“யானைக்கு மதம் பிடிப்பதில்லை” …. சிறுகதை – 70 …. அண்டனூர் சுரா.
“அட்ரட்ரா யானை வருது, யானை வருது, யானை வருது…”
விடலைப் பையன்கள் தலையில் கைக்குட்டைக் கட்டிக்கொண்டு பாடித் துள்ளிக்குதித்து ஆடியது பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவர்களது ஆட்டம் பார்க்க முதலில் மாரியம்மன்னோ, காளியம்மன்னோ அணைந்து ஆடுவதைப் போலிருந்தது. சாமி வந்துதான் ஆடுகிறார்களோ என்று கோயிலுக்குள் நுழைய வரிசைக்கட்டி நின்றவர்கள் அவர்களின் பக்கமாகத் திரும்பி கையெடுத்து கும்பிடத் தொடங்கினார்கள். பிறகுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் சாமி அணைந்து ஆடவில்லை, யானையை வரவேற்று ஆடுகிறார்கள் என்று.
அவர்கள் சொல்லி ஆடியதைப் போல சற்றுநேரத்தில் கோவிலுக்கு யானை வந்து சேர்ந்தது. நேற்றைக்கே வந்திருக்க வேண்டிய யானை அது. அப்பாடா, இப்பொழுதேனும் வந்ததே என்று பக்தர்கள் பேசிக்கொள்வதைக் கேட்க முடிந்தது. யானை வந்து சேர்ந்ததும் கோயில் திருவிழா யானைத் திருவிழாவாக மாறிப் போனது.
திருவிழாக் கூட்டத்தில் பெண்களை விடவும் ஆடவர்களின் கூட்டம் செறிவாக இருந்தது. தலையில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு கையில் அவரவர் சாதி நிற கயிறுகளைக் முடிந்துகொண்டு மரங்களிலும் ஓட்டுக் கூரைகளிலும் மாடிவீட்டு பால்கனிகளிலும் நின்றவாறு வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். சிலர் கூழ்மத்தில் நிகழும் பிரௌனின் இயக்கத் துகள்களைப் போல அதற்கும் இதற்குமாக ஒழுங்கற்று ஓடித் திரிந்தார்கள்.
நான் என் மனைவி பிள்ளைகளுடன் கோவில் கூட்டத்திற்குள் ஒரு குடும்பமாக கரைந்து போயிருந்தேன். கொசு மொய்ப்பதைப் போன்று ‘கொய்ங்’ சத்தம் சுற்றிலும் வியாபித்துக்கொண்டிருந்தது.
“ பாம், பாம்….” ஐஸ் விற்பனர்கள்.
“ சர்பத், சர்பத்….”, “ பூ வாங்கலையோ பூ..”
“ மிக்சர், காராசேவ், முறுக்கே…”, “அர்ச்சனைத் தட்டு….” என்று கூப்பாடுகளில் கோயில் திருவிழா களைக் கட்டத் தொடங்கியது. இதற்கிடையில் பலூன் விற்பவர்களின் சத்தமும், அது உடைபடும் அரவமும் கேட்டவண்ணமிருந்தன. அரைகுறையாக சோடிக்கப்பட்ட தேர் பாதி நிர்வாணத்துடன் நின்றுகொண்டிருந்தது. அதில் இளைஞர்கள் ஏறி உட்கார்ந்து, தலைகீழாகத் தொங்கிகொண்டிருந்தார்கள்.
நான், என் மகள், மகன் மூவரும் யானையைத் தேடும் முனைப்பில் இருந்தோம். என் மனைவிக்கு யானையைப் பார்ப்பதற்கு முன்னால் இன்னொரு வேலை முக்கியமென இருந்தது. சாமியின் அவதாரச் சிலையைப் பார்த்துக் கையெடுத்து கும்பிடவேணும் என்கிற ஆவற்பெருக்கு அது. அவள் சிலை பக்தி. ஒரு கல்லை எடுத்து அதற்கொரு பொட்டு வைத்தால் போதும். அவளுக்குள் சாமி வந்து ஆடத் தொடங்கிவிடும்.
