இலக்கியச்சோலை

வ. ந. கிரிதரனின் “கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள்” …. கதைத் தொகுதி! … முருகபூபதி.

படித்தோம் சொல்கின்றோம்:

கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும்

வ. ந. கிரிதரனின் “கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள்” …. கதைத் தொகுதி!

முருகபூபதி.

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுத நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம்.

எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது !

யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

தனது பத்து வயதுப் பராயத்திலிருந்தே இலக்கியப் பிரதிகளை எழுதிவரும் கிரிதரன், கனடாவுக்கு புலம் பெயர்ந்த பின்னரும் எழுத்தூழியத்திற்கு ஓய்வு தராமல், தொடர்ந்தும் எழுதிவருகிறார். பதிவுகள் இணைய இதழை கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்திவரும் கிரிதரன், அதன் மூலம் உலகெங்கும் வாழும் படைப்பிலைக்கியவாதிகளுக்கு போதியளவு களம் வழங்கி வருகிறார்.

கிரிதரனின் படைப்புகள் இலங்கை, புகலிட நாடுகள் மற்றும் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் வெளியாகின்றன.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் இவரது படைப்புகளைப்பற்றி முனைவர் பட்ட, தத்துவமானிப் பட்டப்படிப்புகளுக்காக ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொந்துப்பறவைகள் சிறுகதை, சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் உயர் கல்வித் தமிழ்ப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் தொகுப்பில் 25 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் சிலவற்றை ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் நான் படித்திருந்தாலும், மீண்டும் இத்தொகுப்பில் படிக்கின்றபோது, புதிதாக படித்தமை போன்றதோர் உணர்வினையே தருகின்றன.

தமது தாயகம் விட்டுச்சென்றவர்களில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் தங்கள் தாயகம் பற்றிய நினைவுகளுடன்தான் எழுதுகிறார்கள் என்ற குறையை அண்மைக்காலமாக சில தமிழக விமர்சகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

ஆனால், அந்த விமர்கர்களுக்கு இந்த புலம்பெயர் படைப்பாளிகளின் வலிகள் தெரிவதில்லை. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தமது தாயகத்தில் இழந்தது அநேகம். புகலிடத்தில் இழந்ததும் அநேகம். இந்த நினைவுகள் சஞ்சரிக்கும் மனநிலையுடன்தான் அவர்கள் எங்குசென்றாலும் எழுதிக்கொண்டிருப்பார்கள்.

எனினும் கிரிதரன், இந்தத் தொகுப்பில் பதிவேற்றியிருக்கும் கதைகளில், தான் வாழும் கனடா தேசத்தின் டொரண்டோ மாநகர நிலக்காட்சியையும், இங்கு வாழும் பல்லின மக்களின் இயல்புகளையும், அதேவேளை இங்கு குடியேறிய ஈழமக்களின் வாழ்வுக்கோலங்களையும் நேர்த்தியாக சித்திரித்துள்ளார்.

கிரிதரன் தமது என்னுரையில் இவ்வாறு சொல்கிறார்: “ இங்குள்ள கதைகள் அனைத்துமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அல்லது நான் நேரில் பார்த்தறிந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை. உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை

உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம் . “

ஆம். அதுதான் உண்மை ! எனக்கும் அந்த உணர்வே வந்தது.

“ தமது வாழ்வின் தரிசனங்கள்தான் தாம் எழுதும் கதைகள். “ என்று சொல்லி வருபவர்கள்தான் படைப்பாளிகள்.

கிரிதரன் சிறந்த கதைசொல்லி. இவரது இக்கதைகளை படிக்கும்போது, எமது வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறதே, இத்தகைய காலங்களை நாமும் கடந்து வந்திருக்கின்றோமே என்ற உணர்வே எழும்!

அதனால், வாசக அனுபவத்திலும் மிக நெருக்கமானவையாக கிரிதரனின் கதைகள் அமைந்துள்ளன.

மகாத்மா காந்தியின் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது. ஒருசமயம் அவர் தெரியாத்தனமாக ஆட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டார். தெரிந்தவுடன் அவரது மனம் பதைபதைக்கிறது.

