“பக்தியினூடாகச் சமுதாயச் சீர்திருத்த கருத்துக்களை துணிந்து காட்டியவர் சேக்கிழார் பெருமான்” …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
பேரரசு உருவாகி அந்தப்பேரரசுக்கு புகழ்மாலைகள் பெருகும் பொழுது ஆட்சியாள ர்கள் தம்மை மறப்பது இயல்புதான். ஆனால் இந்தநிலையத் தொடரவிட்டால் குறிக்கோ ள்கள் இல்லாமலே கெட்டழிந்தும் போய்விடலாம்.போர் வெற்றியாலும், அதனால் ஏற்ப டும் பேராசையினாலும் அந்தப்பேரரசு தன்னை ஒருநாளும் தழர்வடையச் செய்யும்படி நடந்து கொள்ளவும் கூடாது.ஆனால் இதனை எந்தவொரு அரசும் நோக்கியதாகத்தெரி யவில்லை.தளர்வுறும் வேளை அந்த நாட்டுமக்களையும் அப்போது உள்ள அரசர்களையும் நல்வழிப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும்.இதனை முதலமைச்சராக இருந்த அனுபவம் மிக்க சேக்கிழார் தம்வசம் எடுத்துக்கொண்டார். இதனால் பெரியபுராணம் பிறந்தது எனலாம்.
பிற்காலச் சோழமன்னரது போக்கை சேக்கிழார் விரும்பவில்லை.அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்த்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம்மாற, மக்கள் விழிப் புப்பெற ,அவர்கையாண்டவழிதான்— ஆண்டவன் அடியாரை அறிமுகப் படுத்தும் அதி உன்னத பணியான பெரியபுராணமாக அமைந்தது.” குடிஉயரக் கோனுயர்வான் ” இதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால் கோன் — அதாவது அரசர்களை உயிர்ப்பூண்டவேண்டும் என எண்ணினார்.அதனால் மன் னர்மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச்சிறந்தவழி என்று அதனை மையமாகக் கொண்டு சுவைபட ஒருகாவியத்தை ஆக்கினார்.
மந்திரிகள் என்றாலே ஊழலும் , பித்தலாட்டமும் , நேர்மையீனமும், ஏமாற்றுத லும்தான் எங்களுக்கெல்லாம் தற்போது ஞாபகத்துக்கு வரும் அந்த அளவுக்கு மந்திரிகள் நிலை இருக்கிறது.ஆனால் சேக்கிழாரே மன்னனையும் மக்களையும் நல்வழிப்படு த்துவதற்காக அந்தஸ்த்தும் அதிகாரமும் மிக்க முதலமைச்சர் பதவியினையே துறந்து விடுகின்றார்.அதிகாரத்தில் இருந்து ஆண்டவன் புகழ் பாட அவர்விரும்பவில்லை. இதனால்த்தான் அவர் வாயினினின்றும் ” கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ——–
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார் ” என்று வரிகள் வந்தனபோலும்.
சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப்போல கவிபாடும் ஆற்றல் மிக்கவர்.அவர்மட்டும் வேறுதுறையில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளை கம்பராமாயணத்தைக்கூட விஞ்சியியும் இருந்திருக்க வாய்ப்பும் உண்டு.ஆனால் அவர் நோக்கம் அதுவல்ல.அதனால்த்தான் அடியார்கள் வரலாற்றைத்தேடிப் பிடித்து அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்து நின்றார்.
சேக்கிழார் காவியம் பாடுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் வித்தியாசமான தாகும்.சிலம்புமட்டுமே உயர்திணை அல்லா ஒன்றை பாடுபொருளாகக் கொண்டிருந்தது அதனை மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் ” தொண்டை ” கருப்பொருளாக வைத்துத் தனது காவியத்தை படைத்து விடுகின்றார்.அறுபத்துமூன்று அடியவர் கதை களைவைத்துக்கொண்டு ஒருகாவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல. இதனை நன்கு மனத்திற் கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணை ப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான்…….. அடியார்கள் எவ் வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டுமனப்பாங்கு இருப்பதை அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது எனலாம்.எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்கு ப்பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண் டை மையமாக வைத்து தொண்டர் பெருமையை பறைசாற்றும் காவியத்தை எழிதாகப் புனைந்து எமக்கு அளித்து விட்டார். இது சேக்கிழாரின் பெருமைதானே!
சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணம் பாட சேக்கிழாருக்கு பெரிதும் உதவிய போதும் ….. சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் , அடியார்கள் பற் றிய விஷயங்களை யெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுத்துக்கொள்கின்றார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள் தோறும் சென்று பல வரலாற்றுத்தகவல்களையும்
கல்வெட்டுப் போன்றவற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார்.இதனால் அவரின் காவியமான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்றது.இது அவருக்கு உயர்வையும் சிறப்பையும் தராமல் இருக்கத்தான் முடியுமா?
பக்தியை ஊட்டுவதற்குப் பெரியபுராணத்தைச் சேக்கிகிழார் பயன்படுத்தினாலும் அதன் ஊடாக பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார் . இது அவரின் சமூக அக்கறையினையே காட்டுகிறது எனலாம்.பலவிஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்த்தான் சோழமன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கி பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்தை அனுபவங்களின் வெளிப்பா டாக பெரியபுராணத்தில்….. அவரின் சமூக அக்கறையாக வந்துநிற்கிறது எனலாம்.
பெரியபுராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்கள் யாவரும் வெவ்வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்கள்.அந்தணர், அரசர், புலையர் , வேட்டுவர், மீன்பிடிகாரர் வண்ணார், குயவர், மரமேறுபவர்கள்,செக்கார்,ஆதிசைவர், வேளாளர், இப்படிப்பல சாதிப்பிரிவினரையும் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்க களை வணங்கத்தக்க நிலைக்கு கொண்டுவந்தமை சேக்கிழாரின் துணிவுதானே!
ஆண் ,பெண், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி, எதையுமே கருத்தில் கொள்ளாமல் சமயம் என்பதற்குள் இவர்கள் அனைவரையும் கொண்டுவந்து … இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டுசெய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர் கள் என்று காட்டிய துணிச்சலால் சேக்கிழார் சிறப்பும் உயர்வும் பெற்றே நின்கிறார் எனலாம்.
சேக்கிழார் காலத்தில் சாதிக்கட்டுப்பாடு மிக இறுக்கமாக இருந்திருக்கிறது என் பதை அவரின் காவியத்தில் வருகின்ற அடியார்களே சான்றாகும்.தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் சென்று வணங்கமுடியாத நிலை காணப்பட்ட காலம். இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக்கருதியதால்த்தான் அறுபத்துமூவரையும் இறை வன் அடியார்களாக்கிவிடுகின்றார். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதி களைச் சேர்ந்த்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம் மன த்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டு கொள்ள முடிகிறது. ” ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அகில உலகமும் அறியச் செய்த காரணத்தால் சேக்கிழார் சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகிறார் அல்லவா?
ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள் தோறும் சிலைவடிவில் உள்ளே வைத்து பூசனைகள் செய்தும் , பெருவிழாஎடுத்தும் , குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால் … அந்தப்பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.
எமது சமயத்தின் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும் .. ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றினையும்,மொழிபற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன்முதாலாகப் பதிவு செய்து எமக்கெல்லாம் தந்து நிற்கின்றார் சேக்கிழார் அவர்கள்.