கோயிலுக்கும் வெளியே ஒரு தேர் போன்ற சோடிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அந்த சாமியின் சிலை இருந்தது. வெண்கலச் சிலை. சிலைக்குக் காவலாகவும் பணிவிடைச் செய்யவும் பூணூல் அணிந்த நான்கைந்து அர்ச்சகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் பெண்கள் நீட்டும் மாலையை வாங்கி பல்லக்கின் மீது விட்டெறிந்துவிட்டு, ஒரு முழம் பூவைக் கிள்ளி அவர்களின் கையில் கொடுத்துகொண்டிருந்தார்கள். தேங்காய் உடைத்து, சூடம் காட்டும் சம்பிரதாயங்கள் அந்த இடத்தில் நடந்தேறவில்லை. அந்தச் சடங்கு கோயிலுக்குள் நடந்துகொண்டிருந்தது. கோயிலுக்குள் அவ்வளவு எளிதில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு வரிசை நீண்டு மலைப் பாம்பைப் போல மெல்ல ஊர்ந்துக்கொண்டிருந்தது.
பல்லக்கைச் சுற்றிலும் நிறைய பெண்கள் சூழ்ந்திருந்தார்கள். சுடிதார்கள், தாவணிகள், சேலைகள், பாவாடைச்சட்டைகள், லெக்கிங்ஸ்,… என நளின உடைகளில் பெண்கள் பவனி வந்தார்கள். மாலை சூடிய சிலையை விடவும் பெண்கள் சூழ்ந்த சிலை பார்க்க அழகாகத் தெரிந்தது.
பெண்களைச் சுற்றிலும் ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் அணிந்த ஆடவர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தன. அவர்கள் பெண்களை இடிப்பதும் உரசுவதும் கேலிக் கிண்டல் செய்வதுமாக இருந்தார்கள். சில பெண்கள் கேலி கிண்டலுக்குப் பெரிதென சிரித்தார்கள். சிலர் முறைத்தார்கள். சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள். ஒரு பெண் காவலர் தனியே நின்றவாறு லத்தியைக் காட்டி மிரட்டி வரிசையை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தார். அவரையும் ஒருவன் விட்டுவைக்காமல் பின்பக்கமாகச் சென்று ஒரு இடி இடித்துவிட்டு தூரத்தில் நின்று நண்பர்களிடம் சைகைசெய்து சிரித்தான்.
யானை ஒரு வழியாக கோயிலின் தேர்வடப் பாதைக்கு வந்துசேர்ந்தது. அதுவரைக்கும் சிலையைச் சுற்றி நின்ற விடலைகள் யானை வந்ததும் யானையை வட்டங்கட்டத் தொடங்கினார்கள்.
“யானை யானை அழகர் யானை…” எனப் பாடத் தொடங்கியிருந்தாள் என் மகள். அவளுடைய பாடப் புத்தகத்தில் அந்தப் பாடல் இருந்தது. யானையை அவள் இதற்கும் முன்பு பார்த்தவளில்லை. இப்பொழுது வரைக்கும்கூட அவள் யானையைப் பார்க்கவில்லைதான். ‘ அய்….’ யானை என்று பலரும் சொல்லியதைக் கேட்டு அந்தப் பாடலைப் பாடியிருந்தாள்.
பையன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் “ அட்ரட்ரா யானை வருது, யானை வருது, யானை வருது…” என்று ஒரு சினிமாப் பாடலின் மெட்டை எடுத்துவைத்துகொண்டு யானைக்குப் பெரியதொரு வரவேற்பைக் கொடுத்தான்.
நான் என் மகளைத் தூக்கி தோளில் வைத்துகொண்டேன். அவள் என் தோளில் உட்கார்ந்தவாறு தலையை நீட்டி, எட்டிப் பார்த்தாள். “அப்பா பாருங்களே. எவ்ளோ பெரிசு…” என்றவாறு கால்களை உதறினாள். கொண்டாட்டத்தில் என் தலையில் அடித்தாள். நான் அவளை இறுகப் பிடித்துக்கொண்டேன். கூட்டம் கோயில், பல்லக்குச் சிலையிலிருந்து விலகி யானையை வட்டம் கட்டத் தொடங்கியது. நான் என் மனைவியைத் தேடத் தொடங்கினேன். அவள் நான்கைந்து பையன்களுடன் இடி வாங்கிக்கொண்டு அவர்களை வசை பாடியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
“ இந்தக் கூட்ட நெரிசலில் சிலையைப் பார்க்க போகாட்டி என்னவாம்..?” என்றேன் நான்.
“ என்னது சிலையா?”
“ பின்னே?”
“வாயைக் கழுவுங்க. சாமி, சாமி!” என்றாள் என் மனைவி. அப்படிச் சொல்லுகையில் அவளுடைய கண்களில் பக்தி தாண்டவமாடியது.
