இலக்கியச்சோலை

சிட்னியில்…. செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் “சங்க இலக்கியக் காட்சிகள்” …. “இன்னும் கன்னியாக” …. என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன!

செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 2024 ஜூன் 09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.30 மணிக்கு, அவுஸ்திரேலியாவில், சிட்னியில், தூங்காபீ என்னும் இடத்தில் அமைந்திருக்கும், செயின்ட். அந்தனி தேவாலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக மிகவும் கச்சிதமாகவும், ஒழுங்காகவும் நடைபெற்ற இந்த விழாவில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் சங்க இலக்கியக் காட்சிகள், இன்னும் கன்னியாக என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

மங்கள விழக்கேற்றலைத் தொடர்ந்து, தமிழ் வாழ்த்துப்பாடலும், அவுஸ்திரேலிய தேசீய கீதமும் பாடப்பட்டு விழா ஆரம்பமானது.

பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் தலைமையில், கவிஞரும், ஒலிபரப்பாளருமான சௌந்தரி கணேசன், எழுத்தாளரும், ஒலிபரப்பாளருமான கானா பிரபா, மாணவர்களான செல்வன் அகலவன் ஸ்ரீஸ்கந்தராசா, செல்வி வேதவர்ணா ராஜா ஆகியோர் நூல்களுக்கான அறிமுக உரைகளை நிகழ்த்தினர்.

பிரபல கவிஞர் நவாலியூர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் ஆசி.கந்தராசா ஆசிரியர் திருநந்தகுமார் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

நூற்றுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்தது.

விழாவுக்கு வருகை தந்திருந்தவர்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இருக்கைகளில் அமர்ந்தவாறு நிகழ்ச்சிகளை அக்கறையோடு இரசித்துக்கொண்டிருந்தமை, இந்த நிகழ்ச்சியின் சிறப்பையும், நேர்த்தியையும் எடுத்துக்காட்டியது.

திரு மாத்தளை சோமு அவர்கள் தமது தலைமை உரையில், நல்ல நூல்களை வாசிப்பதால் அறிவு மேலோங்குவது மட்டுமன்றி, மன அழுத்தங்கள் இல்லாதொழியும் என்றும் கூறினார். மேலும்,

கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக மெல்பேணில் வசிக்கும் சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் சிட்னியில் நடத்திய இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கியவர், நூலாய்வுரை செய்தவர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள் வரை பங்கேற்றிருந்த அனைவருமே சிட்னியில் வாழ்பவர்களாவார்கள். இது சு.ஸ்ரீகந்தராசா அவர்களது தமிழ்ப்பணி மாநிலங்களைக் கடந்து அவுஸ்திரேலியா முழுவதும் பரவியிருப்பதைக் காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

மாணவர்களிடமும், இளம் தலைமுறையினரிடமும் தமிழ் மொழியில் பரிச்சியத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளில் மிக நீண்டகாலமாக அயராது ஈடுபட்டுவரும் திரு சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், இந்த நூல் வெளியீட்டு விழாவில் தனது நூல்களை அறிமுகம் செய்வதற்கு இரண்டு இளைஞர்களையும் ஒழுங்கு செய்திருந்தமை பாராட்டுதற்குரிய செயற்பாடாக இருந்தது. இங்கு பதினோராம் வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, செல்வி வேதவர்ணா ராஜா “இன்னும் கன்னியாக…” என்ற சிறுகதைத்தொகுப்பில் இருந்து சில கதைகளைத் தெரிவுசெய்து அவற்றைப்பற்றி மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் உரையாற்றினார். “சங்க இலக்கியக் காட்சிகள்” என்ற நூலைப்பற்றி உரையாற்றியவர் சட்டத்துறை மாணவன், அகலவன் ஸ்ரீஸ்கந்தராசா. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பல்வேறு கோணங்களில் இந்த நூலைப்பற்றிய தனது பார்வையை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். இவர்கள் இருவரதும் உரைகளின்போதும் பலமுறை

சபையோரிடமிருந்து எழுந்த கரகோசம், அவர்களின் திறமைக்கான அங்கீகாரமான இருந்தது. இருவரும் சிறப்பாகப் பேசினார்கள். இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றவர்களாக விளங்கும் சௌந்தரி கணேசன் அவர்களும், கானா பிரபா அவர்களும் தத்தமக்குரிய தனித்துவமான சிறப்புடன் மிகவும் தெளிவாக உரையாற்றி, நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். சௌந்தரி கணேசன் தனது உரையில், பொதுவாகப் பலரும் படிப்பதற்குத் தயங்குகின்ற சங்க இலக்கியங்களை, எல்லோரையும் படிப்பதற்குத் தூண்டும் வகையில் எளிய நடையில், சுவையான காட்சிகளாக வடிவமைத்து, நூலாசிரியர் கொடுத்திருப்பதாகவும், இந்த நூலைப் படிப்பவர்களைச் சங்க இலக்கியங்கள் முழுவதையும் படிக்க முயல்வார்கள் என்றும் கூறினார்.

கானா பிரபா பேசுகையில், “இன்னும் கன்னியாக…” என்னும் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், பெண்களுக்கு நேரும் பல்வேறு சவால்களைப்பற்றி, குறிப்பாகத் திருமணம் முடித்த பெண்களைப் பற்றிப் பேசும் பெண்ணியம் சார்ந்த, கதைகளாக அமைந்திருக்கின்றன என்றும் புலம்பெயர்ந்த மண்ணுக்குத் தாயகத்தில் இருந்து அனுப்பப்படும் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், புலம்பெயர் மண்ணில் இருந்து அழைக்கும் ஆண் வர்க்கம் நிகழ்த்திய மோசமான செயற்பாடுகள் என்பவற்றைத் தோலுரித்துக் காட்டும் உண்மை நிகழ்வுகளின் பதிவுகளாக இருப்பதாகவும் கூறினார். சில கதைகளின் கருப்பொருட்களை எடுத்துரைத்து அழகானதோர் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

நூலாசிரியர் தமது உரையில் சங்க இலக்கியங்களைப் படித்தபோது தான் அடைந்த இன்பத்தை, மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும், பண்டைத்தமிழ் மக்களின் சிறப்புகளையும், அழகான வாழ்க்கை முறைகளையும் அனவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே தான் இந்த சங்க இலக்கியக் காட்சிகளை எழுதியதாகவும், சமூகத்தில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் தனது மனதில் பாதிப்பை ஏற்படுத்தியபோது எழுதப்பட்டவையே “இன்னும் கன்னியாக” என்ற நூலில் இடம்பெறும் கதைகள் என்றும் குறிப்பிட்டார். கலந்துகொண்ட எல்லோருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். பின்னர், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு நூல் வெளியீட்டு விழா சிறப்புடன் நிறைவு பெற்றது.

சிட்னியிலிருந்து கண்ணன் அரசரெத்தினம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.