“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 33 …. செங்கதிரோன்.
அன்றிரவு நன்றாகத் தூங்கிய கோகுலன் அடுத்த நாள் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டான். முதல் நாள் மாலை காரைதீவுக் கண்ணகியம்மன் கோயில் முற்றத்தில் நடந்த காரைதீவு ஊர்க் கூட்டத்தை மனம் மீண்டும் அசை போட்டது.
அக்கூட்டத்தில் டாக்டர் பரராசசிங்கம் கூறியவற்றை எண்ணிப்பார்த்தான். பரராசசிங்கத்தின் பூர்வீகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டுர்க் கிராமம். முன்னாள் பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இராசமாணிக்கத்தின் ஊரும் மண்டூர்தான். இருவரும் உறவினர்களும்கூட. அப்படியிருந்தும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயத்தின்போது இராசமாணிக்கம் செய்த அரசியல் தவறை அவர் தொட்டுக் காட்டியிருந்தார். அவர் கூறியதில் உண்மையிருந்தது என்பதையும் கோகுலன் உணரத் தொடங்கினான்.
1959க்கு முன்னர் இருந்த பட்டிருப்புத் தொகுதி அதாவது 1947 இலிருந்து 1959 வரை அமுலிருந்த பட்டிருப்பு தொகுதியின் தெற்கு எல்லை பெரிய நீலாவணை – மருதமுனை -பாண்டிருப்புக் கிராமங்களை உள்ளடக்கியதாக கல்முனைத் தாளவெட்டுவான் வீதி வரை வியாபித்திருந்தது. துறைநீலாவணைக் கிராமமும் இப்பட்டிருப்புத் தொகுதிக்குள்தான் அடங்கியிருந்தது.
ஆனால் 1959 இல் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயம் நடந்தவேளை இராசமாணிக்கம் தனது எதிர்கால தேர்தல் வெற்றியை உறுதி செய்துகொள்வதற்காகச் சீர்பாதகாரர் பெரும்பான்மையாகவுள்ள துறைநீலாவணைக் கிராமத்தைப் புதிய பட்டிருப்புத் தொகுதிக்குள் வைத்துக் கொண்டு முக்குவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பெரிய நீலாவணைக் கிராமத்தையும் சேர்த்து மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைப் புதிய கல்முனைத் தொகுதிக்குள் எம்.எஸ்.காரியப்பருக்குச் சாதகமாகத் தள்ளிவிடச் சம்மதித்தார். சாதி அடிப்படையில் சீர்பாதக்காரர் இராசமாணிக்கத்திற்கு வாக்களிப்பார்கள்; முக்குவ சாதியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற எடுகோளே இதற்குக் காரணம்.
பட்டிருப்புத் தொகுதியின் வாக்காளர்கள் எப்போதுமே தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கும் பழக்கத்தை- வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
எம்.எஸ்.காரியப்பரோ தனக்கு வசதியாக முன்பு பட்டிருப்புத் தொகுதிக்குளிருந்த மருதமுனை முஸ்லீம் கிராமத்தைப் புதிய கல்முனைத் தொகுதிக்குள் உள்வாங்கப்பட்டதை விரும்பினார். அதேவேளை பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்புக் கிராமங்களினால் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய தமிழ் வாக்குகளை ஈடுசெய்ய அவர் முன்பு கல்முனைத் தொகுதிக்குள்ளிருந்த காரைதீவு தமிழ்க் கிராமத்தைப் புதிய நிந்தவூர்த் தொகுதிக்குள் தனக்கும் எம்.முஸ்தபாவுக்கும் சாதமாகத் தள்ளிவிட்டார். முஸ்தபாவோ காரைதீவிலிருந்து அக்கரைப்பற்றுவரை அதாவது அக்கரைப்பற்று முஸ்லிம் மற்றும் தமிழ்ப் பகுதிகளையும் உள்ளடக்கிச் சின்னமுகத்துவாரம் தாம்போதிவரை புதிய நிந்தவூர்த் தொகுதியை வைத்துக் கொண்டு அக்கரைப்பற்றுக்குத் தெற்கே சின்னமுகத்துவாரத்லிருந்து தொடங்கி பொத்துவில்லையும் தாண்டிப் பாணமைவரை உள்ள பகுதியையும் மற்றும் இறக்காமம், சம்மாந்துறைப் (முன்பு இவை கல்முனைத் தொகுதியின் கீழ் இருந்தன) பகுதிகளையும் அன்னமலை, நாவிதன்வெளித் தமிழ்க் கிராமங்களையும் (முன்பு இவை பட்டிருப்புத் தொகுதியின் கீழ் இருந்தன) புதிய பொத்துவில் தொகுதிக்குள்ளே எதிர்காலத்தில் பொத்துவில் தொகுதியிலும் முஸ்லிம் ஒருவரே தெரிவாகும் வகையில் முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதியாகும் வண்ணம் பார்த்துக்கொண்ட, அதேவேளை புதிய நிந்தவூர் தொகுதியையும் முஸ்லிம் பெரும்பான்மையாக்கித் தனது எதிர்காலத் தேர்தல் வெற்றியையும் உறுதி செய்து கொண்டார்.