“ சரி, இந்தச் சாமியை நாளைக்குக் கும்பிட்டுக்கிட்டா என்னவாம்?”
“ திருவிழா இன்னைக்கு. நாளைக்கில்ல.”
“நம்ம ஊர் சாமிதானே. எங்கே போயிடப் போகுது.”
“ உங்களுக்கு ஒன்னும் தெரியாது. வாய மூடிக்கினு யானையைப் பாருங்க..” என்றாள் அவளுக்கே உரித்தான கோபத்துடன்.
நான் முகத்தைச் சட்டெனத் திருப்பிக்கொண்டு மகனை ஒரு கையில் பற்றி மறு கையால் மகளைப் பிடித்தபடி யானையைப் பார்த்தேன். என் மனைவி யானையைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுவதும், ‘உச்’ கொட்டுவதுமாக இருந்தாள்.
யானையின் நெற்றியில் பெரிய ராமம் இடப்பட்டிருந்தது. தென்கலையைக் குறிக்கும் ராமம் அது. அதன் கழுத்தில் நீண்ட தடியுடன் ஒரு பாகன் உட்கார்ந்திருந்தான். யானை தும்பிக்கையை இடது வலமாக ஆட்டிக்கொண்டிருந்தது. முன் கால்களால் தரையை உரசி பூமியை நகர்த்திவிடுவதைப் போல செய்துகொண்டிருந்தது.
என் மகள் சொன்னாள். “அப்பா, நீங்களும் அதே மாதிரி ஆடுங்களேன்..”
“ எதுமாதிரி?”
“ யானையைப் பாருங்க. அது மாதிரி….’ என்றவாறு எம்பிக் குதித்தாள். நான் தோளுடன் சேர்த்து தலையை அசைத்தேன். அவள் என் தோளில் உட்கார்ந்தவாறு ‘ அய்….’ என்று துள்ளிக் குதித்தாள்.
கூட்டம் நெரிசலாக இருந்தது. எனக்கும் மனைவிக்குமிடையே நான்கைந்து பேர் நுழைந்திருந்தார்கள். மனைவி யானையையும் சாமியையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டவளாய் நின்றுவிட்டிருந்தாள். எங்கள் இருவருக்குமிடையில் இன்னும் இரண்டு பேர் நுழைந்திருந்தார்கள்.
என் மனைவி பிடித்து வைத்த சிலையைப் போல அதே இடத்தில் நின்றுவிட்டாள். அவளது கைகள் கும்பிட உதடுகள் முணுமுணுத்தன. நான் என் மகளைத் தோளில் தாங்கியபடி மகனை இழுத்துகொண்டு நெரிசலினூடே மெல்ல நகர்ந்தேன்.
நான் என் மனைவியை ஒரு கணம் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு ‘நகர்ந்திடுவேனா….’ என்று சொல்வதைப் நின்றுகொண்டிருந்தாள். கூட்டம் அடைசலாக மொய்க்கத் தொடங்கியது. அர்ச்சகர் ஒருவர் மைக்கில் சமஸ்கிருதம் ஒப்பித்துகொண்டிருந்தார். இடையிடையே “சுவாமி யானை பவனி வரப் போகிறார்…” என்பதை அறிவிக்கையாகச் சொன்னார்.
“இதோ, இன்னும் சற்றுநேரத்தில்…”
“ பக்தக்கோடிகளே… சுவாமி பக்தர்களுக்கு காட்சித் தரப்போகிறார்….” என்கிற மாதிரியான வாசகங்களைச் சொல்லிக்கொண்டு கூட்டம் கலைந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.
“அப்பா, யானை ஏன்ப்பா இப்படி அசைஞ்சுக்கிட்டே இருக்கு?” என் மகள் என்னை ஒரு உலுக்கு உலுக்கியவளாய் கேட்டாள். நான் இதற்கு என்ன பதில் சொல்வதாம், யோசித்தவனாய் நகர்ந்தேன்.
அவள் விடுவதாக இல்லை. “ ஏன்ப்பா?” விடாது கேட்டாள்.
“ நீ ஏன் இப்படி கேள்வியா கேட்டுக்கிட்டு இருக்கே.?” அவளைப் பார்த்து கேட்டுவைத்தேன்.
அவள் கோபித்துக்கொண்டிருக்க வேணும். அவள் எதுவும் பேசவில்லை. என்னிடமிருந்து பார்வையை எடுத்து யானை மீது குவிக்கத் தொடங்கினாள்.