தனது வயிற்றிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டி அலறிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எழுந்து தான் மிகவும் அவதிப்பட்டதாக காந்தி எழுதுகிறார்.

கிரிதரனின் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு மா( நா) ட்டுப் பிரச்சினை என்ற கதை, எனக்கு காந்தியை மட்டுமல்ல என்னையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மாடுகளை இறைச்சிக்காக துண்டுபோடும் ஒரு பெரிய கசாப்புத் தொழிற்சாலையிலிருந்து ஒரு மாடு தப்பி ஓடிவிட்ட கதைதான் இது. இதில் வரும் பொன்னையா , மீண்டும் முழுச்சைவமாகிவிட்டான் என்று இக்கதையை முடித்திருக்கிறார்.

எனக்கு, இக்கதையை வாசித்தபோது 1983 இல் எங்கள் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. எங்கள் அப்பா இறந்து, ஒரு வாரம் கழித்து எட்டுச்செலவு நிகழ்வுக்காக, சமைப்பதற்கு எனது தம்பி ஒரு ஆட்டைக்கொண்டுவந்து வாசலில் கட்டி, அது உண்பதற்கு பலா இலைக் கிளையினையும் ஒடித்துவைத்திருந்தான். நான் வேலையால் திரும்பி வருகின்றேன். அந்த ஆடு அலறிக்கொண்டிருந்தது.

ஆடு எப்படி இங்கே வந்தது ? எனக்கேட்டேன். மறுநாள் சமையலுக்கு என்றார்கள். எனக்கு பொல்லாத கோபம் வந்தது. “ எட்டுச்செலவு விருந்துக்கு ஆடுதான் அவசியமோ ? “ என்று கத்தியவாறு, வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு என்னை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள். நானும் இறைச்சி உண்ணாதவன்தான்.

1970 களில் புதுக்கவிதை வீச்சாக வெளிவந்த காலத்தில் நானும் ஒரு கவிதை எழுதிப் பார்த்திருக்கின்றேன்.

“ மாட்டிறைச்சி சாப்பிடுவது பாவம் “ என்றான் சைவப்பழம்.

அதன் பால் அருந்துகிறாயே …? என்றான் இறைச்சிப் பிரியன்.

“ அம்மாவிடமும் பால் அருந்தினாய் “ என்றான் அந்த சைவப்பழம் !

இக்கவிதை எமது வளர்மதி கையொழுத்து இதழில் அப்போது வெளியானது.

“ எப்படி வெளிநாட்டு வாழ்க்கை..? எனக்கேட்பவர்களிடம், “ East or west home is the best “ எனச் சொல்லும் இலங்கை – இந்திய முதியவர்களைக் கண்டிருப்பீர்கள்.

கனடாவுக்கு அருகிலிருக்கும் கலிபோர்னியாவிலிருந்து வந்த ஒரு கறுப்பின மனிதனும் கூட அத்தகைய மனநிலையில்தான் இருக்கின்றான் என்பதை உணர்த்துகிறது “ ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன் “ என்ற கதை.

மனைவி என்ற கதை, எமது தாயகத்தில் நடக்கக்கூடியது அல்ல. புகலிடத்தில் இப்படியும் நடக்குமா..? என எமது தாயக வாசகர்கள் கேள்வி கேட்கத்தூண்டும் கதைதான் மனைவி !

புகலிடத்தில் வருவாய்க்காக செய்யும் தொழில்களுக்கு பரிபாஷையில் பெயர் வைத்திருப்பார்கள். புகலிட வாசிகளுக்குத்தான் அது புரியும்.

