“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 35 … செங்கதிரோன்.
டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் புறப்பட்டுச் சென்றபின் கனகரட்ணம் கோகுலனிடம், “தம்பி! நீயும் டொக்டரும் கதைச்ச கதயெல்லாம் கவனமாகக் காதில் விழுத்திக்கொண்டுதான் சாப்பிட்ட நான். நீ சொன்னதெல்லாம் நியாயம்தான். மட்டக்களப்புத் தொகுதிய தமிழ் ஆள் ஒருவரும் முஸ்லிம் ஆள் ஒருவரும் எம்பியாக வரவேணுமெண்டுதானே ரெட்டத்தொகுதியாக்கினது. இப்படிக் கூட்டணியில ஒரு ஆளையும் தமிழரசுக்கட்சியில ஒரு ஆளையும் போட்டா ரெண்டு எம்பிமாரையும் தமிழ் ஆக்கள் எடுக்கப் பாக்கினம் எண்டுதானே தம்பி முஸ்லிம்கள் நினைப்பினம். அது தமிழ் முஸ்லிம் ஒத்துமைக்குக் கூடாதானே. மத்தப்பக்கத்தால பாத்தா மட்டக்களப்புத் தொகுதித் தமிழ் மக்கள அதுவும் ஒரே கட்சிக்காரர ரெண்டு கோஸ்டியாப் பிரிச்சு மோதவிடுற மாதிரித்தானே இது. ராசதுர காசி ஆனந்தன் ரெண்டு பேருக்கும் கூட்டணி ‘ரிக்கற்’ குடுத்தது சரியான பிழ தம்பி. கிழவன் உசிரோட இரிந்திருந்தா இந்தப் பிழ நடந்திராது” என்றார்.
இதுவரைக்கும் அரசியலில் ஈடுபாடுகாட்டாது தானுண்டு தன் தொழிலுண்டு என்பதோடு சமூக மற்றும் ஆன்மீகத் தொண்டுகளில் மட்டும் ஆர்வம் காட்டி வாழ்ந்த கனகரட்ணம் அரசியலை இவ்வளவு தூரம் துல்லியமாகத் கணித்துப் பேசுகிறாரே என்பது கோகுலனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ‘கிழவன்’ என்று அவர் சுட்டியது தந்தை செல்வாவைத்தான் என்பதும் கோகுலனுக்குப் புரிந்தது.
கனகரட்ணம் இவ்வாறு கூறக்கேட்டதும் கோகுலனின் சிந்தனைக்குருவி சிறகடித்தது.
1959ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேசத்தில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் இரு தரப்புக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கில்தான் அப்போது உருவாக்கப்பட்ட மூதூர்த்தொகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்புத் தொகுதி உருவாக்கப்பட்டது போலவே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது.
1960 மார்ச் மற்றும் 1960 யூலைத் தேர்தல்களிலே முறையே தமிழரசுக்கட்சியில் ரி. ஏகாம்பரம் மற்றும் சுயேச்சையில் எம்.ஈ.எச்.மொகமட்அலி; ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஏ.எல்.அப்துல் மஜீத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். 23.03.1961இல் ஏகாம்பரம் மரணமடைந்தார். மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர் பிரதிநிதிக்கான இடம் வெற்றிடமானது.
தமிழ்பேசும் மக்கள் என்று முஸ்லீம்களையும் தமிழ்தேசிய இனத்திற்குள் அடையாளப்படுத்திக் கொண்டு அது தோற்றம்பெற்ற 1949 ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் செய்துவந்த தமிழரசுக்கட்சி, ஏகாம்பரம்
இறந்ததால் 28.06.1962 அன்று நடைபெற்ற மூதூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி அவரை முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்று வெல்லவைத்திருக்க வேண்டும். அதுதான் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. ஆனால், தமிழரசுக்கட்சியோ முஸ்லீம்கள் தமிழருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்ற எடுகோளில் இடைத்தேர்தலுக்கான மூதூர்தொகுதியின் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக அதற்கு முந்திய 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மொகமட்அலியை நிறுத்தி இடைத்தேர்தலின் பின் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே அப்துல்மஜீத் மற்றும் மொகமட்அலி என முஸ்லிம்களாக இருக்க வழிவகுத்தது. இதே தவறை அடுத்து வந்த 1965 ஆம் ஆண்டுத்தேர்தலிலும் தமிழரசுக்கட்சி இழைத்தது. இத் தேர்தலில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக மீண்டும் மொகமட்அலியை நியமித்ததன் மூலம் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே மீண்டும் (மொகமட் அலி – தமிழரசுக்கட்சி மற்றும் அப்துல் மஜீத் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) முஸ்லீம்களாக இருப்பதைத் தொடர இடம் கொடுத்தது.
