச்சூழ்நிலையை நோக்கி இராஜதந்திர நகர்வுகளை நகர்த்திய இந்தியா தமிழர் சிங்களவர் முரண்பாடுகளை வளர்ப்பதில் கவனமாகக் கையாண்டது.
ஒரு புறத்தில் தமிழ்த்தலைமைகளுடன் உறவாடியும்,இன்னொரு புறத்தில் புத்த பீடங்கள்,சிங்களக் கல்விமான்கள்,சிங்கள அரரசியல் இனவாதிகளுடன் உறவாடியும் தமிழர்களுக்கு இலங்கை அரசு உரிமைகளை கொடுத்தவிடாதபடி கண்காணித்து வந்தது இந்தியா.
பொருளாதார ரீதியாக இலங்கையைச் சீரழிப்பதற்கு அதன் வருமானத்தில் பெரும்பகுதி முப்படைகளின் கட்டமைப்புகளுக்கு ஓதுக்குகையில் இலங்கை வாழ் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்துபு; பொருட்களும் விலை ஏறுதலும்,விவசாயத்தை மேம்படுத்தவதில் உள்ள விவசாயத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் விலையேறுவதாலும்,விவசாயப் பசளைகளாக வேதியல் பொருட்களை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மண் மலட்டுத் தன்மையாகவிடும் என்று காரணத்தால் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டு இயற்கைப் பசளையைப் பெறுவதில் ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளிக்க முடியாத நிலை தோன்றுவதும்,காரண காரியங்களை ஆராயும் பொதுமக்கள் அதிலும் பெரும்பான்மையின மக்கள்,எல்லாவற்றக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பக்காக முப்படைகளுக்க ஒதுக்கப்பட்ட நிதிதான் காரணம் எனவும்,உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எவை அச்சுறுத்தலாக இருந்தது என்றவுடன் பெரும்பான்மையின மக்களின் சூடான பார்வை தமிழீழ விடுதலைப் போராளிகள் மீதும் அதற்கு ஆதரவாக இருந்த தமிழ்மக்கள் மீதுமே செல்லும்.
இலங்கையில் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாக வேண்டும் என்ற இந்தியாவின் தி;டத்திற்கமைய தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு தனது நாட்டில் பயிற்சி கொடுத்தது இந்தியா.
இது மிகப்பெரிய குற்றமாகும்.இந்தியாவின் அடுத்தடுத்த திட்டத்தை நன்குணர்ந்த அமெரிக்கா அதுபற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் கண்டும் காணாமலிருந்தது.
இலங்கை ஒரு தீவாகினும் அது ஒரு இறைமையள்ள நாடு.ஒரு நாட்டுக்குரிய அத்தனை சட்டங்களைக் கொண்ட நாட்டின் மீது போராளிகள் ஊடாக இலங்கை மீது போர் தொடுத்தமைக்கான முதல் முயற்சிதான் போராளிக்குழுக்களுக்கு தனது நாட்டில் பயிற்சி கொடுத்தமையாகும்.
இலங்கை போன்ற ஒரு நாட்டால் தீவிரவாதப் போராட்டத்தையோ,பயங்கரவாதப் போராட்டத்தையோ தாக்குப் பிடிக்கவே முடியாது.
இலங்கை தன்னை நிர்வகித்துக் கொள்வதற்காக,தனது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக அது மேற்கொள்ளும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு செய்வதற்காகவே இந்தியா தமிழ் போராளிகளுக்கூடாக அதற்கு தமிழீழ விடுதலைப் போர் என்ற பெயரைச் சூட்டி இலங்கைக்கு எதிராக ஒரு யுத்தம் தொடுக்கப்பட்டது.