கனடாவில் கிட்டார் அடிப்பது என்பது ரெஸ்டாரண்டில் கோப்பை கழுவும் தொழிலுக்கான பரிபாஷைதான் என்பதை கணவன் என்ற ஐந்தாவது கதையிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்த மேற்குலக நாடுகளிலும் வீதியோர பிச்சைக்காரர்கள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கும் சொந்த பந்தங்கள் இருக்கும். வீடு வாசல் இருந்திருக்கும். அத்தகைய பலரை நான் வாழும் அவுஸ்திரேலியாக் கண்டத்திலும் பார்த்திருக்கின்றேன். ஏனைய சில நாடுகளிலும் கண்டிருக்கின்றேன். மான் ஹோல் என்ற கதையில் வரும் அத்தகைய ஒரு மனிதனை, கிரிதரன் ஜெயகாந்தனின் ரிஷிமூலம் கதையில் வரும் ராஜா ராமனின் உருவத்திற்கு ஒப்பிட்டு வர்ணித்திருப்பார். ஒருநாள் அவன் அந்த மான் ஹோலுக்குள் இறந்து கிடக்கிறான்.

தொலைவில் இருளில் ரொமானென்ஸ் கட்டடக்கலைப் பாணியிலமைந்திருந்த ஒண்டாரியோ பாராளுமன்றம் அழகாகப் பிரகாசமாகத் தெரிந்தது. “அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக்கொண்டிருக்கிறார்கள் “ என்று அவன் ஒருநாள் சொன்னது நினைவில் தெறித்தது என்று இக்கதையை கிரிதரன் முடிக்கிறார்.

மக்களின் வாக்குகளில் தெரிவாகி, பாராளு மன்ற ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருப்பவர்கள் மீது சாட்டையாக வீழுகிறது இந்த வசனம்.

கிரிதரன் இலங்கையில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். அவரது பார்வையில் கனடா தேசத்தின் கட்டடங்கள் காடுகளாகத் தெரிகின்றன. அக்காட்டினுள் வாழும் அவரால் இத்தேசத்தின் நிலக்காட்சியையும் கட்டடக்கலை பற்றியும் சித்திரிக்க முடிந்திருக்கிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொந்துப்பறவைகள், கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், காங்ரீட் வனத்துக் குருவிகள் , பொற்கூண்டுக்கிளிகள், யன்னல் முதலான கதைகளில் அந்தப்பண்பினைக் காணமுடிகிறது.

புகலிடத்தில் வாழும் தனது தாயகத்தைச் சேர்ந்த மாந்தர்களை மட்டுமன்றி, அயல் நாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களைப்பற்றி மட்டுமன்றி, வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்த சுண்டெலிகளைப் பற்றியும் கிரிதரன் சித்திரித்திருக்கிறார்.

இங்குதான் அவரது என்னுரை வாசகங்கள் எமக்கு மீண்டும் நினைவுக்கு வருகின்றன.

விரக்தியால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிப்பேசும் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் என்ற கதையில் வரும் முயல்களும், ஒருநாள் கூட்டை திறந்துவிட்டமையால் மாடியிலிருந்து குதித்துவிடுகின்றன.

இக்கதையை படித்துவிட்டு சில நிமிடங்கள் உறைந்திருந்தேன். எனது பார்வையில் இத்தொகுப்பின் மகுடக்கதை இதுதான்.

இத்தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றுள்ள பிள்ளைக்காதல், சுமணதாஸ் பாஸ் ஆகிய இரண்டு குறுநாவல்களும் மிகுந்த கவனத்திற்குரியவை.

பிள்ளைக் காதலை படிக்கும் எவரும் , தங்களையே திரும்பிப் பார்த்துக்கொள்வார்கள். சுயவிமர்சனமும் செய்துகொள்ளக்கூடும். அனைவருக்கும் முதல் காதல் அனுபவம் உண்டு. மகாகவி பாரதியும் விலக்கல்ல என்ற செய்தியும் இக்கதையில் வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு நூலகத்தில் சந்திக்கும் சேகரனுக்கும் பானுவுக்கும் தங்கள் பள்ளிக்காதல் நினைவுக்கு வருகிறது. பிள்ளைக்காதலை படிக்கத் தொடங்கியபோது, எமக்கும் இதுபோன்ற பல கதைகளை முன்னர் படித்த நினைவு வருகின்றது.

கூடவே இயக்குநர் சேரனின் ஆட்டோ கிராஃப் என்ற திரைப்படமும் ஞாபகத்திற்கு வருகிறது. இது ஞாபகத்திற்கு வந்த மறுகணம், கிரிதரனும் அந்த திரைப்படத்தை நினைவுட்டுகிறார்.

