இந்தியா

மத்திய அமைச்சராகின்றார் அண்ணாமலை; தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்?

தமிழக பாஜக தலைவராக செயற்படும் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சராக பதவியேற்க வரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையான நடரேந்திர மோடி பிரதமராக இன்று மாலை பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கின்றது.

இதன்படி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் தலைவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஜன சேனா, லோக் ஜனசக்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணமலையின் பெயர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியை சந்தித்தார்.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனினும், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலைக்கும் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பாஜகவின் கொள்கையின்படி ஒரு நபர் இருவேறு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால், அண்ணாமலை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழக பாஜக தலைமை மாற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.