ஆயுதம் மூலம் இலங்கையைப் பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்று போராளிக் குழுக்களுக்கு இந்தியா அறிவுறுத்தியது மட்டுமல்ல தனது உளவாளிகளை ஒவ்வொரு போராளிக் குழுக்களுக்குள்ளும் ஊடுருவ வைத்து ஒவ்வொரு போராளிக் குழுவையும் அழித்து கடைசியாக தமிழீழ விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி அவர்களை வளரவிட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளும் இந்தியா தமக்கு உதவி செய்கிறது என நம்பி முழுவீச்சுடன் போராட்டத்தை நடத்தினர்.அவர்களுக்குத் தேவையான எரிபொருட்களை தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக கொண்டு வருதலை இந்தியக் கடற்படையினரின் கண்டுகொள்ளாமையால் இந்தியா மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைத்தது.
பல உற்று நோக்காளர்களின் கருத்துப்படியும் இன முரண்பாடுகளை ஆய்வு செய்வோரின் கருத்துப்படியும் முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்திக்கும்,முன்னாள் இலங்கை சனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கும் இடையில் ஏற்பட்ட முரணால் ஒருவருக்கு ஒருவர் பணிந்து போகாத காரணத்தாலேயேதான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு இந்தியாவின் அகண்ட பாரத அரசியல் என்னவென்று பாடம் படிப்பிக்க வேண்டுமென்பதற்காக இந்தியாவில் இலங்கைத்தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாக பரவலாக பேசப்பட்டாலும்,இலங்கையை தமது கைக்குள் வைத்திருத்தல் தமது நாட்டுக்குப் பாதுகாப்பு என்பது மட்டுமல்ல,தமது அயல்நாடான சீனா இந்துசமுத்திரப் பிராந்தியத்தை தமதாக்கிக் கொள்ளலாம் என்பதை இந்தியா அன்றே கணித்து வைத்திருந்ததால,;இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் முக்கியத்தவத்தை அறிந்ததனால் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கான முழு அரசியல் நகர்த்தலையும் படிப்படியாக இந்தியா செய்து வந்தது.
அமெரிக்காவின் உலகை ஆளும் எண்ணத்திற்கும்,சீனாவின் ஆசியப் பிராந்தியத்திற்கு எஜமானர் ஆகலாம் என்ற எண்ணத்திற்கு தடை போடுவதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இலங்கையை இந்தியா அரவணைக்கின்றதா அல்லது அந்த அரவணைப்பு உள்நாட்டு அரசியலில் தடையிடாத அயல்நாட்டின் மீதான அக்கறையா என இலங்கை தடுமாறிய போதும் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையே இலங்கையிடம் இருந்தது.
இன முரண்பாடு காரணமாக தமிழர் விரும்பும் உரிமையக் கொடுக்க மறுக்கும் இலங்கை அரசுகளின் போக்கை உருவாக்கிய இந்தியாவுக்கு, இவற்றையே பகடைக்காயாகவும் இந்தியா பயன்படுத்தியது.
இலங்கைக்கான அரசியலைச் செய்வதற்கு தமிழர்கள் என்ற ரீதியில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் இலங்கையில் பெரும்பான்மையாக வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழர்களும் இந்தியாவின் இலங்கை மீதான தாக்கத்துக்குப் பெரும்பாலமாகவே இருந்தார்கள்.
இந்தியா இலங்கை மீது தான் நடத்திய அயுதப் போருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் எனப் பெயர் சூட்ட வைத்து நடத்திய போது தமிழருக்கான தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சுயாட்சியை ஏற்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தையும் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் செய்து கொண்டது.
இதை ஆழ்ந்து சிந்தித்தால் இது இரண்டு நாட்டுக்கான ஒப்பந்தமாகடீவே கருதப்பட்டது மட்டுமன்றி தமிழருக்காக இந்தியா இருக்கின்றது என்கின்ற மிரட்டலுமாகும்.
இலங்கையை தமது ஆளுமைக்குள் கொண்டு வருவதற்கு தமிழர்கள் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டதையே இவ்வொப்பந்தம் எடுத்துக் காட்டுகின்றது.