மொத்தத்தில் புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகள் மூன்றிலும் முஸ்லிம்களே பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகும் வகையில்தான் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வருமாறு இத்தொகுதிகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. அதற்கு இராசமாணிக்கமும் உடந்தையாக இருந்தார் என்பதுதான் பரராசசிங்கத்தின் குற்றச்சாட்டாகும். உண்மையில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அதாவது பழைய கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்தவம் கிடைக்கச் செய்யும் வகையில் புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் ஏதாவதொன்று தமிழ் உறுப்பினரொருவரும் வரக்கூடிய வகையில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கி அல்லது இப்பிரதேசத்திலிருந்து தமிழர் ஒருவரும் தெரிவு செய்யக் கூடியவாறு தமிழ்ப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியொன்றிற்கான எல்லைகள் வகுக்கப்பெற்றிருக்க வேண்டும். தமிழரசுக்கட்சி இதில் கரிசனை கொள்ளவில்லையென்ற பரராசசிங்கத்தின் குற்றச்சாட்டு உண்மையே.
அதிகாலையில் கண்விழித்துக் கொண்டு கட்டிலில் கிடந்தபடியே இவற்றையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்த கோகுலனுக்கு அன்று மாலை அக்கரைப்பற்றில் நடைபெறவிருக்கும் கனகரட்னத்திற்கு ஆதரவான தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நினைவுக்கு வரவே எழும்பிக் காலைக்கடன்களை முடித்துக் குளித்து வெளிக்கிட்டு காலை உணவையும் தாயாரிடத்தில் முடித்துக் கொண்டு அன்று மதியம் அளவில் அக்கரைப்பற்றுப் பீதாம்பரம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
அக்கரைப்பற்றில் பீதாம்பரத்தின் வீடு கனகரட்னத்தின் ஆதரவாளர்கள் கூடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல்கால அலுவலகம் போன்று எப்போதுமே சனசந்தடியுடன் இயங்கிக் கொண்டிருந்தது.
பீதாம்பரத்தின் வீட்டு முற்றதத்தில் நீள அகலமான செவ்வக வடிவத்தில் கிடுகுப் பந்தலொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. தரையில் குருத்துமணல் கொட்டிப்பரவி வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவே ‘ஸ்டூல்’ ஒன்று போடப்பட்டு அதில் வெற்றிலை வட்டாவொன்று வைக்கப்பட்டிருந்தது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை எல்லாம் வட்டாவை நிரப்பியிருந்தன.
பந்தலின்கீழ்க் கூடியிருந்த சிலர்- கோகுலனுக்கு முன்பே அறிமுகமானவர்கள்தான் – கோகுலனைக் கண்டதும் எழுந்து வந்து முதல் நாள் நடந்த காரைதீவு ஊர்க் கூட்டத்தின் முடிவைப்பற்றி ஆவலுடனும் அக்கறையுடனும் ஆர்வம் பொங்கக் கேட்டறிந்தார்கள்.
காரைதீவு ஊர்க் கூட்டத்தின் முடிவு காட்டுத் தீ போல் பொத்துவில் தொகுதியின் தமிழ்க் கிராமங்களெங்கும் பரவியிருந்ததைக் கோகுலன் புரிந்துகொண்டு புளகாங்கிதமடைந்தான்.
பொத்துவில் தொகுதியில் காரைதீவு தலையும் பொத்துவில் வாலும் போன்றதாகும். நடுவிலுள்ள அக்கரைப்பற்று முள்ளந்தண்டுப் பகுதி போன்றது. அதனால்தான் காரைதீவுக் கிராமத்தின் முடிவு பொத்துவில் தொகுதியின் எல்லாக் கிராமங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தது.
