கதைகள்

“கனகர் கிராமம்” … தொடர் நாவல் …. அங்கம் – 32 …. செங்கதிரோன்.

 கனகரட்ணத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணம்தான். யாழ்ப்பாணத்தில் அள வெட்டிக்கிராமம். அவரது தந்தையார் மயில்வாகனம் பொதுமராமத்து இலாகாவின் ‘பி.டபிள்யூ-ஓவசியர்’ ஆகச் சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் பொத்துவிலுக்கு வந்து தனது குடும்பத்துடன் குடியேறியவர்.

பொத்துவிலுக்கு வந்து அரசாங்கக் கடமையாற்றியதோடு ஒப்பந்த வேலைகள் செய்து காணி, பூமி, வயல் வாங்கி – வேளாண்மை, தென்னந்தோட்டம் செய்து – மாட்டுப்பட்டிகள் வைத்திருந்து- எரிபொருள் நிரப்பு நிலையம் வைத்து – சினிமாக் கொட்டகை நிறுவி – வர்த்தகம் செய்து இப்படிப் பல தொழில்கள் செய்து தொழிலதிபராகவும், செல்வந்தராகவும் உயர்ந்தவர். அவருடைய மகன்தான் கனகரட்ணம். அவரது குடும்பத்தினர் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொத்துவில் வாசியாகவே மாறிவிட்டவர்கள். கனகரட்ணம் தனது ஆரம்பக்கல்வியைப் பொத்துவில் மெதடிஸ்தமிசன் பாடசாலையில்தான் பெற்றார்.

இந்தப் பின்னணியைப் பரசுராமனிடம் எடுத்துக்கூறி கோகுலன் மேலும் சில விளக்கங்களை முன்வைத்தான்.

மட்டக்களப்பில் சட்டசபைக்காலத்தில் உறுப்பினராகவும் பின்னர் கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய அமரர். நல்லையா மாஸ்ரரின் தந்தை வல்லிபுரம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் 1956 ஆம் ஆண்டிலிருந்து எல்லாப் பாராளுமன்றத் தேர்தல்களிலும் வென்று முடிசூடாமன்னன் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரையின் தந்தை செல்லையா யாழ்ப்பாணம். கல்குடாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1965 இலிருந்தே இருந்து வரும் கே.டபிள்யூ தேவநாயகத்தின் பெற்றோர் யாழ்ப்பாணம்.

நல்லையா மாஸ்ரரைவிட இதுவரையும் எவரும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவில்லை. இன்றும்கூட அவரது சேவைகள் சிலாகித்துக் கூறப்படுகின்றன.

இந்த விடயங்களையெல்லாம் சுட்டிக்காட்டிய கோகுலன்,

கிழக்கு மாகாணத் தமிழ்மக்கள் யாழ் மேலாதிக்கத்திற்கு எதிராக இருக்க வேண்டுமே தவிர யாழ்ப்பாணத்திற்கு அல்லது யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. தமிழர்கள் சிங்களப் பேரினவாத அடக்குமுறை அரசுக்கு எதிரானவர்களே தவிர இலங்கைநாட்டிற்கோ அல்லது சிங்களவர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. இந்த அடிப்படையில்தான் விடயங்களை நோக்க வேண்டும். துவேஷ மனப்பான்மையும் குறுகிய பார்வையும் கூடாது என விளக்கம் கொடுத்தபின் இறுதியில்,

“ கனகரட்ணம் ‘எலக்சன்’ கேக்கிறதிக்காக அல்லது அந்த எண்ணத்தோட பொத்துவிலுக்கு வந்தவரல்ல. அல்லது பொத்துவில் தொகுதியில போட்டிபோட எண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியால யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டவருமல்ல. அவரின்ர குடும்பம் அறுபது வருசத்துக்கும் மேலாகப் பொத்துவில்லில வாழ்ந்து வாற குடும்பம்” என்று முடித்தான்.

கோகுலன் கொடுத்த விளக்கங்களையும் அந்த விளக்கங்களின் அடிப்படையிலான இறுதிக் கூற்றையும் அமைதியாகச் செவிமடுத்த பரசுராமன், கோகுலனைச் சமாளிக்கும் வகையில் “சரி! தம்பி! பாப்பம். நீங்க சொன்னத நான் கவனத்தில எடுக்கிறன்” என்று கூறிவிட்டு எழுந்து நின்றார்.

