இலக்கியச்சோலை
நில ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் பாலஸ்தீனர் – தமிழர் உரிமைகளை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும்! … சிட்னி நூல் வெளியீட்டில் திரு. தனபாலசிங்கம் உரை!!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நடைபெற்றுள்ளன. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் இதனை ஒப்பிட்டு ஆண்டு வரிசையில் தரவுகளுடன் விளக்குகியுள்ளார் என ‘பாலஸ்தீனம் எரியும் தேசம் ‘ நூலை அறிமுகம் செய்த சிட்னியின் மூத்த தமிழ் செயற்பாட்டாளர்
திரு. தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று
நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் கடந்த வெள்ளி ஜூன் 7ம் திகதி நடைபெற்றது.
சிட்னியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த தமிழ் செயற்பாட்டாளர்
திரு. தனபாலசிங்கம் மேலும் தெரிவிக்கையில், தற்போது பாலஸ்தீன மக்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் இனப்படுகொலை ஒன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் வெறுமனே கண்டிப்பதுடன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இவ்வாறான ஒரு சூழலில் ஒடுக்கப்படுகின்ற, நிலங்களைப் பறிகொடுத்த, இனப் படுகொலையை எதிர்கொண்ட தமிழ் இனமாக பலஸ்தீன மக்களுடன் உணர்வுத் தோழமையுடன் தோள் கொடுத்து நிற்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உள்ளதை இந்நூலில் அரசியல்- வரலாற்று தகவல்களுடன் ஐங்கரன் விக்கினேஸ்வரா தெளிவாக விளக்குகியுள்ளார் என திரு. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
இந்த நோக்கத்தில் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கிய, நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “பாலஸ்தீனம் எரியும் தேசம்” என்ற நூலானது எங்கள் காலத்தின் இரு தேசிய இனங்களின் வலிகளை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.
இந்நூலில் நிகழ்கால பாலஸ்தீன போர்க்கள நிகழ்வுகளின் ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.
நூறாண்டுகளாக தொடரும் துயரத்தை சுமந்த எரிகின்ற பாலஸ்தீன தேசம் பற்றிய வரலாற்றுப் பார்வையில் கட்டுரைகள் இந்நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இன்று பாலஸ்தீனம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு பல துண்டுகளாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமும் இவர்களை கைவிட்டுள்ளது. எவ்வாறு நிலங்கள் துண்டாடப்பட்டன, எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டன, மக்கள் மீது எவ்வாறு போர் திணிக்கப்பட்டது. வன்முறைகளும் இடப்பெயர்வுகளும் காலனித்துவ நாடுகளின் சதிகளும் துரோகங்களும் அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளும், எனப் பல பொதுத்தன்மைகளை இந்நூலில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலம் அறிமுகமான ஐங்கரன் விக்கினேஸ்வரா நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர்.
ஈழத் தமிழர்கள் பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை புரிந்துகொள்ள பங்களிக்கின்றார். இப் புரிதலானது பாலஸ்தீன மக்களுடன் உணர்வுத் தோழமையுடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான விழிப்புணர்வை ஈழத்தமிழர்களுக்கு இந்நூல் வழங்கும் என நம்புகின்றேன் என திரு. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
இரண்டு தேசத்தவர்களும் தமக்கு ஏற்பட்ட (வரலாற்று) அனுபவங்களிலிருந்து கற்று பரஸ்பரம் பகிர்ந்து ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும். இதற்கு ஆழமான புரிதலும் நீண்டா கால தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும் என்றும் திரு. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு கடந்த வாரம் ஜூன் 7ம் திகதி சிட்னியில் உள்ள பெமுள்வே சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு ஆற்றினார். அதன்பின் பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. தனபாலசிங்கம் நிகழ்த்தினார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். ஹாரூன் காசிம் அவர்கள் ஆற்றினார்.
இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. சுந்தரதாஸ் அவர்கள் ஆற்றினார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில்
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்தினார். அத்துடன் திரு. திருநந்தகுமார் அவர்களும் , பாடும் மீன் சிறிஷ்கந்தராஜா இவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெற்ற நூல் வெளியீடும் இலக்கிய அரங்கின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.