இலக்கியச்சோலை

தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் தோழர் சி.மகேந்திரன்! … முதல் சந்திப்பு …. முருகபூபதி.

இளம் அரசியல் தலைவராக ‘ இந்தியா டுடே ‘ இதழ் தேர்வுசெய்த சமூகப்போராளி ! !

முருகபூபதி.

அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும் இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில் நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ?

காரணம் இன்றி காரியம் இல்லை.

இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன.

1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

அவ்வேளையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.

இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு, ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம். அதனால், 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது. எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் பிறந்தபோது, குறிப்பிட்ட நல்லெண்ணத்தை பெரிதும் விரும்பிய தமிழ்நாடு இடதுசாரித் தோழர் சி. மகேந்திரன் – பங்கஜம் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தக்குழந்தைக்கு சங்கமித்திரை எனப்பெயர் சூட்டினார்கள்.

தோழர் சி. மகேந்திரன், தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் ஓரத்த நாட்டில் கீழவன்னிப்பட்டு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

தனது பள்ளிப்பருவத்திலேயே இடதுசாரி சிந்தனைகளினால் ஈர்க்கப்பட்டு, அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தனது 14 வயதில் இணைந்தவர்.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் இவருக்கு அந்த மாணவப் பராயத்திலேயே தோன்றிவிட்டது.

கல்லூரியில் படிக்கின்றபோது நடந்த பல பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். பத்தாம் வகுப்பில் ஆனந்த விகடன் நடத்திய கட்டுரைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.

கல்லூரி காலங்களிலேயே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கும் சென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக இந்தியா டுடே இதழ் இவரை தேர்வு செய்துள்ளது. சிகாகோ நகரத்தில் நடைபெற்ற 10 ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்த அறிஞர்களில் இவரும் ஒருவர். குறிப்பிட்ட ஆய்வு கட்டுரை விரிவாக்கப்பட்டு, அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்த நூலை, மானுடத்தின் அறிவுக்கோட்பாட்டை தனக்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் மகேந்திரன்.

1984 ஆம் ஆண்டு நான் முதல் தடவையாக தமிழகம் சென்றிருந்தபோது, சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்காரியாலயம் பாலன் இல்லத்தில் சில இடதுசாரித் தலைவர்களை சந்தித்திருக்கின்றேன்.

தோழர்கள் நல்லக்கண்ணு, தா. பாண்டியன், மாணிக்கம், மற்றும் படைப்பிலக்கியவாதி கே.சி. எஸ். அருணாசலம் ஆகியோரைப் பார்த்தேன்.

தோழர்கள் பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், தா. பாண்டியன் ஆகியோர் இலங்கை வந்திருந்த காலப்பகுதியிலும் சந்தித்திருக்கின்றேன்.

நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், இலங்கைக்கு இரண்டு தடவைகள் வந்து திரும்பியவர்தான் தோழர் சி. மகேந்திரன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானதன் பின்னர் 1987 இலும் 1996 இலும் வந்திருக்கிறார். அவ்வாறு இவர் வந்தபோது எங்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

இறுதியாக இவர் இலங்கை வந்தசமயத்தில் எழுத்தாளர்கள் பொன்னீலன், வல்லிக்கண்ணன் ஆகியோரும் இவருடன் வருகை தந்தனர் என்பதை அறிந்துகொண்டேன்.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோழர் மகேந்திரனும் அங்கம் வகித்த தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியவிழா சென்னை சோவியத் கலாசார நிலையத்தில் நடந்தபோது மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் சென்றிருந்தேன். அவ்வேளையில் முதல் முதலில் நான் சந்தித்த தோழர் சி. மகேந்திரனுடன் இன்றளவும் எனக்கு தொடர்பு நீடிக்கிறது.

2008 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்குச்சென்றபோது தோழர் மகேந்திரன்தான் என்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயகாந்தனை பார்ப்பதற்கும் அழைத்துச் சென்றார்.

இந்த சந்திப்பில்தான் எழுத்தாளரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபனையும் சந்தித்தேன்.

