கதைகள்

“நடுகைக்காரி” …. 72 …. ஏலையா க.முருகதாசன்.

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டுட்டு சைக்கிளில் வந்த தனபாலசிங்கம் ஞானத்தின் படலையடியில் நின்று,சைக்கிள் மணியை அடிக்க ஞானமும் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைச்சிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு வர தனபாலசிங்கத்தடன் சேர்ந்து கொலிஜ்ஜை நோக்கிப் போய்க கொண்டிருந்தார்கள்.

மத்தியானச் சாப்பபாட்டுக்கு போவதற்கு முந்தி கதைச்சு விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறான் தனபாலசிங்கம்.

டேய் ஞானம் என்ன இருந்தாலும் நீ செய்யிறது பிழையாகத்தான் எனக்குத் தெரியுது.நீலலோஜினிக்கு, பிறப் எஸ்.எஸ்.சியிலை படிக்கிற போது அவளின் தலையில் ரோஜாப்பூவைச் செருகினனி.நீ விளையாட்டாகத்தான் செரகினனி என்றாலும் அவள் அதை எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதை அவள் எதிர்க்கவில்லை,அவள் நினைச்சிருந்தால் நீ பூ செருகின அன்றைக்;கே எங்களுக்குப் படிப்பிக்கிற எந்த ரீச்சரிட்டையோ இல்லாட்டி மாஸ்ரர்மாரிட்டையோ சொல்லியிருக்கலாம், அனால் அவள் சொல்லவில்லை,அதற்கு என்ன காரணமென்றால் அவள் நீ பூ வைச்சுவிடுறதை விரும்பியிருக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் நீ அவளுக்கு பூ வைச்சுவிடவில்லை கிழமையில இரண்டொரு நாள்தான் அது நடந்தது.மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் பெரிய ஐயாவின்ரை இரண்டு மகன்மாரான பாலசுப்பிரமணியமும் குமாரசுவாமியும் எங்களோடை படிக்கேக்கை அவை நீ கேட்டனி என்று ரோஜாப்பூவைத் தங்கடை தோட்டத்திலையிருந்து கொண்டுவந்துதர அதை நீ நீலலோஜினியின்ரை தலையிலை வைச்சுவிட அவள் அமைதியாகவிருந்தாலும் நீ வைப்பதை விரும்பியதால்தான் தன்ரை தாய் வைச்சுவிட்டதாக அவள் மாஸ்ரருக்குப் பொய் சொன்னாள் ——- என்று ஞானத்திற்கு தனபாலசிங்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த ஞானம்,நான் பூ வைச்சுவிட்டது எந்த ஒரு உள்நோக்கத்துடனும் அல்ல சும்மாதான் வைச்சனான் என்று சொல்ல,அப்படியென்றால் அவளுக்கு மட்டும் எதற்காக வைச்சனி எங்களோடை படிச்ச மற்றப் பெட்:டையளுக்குமல்லோ நீ வைச்சிருக்க வேணும்—இது எப்படியென்றால் என்ரை அப்பர் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்—மற்றவையின்ரை மனநிலையை உணராமல் செய்பவர்களுக்கு செல்லப்பிள்ளை விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிற வேலை என்று,அப்பிடித்தான் உன்னுடைய விளையாட்டுத்தனமான வேலை இப்:ப புஸ்பகலாவையும் நீலலோஜினியையும் சண்டை பிடிக்க வைச்சிருக்கு —- என்று தனபாலசிங்கம் சொல்ல —- நான் சொல்றதைக் கொஞ்சம் கேள்,பிறப் எஸ்.எஸ் சியிலை நான் அவளின்ரை தலையிலை ரோஜாப்பூவை வைச்சது அவளைக் காதலிப்பதற்காகவல்ல சும்மாதான்—–என்ற ஞானத்தின் பதிலால் தனபாலசிங்கம் வேகமாக என்ன மடத்தனமாகக் கதைக்கிறாய்,அவள் நீ தன்னை விரும்பியபடியால் இப்படி நடக்கிறாய் என்று பேசாமலிருந்திருக்கிறாள் என்று அவன் சொல்ல, அதை அவள் எனக்குச்