அக்கரைப்பற்றுப் பிரதேசத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக 1959 இலிருந்து 1976 வரை நடந்த 1960 மார்ச், 1960 ஜூலை, 1965, 1970 ஆம் ஆண்டுத் தேர்தல்கள் அனைத்திலும் முஸ்லிம் ஒருவருக்கே வாக்களித்து வந்தனர். அது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. காரணம் அவர்கள் நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிக்குள் அடங்கியிருந்தமையும் தமிழர்கள் எவரும் இத் தேர்தல்களில் போட்டுயிடும் வாய்ப்பும் இல்லாதிருந்தமையுமே. நிந்தவூர்த் தொகுதிகுள் அடங்கியிருந்த காரைதீவு மக்களின் நிலைமையும் அக்கரைப்பற்றுத் தமிழர்களை ஒத்ததாகவே இருந்து வந்தது.
எல்லாத் தேர்தல்களிலும் நிந்தவூர்த் தொகுதியில் அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த ‘ஸ்வீட் மஜித்’ என அழைக்கப்பட்ட எம்.ஐ.எம். அப்துல் மஜீத்திற்கும் நிந்தவூரைச் சேர்ந்த எம்.எம். முஸ்தபாவுக்கும் இடையில்தான் போட்டி நிலவும். அக்கரைப்பற்றுத் தமிழர்களும் காரைதீவு மக்களும் இந்த இரு வேட்பாளர்களில் ஒருவருக்கே தங்கள் வாக்குகளை அளித்துவந்தார்கள்.
‘ஸ்வீட் மஜித்’ என்பவர் சம்மாந்துறை மஜீத்தின் சகோதரியைத் திருமணம் முடித்து சம்மாந்துறை மஜீத்துக்கு மைத்துனன் ஆவார்.1960 மார்ச், 1960 ஜூலை, 1965, 1970 ஆம் ஆண்டு தேர்தல்களில் முறையே ஸ்வீட் மஜீத், மீண்டும் ஸ்வீட் மஜீத், முஸ்தபா, மீண்டும் முஸ்தபாவே வெற்றி யீட்டியிருந்தனர்.
இடையில் ஒரு தேர்தலில் 1960 ஜூலையாக இருக்கலாம். பழைய பொத்துவில் தொகுதியில் சம்மாந்துறை மஜீத் சுயேச்சையாக ‘றேடியோ’ச் சின்னத்திலும் நிந்தவூர்த் தொகுதியில் அவரது மைத்துனன் ஸ்வீட் மஜீத் ‘சேவல்’ச் சின்னத்திலும் சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவருடைய ஆதரவாளர்களும் அவர்கள் இருவரினதும் வெற்றியைக் குறிக்கும் வகையில் தேர்தல் தினத்தின் மறுநாள் காலை நிந்தவூர்த் தொகுதியில் ‘சேவல்’ கூவும் பொத்துவில் தொகுதியில் ‘ரேடியோ’ பாடும் என ஒலிபெருக்கியில் கூவிச் சென்றனர். அப்போது கோகுலன் பொத்துவில் மெதடிஸ்த மிஷன் பாடசாலை மாணவனாக இருந்தான். அப்போது அவனுக்கு வயது பத்து.
இந்தப் பின்னணியில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது புதிய பொத்துவில் தொகுதி முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் தெரிவு செய்யப்படக் கூடியவாறு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டதால், இம்முறை தமது வாக்குகள் தமிழ்ப் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்யப் பயன்படப்போகிறது என்ற எண்ணம் காரைதீவு மக்களிடையேயும் அக்கரைப்பற்றுப் பிரதேசத் தமிழர்களிடையேயும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டிவிட்டிருந்தது மட்டுமல்ல இரண்டு கிராமங்களும் ஒரே தீர்மானத்தை எடுத்து ஒருவரையே ஆதரிக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டையும் வளர்த்திருந்தது. இத்தகைய சூழல் நிலவிய நேரத்தில்தான் கோகுலன் அக்கரைப்பற்றுப் பீதாம்பரம் வீட்டையடைந்திருந்தான்.