தமிழர்களும் இவ்வொப்பந்தத்தை இறுக்கிப் பிடித்து ஏற்றுக் கொண்டு தாம் நினைத்ததை மெல்ல மெல்ல நிறைவேற்றியிருக்கலாம்.புத்திசாலித்தனத்தை பயன்படுத்த முடியாத நிலை தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழறிஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
ஓப்பந்தப்படி தமிழர்தரப்பு நடந்து கொள்ளக்கூடாது என்ற தி;ட்டத்துக்கு அமையவே ஒப்பந்தத் திட்டம் நகரத் தொடங்கியது.தமிழீழத் தாயகம் தவிர வேறு எதுவும் எமக்கு வேண்டாம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் முடிவு தமிழ் அரசியலாளர்களை தடுமாற வைத்து அவர்களை ஒதுங்க வைத்தது.
துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு சகோதரப் போராளிக் குழுக்கள் தொடக்கம் பொதுமக்கள் வரை நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் காரணமாக நியாயமான கோரிக்கைகளைக்கூட உயிர்ப் பயத்தால் தமிழறிஞர்களால் முன் வைக்க முடியவில்லை.
முள்ளிவாய்க்காலில் உயிர்களின் அழிவுடன் போர் நிறத்தப்பட்டது வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் மிகமுக்கியமானவரே இந்தியாவின் உளவாளிச் செயல்பட்டாளர் என்பது அதிர்சசிகரமான உண்மையாகும்.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆட்சி ஒப்பந்தத்தில் கைச்சாந்திட்ட இந்தியாவே அதை நிறைவேற்றவிடாது தமிழீழ விடுதலைப்புலிகளைக் கொண்டே அதைத் தடுத்தது.
ஓப்பந்தத்தில்: கைச்சாநதிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே அதை நிறைவேற்றத் தயங்குவார் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.
தமிழீழ விடுதலைப்புலிகளைக் கொண்டே அவர்களைக் குற்றவாளியாக்கியமை,ஜே.ஆரைக் கொண்டே ஜே.ஆரைக் குற்றவாளியாக்கியமை,துரோகிககள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கொடுத்ததன் மூலம் தண்டனை பெற்றவர்களின் பெற்றோர் உட்பட உறவினர் வரை தமிழீழ விடுதலைப் புலிகளைப் வாழ்நாள் எதிரிகளாக வரித்துக் கொண்டமை,அதனால் அவர்கள் அழிய வேண்டும் என மனதில்: வைராக்கியம் கொண்டமை,தமிழீழ விடுதலைப் போராளிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெற்றோர் மனைவி பிள்கைள் உறவினர்கள் என அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டுமல்ல தமிழர்களையே பரம எதிரிகளாகப் பார்த்தமை,தராகி சிவராம் போன்ற மிகப்பெரும் ஊடகவியலாளர்களை இந்திய இராஜதந்திரிகள் சந்தித்து அரசுக்கெதிராக எழுத வைத்து,அரசை ஆத்திரம் கொள்ள வைத்து அவரைக் கொலை செய்ய வைத்தமை,உலக நாடுகள் எங்குமே,அதுவும் எதிரி நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் போது நடக்காத,நடக்கவிடாத நடந்தால் சம்பவம் நடக்கும் நாட்டுக்கே அவமரியாதை என அரசியல் நாகரீகத்தைப் பேணுகின்ற சம்பவமாக கருதப்படும்,இராஜீவ்காந்திக்குக் கொடுத்த அரச அணிவகுப்பு மரியாதையின் போது,அணிவகுப்பில் நின்ற வீரர் அவரைத் தாக்க முயற்சித்தமை,இராஜீவ்பகாந்தியின் கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டமை,ஊடகவியலாளர்கள் இராஜீவ்காந்தியின் கொலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிரபகாகரனைக் கேட்ட போது அது ஒரு துன்பியல் நாடகம் எனத் தடுமாற்றப் பதில் சொல்லி தானாகவே சிக்கிக் கொண்டமை எனவும்,இந்தியா உள்ளவரை இலங்கையில் உள்ள ஒரு இனம் இராஜீவ் காந்தியைத் தாக்கியது,இன்னொரு இனமோ கொன்றது என்பதை தமிழனாக இருந்தாலும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் மறக்கவேமாட்டார்கள்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து தமிழர்களை தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவளிக்கத் தூண்டியமையும்,பிரபாகரனின் போராற்றலை மிகைப்படுத்தியமையும்,அவருக்கு நிகரானவர் எவருமே இல்லையென் பாடல்களை எழுத வைத்தமையும்,,புலம்பெயர் நாடுகளுக்கு வந்து போன தமிழக அரசியல்வாதிகள் தாமே அறியாத வகையில் அவர்களை வைத்தே தமிழர்களின் மூளையைச் சலவை செய்தமை,இப்படியே தமிழர்களை மறுபக்கம் சிந்திக்க விடாது பகுத்தறிய விடாது புலம்பெயர்
நாடுகளுக்குள்ளும் இந்தியா ஊடுருவி செயல்பாட்டாளர்களை வழிநடத்தியமை என எல்லாமே திட்டமிடலேதான்.