அவரது உடல்மொழியைப் பார்க்கையில் கோகுலனின் பிரசன்னம் அங்கு தொடர்ந்து இருப்பதை அவர் விரும்பவில்லையென்பது கோகுலனுக்குப் புரிந்தது.

கோகுலனும் புறப்படும் எண்ணத்துடன் எழுந்தவன்,

“கனகரட்ணம் அரசியலுக்கு வர விரும்பியவரில்ல. நானும் பொத்துவில் இலங்கை வங்கி முகாமையாளர் ஜெகநாதனும்தான் அவர வில்லங்கப்படுத்தி அரசியலுக்கு இழுத்து வந்த நாங்க. அவர்தான் பொத்துவில் தொகுதிக்குப் பொருத்தம் எண்டு. பொத்துவிலில கணிசமான அளவு முஸ்லீம் வாக்குகளயும் அவர் எடுப்பார். அதால அவர்தான் வெல்லுவார். அவரத்தான் எல்லாரும் சேந்து வெல்ல வைக்கவும் வேணும்” என்று சற்று அழுத்தமாகக் கூறிவிட்டு பரசுராமனின் வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்தான்.

முதல் நாளும் அன்றும் பரசுராமன் வீட்டில் நடந்த சம்பவங்களால் பரசுராமன் என்ன நிலைப்பாட்டில் நிற்கிறார் என்பது கோகுலனுக்கு நன்றாக விளங்கியது. காரைதீவுக் கிராமம் தேர்தலில் பிரிந்து நின்றால் அது பொத்துவில் தொகுதியின் ஏனைய தமிழ்க்கிராமங்களிலும் எதிரொலிக்கும். அது கனகரட்ணத்தின் வெற்றிவாய்ப்பைப் பாதிப்பது மட்டுமல்ல தமிழர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு இழக்கச் செய்துவிடும். கனகரட்ணத்தை வேட்பாளராக நிறுத்துவதில் காரைதீவுக் கிராமத்தின் ஒருமித்த கருத்து முக்கியம் என அன்று அமிர்தலிங்கம் கல்முனை நொத்தாரிஸ் கந்தையா வீட்டில் வைத்துக் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தைக் கோகுலன் இப்போது இன்னும் கனதியாக உணர்ந்தான்.

இதற்கு மருந்து கட்டியாகவேண்டுமென மனதில் திடமாகத் தீர்மானித்த கோகுலன் உடனடியாகக் காரைதீவுக் கண்ணகியம்மன் கோயில் தலைவரும் வண்ணக்கருமான வேல்நாயகம் அவர்களின் வீடுநோக்கி விரைந்தான். அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்தவரென்பதும் வேட்பாளர் கனகரட்ணத்தையே ஆதரித்து நிற்பவரென்பதும் கோகுலனுக்குத் தெரிந்தே இருந்தது.

வேல்நாயகம் அவர்களிடம் முதல்நாளும் அன்றும் டாக்டர் பரசுராமன் வீட்டில் நடந்தவைகளைச் சற்றுத் ‘தணிக்கை’ செய்து எடுத்துக்கூறி எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் யாரை

ஆதரிப்பது என்று ஊர்கூடித் தீர்மானம் எடுப்பதற்காகக் காரைதீவு கண்ணகியம்மன் கோயிலில் ஊர்க்கூட்டத்தைக் கூட்டும்படி வேண்டுகோள் விடுத்தான்.

அவரும்,

“வாற ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் நாலு மணிக்குக் கூட்டத்தக் கூட்ட ஒழுங்கு செய்கிறன். அந்தக் கூட்டத்துக்கு நீங்களும் வந்து அபிப்பிராயம் சொல்லுங்க தம்பி” என்று கூறிக் கோகுலனை அன்போடு வழியனுப்பி வைத்தார்.

காரைதீவில் பாலையடிப் பிள்ளையார் கோயில் – குளவழிப் பிள்ளையார் கோயில் – கந்த சுவாமி கோயில் – வீரபத்திரர் ஆலயம் எனப் பல கோயில்கள் அமைந்திருந்த போதிலும் காரைதீவு ஊர்க்கூட்டத்தைக் கண்ணகியம்மன் கோயிலில் கூட்டுவதற்குக் கோகுலன் எண்ணியதிலும் ஒரு மரபார்ந்த பின்னணியிருந்தது.

