“எங்கள் தமிழாம் சிங்கார சென்னைத் தமிழும்” …. சொல்…4…..சங்கர சுப்பிரமணியன்.
மனிதர்களில் எளிமையானவர்களும் உண்டு
ஆடம்பரமானவர்களும் உண்டு. தன்னைப்பற்றி வெளியில் தெரிந்து எப்போதும் நான்குபேர் நம்மைப் பற்றி பேசவேண்டும் என்பதில் எவ்வித நாட்டமும் இல்லாதிருப்பவர்களே எளிமையானவர்கள். சிலர் தம்மைப் பற்றி யாராவது எதையாவது எப்போதும் பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆடம்பரமாக எதையாவது செய்து கொண்டே ஆர்ப்பாட்டமாக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையே
அப்பாடக்கர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒருவரை ஆர்ப்பாட்டம் செய்யும்போது ஆர்ப்பாட்டக்காரர் என்றே சொல்லி விடலாம் அல்லவா? அப்படிச் சொல்லாமல் ஏன் சிங்காரச் சென்னையில் வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்று எண்ணினேன்.
எதற்கும் ஒரு காரணம் இல்லாதிருக்காது
அல்லவா? அப்படி காரணத்தை தேடியபோதுதான் அதற்குண்டான விடையும் கிடைத்தது.
அமிர்தலால் விதல்தாஸ் தக்கர் என்பவர் குஜராத்தில் பிறந்தவர். இவர் சமூகத்தின் மீது மிகவும் பெரிதாக அக்கறை கொண்டவர். மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராட்டங்கள் பலவற்றை நடத்தியவர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார். குஜராத்தில் பாபா என்றால் அப்பா என்று பொருள். மெட்ராஸ் மக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். பாசத்தை பொலிவதற்கு. பாசத்தின் வெளிப்பாட்டை தந்தை என்றும் அண்ணா என்றும் அம்மா என்றும் சொல்லி பாசமழை பொழிந்ததை எல்லாம் நாம் நன்கறிவோம்.
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை மட்டும்தான் தமிழ்நாட்டு மக்கள் அவ்வாறு அழைக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஆட்டோ ஓட்டுபவர்களையும் அண்ணா என்றும் தம்பி என்றும் அழைக்கும் வழக்குண்டு. திருநெல்வேலி மக்கள் வயதில் பெரியவர்கள் யாராயிருந்தாலும் அண்ணாச்சி என்று அழைப்பார்கள்.
அவரவர் நெஞ்சில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற பாடலில் வருவதுபோல அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் வாழ்ந்தவர்களும் அமிர்தலால் விதல்தாஸ் தக்கரை தக்கர் பாபா என்று பாசமாக அழைத்தனர். இதில் ஒன்றும் புதுமையில்லை. காந்தி தாத்தா நேருமாமா என்றெல்லாம் அழைப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும்.
தேடித்தேடி ஓலைச் சுவடிகளை எல்லாம் கண்டெடுத்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றி தமிழ் இலக்கியங்களைப் பத்திரப்படுத்திய திரு. உ. வே. சாமிநாத அய்யரை தமிழ் தாத்தா என்றுதானே அழைக்கிறோம்.
தமிழரது பாசமென்பது உதட்டளவில் அல்ல. அது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுவும் அப்படித்தான். எல்லோரையும் கேளிராகப் பார்த்ததினால் எல்லோரையும் பாசத்தோடு அழைக்கும் மனப்பக்குவம் ஏற்றப்பட்டது.
தக்கர் சிறந்த அறிவாளி. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டாலும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதிலைச் சொல்லும் திறமை பெற்றவர். நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேட்பதற்கு “நீ என்ன பெரியா அப்பா தக்கரா?” என்று கேட்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.
பின்னர் இந்ந வார்த்தைகளையே கேலியாக சொல்வதற்காக பயன்படுத்தினர். காலப் போக்கில் அப்பா தக்கர் என்பது மருவி அப்பாடக்கர் ஆனது.
அடுத்ததாக, சென்னையில் சிலகாலம் வாழ்ந்த அவர் வேதங்களில் கரைகண்டவர். ஆன்மீக சம்பந்தமான எந்தக் கேள்வியை கேட்டாலும் தெளிவான பதிலைக் கொடுப்பாராம். ஒருவன் அவன் சார்ந்த துறையில் அனைத்தையும் தெளிவாகத் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று அழைக்கப்பட்டு பின்னர் உச்சரிப்பு அப்பாடக்கர் ஆனதாம்.
தக்கர் பாபா பெயரில் தக்கர் பாபா வித்யாலயா என்ற பள்ளி சென்னையிலுள்ள தியாகராயநகரில் செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசு 1969ம் ஆண்டில் தபால்தலை வெளியிட்டு கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பாசம் காட்டுவதிலோ நன்றி மறவாதிருப்பதுலோ மதம், மொழி, இனமென்று எதையும் பார்ப்பதில்லை. இவ்வாறு ஏதாவது ஒரு காரணத்தால் ஊர் மற்றும் தனிநபர்களின் பெயர் காரணப்பெயராகவும் நிலைத்திருக்கிறது. இந்த அடிப்படைத் தன்மையை உணர்ந்தால் எந்த சொல்லையும் அச்சொல்லை பயன்படுத்தும் அப்பகுதி மக்களையும் பற்றிய புரிதல் ஏற்படும்.
-சங்கர சுப்பிரமணியன்.