“ அம்மு…”
“ அப்பா….” என்று பதில் கொடுத்தாள்.
“ உன்னால கேள்வி கேட்காம எப்படி இருக்க முடியாதோ, அப்படி யானையால அசையாம இருக்கமுடியாது,..”
என் பதிலால் அவள் திருப்தி அடைந்திருக்க வேணும். அவளது சந்தோஷம் உடல் அசைவில் தெரிந்தது. அவள் உடம்பை மெல்ல வளைத்து அவளது முகத்தை என் முகத்திற்கு நேராகக்கொண்டு வந்து என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டாள். திரும்பவும் நான் மனைவியைப் பார்த்தேன். அவள் கையெடுத்து கும்பிட்டபடி யானையைப் பார்த்துகொண்டிருந்தாள். அவளுக்கும் எனக்குமான இடைவெளியில் ஒன்றிரண்டு பெண்கள் சூழத் தொடங்கினார்கள். அத்தனை பேரும் லெக்கிங்ஸ் அணிந்திருந்தார்கள். நான் மகளிடம் கேட்டேன். “ அம்மு, அம்மா எங்கே….?’
அவள் என் தோளில் உட்கார்ந்தவாறு பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்து, “அதோ, அங்கே நிற்கிறாங்கப்பா…” என்றவள், “ கூப்பிடட்டுமா,” என்று கேட்டாள்.
“ வேணாம்.” என்றேன்.
“ ஏன்ங்கப்பா?”
“ நீனா பாறேன். கொஞ்சநேரத்தில அத்தனை பேரையும் இடிச்சித் தள்ளிட்டு நம்மக்கிட்ட வந்திடுவா பாரு..” என்றவனாய் கொடும்புக்குள் சிரித்துக்கொண்டேன்.
நான் சொல்லி வாய் மூடவில்லை. அவள் என்னை நெருக்கிக்கொண்டிருந்த பெண்களை வசைபாடி இடித்துத் தள்ளியவளாய் என் அருகினில் வந்துநின்று பெருமூச்சொரிந்தாள்.
அவளது செய்கையைப் பார்த்து என் மகள் ‘கொக், கொக்’ என்று சிரித்தாள். நான் அவளை மெல்லக் கிள்ளியபடி ‘உஷ்!’ கொட்டினேன்.
சுவாமி யானை மீது பவனி வரப்போகும் படலத்தை ஓர் அர்ச்சகர் அழகாக ஒலிப் பெருக்கியில் வரையறுத்துகொண்டிருந்தார். மனனமாக வந்து விழுந்த வார்த்தைகளில் ‘பக்தக் கோடிகளே…’ என்கிற பதம் நிரம்பி வழிந்தன.
என் பக்கத்தில் ஒருவர் பக்தி மணக்க நின்றுகொண்டிருந்தார். நெற்றியில் திருநீறு அணிந்து கையை தலைக்கு மேல் தூக்கியபடி நின்றுகொண்டிருந்தார். அவரை விளித்தேன். “ அய்யா….”
“ என்ன சுவாமி?”
“ சுவாமியெல்லாம் வேணாம். யானை பவனிவர ஏன் இவ்ளோ நேரமாகுது?”
“ ராகு காலம் முடியணுங்களே” என்றார்.
“ ஓகோ, ராகு காலம் முடிய எவ்ளோ நேரம் ஆகும்?”
“ பத்தே நிமிசம்தான்..” என்றவாறு பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்துகொண்டார்.
நான் என் மகனைப் பிடித்திருந்த கையை எடுத்து மணியைப் பார்த்தேன். மணி மூன்றரையைத் தொட பத்து நிமிடங்கள் இருந்தன. சரியாக மூன்றரை மணிக்கு யானை பவனி வரத் தொடங்கிவிடும்… என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
முதலுரிமைக்காரர்கள் நாட்டாமைக்கான நடை, உடை பாவணையில் சுற்றம்சூழ கோயிலுக்கு வந்தார். அவர்களை வரவேற்கும் பொருட்டு தூரத்தில் பறை இசைத்துகொண்டிருந்தது. யானைக்கும் அருகில் கோயில் வாசலில் கேரளத்து செண்டை மேளம் வாசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழைகையில் யானையின் தும்பிக்கைக்கு ஒரு ரோஜாப்பூ மாலையைக் கொடுத்து அதை உயரத் தூக்கி நாட்டாமைக்காரர் கழுத்தில் அணிவிக்கச் சொன்னார்கள். யானை பாகன் சொன்னதைக் கேட்டு யானை அப்படியே செய்தது. யானை மாலை அணிவிக்கையில் செண்டை மேளமும் பறையும் உரக்க இசைந்தன. செண்டை மேளத்தின் இசையால் உள்ளூர் பறையிசை எடுபடவில்லை. நான் மணியைப் பார்த்தேன். மனதிற்குள் நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரத்தை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் தேவையாக இருந்தன.