சொல்லியிருக்க வேண்டு கிட்டத்தட்ட இரண்டு வருசமாக அதைப்பற்றி எதுவுமே சொல்லாமலிருந்துவிட்டு புஸ்பகலா என்னை விரும்புகிறாள் என்று தெரிஞ்சவுடன் கொதியிலை இப்படிக் கதைக்கிறாள் —–என்றவனுக்கு,ஞானம் நீ என்னதான் சலாப்பிக் கதைச்சாலும் நீ நடந்து கொள்ளுறது எல்லாமே பிழைதான் —சரி நான் இனி இதைப்பற்றிக் கதைக்கமாட்டன்..நீயாச்சு உன்ரை காதலாச்சு—-அதுதானே காலமை செல்லத்துரை மாஸ்ரர்: உங்கடை பிரச்சினையை விளங்கியபடியால்தான் பாமா விஜயம் படத்தைச் சொல்லித் தூண்டில்போட்டவர்—-என்று சொன்ன தனபாலசிங்கம் எதுவுமே பேசாமல் கொலிஜ்ஜை நோக்கிப் போக ஞானமும் எந்தச் சலனமும் இல்லாமல் தனபாலசிங்கத்தின் சைக்கிளோடு சமாந்தரமாகப் போய்க் கொண்டிருந்தான்.

வகுப்புக்குள் நுழையும் வரையும் இரண்டு பேருமே கதைக்கவில்லை.தனபாலசிங்கமும் ஞானமும் ஒருத்தரோடு ஒருத்தர் கதைக்காமல் வகுப்புக்குள் நுழைந்ததைக் கண்ட மற்றைய மாணவ மாணவிகள் அவர்களை அதிசயமாகப் பார்த்தார்கள்.

வழமையாக ஏதாவது பகிடி சொல்லி சிரிச்சுக் கொண்டு வருபவர்கள் அமைதியாக வருவதைக் கண்டதும் அவர்களுக்கே வியப்பாக இருந்தது.

தனபாலசிங்கம் ஞானத்தின் நண்பனாதலால் ஞானத்திற்குச் சார்பாகத்தான் இருப்பான் என நீலலோஜினி நினைச்சுக் கொண்டிருந்தாள்.

ஞானமும் தனபாலசிங்கமும் ஒருவரையொருவர் பார்க்காமல் அருகருகாக உட்கார்ந்ததைக் கண்ட புஸ்பகலா ஞானத்தைப் பார்த்து கண்களால் தனபாலசிங்கத்தைக் காட்டி உங்களிரண்டு பேருக்குமிடையில் என்ன நடந்தது எனக் கேட்க,ஒன்றுமில்லை என்று தலையாட்டுகிறான் ஞானம்.

தனபாலசிங்கம் ஞானத்திடம் கேட்ட கேள்விகளுக்கு அவன் வேகமாகப் பதில் சொன்னாலும் அவன் தன்னுடன் கதைக்காமல் முகத்தை ஒருமாதிரி வைச்சுக் கொண்டிருப்பதை ஞானத்தால் பொறுக்க முடியவில்லை.

தனபாலசிங்கம் கேட்ட கேள்விகள் ஞானத்தை உறுத்தத் தொடங்கின.நீலலோஜினியின் தலையில் தான் விளையாட்டாக ரோஜாப்பூ வைச்சது தவறோ என எண்ணத் தொடங்கினான்.

நடந்து முடிந்த விடயங்களில் தவறு ஏற்பட்டு தவறை உணர்ந்தாலும் அதனைத் திருத்தவே முடியாது.நடந்தது நடந்ததுதான்,என்னை அவள் விரும்பியதற்கு தான் செய்த விளையாட்டுத்தனம் காரணமாகிவிட்டதே என்று கவலைப்பட்டான்.

ஏப்பொழுதுமே அவளின் சொண்டு றோஸ் கலரில்தான் இருக்கும் அழகியான நீலலோஜினி மீது அவனுக்கு ஏனோ விருப்பம் வரவில்லை.புஸ்பகலா மீதுகூட அவனுக்கு ஆரம்பத்தில் விருப்பம் வரவில்லை.மெல்ல மெல்லத்தான் அவள் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது.

ஞானம் என்னைக் காதலிக்க வைப்பேன் என்ற புஸ்பகலாவின் உறுதியான எண்ணம் அவள்மீது ஞானத்திற்கு ஈர்ப்பை எற்படுத்தியது.

தான் விட்ட தவறுக்காக இனி நீலலோஜினியைச் சமாதானப்படுத்த முடியாது.நடந்தது நடந்ததுதான் என முடிவெடுத்த ஞானம்,அன்று காலமை புஸ்பகலாவுடன் நீலலோஜினி சண்டை பிச்சதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பின்னேரம் வகுப்பு முடிஞ்சு போகும் போது நீலலோஜினியிடம் அம்பனைச் சந்தியிலிருக்கும் அம்பனை ரியூற்;டொரியல் வாசலில வைச்சுக் கேட்க வேணும் எனத் தீர்மானிச்சுக் கொண்டான்.

