இலக்கியச்சோலை

எம். வாமதேவன் எழுதிய ‘ மலையக சமூக சமகாலப் பிரச்சினைகள் – ஒரு நோக்கு ‘ வீரகத்தி தனபாலசிங்கம் ( முன்னாள் பிரதம ஆசிரியர், கொழும்பு தினக்குரல் )

நூல் அறிமுகம்

எம். வாமதேவன் எழுதிய ‘ மலையக சமூக சமகாலப் பிரச்சினைகள் – ஒரு நோக்கு ‘

வீரகத்தி தனபாலசிங்கம்

( முன்னாள் பிரதம ஆசிரியர், கொழும்பு தினக்குரல் )

பள்ளிக்காலம் தொடங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்கலைக்கழக கல்வி, அரசாங்க சேவையில் பல உயர் பதவிகள் என்று கடும் உழைப்புடனான நீண்ட பயணத்துக்குப் பிறகு ஓய்வில் இருக்கின்ற இன்றைய நாட்கள் வரை பல தசாப்தங்களாக எழுத்துத்துறையில் முற்றிலும் சமூகப் பிரக்ஞையுடன் ஈடுபட்டு வருபவர் அன்பு நண்பர் எம். வாமதேவன் அவர்கள்.

அவர் ஏற்கெனவே பல நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராக இருந்தவன் என்ற வகையில் அவர் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிய பெருவாரியான கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தனது சமூகத்தின் நலன்களில் அவர் கொண்டிருக்கும் தளராத பற்றுதியை அதன் மூலம் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது மாத்திரமல்ல, அரசாங்க சேவையில் மிகவும் உயர்ந்த அந்தஸ்து பதவிகளில் இருந்த ஏனைய சமூகத்தைச் சேர்த்தவர்களில் எத்தனை பேர் இவரைப் போன்று தங்கள் சமூகத்தின் மேம்பாட்டில் கருத்தூன்றிய அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருப்பார்கள் ? என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது.

‘ மலையக சமூக சமகாலப் பிரச்சினைகள் ; ஒரு நோக்கு ‘ என்ற இந்த நூலுக்கான முகவுரைரை எழுதும்போது சில வருடங்களுக்கு

முன்னர் வெளியான ‘ மலையகம் ; சமத்துவ அபிவிருத்தியை நோக்கி ‘ என்ற நூலுக்கான முன்னுரையில் வாமதேவனின் எழுத்துக்களுக்கு இருக்கும் தகுதி குறித்து எமது பெருமதிப்புக்குரிய இலக்கியமேதை காலஞ்சென்ற தெளிவத்தை

ஜோசப் அவர்கள் தெரிவித்த கருத்தை நினைவு படுத்தாமல் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை.

” எழுதவேண்டும் என்பதற்காகவோ நூல்களை வெளிக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசையிலோ எழுதுபவர் அல்ல வாமதேவன். சமூக அந்தஸ்து மிக்க உயர் அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மேலதிக கௌரவத்துக்காக தங்களுக்கும் எழுதத் தெரியும் என்று எதையாவது எழுதி நூல் வெளியிட்டு உறவினர்கள், சக உத்தியோகத்தர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி பரவசமடைவதையும் நாம் கண்டிருக்கிறோம். நூல்களை வெளியிடவேண்டும் என்பதற்காக கட்டுரைகளை வலிந்து எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான விதிவிலக்காக அமைபவையே வாமதேவனின் எழுத்துக்கள்” என்று தெளிவத்தையார் குறிப்பிட்டிருந்தார்.

மலையக தமிழர்களின் வரலாற்றையும் இடர்மிகு வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளையும் தெளிவாக விளக்கும் வாமதேவனின் எழுத்துக்கள் அந்த சமூகத்தை குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களை அவல வாழ்வில் இருந்து விடுவித்து விமோசனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு தன்னாலியன்ற பங்களிப்பைச் செய்வதை தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக் கொண்டிருப்பதை பிரகாசமாக வெளிக் காட்டிவந்திருக்கின்றன.

பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இவை அவர் கடந்த வருடத்திலும் இந்த

வருடத்திலும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் எழுதியவையாகும்.

இந்திய தமிழர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளினால் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இரு நூறு வருடங்கள் (1823 — 2023) நிறைவடைந்த நிலையில் ‘மலையகம் 200 ‘ தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இன்றைய காலப்பகுதியில் வாமதேவன் இந்த நூலை வெளியிடுவது அதற்கு பிரத்தியேகமான ஒரு வரலாற்று பின்புல முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

இதில் உள்ள கட்டுரைகள் மூலமாக மலையகத் தமிழர்களின் வரலாறு மற்றும் அவர்கள் காலங்காலமாக அனுபவித்த அவலங்கள் தொடக்கம் இன்று தனித்துவ அடையாளத்தைக் கொண்ட ஒரு இனத்துவ சமூகமாக அங்கீகாரத்தைக் கோருகின்ற நிலையில்

அவர்களின் எதிர்பார்ப்புகள் வரை பல்வேறு விவகாரங்களில் தனது நோக்கை வாமதேவன் தெளிவாக முன்வைத்திருக்கிறார்.