காரைதீவில் ஒன்றோடொன்று உறவுவழிப் பின்னிப்பிணைந்ததாகப் பல குடிவழிச் சமூகங்கள் இருக்கின்றன. கண்ணகியம்மன் கோயில் காரைதீவில் ‘கோவிலார்’ என அழைக்கப்பெறுகின்ற ‘சேனாதிராசன் குடி’ க்கு உரித்தானது. காரைதீவுக் கிராமத்தின் அடையாளமே கண்ணகியம்மன் ஆலயம்தான். கோகுலனின் தந்தையார் கோவிலார். காரைதீவில் அறுபது வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அதாவது பெரும்பான்மையினர் கோவிலார்தான். அதனால்தான் என்னவோ காரைதீவு ஊரின் முடிவுகள் எதுவும் ஊர் கூடி எடுப்பதென்றால் அநேகமாகக் கண்ணகியம்மன் கோயிலில் கூடித்தான் எடுக்கின்ற மரபொன்று நெடுங்காலமாகவே காரைதீவில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த முடிவுக்கு ஊராட்களும் ஒற்றுமையாகக் கட்டுப்பட்டு நடப்பர்.

குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை காரைதீவுக் கண்ணகியம்மன் கோயில் முன்றலில் கூட்டம் கூடியது. ஊரிலுள்ள முக்கிய பிரமுகர்கள் நூறுநூற்றி ஐம்பது பேர் திரண்டிருந்தனர். எல்லோரும் கீழே மணலில் அமர்ந்தனர்.

வேல்நாயகம் அவர்கள் எழுந்து இறைவணக்கம் செலுத்திவிட்டுக் கூட்டம் கூட்டப்பெற்ற நோக்கத்தையும் கூறிவிட்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு ஒருவரைத் தெரிவு செய்யுமாறு வந்திருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் ஒருவர் “நீங்களே தலம தாங்குங்க” என்றார். அதற்கு வேல்நாயகம் அவர்கள் “இது கோயில் கூட்டமில்ல. ஊர்க்கூட்டம். கூட்டத்தக் கூட்டும் வேலயத்தான் கோயில் செய்தது. எனவே தேர்தல் சம்பந்தமான இந்தக் கூட்டத்திற்கு ஊர்மக்கள் தெரிவு செய்யும் ஒருவர் தலமதாங்கிறதான் பொருத்தம்” என்றார்.

கோகுலனுக்கு வேல்நாயகம் அவர்கள் கூறியது சரியாகவும் நியாயமாகவும் பட்டது.

கோகுலன் கூட்டத்திற்கு வந்திருந்த சிவநாதபிள்ளை அவர்களின் பெயரைக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கப் பிரேரித்தான். வேல்நாயகம் அவர்களே அதனை வழிமொழிந்தார். எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

சிவநாதபிள்ளை அவர்கள் காரைதீவில் ஓர் ஒழுக்கசீலர். பாடசாலை அதிபர். ஆன்மீகச் செயற்பாட்டாளர். நேர்மையும் ஓர்மமும் நிறைந்தவர். கறரானவர். நடுநிலையானவர். பேசுகின்றபோதுகூட இலக்கணத்தமிழில்தான் பேசுவார். அவரது வழமையான உரையாடல்களும் செந்தமிழில்தான் இருக்கும். அன்றைய கூட்டத்திற்குத் தலைமை தாங்க அவர்தான் தகுதியானவர் என்பதைக் கூட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதைக் கூட்டத்திலிருந்த அனைவரும் தங்களுக்குள்ளே பரிமாறிக் கொண்ட பரிபாஷைகள் எடுத்தியம்பின.

கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய சிவநாதபிள்ளை அவர்கள் கூட்டம் கூட்டப்பெற்ற நோக்கத்தை ஏற்கெனவே வேல்நாயகம் அவர்கள் வெளியிட்டிருந்தபோதிலும் மீண்டுமொரு முறை சபையோரிடம் முன்வைத்து அபிப்பிராயங்களைக் கோரினார்.

கூட்டத்தில் நீண்டநேரம் அமைதி நிலவியது. எவரும் எழுந்து அபிப்பிராயம் கூறவில்லை.

வேல்நாயகம் அவர்கள் கோகுலனைப் பார்த்து “தம்பி கோகுலன் நீங்க சொல்லுங்க” என்றார்.