நான் பத்து வருடத்திற்கு முன் இந்தத் திருவிழாவைப் பார்த்தவன். அப்பொழுது இக்கோயில் பழையக் கோயிலாக இருந்தது. கட்டுமானத்தில் ஆல, அரசமரக் கன்றுகள் முளைத்து பார்க்க ஒரு குட்டிக் காட்டைப் போன்றிருந்தது. அப்பொழுது இவ்வளவு விமர்சையாக திருவிழா நடைபெற்றதில்லை. ஆண்டுக்கொரு முறை சித்திரை இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை திருவிழாத் தொடங்கி அன்றைய தினமே முடிந்துவிடும் திருவிழாவாக இருந்தது. ஈசலுக்கு ஒரு நாள் வாழ்வு போல ஒரு நாள் திருவிழா அது. அப்பொழுது இந்த யானை, வெண்கலச் சிலை, முதல் உரிமை ,மாலை அணிவிக்கும் நிகழ்வு எதுவும் நடந்ததில்லை.
ஒரு கல் சிலையைக் கோயிலுக்கு வெளியே வைத்து, மஞ்சள் பூசி சோடித்திருப்பார்கள். அவ்வளவேதான்! சிலையை ஒரு பல்லக்கில் வைத்து சாயந்திரம் வாக்கில் தெருவைச் சுற்றித் தூக்கி வருவார்கள். பல்லக்கு சிலையில் ஒரு அய்யர் மட்டும் உட்கார்ந்திருப்பார். ஆடவர்கள் மஞ்சள் நீராடுவார்கள். பெண்கள் கோலமாவுப் பொடிகளை அள்ளி மாமன், மைத்துனர்களின் மீது தெளிப்பார்கள். அவ்வளவேதான் இந்தத் திருவிழா!
அந்தப் பழையக் கோபுரத்தைப் புதுப்பித்து குடமுழக்கு நடத்தியிருந்தார்கள். யானை வருமளவிற்கு இக்கோயில் ஒன்றும் பெரியது இல்லை. கோவிலை விசேசப்படுத்துவதற்காக யானையை ஊரார்கள் வரவழைத்திருந்தார்கள்.
என் அருகில் நின்றுகொண்டிருந்தவர் சொன்னார். “ போன வருசம் இவ்ளோ கூட்டமில்ல..”
இன்னொருத்தர் சொன்னார், “இந்த சாமி சக்தியுள்ள சாமியப்பா…”
“டட டம்….டட டம்…..டட டம்.”
செண்டை மேளம் செவிப் பறையில் அறையும்படியாக முழங்கிக்கொண்டிருந்தது. அதன் சுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதைக் கொண்டு பார்க்கையில் யானைப் பவனி தொடங்கப் போவதைக் கணிக்க முடிந்தது. இரண்டு பேர் சுவாமிக்கான அலங்காரக் குடையை தூக்கிப் பிடித்தார்கள்.
செண்டை பயங்கரமாக இசைந்தது. வாண வேடிக்கை அமர்க்களப்பட்டது.
“பக்தக் கோடிகளே, நீங்கள் இவ்வளவு நேரம் எதிர்ப்பார்த்த…”
பக்தக் கோடிகளின் ஆரவாரம் ஆர்ப்பரித்தன. சூழ்ந்துநின்ற அத்தனைபேர் கைகளும் கும்பிடக்குவிந்தன. எல்லாரும் கால்களை உந்திக்கொடுத்து எக்கி யானையைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
யானை கழுத்தில் உட்கார்ந்திருந்த பாகன் மெல்ல கீழே இறங்கத் தொடங்கினான். இறங்கையில் எதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும் போலும். அந்த இடத்தில் ஒரே களேபரமாக இருந்தது. பாகன் தவறி கீழே விழுந்திருக்க வேணும். யானை அதைக் கவனித்திருக்க வேணும். யானை தன் தும்பிக்கையை உயரத் தூக்கி சத்தமாக ஒரு பிளிறு பிளிறி நிறுத்தியது.
