கதைகள்

“சிரசுக்காவு” …. சிறுகதை – 71 …. அண்டனூர் சுரா.

தா – தை, தா – தை, தா – தை, தா

தித்தா தை தை

தித்தா தை தை

தா

அவள் தான் கற்றிருந்த பரதத்தைப் பொதுஅவையில் அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தாள். அவளது அரங்கேற்றத்தில் மேலவை, கீழவை இரு அவைகளிலும் புரையோடிக்கிடந்த தூசிப்படைகள் பறந்துகொண்டிருந்தன.

தக்கத்தா, தா, தாதீ, தகதண, தகஜொணு, தாகத, தாதி

ததிமி தகிட தக, தக ததிங்கிணதோம்

“பரதம் ஆட வேண்டிய இடத்தில் ருத்ர தாண்டவம் ஏன் வருகிறது?” கேள்வி ஒருவரிடமிருந்து வந்தது. அவரது கேள்விக்கு அவள் தன் பரதத்தால் பதில் சொன்னாள். பரதம் என்பது பரத முனிவர் கற்றுத்தந்தது. அவரது பரதம் சூத்திரமிக்கது. அச்சூத்திரங்களை அறுத்துக் காலில் மிதித்துச் சிவனால் திருத்தி எழுதப்பட்டதுதான் ருத்ரம்.

தக தக தா

தா, தா – தா.

பாவம், ராகம், தாளத்தை உடைத்து நொறுக்கிக் காலிட்டு மிதித்து ருத்ரத்தை அரங்கேற்றிய சிவனின் தாண்டவத்தைப் போலதான் அவள் ஆடிக்கொண்டிருந்தாள். இதையே அவள் கொண்டாட்டத்துடன் ஆடினால் அது ஆனந்த தாண்டவம். எதையோ அழிக்கும் பொருட்டு ஆடியதால் அது ருத்ரத் தாண்டவமாக இருந்தது.

பரதத்தைக் குரு வணக்கத்துடன்தான் தொடங்க வேண்டும். குரு வணக்கம் கை முத்திரையால் ஆனது. ஆனால் அவள் அதைக் கால்களால் செய்திருந்தாள். அதேநேரம் பரதத்தின் சுதி, நளினம் மாறாமல் பார்த்துகொண்டாள்.

தா, தரித தணதா, தணத ஜொணு தா தா – தா

தக தக தா

ஒரு நடுவர் கேட்டார். “அரச்சலூர் இசைக் கல்வெட்டு பரதம் குறித்து என்ன சொல்கிறது…?”

அவளது பாடத்திட்டத்தில் அக்கேள்வி இருந்திருக்கவில்லை. ஆனாலும் அவள் பதில் சொல்லும்பொருட்டுப் பரதத்தை ருத்ரத்திலிருந்து நாட்டியத்திற்கு மாற்றினாள். அவளது நாட்டியம் அரச்சலூர் முதல் கல்வெட்டின் படி அரங்கேறியது.

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

பரத நடனத்திற்கென்று ஓர் ஆடை இருக்கிறது. அணிகலன் இருக்கிறது. சிகை அலங்காரங்கள் இருக்கின்றன. இத்தனையும் வாங்க அவளிடம் ஏது பணம்? அவள் கற்றிருந்த பரதத்தை அரங்கேற்ற அவள் உடுத்தியிருந்த உடையே போதுமென இருந்தது. பரத ஆடை விரிந்தால் விரியும். குவிந்தால் குவியும். ஆனால் அவள் உடுத்தியிருந்த உடை சுருக்கமுடைய சீருடையாக இருந்தது. ஆடையில் உழைப்பாளி நெற்றியில் வழியும் அழுக்குகள் கந்தகத் துணுக்குகளாகப் படிந்துபோயிருந்தன. கிழிசல்கள். கிழிசல்களைத் தைத்த ஒட்டுகள்.

அவள் தன் நாட்டியத்தை இசைக்கல்வெட்டு குறிப்பு நாட்டியத்திலிருந்து கம்போதி ராகம் – ஆதி தாளத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தாள்.

