“சொல்லித்தான் ஆகவேண்டும்” … சொல்-09 …. ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’யின் அரசியல் வன்முறை! …. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காத எவரும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச தகுதியற்றவர்கள்’ என்ற கருத்து, இந்தப் பொது வேட்பாளர் வாய்பாட்டை ஆதரித்து நிற்கும் அணியினரால் இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது.
இக்கருத்து உண்மையில் ஓர் அரசியல் வன்முறையாகும். வடக்கு கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவு என்று பிறந்தவுடன் பெயர் சூட்டி ஆரம்பித்து இப்போது அதனைத் ‘தமிழ் மக்கள் பொதுச் சபை’ என்று பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்துள்ள அமைப்பின் முக்கியஸ்தர்களே இக்கருத்தை முன் வைத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தான் மட்டுமே ‘குத்தகை’க்கு எடுத்தாற்போல் ஏனைய போராளி இயக்கங்களைத் தடை செய்ததற்கும்-அரசியல் சித்தாந்த ரீதியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தத்துவார்த்த முரண்பாடு கொண்டிருந்தவர்களையெல்லாம் துரோகிகள் ஆக்கி அவர்களையெல்லாம் தொலைத்துக் கட்டியதற்கும்-இறுதியில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே எனப் பிரகடனப்படுத்தியதற்கும் இப்போது தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காத எவரும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச தகுதியற்றவர்கள் என்று அறிவிப்புச் செய்ததற்கும் மனப்போக்கில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இந்த அறிவிப்பு மாற்றுச் சிந்தனையாளர்கள் மீதான ஓர் அரசியல் வன்முறைப் பிரயோகமே தவிர வேறில்லை.
தமிழ் மக்கள் பொதுச்சபையினரின் கைகளில் துப்பாக்கியும் அதிகாரமும் இருந்திருந்தால் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காதவர்களையெல்லாம் வகைதொகையின்றிச் சுட்டுத் தள்ளியிருப்பார்களோ தெரியவில்லை.
இத்தகையதொரு ஜனநாயக மறுப்பின் மூலம் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘பதிலி’ யாக அல்லது ‘முகவர்’ ஆகக் களமிறங்கியுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை
ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதல்ல.
கடந்த காலத்தில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியல் காலப்போக்கில் எவ்வாறு தத்துவார்த்தப் பலவீனங்களுக்குள்ளாகி ‘தமிழ்ப் பாசிசம்’ ஆகப் பிறழ்வடைந்து ஈற்றில் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியதோ அதே போன்றதொரு பின்னடைவைத்தான் இந்தத் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடு ஏற்படுத்தப் போகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தான் களமிறங்கத் தயார் என்ற அனந்தி சசிதரனின் அறிவிப்புக் கூட இந்தப் பின்புலத்தில்தான் எழுந்ததோ என எச்சரிக்கையோடு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியானது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழத் தனிநாட்டை அமைப்பதற்கான ஆணையைத் தமிழ் மக்களிடமிருந்து பெறும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக அறிவித்து அத்தேர்தலில் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ‘தமிழ்த் தேசிய மன்றம்’ அமைத்துத் தமிழீழத் தனிநாட்டிற்கான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கிச் செயற்படப் போவதாகவும் அறிவித்திருந்தது. ஈற்றில் அந்த அறிவிப்பு வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆனதே கடந்த கால அனுபவம்.
அதே போன்றதொரு கற்பனாவாத ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆகத்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக நின்று இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழர்களின் அதாவது தமிழீழத்தின் நிழல் ஜனாதிபதியாகச் சர்வதேச அரங்கில் செயற்படப்போவதான அனந்தி சசிதரனின் எடுகோளும் இருக்கப் போகிறது. இன்றைய தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தட்பவெட்ப நிலைகளைக் கணக்கிலெடுக்காததொரு அரசியல் மதியீனம்தான் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் கடிதத் தலைப்பை மட்டும் கொண்டுள்ள ஓர் ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியல்தானே. அது போன்றதோர் விடயம்தான் அனந்தி சசிதரனின் அறிவிப்பு.
தமிழ் அரசியல் பொதுவெளியில் பலவீனமான நிலத்தில் முளைத்துள்ள தமிழ் மக்கள் பொதுச்சபை எனும் ‘நச்சுக் காளான்’ குறித்து வடகிழக்கு மாகாணத் தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையுணர்வடைய வேண்டும். தமிழர் அரசியல் பொதுவெளியில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ ஒரு சிவப்பு விளக்குச் சமிக்ஞையே. ஆம்! அது ஆபத்தானது. அதன் ஆரம்பமே அதன் ஜனநாயக மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பாகவும் அரசியல் வன்முறைப் பிரயோகமாகவும் இருக்கிறதே.