என் தோளில் உட்கார்ந்திருந்த என் மகள் திடுக்கிட்டாள். “அப்பப்பா, எனக்கு பயமா இருக்குப்பா. போயிடலாம்ப்பா…” என்றவாறு கால்களை உதறினாள்.
“பயப்படாதேம்மா. யானை அப்படிதான் கத்தும்” என்றேன் நான்.
என் மகன், “அப்பா, யானைக் கத்தாது. பிளிறும். ” என்றவனாய் சிரித்தான்.
“ ஆம், பிளிறும்.” என்றேன் நான்.
யானையின் அசைவு வேகமாக இருந்தது. யானையைச் சூழ்ந்திருந்த கும்பல் பவனிக்கு வழிவிட்டு விலகத் தொடங்கினார்கள். திருவிழாக் கூட்டம் நெரிசலும் தள்ளுமுள்ளுமாக இருந்தது.
முதல் உரிமைக்காரர் தலையில் பட்டுத்துண்டு தரித்து மிடுக்காகத் தெரிந்தார். அவரது கழுத்தில் அவர் உயர மாலைத் தொங்கிக் கிடந்தது. நெற்றியில் பெரிய பட்டையும், நடுவில் குங்குமமும் வைத்திருந்தார். அவரை நான்கைந்து பேர் தூக்கிவிட்டு யானையின்மீது அமர்த்தினார்கள். அவர் ஏறியதும் தொடை வரைக்கும் விலகிப் போயிருந்த வேட்டியைச் சரிசெய்துகொண்டு சற்றுமுன்னே நகர்ந்து உட்கார்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு அய்யர் யானையின் மீது ஏறினார். இவர்கள் ஏறியதும் ஒருவர் அலங்காரக் குடையை விரித்து தூக்கிப் பிடித்தார். நான்கைந்துபேர் சுவாமி சிலையைத் தூக்கி யானையின் கழுத்தின் மீது வைத்தார்கள். அதை லாவகமாக முதல் உரிமைக்காரர் வாங்கி மடியில் வைத்துகொண்டார். அவரது காதிற்குள் அய்யர் என்னவோ சொன்னதும் முதல் உரிமைக்காரர் முகம் பூரிக்க சத்தமாகச் சிரித்தார்.
“ ஊ…….ல…லல….ல….”
பெண்கள் நாவால் குலவியிட்டார்கள். ஒன்றிரண்டு பேர் சாமியாடத் தொடங்கினார்கள். பலரது கைகள் தலைக்கும்மேலே உயர்ந்து கும்பிடக் குவிந்தன.
என் பார்வை யானையின் முகத்தைப் பார்ப்பதில் இருந்தது. யானையின் முகம் பார்க்க படுகோரமாகத் தெரிந்தது. அதன் தும்பிக்கை படுவேகமாக அலசியது. யானை ஒரு கட்டுக்குள் நிற்கவில்லை. தன்மீது பாகன் உட்கார்ந்திருக்காத உணர்வை அந்த யானை உணர்ந்திருக்க வேணும். அல்லது சற்றுமுன் பாகன் தவறிக் கீழே விழுந்ததை அந்த யானை நினைவுகூர்ந்திருக்க வேணும். இவற்றில் ஏதோ ஒன்றால் யானை தன் தும்பிக்கையை உயரத்தூக்கி சற்றுமுன் பிளிறியதை விடவும் உரக்கப் பிளிறி உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கியது. யானை மீது உட்கார்ந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே சரிந்தார்கள். அவர்களுக்கும் முன்பு வெண்கலச் சிலை விழுந்துவிட்டிருந்தது. கூட்டம் நாலாபுறமும் சிதறித் தெறித்தது. அந்த இடம் பார்க்க கலவரமாக இருந்தது.
நான் மனைவி, பிள்ளைகளை வெளியேற்றியபடி சொன்னேன். “ வாங்க, வாங்க போயிடுவோம்! யானைக்கு மதம் பிடிச்சிருச்சு..”
என் மகன் என்னை ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு சொன்னான். “என்னங்கப்பா நீங்க. அது என்ன மனுசனா மதம் பிடிக்க. அது யானைங்கப்பா…”
யானை பெருங்குரலெடுத்து ஒரு பிளிறு பிளிறியது.