வீரம் என்றால் பொதுவாக …. புஜபல பராக்கிரமம் கொண்டவர்களையும், பல போர் களில் வெற்றி கண்டவர்களையுமே சொல்லுவது வழக்கம்.ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும் வீரர்களுக்கும் வித்தியாசமான விளக்கத்தை அளித்து வியக்கவைகின்றார். முதலமைச்ச ராக விருந்தவர்.பல போர்களைக்கண்டவர். ஆனாலும் அவற்றில் ஈடுபட்ட வர்களை வீரர் என்றோ அவர்கள் பெற்றது வெற்றி என்றோ அவர்மனம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் எனக்கருதினார். இதற்கு எடுத்துக்காட்டாக திரு நீலகண்டரைக்காட்டுகின்றார்.புலனடக்கம் பெற்றவர்தான் உண்மையான வீரர் என்பதை சேக்கிழார் காட்டுவது எத்துணை அரிய பெரிய தத்துவமாக இருக்கிறது.இந்திரியங்க களைவென்றவர்களால்த்தான் பகையின்றி வாழமுடியும்.பகையை ஒழித்தவர்களால்த் தான் தொண்டுள்ளத்தோடு செயற்படமுடியும்.இதுதான் வீரமும் அதற்கான வெற்றியும் என்று புதிய விளக்கத்தை சேக்கிழார் தந்து சிறப்பு மிக்கவராகிவிடுகின்றார். பற்றை நீக்கி குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டுவாழும் தொண்டர்களின்
” வீரம் என்னால் விளம்பும் தகையதோ ‘ என்ற சேக்கிழார் வாக்கை நோக்கவேண்டும்.
அதேவேளை ” ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் — வீரம் என்னால் விளம்பும் தகையதோ ” சிறுத்தொண்டர்,எறிபத்தர், வீரம்படைத் தவரானாலும் ஈரமும் கொண்டவ ர்கள்.நாவுக்கரசர், குங்கிலியக்கலையர், கண்ணப்பர்,வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது அவரின் புதுச்சிந்தனையை வெளிப் படுத்துவதாக இருக்கிறதல்லவா?வீரத்துக்கு இவ்வளவு விளக்கமா என எண்ணத்தோன் றுகிறதல்லவா?வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பதுதான் முக்கியம். இதனை ” ஈர அன்பினர் யாதும் குறையிலார் ” என்று சேக்கிழார் சுட்டுவது நோக்கத் தக்கது.
பெண்களைப் பெருமைப்படுத்துவதில் அக்கறைகாட்டுகின்றார் சேக்கிழார்.அவள் வந்தாள் என்று பெண்களை சமகால இலக்கியங்களால் பெண்கள் விழிக்கப்பட்ட வேளை….. பெண்களுக்கு மரியாதை கொடுத்து ” அவர் ” என்றும் ” வந்தார் ” என்றும் தமது காப்பியத்தில் அழைப்ப்தும் ஒருவித புதுமைதானே!
” சிவலிங்கத்துக்கு “ அருமையான விளக்கத்தை சேக்கிழார் தந்து நிற்கின்றார்.
காணாத ” அருவனுக்கும்” ” உருவனுக்கும்” காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” அதாவது கண்ணால் காணும் நிலை— உருவம். காணாநிலை — அருவம். இதனை அருவுருவம் என்று சேக்கிழார் காட்டுகின்றார்.ஒரு உருவத்தில் இறைவனைக் காண்பது தொடக்க நிலை.உருவமே இல்லாத சிவனை மனதுக்குள் கொண்டுவருவது ஞானநிலை.இரண்டுக்கும் இடைப்பட்ட “ அருவுருவநிலை ” சைவத்தின் உயர்தத்துவ நிலையாகும்.இதனையே மிக நுட்பமாக சேக்கிழார் காட்டுவது அவரின் திறத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா?
ஆலயத்தில் ஆண்கள் எப்படி வணங்க வேண்டும் , பெண்கள் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் சேக்கிழார் காட்டுவதும் நோக்கத்தக்கது. ” அட்டாங்க பஞ்சாங்கமாக முன்பு முறையினால் வணங்கி”
” எட்டினொடு ஐந்தாகும் உறுப்பினால் பீடு நிலத்தின் மேல் பெருக்கப் பணிந்து”
இவை எல்லாம் சேக்கிழாரின் அறிவுறுத்தல்கள் தானே!