தமிழரசுக்கட்சி இழைத்த இந்த அரசியல் தவறு காரணமாக 1961 இலிருந்து 1970 வரை ஒன்பது வருடங்கள் தமக்கான தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்த மூதூர்ப் பிரதேசத்தின் சாதாரண தமிழ்மக்கள் முஸ்லீம்கள்மீது எரிச்சல் அடைவதற்கான உளவியலை மறைமுகமாக ஊட்டியும் ஊக்கியும் விட்டது.
இப்போது என்னவென்றால் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இராசதுரை, காசிஆனந்தன் இருவரையும் நிறுத்தி அதற்கு முந்திய 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் இராசதுரை (தமிழரசுக்கட்சி), இராஜன் செல்வநாயகம் (சுயேச்சை) இருவரும் வென்று இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே தமிழர்களாக வந்ததுபோல் இந்த 1977 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இராசதுரை (தமிழர் விடுதலைக்கூட்டணி), காசி ஆனந்தன் (தமிழரசுக் கட்சி) இருவரையும் வெல்லவைத்து இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே தமிழர்களாகக் கொண்டு வரத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நப்பாசை பிறந்துள்ளது. இந்த நப்பாசை நிறைவேறினால் இந்த அரசியல் தவறு 1970 இலிருந்து 1977 வரை ஏழு வருடங்கள் தமக்கான முஸ்லீம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்த மட்டக்களப்பின் சாதாரண முஸ்லீம் மக்களுக்குத் தொடர்ந்தும் அந்நிலை 1977 க்கு பின்னரும் நீடிக்குமானால் தமிழ்மக்கள் மீது வன்மம் கொள்வதற்கான உளவியலுக்கு வழிவகுக்கும்.
தமிழரசுக்கட்சி ‘தமிழ்பேசும் மக்கள்’ என்று கூறித் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்காமல் அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கான அரசியல் தவறுகளையே தமக்குத் தெரியாமல் இழைத்துக் கொண்டிருக்கிறதே எனக் கோகுலனின் உள்ளம் ஆதங்கப்பட்டது. தமிழரசுக்கட்சி படிப்பது தேவாரமாகவும் இடிப்பது சிவன் கோவிலாகவுமிருக்கிறதே என்று உள்ளூரக் கவலைப்பட்டான். இந்தக் கட்டத்தில் பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் அரிவரி வகுப்பிலிருந்தே தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகள் கலந்து ஒன்றாகப் படித்த அந்தநாள் சொந்த அனுபவங்களையும் கோகுலன் அசைபோடத் தவறவில்லை.
1970 ஆம் ஆண்டு பதவிக்குவந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த பதியுத்தின் மஃமூத் தமிழ்ப் போதனா மொழிப் பாடசாலைகளைத் தமிழ்ப் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள் என வகைப்படுத்தி வேறாக்கியதால்தானே தமிழ் மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் ஒன்றாகவிருந்து கல்வி கற்கும் சூழல் இல்லாமற் போயிற்று. அதுவும்கூட தமிழ் முஸ்லிம் உறவைக் கெடுத்தது என்றும் எண்ணிய கோகுலன் தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதும் சிதைப்பதும் சாதாரண மக்களல்ல; தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் என்பதை உணர்ந்தான்.
பொத்துவில் தொகுதியில் கனகரட்ணத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களின் வாக்குகளைத் திரட்டுவதற்காகப் பொத்துவில் கிராமத்திற்குக் கல்முனைக்குடியிலிருந்து வருகை தந்திருக்கும் டாக்டர். உதுமாலெவ்வையை எண்ணியபோது அவர்மீது கோகுலன் ஏற்கெனவே கொண்டிருந்த மதிப்பு கிணற்றடியிலே சீமெந்துத்தரையில் பிடித்த பாசி படர்வது போலப் பலமடங்காகியது.