இவ்வாறு எனது எழுத்துலக வாழ்வில் இணைந்திருக்கும் தோழர் மகேந்திரனை மீண்டும் நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பன் மாநகரில் இம்மாதம் சந்தித்தேன்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இவரது அருமை மகள் சங்கமித்திரையிடம் இவர் வந்திருக்கும் இவ்வேளையில் எமக்கிடையிலான சந்திப்பு மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் Focus Thamil வானொலிக்காக அதன் இயக்குநர் நண்பர் சத்தியபாலனின் ஏற்பாட்டில் சுவடுகள் நிகழ்ச்சியில் தோழர் மகேந்திரனுடன் சுமார் இரண்டு மணி நேரம் நேர்காணல் – கலந்துரையாடலை நடத்த முடிந்தது.

தோழர் மகேந்திரன் , தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர். தாமரை இதழை 1950 களில் தோழர் ஜீவானந்தம் ஆரம்பித்தார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில், தோழர் ஜீவானந்தம் தலைமறைவாக இலங்கை வந்திருந்தார். அவரைத்தொடர்ந்து அவ்வப்போது இலங்கை வந்த தமிழ்நாடு இடதுசாரி முற்போக்காளர்களில் தோழர் சி. மகேந்திரனும் ஒருவர்.

அதனால், இவருக்கும் இலங்கை அரசியலும், குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த நெருக்கடிகளும் போராட்டங்களும் நன்கு தெரியும். இம்மக்களுக்காக ஆயிரக்கணக்கானோரை அழைத்துக்கொண்டு டெல்லி வரை சென்று குரல் கொடுத்தவர். அத்துடன் இந்திய விவசாயிகளின் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர்.

இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரீனாவில் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அறப்போராட்டத்தையும் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.

தனது இலங்கைப் பயண அனுபவங்களையும் எழுதி வந்திருப்பவர். ஈழத்து எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், டொமினிக்ஜீவா, செ. யோகநாதன், பிரேம்ஜி ஞானசுந்தரன், மாத்தளை வடிவேலன், காவலூர் ஜெகநாதன், மாத்தளை சோமு, சோமகாந்தன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா உட்பட பலருடன் இலக்கிய நட்புறவைப் பேணியவர்தான் தோழர் மகேந்திரன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இந்தியப்படைகள் இலங்கையில் வடக்கு – கிழக்கில் பிரவேசித்தன.

அதன் சாதக – பாதக நிலைமைகள் இன்றும் பேசுபொருள்தான். தோழர் மகேந்திரன் இலங்கை வந்து உண்மையான நிலைமையை கண்டறிந்து எழுதினார்.

இவர் எழுதிய தீக்குள் விரலை வைத்தேன் நூலுக்கு முன்னுரை எழுதியவர் செ. கணேசலிங்கன். இந்நூல் பற்றி, குமுதம் தீராநதியில் எழுதியிருப்பவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

“ தமிழின் தொன்மையை ஆராய்ந்த பலரும், அதன் காதல், வீரம், ஈகை எனப் பண்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டாடினார்களேயன்றி அறிவுத் தோற்றவியலின் படிநிலைகளை ஆராயவில்லை. தோழர் மகேந்திரன், தமிழர்களின் அறிவு குறித்த புரிதல் மற்றும் சிந்தனைகள், கருத்துருவாக்கங்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிவுருவாக்கம் குறித்து இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். “ என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன், தோழர் மகேந்திரனின் “ அறிவு பற்றிய தமிழரின் அறிவு “ நூலைப்பற்றி விதந்து குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் முதன்மைப்படுத்தி தமிழின் அறிவுத்தோற்றத்தை இந்த நூலில் தொகுத்திருக்கும் தோழர் மகேந்திரனுக்கு எஸ் . ஆர் . எம். பல்கலைக் கழகத்தின் பரிதிமாற் கலைஞர் உயர் ஆய்வு விருதும் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதும் கிடைத்துள்ளது.

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம், தமிழக நதிகளின் மரண சாசனம், தீக்குள் விரலை வைத்தேன், வீழ்வேன் என்று நினைத்தாயோ? , தமிழகத்தை பாலைவனமாக்காதே ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.