பீதாம்பரம் கோகுலனைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்று கையைப்பற்றிக் கூட்டிப்போய் வீட்டின் உள் மண்டபத்தில் விட்டான். அங்கே கனகரட்ணம் – மட்டக்களப்பிலிருந்து வருகை தந்திருந்த இராசதுரை எம்.பி.- சாம்தம்பிமுத்து – அவருடைய மனைவி கலாமாணிக்கம் ஆகியோருடன் சிவஞானசெல்வக்குருக்களும் இருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். கோகுலன் எல்லோருக்கும் தனித் தனியாக முகமன்கூறி அங்கே காலியாகவிருந்த ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான்.
அன்று மாலை அக்கரைப்பற்றில் நடைபெறவிருக்கும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சிவஞானச் செல்வக்குருக்கள்தான் தலைமை தாங்கவிருந்தார். பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகத் தருமலிங்கத்தைப் போடுவதற்கு அவர் முயன்றிருந்தாலும்கூட கட்சி கனகரட்ணத்திற்கு வேட்பாளர் நியமனம் கொடுத்த பின் அவரும் சிந்தாத்துரையைப் போலவே கட்சியின் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டுவிட்டார். அவரும் ஒரு கட்சி விசுவாசியே இப்பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்பிலிருந்து இராசதுரை எம்.பி.யும் சாம்தம்பிமுத்தும் அவருடைய மனைவி கலாமாணிக்கமும் அக்கரைப்பற்றுக்கு வந்திருந்தனர்.
கோகுலன் உள்மண்டபத்தில் பீதாம்பரத்துடன் நுழையும்போது உரையாடிக்கொண்டிருந்தவர்கள் உரையாடலைத் தற்காலிகமாக நிறுத்திக் கோகுலன் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் இராசதுரை தான் விட்ட இடத்திலிருந்து உரையாடத் தொடங்கினார்.
1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதிலிருந்து இதுவரையில் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தான் வெற்றியடைந்தே வருவதாகவும் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டக்களப்பில் கடந்தகாலங்களில் தனக்கு ஒருபோதுமே பிரச்சினையாகவோ சவாலாகவோ இருந்ததில்லையென்றும் இந்த 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்தான் தனக்குப் பிரச்சினையாக உள்ளதென்றும் அதற்குக் காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகத் தன்னையும் தமிழரசுக் கட்சி வேட்பாளராகக் கவிஞர் காசி ஆனந்தனையும் நிறுத்தி ஒரே பாசறையில் வளர்ந்த இருவரையும் மோதவிட்டுள்ளமை தனக்கு மனச்சங்கடத்தையும் தேர்தல் பிரசாரத்தில் பிரச்சனையையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் வெளிப்படையாகச் சொன்னார்.
இராசதுரை இவ்வாறு கூறியதைக் கேட்டதும், ஒரு வாரத்திற்கு முன் மட்டக்களப்பில் கல்லடியிலே நடந்த பொதுக் கூட்டமொன்றில் இராசதுரை பேசும்போது தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அரசியலில் தானும் தம்பி காசி ஆனந்தனும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்குவோம் என்று கூறியதும் அதற்குப் பதிலிறுக்குமாற்போல் அதே இடத்தில் கவிஞர் காசி ஆனந்தனும் கூட்டம் போட்டு இராசதுரை அரசியலிருந்து ஓய்வுபெறுமாறும் அப்படி ஓய்வுபெறும் அவரைத் தான் நன்கு கவனித்துப் பராமரிப்பேன் என்று பேசியதும் நினைவுக்கு வந்தது.
பீதாம்பரம் எல்லோருக்கும் குளிர்பானம் கொணர்ந்து பரிமாறினார். குசினிப் பக்கம் மத்தியானச் சமையல் நடந்து கொண்டிருந்தது. நாட்டுக் கோழி இறைச்சிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூர்த்தி மாஸ்ரர் – கருணாநிதி ஆசிரியர் – கணேஸ் – ஊர்ப்போடியார் என அழைக்கப்பெறும் சம்புநாதப்போடி – ‘வாழையர்’ என அழைக்கப்பெறும் முறிவு வைத்தியர் மயில்வாகனம் – கோகுலனின் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய வகுப்பறை நண்பனான சண்முகநாதன் – சண்முகநாதனின் பக்கத்து வீட்டுச் சிந்தாத்துரை ஆசிரியர் – அக்கரைப்பற்றுக் கந்தவனம் – ஆலையடிவேம்பு வடிவேல் மற்றும் சாமித்தம்பி -கோளாவிலைச் சேர்ந்த கீர்த்தி – பனங்காட்டைச் சேர்ந்த இராமநாதன் என்று பலரும் வந்து சேர்ந்தார்கள். பீதாம்பரம் வீட்டுக்கு வருவோரை வரவேற்பதிலும் அவர்களை விருந்தோம்பி மகிழ்விப்பதிலும் குசினிப் பக்கம் போய் நாலா பக்கமும் ஓடிப்போய் நளபாகத்தைக் கவனிப்பதிலுமாகச் சுழன்று கொண்டிருந்தார்.