திந்த தத்த தத்த

திந்தத்த தீந்தத்த தீந்த

தீந்தரிகிடதக

தக தக தக

தக ததிங்கிணதோம் தா

தடை, பீலி, பில்லணை அணிந்திருக்க வேண்டிய அவளது விரல்களில் கிழிந்த செருப்புகள் கடித்திருந்த வடுக்கள் அணிகளாக இருந்தன. நாகவந்து அணிய வேண்டிய கைகளில் நெளிந்து சாயம் போயிருந்த வளையல் கிடந்தது. ஒட்டியாணத்திற்குப் பதில் பசியை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டியல், கண்டசரம் நகைகளை ஒற்றை அணிகலனாக அணிந்திருந்தாள். அந்த ஒன்று மருத்துவர்களின் கழுத்தில் கிடக்கும் இதயத் துடிப்பு அளவிடும் கருவியாக இருந்தது.

தீந்தரிகிட தக தக

ததிங்கிணதோம்

தா தா தா தீ தாதாதீ தாதாதீ

மூக்கில் அரசு முத்திரையுடன் கூடிய காகித நகையாக இருந்தது. ஒரு பக்கக் காதினில் அவளது இடைநிலை மதிப்பெண் சான்றைப் பந்து போலச் சுருட்டி தொங்கவிட்டிருந்தாள். இன்னொரு பக்கம் மேனிலைச் சான்றிதழ். தலையில் இறுகக் கட்டிய முக்காடு. நீண்டுத் தொங்கிய பின்னலிடப்பட்ட ஜடைக்குள் பூக்களாகக் கத்தரித்த சாதி சான்றிதழுடன் கூடிய பள்ளி மாற்றுச் சான்றிதழ்.

தத் தெய்யா தெய்யா

தெய்யா தா தா தாதீ

தா தை தனாங்கு தக

தக தக ததிங்கிணதோம்

நெற்றியிலிருந்து பிறக்காத ஒருத்தியின் நடனம் பொதுஅவையில் அரங்கேறுவது இதுதான் முதல் முறை. அகில இந்திய வானொலி நிலையத்திற்குள் பறையிசை இன்னும் அரங்கேறாத வேளையில் பொதுஅவையில் அரங்கேறும் அவளது நாட்டியம் நடுவர்களின் கண்களில் அனல் பறக்க வைத்தது.

தக தக தக

தகீத தக தக

பொது அவையில் இருந்த பலரும் பரதக்கலை கற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் பரதத்தில் இருந்தாக வேண்டிய எட்டு உருப்படிகளும் அவளது நடனத்தில் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அலாரிப்பு, பதம், சப்தம், விடுத்தம், ஜதீசுவரம், வர்ணம், தில்லாணா, மங்களம். அத்தனையும் அவளது அரங்கேற்றத்தில் இருந்தன. அத்தனையும் இருக்க வேண்டிய விதத்தில் இடத்தில் இருக்கிறதா… எனக் கவனித்தார்கள்.

தனாங்குதக ததிங்கிணதோம்

ததிங்கிணதோம்

தனாங்கு தக ததிங்கிணதோம்

தா தா தா

தை தை தா

நடுவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். பரதத்தை இவள் எப்படிக் கற்றுக்கொண்டாள். ஏகலைவன் வில் வித்தையை மறைந்து, ஒளிந்து கற்றுக்கொண்டதைப்போல இவள் கற்றுக்கொண்டாளோ? கற்றதை இங்கே அரங்கேற்றம் செய்கிறாளே, பாதகி! ஏகலைவனிடம் கட்டை விரலைக் கேட்டோம். நந்தனிடம் அவனையே கேட்டோம். கண்ணப்பனிடம் கண்களைக் கேட்டோம். இவளிடம் என்ன கேட்கலாம், யோசிக்கத் தொடங்கினார்கள்.

தரிகிடத்தோம் தித்தோம்

தோம் – தோம்

நடுவர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். ஒரு பிரிவினர் அரங்கேற்றுபவளின் அங்கத்தைக் கவனித்தனர். அவர்களின் கவனம் தலையில் தொடங்கி கைகளில் ஊர்ந்து மார்புகளில் குவிந்தது. பிறகு இரு பக்கங்களைக் கடந்து இடை வழியே பாதங்களைத் தொட்டது.