தமிழ்நாடு பிறந்தது என்ற நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். அரசியல், இலக்கியம், சமுதாய இயல் முதலான துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இனி வரும் நம் தலைமுறைக்கு என்ற இவர் எழுதிய பாடல் இருபது இலட்சத்திற்கும் அதிகமான முகநூல் வாட்சப் வாசகர்களிடம் சென்றுள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் நாட்டுப்புறக் கலைஞர்கள் டாக்டர் கே.ஏ. குணசேகரன், இன்றைய திரையிசைக் கலைஞர் சின்னப்பொன்னு ஆகியோருடன் இணைந்து இவரது தயாரிப்பில் தன்னானேப் பாடல்கள் முதலான பத்துக்கும் மேற்பட்ட இசை இறுவட்டுகள் வெளிவந்துள்ளன.

நிலமீட்பு என்ற ஆவணப்படத்தை இயக்குநர் அருண்மொழியும் இவரும் இணைந்து உருவாக்கினார்கள்.

2011 இல் வெளியான வாகை சூட வா, 2023 இல் வெளியான ராமர் பாலம் ஆகிய திரைப்படங்களின் தொடக்கத்தில் எழுத்தோட்டத்தில்

இவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் இவை.

தமிழ்த் திரைப்படத்துறை கலைஞர்களினதும் தோழராக விளங்கும் மகேந்திரனின் புதல்வர் புகழ் மகேந்திரனும் ஒரு சினிமா கலைஞராவார். புகழ் கதாநாயகனாக நடித்துள்ள முந்திரிக்காடு திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.

இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

தோழர் மகேந்திரனின் அரசியல் வாழ்க்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1971 ஆண்டில் இணைந்தார். அரசு பணிக்கு இவர் விண்ணபித்ததே இல்லை. தஞ்சை மாவட்டம் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்து கொண்டார் . அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழகத் தலைவர், செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழக தலைவர், செயலாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.

2015 ஆண்டில் சென்னை ஆர். கே. நகரில் நடந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தயங்கிய நேரத்தில் இவர் போட்டியிட்டார்.

இவர் எழுதிய வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் தொடர் ஜூனியர் விகடனில் 25 வாரங்கள் வெளியானது.

நதிகள் பற்றிய இந்தத் தொடர் நூலாக வெளிவந்து, இதுவரையில் மூன்று பதிப்புகளையும் கண்டுள்ளது.

பள்ளிப்பருவத்தில் பொதுவுடைமை விதைகளை தனது உள்ளத்தில் ஊன்றிய தனது தமிழாசிரியர்கள் பாரதி பித்தன், மற்றும் தங்கபாலன் ஆகியோருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகள் பற்றியும் காணாமலாக்கப்பட்டுவிட்ட நதிகள் பற்றியும் மகேந்திரன் மிக விரிவாக துல்லியமான தகவல்களுடன் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.

இதனைப்படித்து பிரமித்துப்போனேன்.

“ பசுமையின் ஊடே ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்லும்போது, நதிகளின் வரலாறு வானத்தைப் போன்ற விரிவையும் , கடலைப்போன்ற ஆழத்தையும் நமக்குக் காட்டுகிறது. தத்துவம் , வரலாறு, அரசியல், இலக்கியம், கட்டட தொழில் நுட்பம் என்று இவை கட்டித்தந்தவை ஒவ்வொன்றும் ஒரு தனி உலகம். நதியின் இவை அனைத்தின் அழிவு என்பதை மனிதன் ஏன் புரிந்துகொள்வதில்லை. “ எனத் தனது ஆதங்கத்தையும் இந்த நூலில் மகேந்திரன் சொல்கிறார்.

நதிகளின் வரலாற்றைப்பேசும் அருமையான இந்த நூலை, ஏன் இந்திய சாகித்திய அக்கடமி கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது.

இலங்கை வாழ் தமிழ் மக்களை ஆழமாக நேசிக்கும் தோழர் மகேந்திரன் அவர்கள், சமகாலத்தில் பேசுபொருளாகவிருக்கும் மலையகம் 200 தொடர்பாகவும் ஒரு நூலை தற்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.

கட்சி அரசியல், மனித உரிமைப் போராட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கள ஆய்வுகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி, தீவிர வாசிப்பிலும் எழுத்துப்பணியிலும் ஈடுபடுபவர்தான் கடமையே கண்ணாக வாழ்ந்துவரும் தோழர் மகேந்திரன்.

இவர் தொடர்ந்தும் அயராமல் இயங்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

—0— letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.