அன்றைய கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அறிவித்தலும் வீதிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. பீதாம்பரத்தின் வீட்டு முற்றத்திலும் முற்றம் நிரம்பி வெளி வீதியிலும் இளைஞர் கூட்டம் ஆர்வத்துடன்
கைகளில் உதய சூரியன் கொடிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குக் கனகரட்ணத்தை ஆதரித்து நிற்கும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் அக்கரைபற்றில் களைகட்டியிருந்தது.
கனகரட்ணம் – இராசதுரை – சாம் தம்பிமுத்து – கலாமாணிக்கம் – சிவஞானச்செல்வக்குருக்கள்-கோகுலன் ஆகியோருக்குப் பீதாம்பரம் உள்மண்டபத்தில் கொணர்ந்து மதிய உணவைப் பரிமாறினார். நாற்காலியில் அமர்ந்தவாறே கைகளில் பீங்கானை ஏந்திய வண்ணம் எல்லோரும் பசியாறினர். பிற்பகல் 3.00 மணிபோல் கூட்டத்திற்குச் செல்ல எல்லோரும் ஆயத்தமானார்கள்.
பீதாம்பரம் வீட்டிலிருந்து ஊர்வலம் போன்றே கூட்டம் நடக்கும் இடம்நோக்கி சனத்திரள் நகரத் தொடங்கியது.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் முன்னே கூட்டம் பற்றிய அறிவித்தலைச் சொல்லிச் செல்ல அதன்பின்னே சற்று இடைவெளிவிட்டு முன் வரிசையில் கனகரட்ணம் – இராசதுரை- சாம்தம்பிமுத்து – கலாமாணிக்கம் – சிவஞானச் செல்வகுருக்கள் ஆகியோர் செல்ல அவர்களுக்குப் பின்னால் ஊர்ப்பிரமுகர்கள் அணிவகுக்க அவர்களின் பின்னால் இளைஞர், யுவதிகள் கைகளில் உதயசூரியன் கொடியுடன் உற்சாகமாகத்தொடர ஊர்வலம் பிரமாண்டமாய் ஆகிற்று. கோகுலன் அவனது வயதையொத்த நண்பர்களுடன் ஊர்வலத்தின் கடைசி அணியில் தன்னை இணைத்துக் கொண்டான்.
ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் ஒவ்வொரு வீட்டுக் ‘கேற்’ றடியிலும் ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகள் எனக் குழுமி நின்று தங்கள் ஆதரவை முகத்தில் காட்டிக் கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தில் போய்க்கொண்டிருக்கும்போதே கோகுலனுக்கு அன்று மதியம் பீதாம்பரம் வீட்டில் இராசதுரை மட்டக்களப்புத் தொகுதியில் தான் கவிஞர் காசிஆனந்தன் மூலம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிக் கூறியதை நினைத்துப் பார்த்தான்.
தமிழர் விடுதலைக் கூட்டணி இராசதுரை மற்றும் கவிஞர் காசிஆனந்தன் இருவரையும் வேட்பாளர்களாக மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக நிறுத்தியமை தவறென்றுதான் கோகுலனுக்கும் பட்டது. இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் வேட்பாளர் நியமனத்தைத் தமிழர்விடுதலைக்கூட்டணி வழங்கியிருக்கவேண்டுமென்பதே அவனது நிலைப்பாடாக இருந்தது.