தக தக தக தரிட தரிட தீம்

மற்றொரு பிரிவினர் பிரத்தியாங்கத்தைக் கவனித்தார்கள். புஜங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள்…

உபாங்கம் மூத்த நடுவர்களால் கவனிக்கப்பட்டது. கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல்,

நாக்கு, உதடு, முகவாய்…..

சாத்விக அபிநயத்தைக் கவனித்து அதைக் குறை கண்டுபிடிக்கும் அளவிற்கு நடுவர்கள் போதிய அறிவு இல்லாமல் இருந்தார்கள். ஆனாலும் குறை கண்டுபிடித்தாக வேண்டுமே என்கிற வேட்கையுடன் அதைக் கவனித்தார்கள். பரத நளினத்தில் அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை…இத்தனையும் அதற்குரிய இடத்தில் முகம் நிறைய வழிந்து கண்களில் ஏக்கமாகக் குவிந்தன.

அவையிலிருந்து ஒரு குரல் வந்தது. “நீண்ட நேரம்தொட்டு ஒரே இலட்சணத்தில் ஆடிக்கொண்டிருக்கிறாய். நிருத்தம் மட்டும்தான் உனக்குத் தெரிந்திருக்கிறது. அப்படித்தானே?”

அவள், குரல் வந்தப் பக்கமாகத் திரும்பினாள். ஒற்றைக் காலைத் தூக்கி நேராக நீட்டி ஒரு சுற்றுச் சுற்றினாள். அச்சுற்றில் அவளது பரதம் நிருத்தத்திலிருந்து நிருத்தியத்திற்கு மாறியது.

தனாங்குதக ததிங்கிணதோம்

நந்தன் வீணை வாசித்துக்கொண்டிருந்தான். கண்ணப்பன் வயலின். ஏகலைவன் மிருதங்கம். ரோகித் வெமூலா நாதசுரம். முத்துக்கிருஷ்ணன் தவில்,

தளாங்கு தக தளாங்கு தக தக

அவையினர் அவளைச் சோதிக்கத் தொடங்கினார்கள். அவள் தொடக்கத்தில் அரச்சலூர் இசைக்கல்வெட்டில் முதல் குறிப்பைக் குறிப்பெடுத்து ஆடியிருந்தாள். அது நினைவிற்கு வந்ததும் அதிலிருந்து அவர்கள் கேள்வியைக் கேட்கத் தொடங்கினார்கள். “அரச்சலூர் இரண்டாவது கல்வெட்டு என்ன சொல்கிறது?”

தை த தை த தை

த தை தை த

தை த தை த தை

த தை (த) தை த

அவளது நாட்டியத்திலிருந்து ஒரு குறையேனும் கண்டெடுத்தால் மட்டுமே பரத நாட்டிய போட்டியிலிருந்து அவளை வெளியேற்ற முடியும் என்கிற முடிவிற்கு நடுவர்கள் வந்தார்கள்.

“நீ ஒரு பெண். மென்மை நடனம் புரிய வேண்டியவள். நீ உன் நடனத்தை சிவன் மனைவி பார்வதி போலதான் அரங்கேற்ற வேண்டும். ஆனால் சிவனைப் போலல்லவா அரங்கேற்றுகிறாய். உன் நடனத்தில் இருக்க வேண்டியது லாஸ்யா. ஆனால் நீ ஆடுவது ருத்ரமாக அல்லவா இருக்கிறது.”

ததிங்கிடத்தோம் ததிங்கிடத்தோம் தைய தைய தை

ருத்ரம் என்பதும் பரதம்தான். பரத முனிவர் சூத்திரத்தை உடைத்துப் புதிய சூத்திரம் படைத்த பரதம்தான் ருத்ரம் என்பதை நீங்கள் அறியாதிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது, என்பதை தன் நடனத்தின் வழியே சொன்னாள். நடுவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. இருக்கையில் அமைதியாக வீற்றிருந்தார்கள். அவள் தன் நடனத்தை இயல்பு நிலைக்குத் திருப்பி பைரவி ராகத்தில் ரூபகம் தாளத்தில் ஆடத் தொடங்கினாள்.