அண்மையில் நான் பார்த்த ஒரு தெலுங்குத் திரைப்படத்திலும் இதுபோன்ற கதைதான் வருகிறது.

தமது முதல் காதலை தமது துணையிடம் சொல்பவர்கள் எத்தகைய எதிர்வினைகளைப் பெறுவார்கள் என்பது பற்றி ருஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயிலிருந்தும் கிரிதரன் ஒரு செய்தியை இக்கதையில் சொல்கிறார்.

இக்கதை வெகுசுவாரசியமாக நகர்த்தப்பட்டிருக்கிறது. முதல் காதல் அனுபவம் மிக்கவர்கள் இக்கதையை வாசிக்கும்போது தங்களுக்குள் நனவிடை தோய்ந்துகொள்வார்கள் என்பது மாத்திரம் நிச்சயம் !

ஜெயகாந்தனும் பிணக்கு என்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சிறுகதையை எழுதியிருக்கிறார். நானும் அந்நியமற்ற உறவுகள் என்ற சிறுகதையை ( மல்லிகையில் ) எழுதியிருக்கின்றேன்.

கிரிதரனின் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றும் ஒரு குறுநாவலான சுமணதாஸ் பாஸ், கிரிதரனின் இளமைக்காலத்தைப் பேசுகிறது. வவுனியாவில் குருமண்காடு அன்றிருந்த கோலத்தையும் அங்கு வாழ்ந்த சிங்களவர் சுமணதாஸ் பாஸ் என்ற மனிதநேயனையும் பற்றிச் சொல்கிறது.

இக்குறுநாவலிலும் கிரிதரன் அந்த வன்னிமண்ணின் நிலக்காட்சியை அழகாக சித்திரிக்கிறார்.

அங்குள்ள இயற்கையின் கொடையையும் அங்கு வாழும் குரங்குகள் முதல் ஊர்ந்து திரியும் ஜீவராசிகளையும் காண்பிக்கின்றார். வற்றாத குளங்களின் பெயர்கள் இறுதியில் ஊர்களின் பெயர்களாகிவிட்ட செய்தியும் தெரிகிறது.

அத்தகைய ஒரு குளத்தில் நீராடச்சென்றபோது மூழ்கி இறக்கவிருந்த தன்னை அந்த சிங்கள இனத்து மனிதன் எவ்வாறு காப்பாற்றினான் என்பதையும் சொல்லி, இறுதியில் போர்க்காலத்தில், அதே மனிதனும் அவனது குடும்பமும் தமிழ் இயக்கம் ஒன்றினால், சந்தேகத்தின் பேரில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலையும் இக்கதை சொல்கிறது.

கடந்து சென்ற அந்தக்கொடிய போர்க்காலம், இதுபோன்ற ஏராளமான இனமுரண்பாட்டுக் கதைகளை பதிவுசெய்து வைத்திருக்கிறது.

அந்த வரிசையில் கிரிதரனும் உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் இச்சிறுகதையை படைத்திருக்கிறார்.

“ சமூகம் இப்படித்தான் இருக்கும், ஆனால், எப்படி இருக்கவேண்டும். “ என்று சிந்திப்பவர்கள்தான் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள்.

அந்தவகையில் தான் வாழும் சூழலையும் மாந்தர்களின் எண்ணவோட்டங்களையும் உள்வாங்கிக்கொண்டு, பிரசார வாடையின்றி கலைத்துவமாக இக்கதைகளை படைத்திருக்கும் கிரிதரனுக்கு எமது வாழ்த்துக்கள்.

இத்தொகுப்பினை அமேசன் கிண்டிலிலும் தரவிறக்கம் செய்து படிக்கமுடியும்.

அச்சுப்பிரதிக்கு: ஜீவநதி – கலை அகம், அல்வாய், இலங்கை. அல்லது வ. ந. கிரிதரன் : ngiri2704@rogers.com

—0—

Loading

One Comment

  1. Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always my friends! Greetings from Sivan Tamil Temple/ Sivayogi Ashram/ Sivan Tamil Kultur Senter/ Sculpture Park Korslundvegen 45,2092 Minnesund Norway

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.