” உலகெலாம் ” என்று இறைவன் அடி எடுத்துக் கொடுக்கும்வரை பலகாலம் காத்திருந்தார் சேக்கிழார். பெரியபுராணம் வந்தால் உலகுக்கு நன்மை பயக்கும் என்று சேக்கிழார் நினைத்தார் என்றே எண்ணமுடிகிறது.சமயத்தை, தொண்டை, பக்தியை, கலாசாரத்தைப் பாடவந்தாலும் அவரிடம் உலகம் தழுவிய உயர்ந்தநோக்கு இருந்திருக்கிறது என்பதையே பெரியபுராணம் மூலமாக நிலைநாட்ட முயன்றுள்ளார்
பக்தர்கள், தொண்டர்கள், அடியார்கள், என எப்படி அழைத்தாலும் அவர்கள் யாவரும் உலகில் பொதுமையானவர்களே1
அகிலகாரணர் தாழ் பணிபவர், கைத்திருத்தொண்டு செய்கடப்பாடினர், உள்ளும் புனிதர்கள், கோதிலாக் குணப் பெருங்குன்றனார்,கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார், ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார், கும்பிடலேயன்றி வீடும் வேண்டாதவர், பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார், ஈர அன்பினர்< யாதும் குறைவிலார், வீரர்,
மேலே கூறிய அடைமொழிகளை உற்று நோக்கும் பொழுது இவை யாவும் உலகந் தழுவிய ஒரு நிலையையே உணர்த்தி நிற்கிறது அல்லவா? ” யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும்குரலும் இதனுடன் ஒத்துவருவதையும் பார்க்க முடிகிறதல்லவா? ” தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ” என்பதை சேக்கிழார் தெழிவாக அறிந்தவர் என்பதும் புலனாகிறதல்லவா?
அன்பின் உயர்வுக்கு முன்னால் வேறு எதுவுமே இருக்கமுடியாது என்பது சேக்கிழார் எண்ணமாகும்.இதனை விளக்க வரும்பொழுதுதான் கண்ணப்பரையும் சிவகோசரியாரரையும் எமக்குக்காட்ட வருகின்றார்.சிவகோசரியார் விதிமார்கத்தில் நிற்க– கண்ணப்பரோ பக்தி மார்க்கத்தில் நிற்கின்றார். விதிமார்க்கத்தோர் அறிவின் துணைகொண்டு இறைவனை அறியமுயல்பவர்கள்.பக்தியில் நிற்பவர்கள் உணர்வு மய மானவர்கள்.அவர்கள் அறிவை நாடுவதில்லை. இதனையே கண்ணப்பனிடம் காண்கின் றோம்.விதிமார்கத்தில் செல்ப்வர்கள் இறைவனைக் கனவில்த்தான் காணமுடியும்.ஆனால் பக்தி அப்படியன்று. கண்ணப்பனுக்கு ஆறாவது நாளே இறைவன் காட்சிகொடுத்து அருள்புரிகின்றான்.இங்குதான் அன்பு எவ்வளவு உச்சமானது எனச் சேக்கிழார் காட்டுகின்றார். இதனால்த்தான் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை
கண்டபின் — என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி” என்று மணிவாசகப் பெருமானே வியந்து நிற்பதைக் காண்கின்றோம். சேக்கிழார் வழிபாடு களைப்பற்றி காணும் பாங்கு வியந்து நிற்கவைக்கிறதல்லவா?
அன்பு என்பதில்” நான்” இருக்கக்கூடாது.நான் இல்லாத அன்புதான் கண்ணப் பனது அன்பாகும். கண்ணப்பன் அன்பு பயன்கருதாததாகும்.இதைத்தான் ” கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா நிலை” என்பதாகும்.அன்பின் உயர்வை இறைவனை அடைவதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துச்சொல்லும் விதத்தால் சேக்கிழார் ஈடீணையற்றவராக நிற்கிறார் எனலாம்.
இப்படிப்படி பல்வேறுவிதமான நிலைகளில் நின்று சிந்தித்து பெரியபுராணம் என்னும் பொக்கிஷத்தை எமக்கு தந்தமையால் சேக்கிழார் என்றுமே சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகி நிற்கின்றார்..அவர் பக்திச்சுவையோடு தமிழ்ச் சுவை யினையும் தரத்தவறவில்லை. ” சொற்றமிழ்பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்”
என இறைவனே தமிழில்த்தான் பாடவேண்டும்என்று விரும்பினான்என்னும் செய்தியையும் தெரிவித்து தமிழின் பால் தாம்கொண்டிருந்த ஆராக்காதலையும் சேக்கிழார் வெளிப்படுத்தி நிற்கின்றார்.