திட்டமிடல் துறையில் வாமதேவனுக்கு இருக்கும் வளமான அனுபவத்தின் தாக்கத்தை மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அவர் முன்வைத்துவரும் முன்மொழிவுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பயனுறுதியுடைய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதில் மாத்திரமல்ல, கடந்த காலத்தில் இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்துகொண்ட மனிதாபிமானமற்ற உடன்படிக்கைகளின் விளைவாக தாயகம் திரும்பிய மலையக மக்கள் அங்கு முகங்கொடுக்கும் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவராக வாமதேவனை காண்கிறோம்.

இரு நூற்றாண்டு காலப்பகுதியில் ஏறக்குறைய 180 ஆண்டுகள் அல்லது 90 சதவீதமான காலப்பகுதியில் தமது அரசியல் இருப்பு நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே மலையக தமிழர் சமூகம் போராடி வந்திருக்கிறது என்றும் அதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திச் செயன்முறைகளின் பலன்களை அவர்களால் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறும் வாமதேவன், அதிகாரப் பரவலாக்கலில் இந்த சமூகத்தின் அரசியல் அடையாளம் அங்கீகரிக்கப்படுவதும் பொருளாதார ரீதியாக தோட்ட உற்பத்தி முறையில் இருந்து விடுபடுவதும் அவற்றின் ஊடாக அனைத்து உரிமைகளையும் முழுமையாக அனுபவிப்பதுமே ஏனைய சமூகங்களோடு சமத்துவ நிலையை எட்டுவதற்கான வழியாகும் என்ற தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.

மத்திய மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத்தொடர்ச்சியற்ற சமூக சபையை அவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் அலகாக மலையக தமிழ்க்கட்சிகள் இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் முன்வைத்த ஆவணங்களில் அடையாளம் காட்டியிருந்தன.

அந்த சமூக சபை யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால் மலையக மக்கள் அரசியல் ரீதியாக வலுப்படுத்தப் படுவதோடு தேசிய நீரோட்டத்தில் இணையும் செயற் போக்கையும் துரிதப்படுத்தமுடியும் என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

மலையக தமிழ் சமூகத்தை தனியான ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களை இந்திய தமிழர்கள் என்று அழைப்பதை விடுத்து மலையகத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றைய இளந்தலைமுறையினர் மத்தியில் வலுவடைந்து வருகிறது.

 

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அதிகாரப்பரவலாக்கச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படும் போது மலையகத் தமிழர்களும் அதன் மூலம் தங்களது இனத்துவ அடையாளத்தை பிரதிபலிக்கக்கூடியதாக அதிகாரப்பரவலாக்கல் அலகொன்றுக்கு உரித்துடையவர்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் மலையக மக்களுக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள கன்ரோன் முறை போன்று அதிகாரப்பரவலாக்கல் அலகொன்றை வழங்கலாம் என்று 85 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் சிவில் சேவை அதிகாரியாக பணியாற்றிய ஆங்கிலேயர் ஒருவர் முன்வைத்த யோசனையை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அம்பாந்தோட்டையில் பல வருடங்களாக உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய லெனார்ட் வூல்வ் என்ற அந்த அதிகாரி 1938 ஆம் ஆண்டு அன்றைய இங்கிலாந்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த மகஜர் ஒன்றில் சுவிஸ் பாணியில் கரையோர சிங்கள மாகாணம், கண்டிய சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்று குறைந்தது நான்கு கன்ரோன்களை உருவாக்கமுடியும் என்றும் தேயிலை பெருந்தோட்டங்களில் பெரும்பான்மையானவர்களாக விளங்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் கூட உருவாக்க முடியும் என்று யோசனை முன்வைத்தார்.

நாம் அறிந்தவரையில் தேயிலை பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக அவர்களுக்கென்று தனியான கன்ரோனை சிபாரிசு செய்த ஒரே நபர் லெனார்ட் வூல்வாகத்தான் இருக்கமுடியும்.

அதனால் மலையக மக்கள் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கென்று தனியான அதிகாரப்பரவலாக்கல் அலகொன்றை உருவாக்கலாம் என்றும் இன்று நேற்று அல்ல கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அதுவும் ஒரு வெள்ளைக்காரர் மனதில் சிந்தனை கிளம்பியது என்றால் அவர்கள் இலங்கையில் தனித்துவமான சமூகத்தினர் என்பது எப்போதோ அடையாளம் காணப்பட்ட ஒன்று.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதுவும் இனநெருக்கடி காரணமாக மூண்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் தனித்துவ அடையாளத்துக்கும் அரசியல் அந்தஸ்துக்குமான மலையக மக்களின் கோரிக்கையை முன்னெடுப்பதில் நிதானமும் விவேகமும் கொண்ட அணுகுமுறை அவசியம். அவர்களது அபிலாசைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறுவதற்கு ஏனைய சமூகங்கள் மத்தியில் உள்ள நியாய சிந்தைகொண்ட அரசியல் சக்திகளினதும் சிவில் சமூகத்தினதும் உறுதியான ஆதரவு தேவை.

தனது நூலில் வாமதேவன் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் மலையக தமிழ் சமூகத்தின் எதிர்கால அரசியல் பாதை குறித்து பயனுறுதியுடைய விவாதத்துக்கு வழிவகுக்கவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

அவர் தொடர்ந்தும் மலையக தமிழர்களின் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவார். அவரது ஆக்கங்களை வெளியிட்டு மலையக சமூகத்தின் விமோசனத்தை நோக்கிய பயணத்தில் தமிழ் பத்திரிகைகள் அவற்றின் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் எனது வேண்டுகோளாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.