கதைகள்

“கதவு” ……. சிறுகதை ……. சோலச்சி.

வாகனங்களின் இரைச்சல் இன்று அதிகமாகவே இருந்தது. கார்மேகம் காட்டில் அடித்துச் செல்லப்பட்டு வெண்மேகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உச்சத்தில் சூரியனின் ஆட்சி என்பதால் குளிர்பான கடைகளில் பலரும் குழுமி இருந்தனர். குளிர்பானத்தை குடிக்கும் போதே வாயால் உஸ் உஸ் என கழுத்தில் ஊதிக் கொண்டனர். சட்டைக் காலரை தூக்கி கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டாலும் நச நசவென இருந்தது.

சாலையில் எத்தனையோ வண்டிகள் சென்றாலும் ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் மட்டும் தனியாக கேட்கும். எல்லோருடைய பார்வையும் ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கியே இருக்கும். யாருக்கு என்ன ஆச்சு என்று மனசுக்குள் ஒரு விவாத மேடையே நடந்து முடியும்.

அப்படித்தான் இன்றும் “ஒய்ங்….ஒய்ங்……ஒய்ங்…… என அலறல் சத்தத்துடன் சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் கண் சிமிட்டும் நேரத்தில் டிங் டிங் டிங்…. ஒலி எழுப்பியவாறு செந்தில் மருத்துவமனை வாசலில் நின்றது.

வேர்வையில் நனைந்தபடி ஆம்புலன்ஸ் பின்னால் வந்த பழனிவேலு அவசர அவசரமாய் தனது பைக்கை மருத்துவமனை வாசலில் நிறுத்தினார். வண்டியை சரியாக நிறுத்தாததால் ஆட்டம் கொடுத்தது. வண்டியின் ஸ்டாண்டை ஒழுங்குபடுத்தினார். நெனப்பு எல்லாம் ஆம்புலன்ஸை நோக்கியே இருந்தது. வேப்பெண்ணையை முகத்தில் தேய்த்தது போல் பிசுபிசுத்தது. இடது வலது என கை சட்டையால் துடைத்துக் கொண்டார்

பதட்டத்துடன் ஆம்புலன்ஸை விட்டு இறங்கினாள் சாந்தி. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் வேகமாய் வந்த மருத்துவமனை பணியாளர்கள் படுக்கையில் இருந்த சசிரேகாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளி கொண்டு அவசர வார்டுக்குள் கொண்டு சென்றனர்.

சசிரேகாவின் தலையில் கட்டு போட்டு இருப்பதைக் கண்டதும் திகைத்துப் போய் நின்றார் பழனிவேலு. எந்த அசைவும் இல்லாமல்

நட்டு வச்ச வேல் கம்பைப் போல் நகராமல் நிற்கும் பழனிவேலுவை பார்த்து…..

“அண்ணே.. அண்ணே…” என்று அதட்டினாள் சாந்தி. அவளின் அதட்டல் ஒலி பழனிவேலுவின் காதுகளுக்குள் நுழையாமல் வெளியிலேயே சுத்திக் கொண்டு இருந்தது. அவசர வார்டுக்குள் சசிரேகா… வாசலில் எந்தவித அசைவும் இல்லாமல் திகைத்து நிற்கும் பழனிவேலு…. இனி கத்தி எந்தப் பயனும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்த சாந்தி, அவரது கைகளைப் பிடித்து ஆட்டினாள். முத்து போட்டு குறி சொல்லும் கோடாங்கிக்கு அருள் வருவதைப் போல ம்…..க்….. என்ற சத்தத்துடன் கண்களை சிமிட்டினார். தன்னைத்தானே தொட்டு பார்த்துக் கொண்ட பழனிவேலு இயல்பு நிலைக்கு திரும்பினார்.

சிறிதும் தாமதிக்காமல்… என்னம்மா ஆச்சு அவளுக்கு…. என்றார். கைகள் படபடத்தது. எதையோ இழந்தது போல் அவரது முகம் இருந்தது.