பின்னேர வகுப்பு முடிஞ்சு வீட்டுக்கப் போவதற்காக கொலிஜ் கேற்றை ஞானமும் தனபாலசிங்கமும் தாண்டும் போது,ஞானம் தனபாலசிங்கத்திடம் எனக்கு அம்பனைச் சந்தி ரியூற்டோரியலில் இண்டைக்கு எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்க வேணும் நீ போ என்று பொய் சொல்கிறான்.

ஞானம் அம்பனை ரியூற்டோரியலில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது உண்மைதான் அது திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் மட்டுமே என்பது தனபாலசிங்கத்துக்கும் தெரியும்.

ஆனால் வெள்ளிக்கிழமைகளில் ஞானம் அம்பனை ரியூற்டோரியலில் படிப்பதில்லை,எதற்காக படிப்பிக்கப் போறன் என்று பொய் சொல்கிறான் என்பதை அவனிடம் விசாரிக்க விரும்பாத தனபாலசிங்கம் சரி என்று தலையாட்டிவிட்டு, சைக்கிளை எழும்பி நின்று விழக்கி ஞானத்தைக் கடந்து போகிறான்.

தனபாலசிங்கம் போனதும் கல்லூரிக்கு மேற்காக பண்டத்தரிப்பு வீதியில் ஐம்பது மீற்றர் தூரத்திலிருக்கும் மதவடியில் இடது காலைத் தரையில் ஊன்றியபடியும்,வலது காலை மதகில் வைச்சபடியும் அடிக்கொருதரம் பின்னுக்குத் திரும்பிப் பார்த்தபடி யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல நிற்கிறான் ஞானம்.

நீலலோஜினி அவனைப் பார்த்தபடியே கடக்கையில்,நீலா கொஞ்சம் நில்லுங்கோ என்று ஞானம் சொல்ல திரும்பி ஒரடி பின்னுக்கு வந்த நீலலோஜினி என்ன என்பது போல ஞானத்தைப் பார்க்கிறாள்.

உங்களோடை நான் கொஞ்சம் கதைக்க வேணும் அம்பனைச் சந்தி ரியூற்டோரியலில் காத்திருப்பன் வாருங்கள் எனச் சொல்லிவிட்டு சைக்கிளில் அவளைக் கடந்து போகிறான்.

நீலலோஜினி வருகைக்காக கிழக்குத் திசையைப் பார்த்படியே ரியூற்டோரிகக் கேற்றடியில் காத்து நிற்கிறான் ஞானம்.

அவள் அவனருகில் வந்ததும்,;றோட்டடியில் நின்று கதைச்சால்; வாறவை போகிறவை எதாவது நினைப்பினம்,உள்ளை வாருங்கள் என்று அவளைக் கூட்டிக் கொண்டு ரியூற்டோரிச் சிறிய விறாந்தையில் போய் நிற்கிறான்.

நீலலோஜினியும் எதுவுமே பேசாமல் ஞானத்தின் பின்னால் போனவள் விறாந்தையில் ஏறி நிற்க மாணவ மாணவிகள் அவர்களிருவரையும் பார்த்து ஏதோ இரகசியமாகக் கதைச்சுக் கொண்டு போகிறார்கள்.

எக்ஸ் லவ்வருடன் சல்லாபமோ என ஒரு மாணவியின் குரல்: மட்டும் சத்தமாகக் கேட்கிறது.அவள் சொன்னதைக் கேட்ட மற்றைய மாணவிகள் பலமாகச் சிரிக்கிறார்கள்.

எக்ஸ் லவ்வர் என்று சொன்னது ஞானத்திற்கும் நீலலோஜினிக்கும் கேட்கவே அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

அதைக் கேட்ட நீலலோஜினி மெதுவாக முகம் மலருகிறாள்.என்னோடு என்ன கதைக்க வேண்டும் என்று வரச் சொன்னனீங்கள் என்று நீல லோஜினி கேட்க காலமை வகுப்பிலை எதற்காக புஸ்பகலாவோடை சண்டை போட்டனீங்கள் என்று ஞானம் கேட்க,வேணுமெண்டுதான் சண்டை போட்டனான் என்று சொல்கிறாள் நீலலோஜினி.

(தொடரும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.