கோகுலனின் இவ்வாறான சிந்தனையோட்டம் கனகரட்ணத்தின் வீட்டு ‘கேற்’ றடியில் வந்து நின்ற வாகனமொன்றின் சத்தம் கேட்டுத் தடைப்பட்டது.
‘கேற்’ றடியில் வந்து தரித்த வாகனத்திலிருந்து இராசநாயகம் – ஜெயதேவா – ஆனந்தன் போடியார்; – கவீந்திரன் – பிரான்சிஸ் – மகாலிங்கம் – என்.எஸ் தியாகராசா – ஞானராஜா ஆகியோர் சகிதம் இன்னும் சிலர் இறங்கிக் கனகரட்ணத்தை நோக்கி வந்தனர். இவர்கள் அனைவருமே திருக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள். கோகுலன் எழுந்து சென்று வரவேற்று எல்லோரையும் உள்ளே கூட்டிவந்தான்.
எல்லோரும் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த கனகரட்ணத்தை அணுகித் தனித்தனியாக வணக்கம் கூறினார்கள். சாய்மனைக் கதிரையின் நீட்டிய கைகளில் கால்களை நீட்டிச் சாய்ந்து படுத்திருந்த கனகரட்ணம் இவர்களைக் கண்டதும் நீட்டியிருந்த கால்களை மடக்கித் தரையில் கீழே போட்டபடி சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்ந்து நிலைக்குத்தாக உட்கார்ந்தார். பதிலுக்கு எல்லோருக்கும் வணக்கம் கூறிய கனகரட்ணம் வீட்டின் வெளி ‘விறாந்தை’ யில் சுவர் ஒரத்தில் வரிசையாகப் போடப்பட்டிருந்த கதிரைகளைக் காட்டி அமரச் சொன்னார்.
அவர்கள் வந்ததும் வராததுமாக உடனே எல்லோருக்கும் தேனீர் வரவழைக்கப்பட்டது. தேனீர்க் கோப்பையைக் கையில் விரலால் கொழுவிப் பிடித்துக்கொண்டே இராசநாயகம் பேச்சை ஆரம்பித்தார். இராசநாயகம் திருக்கோவில் கிராமத்தில் மக்களால் மதிக்கப்படுகின்ற மூத்தபிரஜை.
“ஐயா! நம்மட கூட்டமொண்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலடியில பெரிசாப் போடணும். அதுக்கு உங்களிட்ட நாள் எடுத்திட்டுப் போகத்தான் எல்லாரும் வந்தநாங்க” என்று கூறி இராசநாயகம் தாங்கள் மனதில் காவிக்கொண்டு வந்த விடயப்பொதியின் முடிச்சை அவிழ்த்தார்.
“ஓம்! ஐயா! தம்பிலுவில் ஆக்களுக்கும் தருமலிங்கத்துக்கும் காட்டிறமாதிரிப் பெரிய கூட்டமொண்டு திருக்கோவிலில நாம போடணும்” என்று இராசநாயகத்தின் கோரிக்கையை வழிமொழிந்தார் ஞானராஜா.
ஏனையோர் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தார்கள்.
கோகுலனுக்கு இக்கோரிக்கை தவறாகவேபட்டது. ஏற்கெனவே நீண்டகாலமாகத் தம்பிலுவில் – திருக்கோவில் ஊர்ப்பிரச்சினை நீறுபுத்த நெருப்பாகப் புகைந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஊரில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த தனிநபர்களுக்கிடையில் எழும் அசம்பாவிதக் காற்று வீசுகிறபோது அவ்வப்போது அது பற்றிப்பற்றி அணைவதுண்டு. இந்த ஊர்ப்பகையைக் கோகுலன் உளமார வெறுத்தான். ஆதலால், இப்போது வந்திருக்கிற தேர்தல் இப்பிரச்சினைத் தீயிற்கு எண்ணெய் வார்த்துவிடக்கூடாது என்பதில் கோகுலன் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகவும் கவனமாயிருந்தான்.
