“யாரோ ஒருவன் வந்து தன் இரவு உணவாக யாரையும் அழைத்துச் செல்லலாம்” …. கவிதை …. முல்லைஅமுதன்.
வந்தாயிற்று
ஒரு நிலத்திலிருந்து…
இன்னொரு நிலத்திற்கு.
சிறை இதுவென்றார்கள்.
பாதுகாப்பு வலயம் என்றார்கள்.
எதுவாயினும்
அழைத்து வாராமல்
இழுத்துவரப்பட்டிருக்கிறோம்
முழுநிர்வாணமாக…
இனி எதை மறைக்க?
மகளின் முன் அப்பா..
யாரோ ஒருவனின் முன் ஒருத்தி..
நாகரீகம் மிக்க சமூகம்
மீண்டும்
ஆதிகாலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறதோ?
முட்கம்பி வேலி பாதுகாப்பானதாம்..நிர்வாணம் மறைக்க
எதுவும் தரப்படவில்லையே..
மேலதிகாரி வரலாம்…
தீர்ப்புக்கள் எழுதப்படலாம்.
ஒவ்வொருவராக காணாமல் போகலாம்.
ஒவ்வொருவராக
தங்களை இழக்கலாம்..
யாரோ ஒருவன் வந்து தன் இரவு உணவாக
யாரையும் அழைத்துச் செல்லலாம்..
இதுவரை மழையை,வெய்யிலைத் தவிர
யாரும் வரவேயில்லை.
யாரோ ஒருவருக்கு புள்ளியீட்டோமே..
அவர்கள் பாதுகாப்பாக சொகுசாக
இருக்க,விரல்தொட்டு முனை அழுத்தச் சொன்னவர்கலும் அருகில் இல்லாமல் போனார்கள்.
இன்னும் காத்திருக்கிறோம்…
மேலதிகாரிகளின் கட்டளைக்கு…
நிர்வாணமா…
முல்லைஅமுதன்.
(எப்போதோ நடந்ததாயினும் இப்போதும் எங்காவது நடந்துகொண்டிருக்கலாம்.)
கவிதை நெஞ்சில் முள்ளாக குத்த வலிக்கிறது
என்றோ வலித்தது இன்று கவிதையாக வந்து
மீண்டும் குத்த மீண்டும் வலிக்கிறது இன்று
வலி சுமந்த தேகம் வலியை மீண்டும் சுமக்கிறது!
சங்கர சுப்பிரமணியன்.
வலிசுமந்த எங்கள் வரலாறு !