த த த – தா தா – திதிதி

ததீத – ததித – தா

ததத – ததித – ததா – ததிதா

ததித – திததி- தா

நடுவர்கள் அவளது உடல் அசைவுகளைக் கவனித்தார்கள். கை முத்திரைகளை எண்ணத் தொடங்கினார்கள். முத்திரைகள் நூற்று இருபது அடவுகள் இருக்க வேண்டும். இருக்குமா? ஆம், இருந்தன.

தகித தா தா

ஒரு பெண் நடுவர் கேள்வி எழுப்பினாள். “பரதத்தில் எத்தனை பாணிகள் இருக்கின்றன?”

“பந்த நல்லூர் பாணி”

தீந்தரிகிட தக தக

தீந்தரிகிட தக தக

“வழுவூர் பாணி”

ததிங்கிணதோம்

ததிங்கிணதோம்

“தஞ்சாவூர் பாணி”

தா தா தா தீ தா தா தீ தாதாதீ

தா தா தா தீ தா தா தீ தாதாதீ

“மைசூர் பாணி”

ததிங்கிணதோம் தோம்

ததிங்கிணதோம் தோம்

“காஞ்சிபுரம் பாணி”

ததிங்கிணதோம் தோம் தோம்

ததிங்கிணதோம் தோம் தோம்

நடுவர்களின் கண்களை அவள் தன் கால்களிடத்தில் கட்டிப்போட்டாள். ஒரு நடுவர் சொன்னார். ”ஒற்றை விரலில் நின்று ஆடு பார்க்கலாம்.”

தா தா

“ஒற்றைக்காலில்?”

தா தா தை தா

“கால் உன் தலையைத் தொட வேண்டும்.”

ததிங்கிணதோம்

“சிவன் – பார்வதி போட்டியில் சிவனிடம் பார்வதி தோற்றுப்போனாளே, அதை உன்னால் ஆடிக் காட்ட முடியுமா?”

தக தக

“நீ பெண் என்பதை மறந்துவிடாதே”

தை தை தக

“ஒற்றைக் காலைத் தூக்கி காதின் அணிகலனை அவிழ்க்க வேண்டும்”.

தகி தகித தகி தகித தா

அவள் தன் கால்களைத் தலைக்கு மேலாக உயர்த்தினாள். அவள் உடுத்தியிருப்பது கிழிந்த ஆடை என்பது அவளுக்கு அப்போதைக்குதான் நினைவிற்கு வந்தது. ஆனாலும் பார்வதி போல சேலையை உடுத்தாமல் பள்ளிச்சீருடை உடுத்தியிருந்தது சௌகரியமாக இருந்தது. தன் இடது கால் கட்டை விரலைத் தரையில் ஆழ்ந்து ஊன்றினாள். ஒரு சுற்றுச் சுற்றினாள். அவளது உடம்பு பம்பரம் போலச் சுற்றியது. வலது கால் வலது காதை நோக்கிச் சென்றது. வலது காதின் அணிகலன் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பந்து போலச் சுருட்டி தொங்கலாகத் தொங்கவிடப்பட்ட அணியாக இருந்தது. அதை மின்னல் வேகத்தில் காலால் அவிழ்த்து அவையின் மையத்தில் வைத்தாள்.

ததிங்கிணத்தோம் தத்தோம் தத்தோம்

தோம் தோம் தோம்

நடுவர்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். ஏகலைவனைப்போல, நந்தனைப்போல, கண்ணப்பனைப்போல இவளை வீழ்த்த முடியவில்லையே என்கிற ஏமாற்றமும் விரக்தியும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. அடுத்து அவர்களின் யோசிப்பு அவளது போக்கில் சென்றது. அவளை இன்னும் சற்றுநேரம் ஆடவிட்டு மயக்கமுறச் செய்துவிடலாம் என்று யோசித்தார்கள். அவளது நடனத்தில் நாட்டிய அவை கிடுகிடுத்துகொண்டிருந்தது. மேசை நாற்காலிகள் ஆட்டம் கண்டன. அவள் முன்னே விடவும் படு வேகமாக ஆடிக்கொண்டிருந்தாள்.