தருமலிங்கத்தையோ அல்லது அவரது தம்பிலுவில் ஆதரவாளர்களையோ ஆத்திரமூட்டும் எந்த தேர்தல் பிரச்சாரச் செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது என்பதிலும் கோகுலன் எச்சரிக்கையாகவே இருந்தான். தம்பிலுவிலில் சில கணிசமான குடும்பங்கள் கனகரட்ணத்திற்கு ஆதரவாக ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்தன. அக்குடும்பங்கள் ஒருவகையில் தருமலிங்கத்திற்கு உறவும்கூட. அப்படி இருக்கையில் தருமலிங்கத்தையோ அல்லது அவரது ஆதரவாளர்களையோ அவதூறு செய்கிற மாதிரி – ஆத்திரமூட்டக்கூடிய மாதிரி நடந்து கொண்டால் இப்போது கனகரட்ணத்திற்கு ஆதரவாகத் தம்பிலுவிலில் மறைந்துகொண்டுள்ள குடும்பங்களும் பின்னர் மனம்மாறிவிடக்கூடுமாததால் அதற்கு இடம்கொடுக்கக்கூடாதென்பதும் கோகுலனின் உள்நோக்கமாயிருந்தது.
எனினும், கனகரட்ணம் என்ன பதில் சொல்லப் போகிறாரோ? என எதிர்பார்த்து அமைதியைக் கடைப்பிடித்தான்.
கனகரட்ணம் எல்லோரையும் நோக்கி “முதலில தேத்தண்ணியக் குடிங்க. யோசிச்சிச் சொல்லுறன்” என்று கூறித் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நெற்றியை மேலே உயர்த்தினார். சிந்தனை ரேகைகள் அவரது முகத்தில் முகாமிட்டன. வந்திருந்தோரும் கனகரட்ணத்தை யோசித்துப் பதில் சொல்வதற்குக் கால அவகாசம் வழங்கிக் கைகளில் வைத்துக் கொண்டிருந்த தேனீர்க் கோப்பைகளைக் காலி செய்தனர்.
வெறும் கோப்பைகளை வேலைக்காரப் பொடியன் வந்து வாங்கிச் சென்றதும் கனகரட்ணம் கதைக்கத் தொடங்கினார்.
“தம்பிமாரே! திருக்கோவில் கோயிலடியில முந்தியொருக்காக் கூட்டம்போட்ட நாமதானே. இன்னொரு கூட்டம் என்னத்துக்கு?” என்றார் கனகரட்ணம்.
“அது ஐயா! தம்பிலுவில் சிந்தாத்துரையிர வீட்டுக்குப் பக்கத்தில நடக்க இருந்த கூட்டத்தத் தருமலிங்கத்திர ஆக்கள் நடக்கவிடாமக் குழப்பினதாலதான் திருக்கோவிலுக்கு வந்து அந்தக் கூட்டத்த நாம கோயிலடியில நடத்தின. திருக்கோவிலுக்கெண்டு தனியான கூட்டமொண்டு நாம நடத்தத்தான் வேணும் ஐயா!” என்று கவீந்திரன் இடைமறித்தான்.
கவீந்திரன் அறப்போர் அரியநாயகத்தின் இரண்டாவது மகன் என்பது கனகரட்ணத்திற்குத் தெரியும்.
கவீந்திரனின் இடைமறிப்பால் சற்று அமைதியான கனகரட்ணம் கோகுலனின் பக்கம் திரும்பி “தம்பி! உன்ர அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்.
கனகரட்ணம் பந்தைத் தந்திரமாகத் தன்னிடம் ‘பாஸ்’ பண்ணுகிறார் என்பது கோகுலனுக்குப் புரிந்தது.
