உலகம்

அதிக வேலைப்பளுவால் சோர்ந்து போவதாக சிங்கப்பூர் ஊழியர்களில் பாதி பேர் கூறுகின்றனர்!

வேலை நேரத்திற்குப் பிறகும் வேலை தொடர்பாக இயங்கும் மனநிலையுடன் ஊழியர்கள் செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் வேலைக்குப்பின் தாங்கள் அதிகம் சோர்ந்து போய்விடுவதாக சிங்கப்பூர் ஊழியர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் அண்மைய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘டெலஸ் ஹெல்த்’, ஏப்ரல் மாதம் மேற்கொண்ட இந்த இணைய ஆய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த 1,000 ஊழியர்கள் பங்கேற்றனர்.

‘பெர்ன்அவுட்’ எனப்படும் அதிகப்படியான களைப்பும் வெறுப்புணர்வும் கலந்த நிலை, ஊழியர்களிடையே ஏற்படும் அபாயம் அதிகரித்துவருவதாக ஆய்வுவழி தெரியவந்துள்ளது.

இதனால், ஊழியர்களுக்கான மனநல ஆதரவு மேம்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக நிறுவனம் சுட்டியது.

மனதளவில் அல்லது உடலளவில் தங்களது பணியால் சோர்ந்துபோவதாக 47% ஊழியர்கள் தெரிவித்ததை ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.

‘பெர்ன்அவுட்’ ஏற்படுவதற்கான மூன்று முக்கிய அறிகுறிகளில் களைத்துப் போதலும் ஒன்று. அத்துடன் ஒருவரது செயல்திறன் குறைவதையும் அவரிடத்தில் வெறுப்பு மனப்பான்மை ஏற்படுவதையும் காண முடியும் என்றார் ‘டெலஸ் ஹெல்த்’ நிறுவனத்தின் ஆசிய வட்டார இயக்குநர் ஹைதர் அமீர்.

ஊழியர்களில் மூன்றில் இருவரிடம் இந்த மூன்று அறிகுறிகளில் குறைந்தது ஒன்றாவது தென்படுவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

அதிலும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களைக் காட்டிலும் 40 வயதுக்குக் குறைந்த ஊழியர்களிடத்தில் கடுமையான களைப்பு நிலை ஏற்படும் சாத்தியம் மும்மடங்கு என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், 50 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் தங்களின் வேலையைச் செய்வதற்குரிய ஊக்கத்தைப் பெறச் சிரமப்படுவதாக 40 வயதுக்குக் குறைந்த ஊழியர்கள் இருமடங்கு தெரிவித்திருந்தனர்.

‘பெர்ன்அவுட்’ நிலையை ஒருவர் உணர்வதற்கான முதன்மை காரணம், அதிகப்படியான வேலைப்பளு என்று ஆய்வில் பங்கேற்ற 27 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.

மனநல ஆதரவுக்கு முதலாளிகள் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் தேவை அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக திரு ஹைதர் சுட்டினார்.

இதற்கிடையே, தங்களின் வேலையிடத்தில் மனநல ஆதரவுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்று ஆய்வில் பங்கேற்ற 52 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர். ரகசியத்தன்மையுடன் இலவச மனநல ஆலோசனை வழங்குதல், வேலைப்பளுவை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதலும் நல்வாழ்வுச் சேவைகளை வழங்குதல் போன்றவை இதன்கீழ் அடங்கும்.

வேலை நேரம் முடிந்த பின்பும் வேலை தொடர்பாக இயங்கும் ஒரு கலாசார நெருக்குதலுக்கு ஊழியர்கள் ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு ‘பெர்ன்அவுட்’ நிலைக்கு ஆளாகும் ஊழியர்களைக் கவனிக்காவிடில் உற்பத்தித்திறன் இழப்பும் மருத்துவக் கட்டண அதிகரிப்பும் நேரலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.