“பயப்படாதண்ணா….. மொதல்ல நீங்க கீழ உட்காருங்க.” அருகில் இருந்த படிக்கட்டு ஓரமாய் உட்கார வைத்தாள். அவங்களுக்கு முடியலன்னு இங்க கொண்டு வந்தா… இவருக்கும் சேர்த்து வைத்தியம் பாக்கணும் போல… சாந்தியின் மனசுக்குள் மீண்டும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்பதுபோல் இருந்தது. தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டாள்…

“தலை கிறுகிறுன்னு சுத்தவும் மயங்கி விழுந்ததுல தலையில லேசா அடிபட்டு இருக்கு. அவ்வளவுதான். இதுக்கு போயி நீங்க எதுக்குண்ணே டென்ஷன் ஆயிக்கிறீங்க. மனச ஃப்ரீயா விடுங்க… சாந்தியின் பேச்சில் சமாதானமாகவில்லை. இருந்தபோதும் தன்னை தேற்றிக்கொள்ளவே முயற்சித்தார்.

உள்ளே என்ன ஆச்சுன்னு தெரியல. இவரையும் இப்படியே விட்டுட்டு போக முடியாது. சாந்தியும் சற்று நிதானமானாள். ஏதோ வராத இடத்துக்கு வந்தவன் போல் உணர்ந்தார் பழனிவேலு. வண்டியில் பதட்டத்துடன் வேகவேகமாய் வந்ததால் படபடப்பு நிற்காமல் கண்கள் சொருகியது. மயக்கம் பழனிவேலுவின் அனுமதி இல்லாமல் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது. கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து பழனிவேலுவின் முகத்தைக்

கழுவினாள். ஒரு மொடக்கு தண்ணீரைக் குடித்ததும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார்.

டாக்டரை பார்த்ததும் எந்திரிக்க முயற்சி செய்தார் பழனிவேலு. பரவாயில்லை… இங்கேயே உட்காருங்க…… சொல்லிக்கொண்டே அவசரவார்டுக்குள் நுழைந்தார் மருத்துவர்.

ஏ… உசுரே உங்க அண்ணிதான்…. நான் வெறும் கூரைதாம்மா. அஸ்திவாரமே அவதான்….. நா… என்னம்மா பாவம் செஞ்சேன் இப்புடி ஆகிப்போச்சே… சின்னக் குழந்தையை போல தேமி அழுவதைப் பார்க்கவே சாந்தியின் கண்களும் கலங்கின.

அழா….தீ…..ங்கண்ணா….. ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் சாந்தி. மருத்துவமனைக்கு வருபவர்கள் பழனிவேலுவிடம் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுத்தான் நகர்ந்து சென்றனர். சின்னப்புள்ள மாதிரி இப்புடி அழுதா…. யாரு யாருக்கு ஆறுதல் சொல்றது. ஒரு ஆம்பள…. மனச தெடப்படுத்திக்கிட்டு என்ன ஏதேனும் பாக்கிறது இல்லையா..? மூச்சு மூச்சுனு அழுதா எல்லாம் சரியாயிடுமா..? டாக்டரு என்ன ஏதுன்னு உள்ள பாத்துகிட்டு இருக்காங்க. ஓ….னு அழுதா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க. புள்ளைங்க ரெண்டும் வீட்ல இருக்குதுங்க…. சாந்தியின் மனசுக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.

பழனிவேலுவின் பக்கத்து குடியிருப்பில் வசிப்பவள்தான் சாந்தி. அண்ணா என்றுதான் அழைப்பாள். சசிரேகாவின் நட்பு வட்டத்தில் சாந்திக்குத்தான் முதலிடம். எங்கோ பொறந்து எங்கோ வளர்ந்தாலும் இப்போது வாழ்வது பக்கத்து பக்கத்து குடியிருப்பில்தான். தாயா புள்ளையா வாழ்ந்துட்டு போவோம்னு எல்லாரும் ஒன்னா வாழ்றாங்க. எத்தனையோ குடும்பங்கள் அந்த குடியிருப்பில் வாழ்ந்தாலும் சாந்தியையும் சசிரேகாவையும் பிரிக்கவே முடியாது. ஒரே ஊர்காரங்க போல கொஞ்சி குலாவிக் கொள்வார்கள். இங்கிருந்து சமைச்சு அங்கே போவதும்.. அங்கே சமைச்சு இங்கே வருவதும் சர்வ சாதாரணம்.