கோகுலன் எழுந்து கனகரட்ணத்தின் பெயரைக் கூறினான். கூட்டத்திற்கு வந்திருந்த பரராசசிங்கம் “தருமலிங்கம் நமது மண்ணைச் சேர்ந்தவர். அவரை ஆதரித்தால் என்ன?” என்று அமைதியாகக் கேட்டார்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், எவரும் எழுந்து எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் அமைதியாகவே கழிந்தது.

கூட்டத் தலைவர் சிவநாதபிள்ளை அவர்கள் “தம்பி கோகுலன்! கனகரட்ணத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு உங்களுடைய விளக்கத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

கோகுலன் அமைதியாக எழுந்து நின்றான். கூட்டத்தலைவரையும் அங்கிருந்த ஏனைய ஊர்ப்பிரமுகர்களையும் தனது மற்றைய உறவினர்களையும் விளித்து மரியாதை பண்ணி வணக்கங்களைக் கூறிவிட்டுப் பேசத் தொடங்கினான்.

இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1947 இல் நடைபெற்றது. சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுக்கமையப் பாராளுமன்றமொன்றை ஏற்படுத்துவதற்காக 1946 இல் முழு இலங்கையும் எண்பத்தியொன்பது தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றது. இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அம்பாறை மாவட்டம் உருவாகி இருக்கவில்லை. அம்பாறைத் தேர்தல்தொகுதிகூட இருக்கவில்லை. தற்போதைய அம்பாறை மாவட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தினுள் அடங்கியிருந்தது. அப்போதைய மட்டக்களப்பின் தென்பகுதி துண்டாடப்பெற்று 1962 இல் ‘அம்பாறை’ என்றொரு புதிய மாவட்டம் தனியான நிருவாக மாவட்டமாக உருவாக்கப்படும்வரை தற்போதைய அம்பாறை மாவட்டமும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்டமும் இணைந்த நிலப்பரப்பே முன்னைய “மட்டக்களப்பு” நிருவாக மாவட்டமாக இருந்தது. இதன் எல்லைகள் வடக்கே வெருகல் ஆறு – தெற்கே குமுக்கன் ஆறு – கிழக்கே வங்காள விரிகுடாக்கடல் – மேற்கே வடமத்திய, மத்திய

மற்றும் ஊவா மாகாண எல்லைக்கோடுகள் ஆகும். மேற்கெல்லையைப் பொதுவாக ஊவாமலைக்குன்றுகள் எனவும் கூறலாம்.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டமானது 1947 இல் நடந்த இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலின்போது கல்குடா – மட்டக்களப்பு – பட்டிருப்பு – கல்முனை – பொத்துவில் ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளைக் கொண்டிருந்தது.

1947, 1952 , 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தல்கள் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்படி உருவாக்கப்பெற்ற தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே நடைபெற்றன. அதன்படி ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள்’ என இன்று அடையாளப்படுத்தப் பெறுவோர் அன்று வாழ்ந்த அன்றைய கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய இரு தொகுதிகளையும் இம்மூன்று தேர்தல்களிலும் அதாவது 1947 இலிருந்து 1959 வரை பாராளுமன்றத்தில் முஸ்லீம் உறுப்பினர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இம்முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இப்பிரதேசத்தில் வாழ்;ந்த தமிழர்களைப் பாரபட்சமாகவே நடத்தினர்.

இந்த அனுபவத்தில் எதிர்காலத்தில் இப்பிரதேசத் தமிழர்கள் தங்களுக்கென்று தமிழ்ப் பாராளுமன்றம் பிரதிநிதித்துவமொன்றினை அவாவி நின்றனர். அது அவர்களுடைய அரசியல் அபிலாசைகளிலொன்றாக நீண்டகாலம் நிலவியது.

1946 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் 1959 இல் நடைபெற்றது. இதன்போது தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கிய அப்போதைய மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா, மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி, பட்டிருப்பு, அம்பாறை, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய புதிய ஏழு தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றது.

தமிழ்மக்களின் பாரம்பரியப் பிரதேசமான பட்டிப்பளையாற்றுப் பிரதேசத்தில் கல்லோயாத் திட்டத்தின் கீழ் ‘ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச்சபை’ யினால் வெளிமாவட்டங்களிலிருந்து 1949 இலிருந்தே குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்கள் பல்கிப்பெருகி அவர்களின் நன்மை கருதி அவர்களுக்கும் எதிர்காலத்தில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ‘அம்பாறை’ப் புதிய தேர்தல் தொகுதி சிங்களப் பெரும்பான்மையாக உருவாக்கப்பெற்றது.