இந்தியாவின் திட்டச் சுழிக்குள் சிங்களவர்கள் தமிழர்கள் என அனைவருமே அகப்பட்டுவிட்டார்கள்.
நாங்கள் உங்களோடுதானிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இலங்கையனின் மனதிலும் ஆழப்பதியும் வகையில் சிங்கள மக்களால் பயங்கரவாதிகள் எனக் கருதப்பட்ட போராளிக் குழுக்களை அழித்து அவர்களுக்கு விசுவாசிகளாகவும்,அழிவிலிருந்து உங்களை மீட்போம் என தமிழர்களுக்கு உதவி செய்வொம் என அவர்களுக்கு விசுவாசிகளாகவும் காட்டிக் கொண்டே இந்தியா இலங்கையைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது.
இருபக்க இனவாதமும் புத்தமதவெறியும் விவேகமற்ற ஆட்சியும்,தமிழரைத் திருப்திப்படுத்த மைத்திரி சிறிசேனாவை ஜனாதிபதியாக்கியமையும்,சிங்களவர்களைத்: திருப்திப்படுத்த கோட்டபாயாவை ஜனாதிபதியாக்கியமையும்,தாம் நினைத்ததைச் சாதிக்க ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதியாக்கியமையும்,அனுருகுமார திசநாயக்காவைத் துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு அடுத்த காய்நகர்த்தலைத் தொடங்கிய இந்தியா,இந்தியாவின் பணப்புழக்கத்துடன் சிங்களவர்களும்: தமிழர்களும் சேர்ந்து இலங்கையை வல்லமையற்ற நாடாக்கி இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுத்தாகிவிட்டது எனக் கருதலாம்.
இந்தியாவைப் பகைக்காமலும் நெருங்காமலும் தமக்கென்ற தனித்துவத்துடன் ஆட்சி செய்ய இலங்கையை நிர்வகிக்க இலங்கை ஆட்சியாளர்களால் முடியாத நிலையில் வக்கற்று நிக்கிறார்கள்.
எப்போதே இலங்கைககுள் இந்தியாவால் எறியப்பட்ட இலங்கையை ஆளுமைப்படுத்த வேண்டும் என்ற இராஜதந்திர அரசியல் தீச்சிறுபொறி இன்று பெருங்காட்டுத்தீயாக மாறிவிட்டது.
இன்று இலங்கை தன்னை ஆளமுடியாமல் பொருளாதாரச் சீரழிவினால் நிலைகுலைந்து நிற்பதைக் கொண்டு வருவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் நெம்புகோலைப் பயன்படுத்தி இந்தியாவால் நடத்தப்பட்ட ஆயுதப் போரே தமிழீழ விடுதலைப் போராகுமே தவிர இது தமிழருக்கான உரிமைப் போரல்ல.