பட்டரைவாக்கம் தனியார் நிறுவனம் ஒன்றில் லேத் ஆப்ரேட்டராக பழனிவேலு வேலை பார்க்கிறார். அயப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்தான் பத்து ஆண்டுகளாக தங்கி இருக்கின்றனர். சென்னைக்கு வந்த புதிதில் சசிரேகாவுக்கு அக்கம் பக்கத்தினருடன் பழகுவதற்கு அந்நியப்பட்டு இருந்தாள். அப்போது

முதன்முதலில் வந்து பழக்கமானவள்தான் சாந்தி. உள்ளூர் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக சாந்தியின் மூலமாகவே கற்றுக் கொண்டாள். பழனிவேலு வேலைக்கு சென்ற பிறகு தனிமையில் இருக்கும் சசிரேகாவுக்கு உறுதுணையே சாந்திதான்.

முகத்தில் கை வைத்தபடி சிந்தனையில் மூழ்கினார் பழனிவேலு.

அம்மா… வெளையாட போறோம். கொஞ்சமா மீன் குழம்பு வையி. கொஞ்சத்தை வறுத்துரு…. குழந்தைகள் இருவரும் டங்டங்குனு குதித்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கினர். மாடிப்படியே அதிர்வது போலிருந்தது. வழுக்கி விழுந்தா என்ன பண்றதாம். இந்தப் பயலுக சொல்லு பேச்சு கேட்க மாட்றானுக. ஊரு நாட்டுல திரியிற மாரியே இங்கேயும் திரிஞ்சா பாக்க எடுக்க யாரு இருக்கா… அங்காளி பங்காளியா இருக்காங்க ஓடிவந்து உதவுறதுக்கு….

சாமி…. பசங்க வெளையாட போறானுங்க. நீங்களும் தொணைக்கி போயிட்டு வாங்களே…. அவனுக ஆட்டம் போட்டு போறதே சரியில்ல….. சமைத்துக் கொண்டே சொன்னாள் சசிரேகா. கணவனை சாமி என்றுதான் சொல்லுவாள்.

தியாகராஜ பாகவதர் படங்களில் கதாநாயகி கதாநாயகனை சுவாமி என்றுதான் அழைப்பாள். எதேச்சையாக டீவியில் பழைய படம் ஒன்றை பார்த்ததிலிருந்து பழனிவேலுவை சாமி என்று வெளையாட்டாக சொல்ல ஆரம்பித்தவளுக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டது. சாமி என்ற சொல்லுக்கு மறு சொல் சொல்லுவதே கிடையாது. பழனிவேலுவின் மனம் நோகாமல் நடந்து கொள்வாள். பல நிறங்களில் சசிரேகாவை பார்த்தால் சாந்திக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த காலத்துலயும் இப்படியா…? ஆத்தாடி… என்னால எல்லாம் இப்புடி ஏம்புருசன் கிட்ட இந்த அளவுக்கு இருக்க முடியாதுப்பா… நீ என்ன சாமிங்கிற…. பூமிங்கிற….. என்று கிண்டல் அடிப்பாள்.

பெட்ரூம்க்குள்ளிருந்து ம்….. போறேன்… என்றவர் சமையலறைக்குள் நுழைந்து பின்பக்கமாய் அவளை இறுக அணைத்துக் கொண்டார். சட்டியில் மீன் அலசிக்கொண்டிருந்தவள் சட்டென இதை எதிர்பார்க்கவில்லை. உச்சந்தலையில் நச்சென முத்தம் கொடுத்துவிட்டு முகத்தால் அவளது முதுகைத் தடவினார். அவளுக்கு என்னமோ போலிருந்தது. பூவுக்கு வலிக்காமல் தேனை எடுக்கும் வண்டை போல் உணர்ந்து அங்கும் இங்கும் நெளிந்தாள்.

என்ன… சாமி. ராத்திரி பூரா வெளையாண்டிக. விடிஞ்சதும் அந்த வெளையாட்டுதானா. பசங்க பெரியா…ளா வளந்துட்டானுக. அந்த நெனப்பு இருக்கட்டும்… அவர் முகத்துக்கு நேரே திரும்பி நெற்றியில் முத்தமிட்டு விலகி நின்றாள்.. வண்டு தேனை உறிஞ்சும் போது பொசுக்கென பூ உதிர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவருக்கு. முகம் குப்பென வேர்த்தது.