புதிதாக உருவாகிய ஏனைய தொகுதிகளான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளுமே முஸ்லீம்பெரும்பான்மைத் தொகுதிகளாக உருவாக்கப்பெற்றன.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியை அதாவது அப்போதைய கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதிகளை 1947 இலிருந்து 1959 வரை பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் உள்ளோரிடமிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையிலும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையிலேயும் புதிதாக 1959 இல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளின் எல்லைகள் வகுக்கப்பெற்றன. இதனால் 1959 ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதிகள் மீள்நிர்ணயத்தின் அடிப்படையில் 1960 மார்ச், 1960 யூலை, 1965 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் இம்மூன்று தொகுதிகளையும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இதனால் இப்பிரதேசத்தமிழர்கள் அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் சுதந்திர இலங்கையில் 1947 இலிருந்து 1977 வரை சுமார் முப்பது ஆண்டுகள் தங்களுக்கென்றொரு தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்காத காரணத்தினால் பலவிதமான சமூக, பொருளாதார, அரசியல் பின்னடைவுகளுக்கு உள்ளாகிப் போயுள்ளனர்.

1962 இல் கல்முனை, அம்பாறை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளை உள்ளடக்கியதாக புதிய ‘அம்பாறை’ நிருவாக மாவட்டம் உருவானது.

இந்தக்கட்டத்தில்தான் 1976 இல் மீண்டும் நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் நடந்தபோது அம்பாறை மாவட்டமானது கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய நான்கு புதிய தேர்தல் தொகுதிகளாக வகுக்கப்பட்டது. இதில் தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு புதிய பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் எதிர்நோக்கும் தேர்தல் இதன் அடிப்படையிலானது. ஆகவே இலங்கை சுதந்திரமடைந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இப்போது அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குப் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதி மூலம் கைகூடியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழர்கள் பிரிந்து நிற்பதன் மூலம் இழந்து விடக்கூடாது. இதற்குமேல் இதனை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இத்தேர்தலில் வெற்றிவாய்ப்பைத் தமிழர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமாயின் இன்று பொத்துவில் தொகுதியில் தம்பிலுவில் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கிராமங்கள் அனைத்தும் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளரான கனகரட்ணத்தையே ஆதரித்து நிற்பதனாலும் பொத்துவிலிலே கணிசமான குறைந்தபட்சம் ஆயிரம் முஸ்லீம் வாக்குகளையாவது பெற்றுக்கொள்ளும் செல்வாக்கு அவருக்கே இருப்பதனாலும் இத்தேர்தலில் காரைதீவு ஊர்மக்கள் கனகரட்ணத்திற்கே ஆதரவு வழங்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் அன்பாகவும் விநயமாகவும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு கோகுலன் நீண்டதொரு விளக்கவுரையை ஆற்றி முடித்தான். கூட்டம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

கோகுன் உரையாற்றி முடிந்ததும் தலைவர் சிவநாதபிள்ளை பரராசசிங்கத்தைப் பார்த்து “உங்களுடைய அபிப்பிராயங்களைக் கூறுங்கள்” என்றார்.

பரராசசிங்கம் எழுந்து நின்று, “தம்பி கோகுலன் கூறியவை அத்தனையும் உண்மைதான். இப்பிரதேசத் தமிழர்கள் கடந்த முப்பது வருடங்களாகத் தங்களுக்கென்று ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதற்கு இப்பிரதேச முஸ்லீம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் காரணம்தான். 1959 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் நடந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்