தா தை தளாங்கு தக திகி தக ததிங்கிணதோம்

தா…தை…தா….தை…தளாங்கு தக ததிங்கிணதோம்.

கடைசி கடைசியாக ஒன்றை யோசித்தார்கள். அவர்களுக்குள் கிசுகிசுத்தார்கள். அதைப் பரீட்சையாக நடத்த இறங்கினார்கள். “காதின் அணியைக் கழட்டி எங்கள் முன் வைத்ததைப் போல உன் தலையைக் கொய்து எங்கள் முன் வைக்க வேண்டும்.”

தா தா தா தீ தகதண தகதண தகஜொணு தாகத தாதி

ததிமி தகிட தக தக ததிங்கிணதோம்

அவள் வலது கால் கட்டை விரலைத் தரையில் ஊன்றினாள். மறுகாலைத் தூக்கினாள். அவளது கழுத்தில் கிடந்த அணி இதயத் துடிப்பு அளவிடும் கருவியை ஒரு காலால் எடுத்தாள். விரல்களில்

கோர்த்தாள். கழுத்தில் இறுகச் சுற்றி ஒரு குதி குதித்தாள். கழுத்து அணிகலன் மேற்கூரை கொக்கியில் மாட்டிக்கொண்டது. தன் சிரத்தை தன் காலால் ஒரு வெட்டு வெட்டினாள். சிரம் தனியே துண்டித்து அவையின் மைய மண்டபத்தில் விழுந்தது.

நடுவர்கள் கை குலுக்கிக்கொண்டு தலையை ஒரு கணம் எட்டிப்பார்த்தார்கள்.

தலை துண்டித்துக் கிடக்க அவளது உடல் மட்டும் தனியே ஆடிக்கொண்டிருந்தது.

தா – தை

எனக்கானதை

தை தை

என்னிடமிருந்து பறித்ததை

தை தை

தா ! .

Loading

One Comment

  1. 🌹 வணக்கம்
    தங்களின் சிரசுக்காவு சிறுகதை படித்தேன் . மிக அற்புதம். சிறந்த இசை நாட்டியப் புலமைக்கான தேடலும் உழைப்பும் அதில் உள்ளன.
    1.அடவுகளில் பேதம் அபேதம் பற்றி மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் .
    2. அடானா, தர்பாரி கானடா, கம்பீர நாட்டை போன்ற ராகங்களில் வரும் தில்லானா, ஜதிகளைப் பயன்படுத்தி இருந்தால் இன்னும் காத்திரமாக இருந்திருக்கும்.
    3. அருகிலிருக்கும் குருமியான்மலை இசைக் கல்வெட்டை விட்டு விட்டுக் கதை சொல்லி இருப்பது எப்படி?
    4. அகில இந்திய வானொலிக்குள் வரை இசை எப்போது வரும் ? அருமை. சிறப்பு.
    5. “தாள சமுத்திர”த்தில் 🌹ஆதிப் பறைத் தாளம் நீக்கிய செய்தியைச் சிறுகதையில் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.
    6. நாட்டியத்தில்எந்தெந்த ஊர் பாணியோ சொல்லியிருக்கிறீர்கள் . விராலிமலை பாணியை விட்டுவிட்டு.
    7. இதயத்துடிப்பு அளக்கும் கருவி இந்தியாவின் ஒட்டுமொத்த இதயத்துடிப்பை அளக்கும் கருவி அருமையான உத்தியை கையாண்டு உள்ளீர்கள்
    8. பல சுப்புடுக்கள் வரலாம் குறை காண, நான்❤️ தங்களை உசுப்பி விடவே வருகிறேன்👌 வருவேன்👍 படைப்புகள் இன்னும் வரவேண்டும் என்ற வாழ்த்துதலோடு

    🌹 சிவகவி காளிதாசன் புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.