போதும்… சாமி பசங்க போயிட்டானுக. நேர காலம் வேண்டாமா..? பின்னாடியே போங்க இல்லனா அடிச்சுக்குவானுங்க… சாமி. அவரிடமிருந்து விலகி நிற்பதிலேயே குறியாக இருந்தாள்.

“இப்ப எதுக்கு என்னைய துரத்துறதுலேயே இருக்கே…” வெடுக்கென முகத்தைச் சுளித்துக்கொண்டு கதவை டப்பென அடித்துவிட்டு வேகமாய் கீழே இறங்கினார்.

என்ன சாமி கோபமா…? அவள் கேட்பதற்குள் விருட்டென பைக்கை மூறுக்கிக் கொண்டு கிளம்பினார்.

ஏஞ்…சாமிக்கிட்ட அப்படி நடந்துருக்கக் கூடாதோ.. இந்த நேரத்துல கூட இப்படி நடந்துக்கிட்டா நானு என்னதான் பண்றது… மனசு அங்கும் இங்கும் அலைபாய்ந்தது அவளுக்கு.

சமைப்பதும் அவரது செல்லுக்கு தொடர்பு கொள்வதுமாய் இருந்தாள். மனசு ஆணி அடித்தது போல் இல்லாமல் தடுமாறியது. என் மேல எதுக்கு கோவப்படணும். எடுத்தது தொடுத்ததுக்கெல்லாம் இப்புடிக் கோபப்பட்டா நாந்தான் எங்க போறது. நானு எங்காச்சும் ஓடியாப்போகப் போறேன்…. வண்டிய இப்புடி முறுக்கிக்கிட்டு போனா என்னன்னு நெனைக்கிறது. ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா என்ன பண்றது. டவுன் பூரா வண்டி வாசிக பெருத்து போச்சு. டீவில போட்டுக் காட்டுற செய்திய பாக்குறதுக்கே பயமா இருக்கு. மீன் குழம்பு பக்கமும் பழனிவேலுவின் பக்கமும் மாறிமாறி மனசு அல்லாடியது.

அண்ணியாரே….. அண்ணன அப்புடி என்ன வாங்கிவரச் சொன்னீங்க… இப்புடி ஒரு முறுக்க பாத்ததில்லையே… பக்கத்துக் குடியிருப்பிலிருந்து சாந்தியின் குரல் ஓங்கி ஒலித்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் சசிரேகா.

எத்தனை முறை தொடர்பு கொண்டும் எதிர் முனையில் இருந்து ஒரே பதில்தான் வந்தது..

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்டு கேட்டு மனசு பதறியது. வேறு யாரிடமாவது தொடர்பு கொண்டு கேட்டால் என்ன ஏதுன்னு நம்மிடமே விசாரிப்பார்களோ என்றும் தோன்றியது. பசங்க வந்ததும் வறுத்த மீனு கேட்பானுக. மீன வறுக்குறதா… இல்ல ஏஞ்சாமியத் தேடுறதா… புரியாதவளாய் சன்னலை எட்டிப் பார்ப்பதும் போனைத் தொடுவதுமாய் இருந்தாள்.

நேரம் ஆக… ஆக அவளது முகம் பதட்டத்தில் வேர்வை முத்துக்களை அதிகமாகவே உற்பத்தி செய்ய தொடங்கியது. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டாள். மீன் குழம்பும் கொதித்துக் கொண்டிருந்தது. பழனிவேலு பைக்கை முறுக்கும்போது உண்டான வெப்பம் சமையலறை முழுவதும் பரவியிருந்தது. சிலிண்டரின் வெப்பத்தில் மீன் குழம்பும் அறையின் வெப்பத்தில் அவளது முகமும் கொதித்துக் கொண்டிருந்தது.

சாமி…. போன ஆன் பண்ணு…… சாமி…. போன ஆன் பண்ணு…. என்று ஓராயிரம் தடவை சொல்லியிருப்பாள். ஒரு முறை கூட போன் வரவும் இல்லை ஆன் ஆகவும் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பசங்களும் காலையில் சாப்பிட்டுவிட்டு விளையாடச் சென்றனர். பசங்களோட ஒரு எட்டு போயிட்டு வரச் சொன்னது குத்தமா போச்சே… எதுக்கு வம்பு.. இனிமே அவுக அவுக போக்குக்கு விட்ருவோம். இப்போதைக்கு நல்லபடியா வீடு வந்து சேர்ந்தா போதும் என்பதை மட்டும் நினைத்துக் கொண்டாள்.