மறுநாள் பொத்துவிலுக்கு வரவிருக்கும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழு உறுப்பினராகவுள்ள டாக்டர் உதுமாலெப்பையிடம் இது பற்றி நேரே கேட்கவேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
ஊர்வலம் கூட்ட மேடையை நெருங்கியதும் மேடை அமைக்கப்பட்டிருந்த காணிக்கு அருகே தள்ளியிருந்த வெறும் வளவுக்குள் கொளுத்திப் போடப்பட்ட பட்டாசு வெடிச் சத்தம் அடங்க ஜந்து நிமிடங்களாவது எடுத்தது. மேடையை நெருங்கும்போது அதற்கென்றே ஆயத்தமாக நின்றிருந்த சிறுமியர் முன்னே வந்து கனகரட்ணம் – இராசதுரை – சாம்தம்பிமுத்து – கலாமாணிக்கம் – சிவஞானச் செல்வக்குருக்கள் ஆகியோருக்குப் பூமாலை அணிவித்தார்கள். அனைவரும் மாலையோடு சென்று கூட்ட மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள். பெருந்திரளாகச் சனம் கூடியிருந்தது. அக்கரைப்பற்று முஸ்லிம் அன்பர்களும் கூட்டத்தில் காணப்பட்டார்கள். இராசதுரையின் பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் வந்திருக்க வேண்டும். இராசதுரையின் கருத்தோடு உடன்படாதவர்களும் அவரது தமிழைக் கேட்க ஆசைப்படுவார்கள். அதனால்தான் அவருக்குச் ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டமும் இருந்தது. மாலை நாலு மணிக்கு ஆரம்பமான கூட்டம் நிறைவுபெற இரவு எட்டு மணியாகிவிட்டது.
கூட்டம் முடிந்து இராசதுரை – சாம்தம்பிமுத்து – கலாமாணிக்கம் ஆகியோர் மட்டக்களப்பு நோக்கி அவர்கள் வந்திருந்த காரில் புறப்பட்டார்கள். வழமைபோல் கனகரட்ணமும் கோகுலனும் காரை இராஜகோபால் ரி.ஏ செலுத்தப் பொத்துவிலுக்குப் புறப்பட்டார்கள்.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில்லுக்குச் செல்லும் வழியில் தம்பட்டை – திருக்கோவில் – கள்ளியன்தீவு – விநாயகபுரம் – காஞ்சிரங்குடா – தாண்டியடி – சங்கமன்கண்டி – கோமாரி – ஊறணி என்று எல்லாக் கிராமங்களிலும் அந்த இரவுவேளையிலும்கூடக் கனகரத்தினத்தின் வெள்ளை நிறக் காரையும் காரின் ‘வொனட்’ டின் நடுவில் பொருத்தியிருந்த உதயசூரியன் கொடியையும் அடையாளம் கண்டவர்கள் வீதியோரங்களிலிருந்து ஆதரவாக ஒலியெழுப்பினார்கள்.
தம்பட்டையைக் கடந்து பெரிய முகத்துவாரத் தாம்போதியைத் தாண்டியதும் தம்பிலிவிலிருந்து திருக்கோயில் நுழைவாயிலை அடையும் அந்தத் தூர இடைவெளியில்தான் எந்த ஆரவாரத்தையும் காண முடியவில்லை. அப்பகுதி தர்மலிங்கத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
தம்பிலுவிலில் ஊரவன் என்ற உணர்வில் பெரும்பாலான குடும்பங்கள் தருமலிங்கத்தையே ஆதரித்து நின்றன. ஆனால், கனகரத்தினத்தை ஆதரிக்கும் சில குடும்பங்களும் அங்கு இல்லாமல் இல்லை. அவர்கள் தருமலிங்கத்தின் ஆட்களுக்குப் பயந்தும் தர்மலிங்கத்தைப் பகிரங்கமாகப் பகைத்துக்கொள்ள விரும்பாமலும் தலையை ஓட்டுக்குள்
உள்ளிழுத்துக் கொண்ட ஆமைகள்போல் அடக்கமாக இருந்தார்கள். அக்குடும்பங்கள் எவை என்று கோகுலனுக்குத் தெரிந்தேயிருந்தது.
பொத்துவிலைச் சென்றடைய இரவு பத்து மணியாகிவிட்டது. கோகுலன் கனகரட்ணத்தின் வாசஸ்தலம்வரை சென்று பின் அங்கிருந்து பொத்துவில் ‘வட்டிவெளி’யில் அமைந்துள்ள தனது இளையக்காவின் வீடு சென்று தங்கினான்.
(தொடரும்…… அங்கம்-34)