“திருக்கோவில் கிராமம் முழுவதும் கூட்டணிக்குத்தானே ஆதரவு. கூட்டம் வைச்சாலும் சரி வைக்காட்டியும் சரி அவங்க முழுப்பேரும் சூரியனுக்குத்தான் ‘புள்ளடி’ போடுவாங்க. தருமலிங்கத்துக்கோ அல்லது அவரோட நிக்கிற ஆட்களுக்கோ ‘கேந்தி’ க்கு நாம ஒண்டும் செய்யத் தேவல்ல. தம்பிவிலுக்குள்ளயும் கூட்டணிக்கு ஆதரவான குடும்பங்கள் இரிக்கி. அவங்களப் பத்தியும் நாம யோசிக்கணும். சும்மா தருமலிங்கத்தையும் ஆக்களையும் ஆத்திரப்படுத்திரத்தால நமக்கொண்டும் ஆகப்போறல்ல. ஆனா உங்கட விருப்பமென்ன எண்டும் எனக்கு விளங்கிது. அப்படியெண்டாக் கூட்டத்த திருக்கோவில போடாம விநாயகபுரத்தில போடுவம்” என்று கூறித் திசையைத் திருப்பினான் கோகுலன். விநாயகபுரம் திருக்கோவிலுக்குத் தெற்கே பல ஊர்களிலிருந்தும் குடியேறிய மக்களைக் கொண்ட அயல்கிராமம், திருக்கோவிலின் வடக்கு அயல்கிராமம்தான் தம்பிலுவில். அதுவரை அமைதியாக இருந்த ஜெயதேவா கோகுலன் கூறியதைக் கேட்டதும், “அதுநல்ல யோசனதான்” என்று ஆமோதித்தார்.
ஜெயதேவா மட்டக்களப்பைச் சேர்ந்தவர். திருக்கோவிலில் மணம் முடித்தவர். தம்பிலுவில் – திருக்கோவில் ஊர்ப்பிரச்சினைகள உயர்த்திப் பிடிப்பதில் அவருக்குச் சம்மதமில்லை. எப்போதும் சமாதானத்தை விரும்பும் ஒருவர் அவர். கோகுலனின் நெருங்கிய நண்பரும்கூட. ஜெயதேவாவின் கூற்றுடன் விடயம் ஒருவாறு சுமுகமான முடிவுக்கு வந்தது. திருக்கோவிலிலிருந்து வந்தவர்கள் கனகரட்ணத்திடம் ஒவ்வொருத்தராகச் சொல்லிக் கொண்டு திருப்தியுடன் மீண்டும் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் சென்றதும் கனரட்ணம் கோகுலனிடம், “தம்பி இவங்க வரும்போது நீயும் நிண்டது நல்லதாப்போச்சு” என்று புன்னகைத்தார்.
அன்று வெளியில் ஓரிடத்திற்கும் வெளிக்கிடாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதியின் பல ஊர்களிலிருந்தும் தனியாகவும் – கூட்டாகவும் வந்த ஆதரவாளர்கள் பலர் வந்து சந்தித்துச் சென்றபடியே இருந்தனர்.
மதியம் 1.00 மணியாகிவிட்டது. பொத்துவிலுள்ள முஸ்லிம் பிரமுகர்கள் சிலரைச் சந்திக்கச் சென்றிருந்த டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் தங்கள் சந்திப்புகளை முடித்துவிட்டுத் திரும்பிவந்தனர்.
மத்தியானச் சாப்பாடும் அவர்களுக்கு ஒழுங்காகியிருந்தது. டாக்டர் உதுமாலெவ்வை – அவர் மனைவி – கனகரட்ணம் – கோகுலன் நால்வரும் ஒன்றாயிருந்து பலதையும் பத்தையும் உரையாடிக்கொண்டே உணவைச் சுவைத்தார்கள். டாக்டர் உதுமாலெவ்வை தம்பதிகளுக்கென விசேடமாக நாட்டுக்கோழியொன்று ‘தக்பீர்’ பண்ணப்பட்டுச் சமைக்கப்பட்டிருந்தது. உணவை முடித்துக் கொண்டபின் டாக்டர் உதுமாலெவ்வையும் மனைவியும் கோகுலனும் கனகரட்ணத்தின் வீட்டின் வெளி ‘விறாந்தை’ யின் ஒருபக்க அந்தத்தின் மூலையில் மூன்று கதிரைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு அடுப்புக்கல்போல அமர்ந்து உரையாடத் தொடங்கினார்கள்.
தொடர்ந்து கனகரட்ணத்தைச் சந்திப்பதற்காக, இனிப்புக் கொட்டுப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி எறும்புகள் நடமாடுவதுபோல ஆதரவாளர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தார்கள்.
(தொடரும் …… அங்கம் – 36)