வெளையாட்டுக்குத்தான் கோபப்பட்டேனு சொல்லி ஏஞ்சாமி போன் பண்ணிற மாட்டாரா… இல்ல வீட்டுக்குத்தான் வந்து மறுபடியும் ஆசையா கட்டிப்பிடிக்க மாட்டாரா… என ஏங்கினாள்.

மதியம் ஒரு மணிக்கு சசிரேகாவின் செல்போன் சினுங்கியது. பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தவள் அப்படியே போட்டுவிட்டு முந்தானையில் கைகளை துடைத்து கொண்டு வேகமாக செல்போனை எடுத்தாள். புதிதாக ஓர் எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

தன் கணவர்தான் வேறொரு எண்ணிலிருந்து போன் பண்றாரோ என்ற நினைப்பில் மகிழ்ச்சியை வாரி அணைத்துக் கொண்டவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அம்மாடி…. நல்லா இருக்கியா…? எதிர் முனையில் அவளது அம்மா.

சொல்லுமா… நல்லாருக்கோம். அப்பா என்ன பண்றாரு. அண்ணா வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா….? வேக வேகமாய் பேச்சை தொடர்ந்தாள்.

எல்லாரும் நல்லாதான் இருக்கோம். எதுக்குமா… ஒரு மாதிரியா இம்புட்டு வேகமா பேசுற… ஓம்புட்டு பேச்சுல ஏதோ வாட்டமா இருக்கிற மாதிரியே தோணுது. தம்பி எங்க…, பேச்சை இழுத்தாள். சூழ்நிலை தெரியாமல் அம்மா வேற போன் பண்ணுது… அலுத்துக் கொண்டாள்.

மருமகனைத்தான் தம்பி என்கிறாள். அந்தத் தம்பியைக் காணாமல்தான் நான் வாடிக் கொண்டு இருக்கிறேன் என்பதை எப்படிச் சொல்வது. மனசை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுவதற்கு முயற்சித்தாள்.

அவரு தூங்கிட்டு இருக்காருமா. ஓம் பேரனுக வெளையாட போயிருக்கானுக. வேற ஒன்னும் இல்லையே. அப்புறம் பேசவா…. அவசரப்படுத்தினாள் சசிரேகா.

எம்மாடி.. ஓம் பேச்சுல ஏதோ திக்குதிக்குன்னு அடிக்குது எனக்கு. ஊரு விட்டு ஊரு பொழைக்க போயிருக்கீக. சண்டை சல்லு இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருங்க. லேத்து கம்பெனில வேலை பாக்குறதால தம்பிக்கு கோவம்கீவம் அதிகமா வரும். பொம்பளைக நாமதான் அனுசரிச்சு நடந்துக்கணும். அம்மாவின் பேச்சுக்கு ம்….ம்…. இந்த ஓசையை தவிர அவளிடமிருந்து வேறு பதில் இல்லை.

குடிகார ஒங்க அப்பன கட்டிக்கிட்டு நானு குடும்பம் நடத்தலையா..? விட்டுக் கொடுத்து போறதுலதான் வாழ்க்கையே இருக்குதாயி…. நானு கோபப்பட்டுக்கிட்டு எதுரும்மொதுரும் பண்ணிக்கிட்டு இருந்தா லாயக்கிபடுமா…? உங்கள் கரை சேக்க மூடியுமா..? ஒன்னோட பாசத்தாலே மாப்ளய ஒன்னோட வழிக்கு கொண்டு வா…தாயி. இன்னுமா நீ சின்ன புள்ள… எப்போதும் பாடும் பாட்டை இப்போதும்

பாடி முடித்தாள் அவளது அம்மா. போனை எப்போது வைக்குமோ என்ற நினைப்போடு ம் போட்டுக்கொண்டு இருந்தாள் சசிரேகா.

அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தாள். சூடான எண்ணையில் போட்ட கடுகை போல் பழனிவேலுவின் முகம் இருந்தது. எதுவும் பேசாமல் பெட்ரூமுக்குள் சென்று படுத்துக் கொண்டார்.. பின்னாலேயே பசங்களும் வர தன் கணவனை அவளால் கவனிக்க முடியவில்லை. எப்படியோ நம்ம சாமி திரும்பி வந்துருச்சே. அது போதும். இப்போதைக்கு அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

பொழுது சாய்ந்தது. பிள்ளைகள் இருவரும் டீவி பார்த்துக் கொண்டு இருந்தனர். மெதுவாக பெட்ரூமுக்குள் நுழைந்தாள். அவள் வருவதை தெரிந்து கொண்டும் பார்க்காதது போல் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். அவர் அருகில் அமர்ந்து மார்பில் சாய்ந்து கொண்டாள். எந்த ஒரு எதிர்வினையையும் அவர் செய்யவில்லை.

சாமி…. கோபமா.. அப்புடி என்ன சொல்லிபுட்டேன்…? சொல்லிக்கொண்டே ஆங்காங்கே முத்தமிட்டாள். அவர் பேசுவதாக இல்லை. உடல் கூசியது. அவளது உதடுகள் பட்டதும் உடல் நெளிய ஆரம்பித்தது. ஆனாலும் உடலை நெளியாமல் பார்த்துக் கொண்டார். கண்களை மூடிக் கொண்டே இருந்தார்.

இவ்வளவு கொஞ்சியும் மனசு இறங்கவே இல்லையே…. உலகத்தையே கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லிடுவேன். எனக்கு ஏம்புட்டு சசி மட்டும் போதும். அப்படின்னு சொல்லுவீங்க. ஆனா இன்னைக்கு இம்புட்டு முரண்டு புடிக்கிறீங்களே…. உங்க சசியை தவிக்க விடுறதுதான் ஏஞ்சாமிக்கு அழகா…. நெஞ்சை வருடிக் கொடுத்தாள்.

அம்மா பசிக்குது…. பெரியவன் அழுத்தமாக குரல் கொடுக்கவும் உடனடியாக பெட்ரூமை விட்டு வெளியேறினாள். இன்னும் சிறிது நேரம் கொஞ்ச மாட்டாளா என மனசுக்குள் ஏங்கினார்.

பசங்க சாப்பிட்டதும் டீவியை ஆப் பண்ணி விட்டு வரவேற்பு அறையிலேயே தன் பிள்ளைகளுடன் பாய் விரித்து படுத்துக் கொண்டாள். அவளது எண்ணமெல்லாம் புருசனை சமாதானப்படுத்துவதில்தான் இருந்தது. ராத்திரி சாப்பிடுவதற்கு அழைத்தும் முரண்டு பிடித்துக் கொண்டு எழாமல் முறுக்கிக் கொண்டு மெத்தையிலேயே படுத்திருந்தார் பழனிவேலு. எந்திரிக்காத

சாமிய எந்திரி எந்திரின்னு சொன்னா சண்டை வந்துருமோ என தயங்கினாள்.

அம்மா….. கதை சொல்லாம படுத்துட்ட…. சின்னவன் சொன்னதும் நேற்று பாதியில் விட்டுப் போன கதையை மீண்டும் தொடர்ந்தாள். கதை சொல்ல சொல்ல ம்….ம்….. போட்டுக் கொண்டே பசங்களும் தூக்கத்தை இழுத்து வந்து கக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினர்.

குழந்தைகள் உறங்குவதை உணர்ந்து கொண்டாள். மதியம் அவள் அம்மா பேசியது தான் நினைவில் வந்து சென்றது. மேகத்தை விலக்கி எட்டி பார்க்கும் நிலாவைப் போல் பெட்ரூமுக்குள் நுழைந்தாள். பசங்களை தூங்க வைத்துவிட்டு எப்படியும் உள்ளே வருவாள் என்று பழனிவேலுக்குத் தெரியும். இரவுக்குள் நீந்திவரும் அவளை பூக்களின் இதழ்கள் மொட்டில் இருந்து விரிவதைப் போல் தனது இமைகளை மெதுவாகத் திறந்து பார்த்து மூடிக்கொண்டார். அவரது உதடுகள் புன்னகையில் பூத்து குலுங்கின.

அவரது கால்களை அமுக்கிக் கொண்டே கைகளை வருடினாள். எதுக்கு சாமி கோபம்…. என்னோட ஒலகமே நீங்களும் நம்ம பசங்களும்தான்…. எனக்குன்னு வேற என்ன இருக்கு.. மார்பில் சாய்ந்து கொண்டாள்.

