இலக்கியச்சோலை
எதிர்கால சந்ததியினர் தாய்மொழி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்! … சிட்னி நூல் வெளியீட்டில் மாத்தளை சோமு!!
ஏதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் எத்தகைய வழியில் புலம்பெயர் நாடுகளில் மொழிப்பற்றுடன் வாழ வேண்டும் என்பதற்கு இன்றைய தமிழ் ஆர்வலரகளும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலமே எதிர்கால சந்ததி செழிப்பாக தாய் மொழிப்பற்றுடன் வாழ முடியும் என எழுத்தாளர் மாத்தளை சோமு தெரிவித்தார்.
சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று
நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் கடந்த வெள்ளி ஜூன் 7ம் திகதி நடைபெற்றது.
சிட்னியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையை எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு மேலும் கூறுகையில், புலம்பெயர் மண்ணில் தமிழ் மொழியை பேணிக்காத்திட வீடுகளில் குழந்தைகளுடன் தாய் மொழியில் உரையாட வேண்டிய அவசியத்தையும்
வலியுறுத்து உரையாற்றினார்.
எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும் சூழலை உருவாக்க,
தமிழின் வளர்ச்சி குறித்து எல்லோரும் அக்கறையோடு தங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும்.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது, அது பயன்பாட்டு மொழியாக இருக்கும் போதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகும்.
பல மொழிகள் உலகில் அழிந்தாலும், தொன்மை வாய்ந்த தமிழ்மொழி இன்றும் உலகில் உயிரோட்டத்துடன் உள்ள மொழியாகும். காலமும் சமுதாயமும் மாறுவதற்கேற்ப, மொழியும் நவீனமயப்பட வேண்டும். எனவே, தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது.
மொழி வழிக்கல்வியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் அறிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வழங்க வேண்டும்.
தமிழ்க் கல்வி முறையில் மொழிக் கல்வியைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான பங்களிப்புகளை தமிழ்ப் பள்ளிகள் வழங்கி, தமிழ் மாணவர்களை சிறப்பாக வழிநடத்துகின்றனர்.
உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். எம்மொழி எதிர்காலத்தில் நிலையாக மேலோங்க, அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, மொழி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
இன்றைய இளைய சமுதாயம், வேர்களைத் தேடுகிற காலம் இது. இந்தச் சூழலில் மொழியின் மீது எல்லோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கிற சூழல் உருவாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும் என எழுத்தாளர் மாத்தளை சோமு தனது தலைமை உரையில் தெரிவித்தார்.
தாய் மொழி மட்டுமே சீனாவில் பேச்சுமொழியாக இருக்கிறது. அதனால்தான், சீனாவில் இளைய சமுதீயம் மிகவும் சரளமாகவும் இயல்பாகவும் தங்கள் மொழியை பேச முடிகிறது. அந்தத் திறனை தமிழ் மொழிக்கும் உரிவாக்க வேண்டும்,
எங்கள் தமிழ் மொழியை மொழியாக மட்டும் சித்திரிக்காமல், அது நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் வாழ்வுநெறியையும் அறிய உதவும் காலக் கண்ணாடியாக உள்ளது.
எதிர்காலத்தில் எவ்வாறு நமது மொழியின் தொன்மையை பாதுகாக்கலாம் என்பதில் முக்கியமான கடமை இன்று வாழும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாறர்களின் முக்கியமாக கடமை என்றும் எழுத்தாளர் மாத்தளை சோமு
கூறினார்.
ஏதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் மேலும் வளர்ச்சியுற ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்துப்பணி பங்களிப்பை வழங்கும். இதுபோன்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடாத்தி, எதிர்கால தமிழ் சந்ததியினர்க்கு வழிநடத்தும் தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் மாத்தளை சோமு.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு சிட்னியில் உள்ள பெமுள்வே சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு ஆற்றினார். அதன்பின் பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. தனபாலசிங்கம் நிகழ்த்தினார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். ஹாரூன் காசிம் அவர்கள் ஆற்றினார்.
இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. சுந்தரதாஸ் அவர்கள் ஆற்றினார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில்
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்தினார்.அத்துடன் திரு. திருநந்தகுமார் அவர்களும் , பாடும் மீன் சிறிஷ்கந்தராஜா இவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெற்ற நூல் வெளியீடும் இலக்கிய அரங்கின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.