கவிதைகள்

“பக்குவமாய் காப்பியமாய் மலர்கிறதே பக்தியுடன்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

உலகில் பல்மொழியிருக்கு உயரிலக் களுமிருக்கு

அம்மொழிக்குள் எம்மொழியாம் அன்னைமொழி ஒன்றாகும்

பல்மொழிகள் இருந்தாலும் பக்தியெனும் கருதன்னை

இலக்கியமாய் இயம்பும்மொழி எம்மொழியாம் தமிழொன்றே 

 

எம்மொழியும் சிந்திக்கா பக்தியினை பக்குவமாய்

இலக்கியத்தில் புகுத்தியது எம்மொழியின் சிறப்பாகும்

இலக்கியத்தின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆளுமைகள் 

பக்தியது வரலாற்றை பயபக்தியுடன் பார்க்கின்றார்

 

தமிழென்று சொன்னால் சைவமும் வந்துநிற்கும் 

வைணவமும் முன்வந்து வண்ணத் தமிழ்தழுவும் 

நாயன்மார் வந்தார்கள் ஆழ்வார்கள் வந்தார்கள்

அவர்களால் பக்தியது இலக்கியத்துள் புகுந்தது 

 

திருமுறைகள் வந்தன திவ்வியப்பிரவந்தமும் வந்தது 

அருணகிரி தமிழ்த்தேனும் ஆனந்தமாய் கலந்தது

தெய்வமாக் கதையெல்லாம் சிறப்பாக வந்தன

சிறப்புடைக் காப்பியங்கள் பக்தியாய் மலர்ந்தன 

 

இத்தனையும் பக்திக்குச் சொத்தாக அமைந்தன

தமிழல்லா வேறுமொழி பக்திபக்கம் பார்க்கவில்லை

பக்திசொன்ன எங்கள்மொழி முந்தியங்கே நின்றது

பார்போற்ற தமிழ்மொழியும் ஒளிவிட்டு நிற்கிறது 

 

பக்திச் சுவையெடுத்து பலபேரின் மனமமர 

முத்தான தமிழெடுத்தார் முதல்வனை மனமெண்ணி

உலகெலா மெனுமடியை உமைபாகன் காட்டிவிட

நிலவுலகம் நிலைபெறவே சேக்கிழார் வழிசமைத்தார் 

 

அடியார்கள் பெருவாழ்வை அவர்பாட எடுத்தவிதம் 

அன்னைத் தமிழிக்கு அளித்திட்ட பெருங்கொடையே

பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியகாரணத்தால்

பரமனும் ஏற்றிட்டார் பசுந்தமிழும் செழித்தது 

 

சேக்கிழார் மாக்கதையில் பலவடியார் வருகின்றார்

ஒவ்வொருவர் பக்தியும் உணர்வுநிலை வேறாகும் 

பக்தியெனும் பாதையிலே வருமடியார் பக்குவத்தை 

சித்தமதி லிருத்துவதற்கு சேக்கிழார் செய்துள்ளார் 

       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மெனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

      மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.