மெதுவாய் கண் திறந்தவர் அவளை இறுக அணைத்துக் கொண்டார்.

சாமி நீங்க தூங்கலையா…! வியப்பு மேலிட இருளிலும் விழிகளை கூர்மையான வாள்போல் விழித்தாள்.

என்னைக்கு உன்னை கொஞ்சாம தூங்கி இருக்கேன்… தன் விரலால் அவளது உதட்டை இதமாய் கிள்ளினார்.

சாமி ஒங்களுக்கு ஏம்மேல சலிப்பே வராதா…?

ஒன்னதான் நானு தெனமும் காதலிக்கிறேனே… அதுனால நீ எப்பவும் புதுசா தெரியுற…. மெதுவாய் எழுந்தவர் அவள் வயிற்றில் முத்தமிட்டார்.

ம்….. நானு புதுசாவே இருந்துட்டு போறேன். சாப்பிடலையா சாமி….?

ம்…. ஒன்னக் கொஞ்சவும் பசி பறந்து பக்கத்து ஊருக்குப் போயிடுச்சு.. நீ சாப்டியா என்பது போல கண்களை சிமிட்டி முதுகைத் தழுவி அவளது உதட்டைச் சுருக்கினார்.

ம்… நானு…..என்னைக்கி ஒங்கள விட்டுட்டு சாப்ட்டுருக்கேன். எனக்கு மட்டும் தனியாவா பசிக்கும். ஏஞ்சாமி எப்பவும் சந்தோசமா இருக்கணும். அதுதான் இந்த சசிக்கு வேணும். ம்….சரி சரி தூங்குங்க நான் போய் பசங்க கிட்ட தூங்குறேன்.

அதுக்குள்ளயா…? இன்னைக்கு ஏதும் இல்லையா…?

ம்…… இன்னைக்கி ரெண்டு பேருமே பட்டினி. நாந்தான்….. நேத்தே சொன்னேன்ல. இன்னைக்கித் தேதி பதினேழு. அதப் புரிஞ்சுக்காம காலையில…….

இன்னைக்கி மட்டும் இல்ல…. மூணு நாளைக்கு பட்டினிதான். அவரது வலது கையில் முத்தமிட்டபடி நகர்ந்து சென்றாள்.

அண்ணே….. டாக்டரு…. சாந்தி அவரை மெதுவாய் தட்டினாள்.

“சா…ர்…. என்னாச்சு” படபடப்புடன் கேட்ட பழனிவேலுவின் கைகளை இறுக பிடித்துக் கொண்டார்.

“பயப்படாதீங்க…. படியில விழுந்துருக்காங்க. தலையில சின்னதாண காயம். தையல் போட்டு இருக்கு. சீக்கிரம் சரியாயிடும். உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. ரத்தத்தோட அளவு ரொம்ப கம்மியா இருக்கு. குளுக்கோஸ் ஏறி முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டி போங்க. மறக்காம இந்த மாத்திரைகளை கொடுங்க… காயி கறி பழமுனு வாங்கி கொடுத்து அவுங்க உடம்பத் தேத்துங்க…. மறக்காமல் மருந்து சீட்டையும் கொடுத்துவிட்டு நகர்ருந்தார் டாக்டர்.

மயக்கத்தில் இருந்த அவளருகே அமர்ந்தார் பழனிவேலு. தலையை இதமாய் வருடினார்.

ஏம் மனசப் புரிஞ்சு நடந்துகிட்ட…. ஓம் மனச புரிஞ்சுக்கலையே..! அவளின் வலது கையை இறுக பிடித்துக் கொண்டார்.

அவளின் இமைகள் தாவித் தாவி அமரும் தேன்சிட்டைப்போல் திறக்காமலேயே… சிலிர்த்தன.

“வெறும் போதைப்பொருளாவே பார்த்த நா.,..னா ஒனக்கு சாமி. இல்ல.,.. இல்ல…. நீதான் ஏஞ்…சாமி…” அவள் கையில் முத்தமிட்டார். அவளது உதடுகள் மெல்லத்திறந்து சாமி….. என்றது. அப்போது மேல் வானம் சிவக்க ஆரம்பித்து இருந்தது. மூடியே இருந்த அவரது இதய கதவு நிரந்தரமாய் திறந்து கொண்டது.

…………………………….

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.