கட்டுரைகள்

“சொல்லித்தான் ஆகவேண்டும்’ … தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பெயர் தெரியாத ஊருக்கு வழி சொல்வதாகும்!.. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ விடயத்தை முன்னெடுப்பவர்களும் அதனை ஆதரிப்பவர்களும் முன்வைக்கின்ற காரணங்களிலொன்று அரசாங்கச் செலவிலே ஜனாதிபதித் தேர்தலை ஈழத் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாகக் கையாள்வது என்பதாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி அது தோற்றம் பெற்ற 1949 ஆம் ஆண்டின் பின் நடைபெற்ற அக்கட்சி முதலாவதாகத் தேர்தலில் போட்டியிட்ட 1952 ஆம் ஆண்டைத் தவிர்ந்த 1956, 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆம் ஆண்டுத் தேர்தல்கள் அனைத்திலுமே இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெருவாரியாகத் தமிழரசுக் கட்சிக்கே வாக்களித்து அக்கட்சி முன்வைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’ யே தமது அரசியல் அபிலாசை என்று மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தினார்கள். இவை ஒரு வகையில் அரசாங்கச் செலவில் நடந்த வாக்கெடுப்புகள் அல்லாமல் வேறு என்ன?

பின், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அத்தேர்தலைத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழம் அமைப்பதற்கான ஆணையைத் தமிழ் மக்களிடமிருந்து பெறுவதற்கான ‘சர்வஜன வாக்கெடுப்பு’ ஆக அறிவித்து அத்தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்றது. இதுவும் ஒருவகையில் அரசாங்கச் செலவில் தமிழ் மக்களிடையே நடந்த வாக்கெடுப்பு அல்லாமல் வேறு என்ன?

பின்பு நடந்த 1989, 1994, 2000, 2001 ஆம் ஆண்டுத் தேர்தல்களிலெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் பெருவாரியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த கோரிக்கைதான் (அதி குறைந்தபட்சம் ‘சமஸ்டி’ தான்.) தமது அரசியல் அபிலாசைகள் என வெளிப்படுத்தினார்கள். இவைகளும் அரசாங்கச் செலவில் தமிழ் மக்களிடையே நடந்த வாக்கெடுப்புகள்தானே.

2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற 2004 தேர்தலில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகப் புலிகளை ஏற்று அதனைத் தமது

தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தானே (அதி உச்சமாக 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.) வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்துத் தெரிவு செய்தார்கள். இது அரசாங்கச் செலவில் தமிழ் மக்களிடையே நடந்த வாக்கெடுப்பு ஆகாதா?

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் அதாவது புலிகளின் இராணுவப் பிரசன்னம் அற்றுப்போன பின்பு கூட 2010, 2015, 2020 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தானே வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். இத்தேர்தல்களும் அரசாங்கச் செலவில் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திய வாக்கெடுப்புகள்தானே!

அப்படியிருக்க, இப்போது எதிர் நோக்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் என்ன ‘புதினம்’ஆன வாக்கெடுப்பை அரசாங்கச் செலவில் நடத்த முனைகிறார்கள்?

இதற்குமுன் நடந்த தேர்தல்கள் எல்லாம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் நடக்காமல் வேறு யார் செலவில் நடந்தது? இத்தேர்தல்களிலெல்லாம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லையா?. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மூலம் எதனைப் புதிதாக வெளிப்படுத்தப்போகிறார்கள்?

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களும் அதனை ஆதரிப்பவர்களும் சொல்லும் இன்னொரு காரணம் தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைச் சர்வதேச சமூகத்திற்குத் தெரியப்படுத்த இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்துவதாகும்.

தமிழர்களுடைய கடந்த எழுபத்தைந்து வருட கால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் 1949 இல் இருந்து 1976 வரை தமிழ் மக்களின் பொது நிலைப்பாடு ‘சமஸ்டி’யாகவும்.

1976 இல் இருந்து 2009 வரை தமிழ் மக்களின் பொது நிலைப்பாடு தமிழீழத் தனி நாடாக அல்லது அதி குறைந்த பட்சம் மீண்டும் ‘சமஸ்டி’யாகவும்.

2009 இல் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் பொதுநிலைப்பாடு ஏதோ ஒரு வகையில் ‘சமஸ்டி’யாகத்தான் இருந்துவருகின்றன.

இது உலகத்துக்குத் தெரியும்.

இதனை விடுத்து இப்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதுவும் தமிழ்க் கட்சிகள் எல்லாம் தனித்தனியாகத் ‘தவில்’ அடித்துக் கொண்டிருக்கும்-தனிக்கட்சிகளுக்குள்ளேயே ‘குத்துவெட்டு’க்களுக்குக் குறைவில்லாதிருக்கும்-

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைத் தமிழ்க் கட்சிகள் ‘எண்ணெய்ச் சீலையை நாய்கள் பிய்த்ததுபோல’க் கையாண்டுகொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பொதுநிலைப்பாடு புதிதாக என்ன இருக்கப் போகிறது? அப்படித்தான் ஐக்கியப்பட்ட ‘புதிய’ பொதுநிலைப்பாட்டு அற்புதமொன்று தமிழர் அரசியலில் நிகழ்ந்தாலும், அப்பொதுநிலைப்பாடு என்னவாகவிருக்கப் போகிறது? அப்பொதுநிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யப்போகும் தமிழ் அரசியல் கட்சி எது? பொது வேட்பாளர் யார்? இவைபற்றியெல்லாம் தெளிவில்லாமல் பொது வேட்பாளர் பற்றிப் பேசுவது பெயர் தெரியாத அல்லது இல்லாத ஊருக்கு வழி சொல்வதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.