தமிழர்களுக்கும் பிரிதிநிதித்துவம் வழங்கும் வகையில் அதாவது மூதூர்த் தொகுதியில் முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் தெரிவு செய்யக் கூடியவாறு அப்போது மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அதேபோல்தான் அப்போது உருவான மட்டக்களப்பும் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதித் தமிழர்களுக்கு அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. என்ன நடந்திருக்க வேண்டுமெனின் 1959 இல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் வரக்கூடியவாறு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இம்மூன்று தொகுதிகளில் ஏதாவதொன்று தமிழ்ப் பெரும்பான்மைத் தொகுதியாக எல்லைகள் வகுக்கப்பெற்றிருக்கவேண்டும். அல்லது தனியான தமிழ்ப் பெரும்பான்மைத் தொகுதியொன்று பூகோள ரீதியாகப் பொருத்தமான பிரதேசங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இதில் தமிழரசுக்கட்சி அசிரத்தையாக இருந்ததே காரணம், மட்டுமல்ல அப்போது பட்டிருப்புத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இராசமாணிக்கமும் தனது எதிர்கால தேர்தல் வெற்றியிலேயே ஊக்கமாகவிருந்தாரே தவிர இப்பகுதித் தமிழர்களின் எதிர்காலத்தில் கரிசனை கொள்ளவில்லை. தத்தமது எதிர்காலத் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையில் அப்போதைய கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.காரியப்பரும் அப்போதைய பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.முஸ்தபாவும் அப்போதைய பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இராசமாணிக்கமும் ஆளுக்கு ஆள் அனுசரணையாக நடந்து கொண்டார்களே தவிர இப்பகுதித் தமிழர்கள்பற்றி அக்கறை கொள்ளவில்லை.

மட்டுமல்ல, நான் கல்முனையைச் சேர்ந்தவன். காரைதீவில் திருமணம் முடித்தவன். 1965 இல் தமிழரசுக்கட்சி அப்போது பிரதமர் டட்லி.சேனநாயக்கா தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் கூட்டரசாங்கம் அமைத்திருந்தது. அப்போதிருந்த கல்முனைப் பட்டின சபையைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்து வடக்கே பெரிய நீலாவணை வரையுமுள்ள பகுதியைத் தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகாகவும் தெற்கே மாளிகைக்காடு வரையுள்ள பகுதியைத் தனியான முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகாகவும் ஆக்கித்தரும்படி அந்த அரசாங்கத்தில் ஸ்தலஸ்த்தாபன அமைச்சராக அதாவது உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சராகவிருந்த தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த மு.திருச்செல்வம் அவர்களிடம் கல்முனைத் தமிழர்கள் கோரிக்கை சமர்ப்பித்திருந்தனர். அவர்

நினைத்திருந்தால ஒருவர்த்தமானி அறிவித்தல் மூலம் இதனைச் செய்திருக்கலாம். செய்யவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மக்களுக்கு இதனைச் செய்து கொடுத்தால் முஸ்லிம் அரசியல்வாதிகள் முகம் கோணுவர். எதிர்காலத்தில் தமிழரசுகட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளரின் வெற்றியை அது பாதிக்கும் என்று தமிழரசுக்கட்சி எண்ணியதேயாகும். தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளைவிடத் தமிழரசுக்கட்சிக்குப் பராளுமன்றத்தில் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதுதான் முக்கியமானதாகவும் முன்னுரிமையாகவும் இருந்தன. இதனால்தான் தமிழரசுக்கட்சியையும் அதன் தொடர்ச்சியான தமிழர்விடுதலைக் கூட்டணியையும் எதிர்த்துத் தருமலிங்கத்தை ஆதரிக்க வேண்டுமென்று அவரது பெயரை முன்மொழிந்தேனே தவிர எவரையும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று எவரும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆகையால் தம்பி கோகுலனின் விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டு எனது முன்மொழிவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

இப்படி நடக்குமென்று கோகுலன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், டாக்டர். பரசுராமனுடன் சேர்ந்து ஊருக்குள் தருமலிங்கத்துக்கு வேலை செய்பவர்களுள் அவரும் ஒருவரெனக் கோகுலன் அறிந்திருந்தான். பரராசசிங்கமும் கோகுலனின் நெருங்கிய உறவினர். அண்ணன் முறையானவர் பரசுராமன்தான் சொல்லி இவரைக் கூட்டத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்மென்றும் ஊகித்தான். இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ற வார்த்தைகள் வந்திருக்காதே என்று எண்ணினான். பரராசசிங்கத்தின் பேச்சின் முடிவில் கூட்டத்தில் கரவொலி பீரங்கியாய் ஒலித்தது. கரவொலி அடங்கவே அதிக நேரம் எடுத்தது. கரவொலி அடங்கியதும், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சிவநாதபிள்ளை அவர்கள் சிரித்துக் கொண்டு எழுந்து நின்று,

‘எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதியில் தமிழர்விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற திரு.மயில்வாகனம் கனகரட்ணம் அவர்களை ஆதரிப்பதென்று காரைதீவு ஊர் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது’ என்று அறிவித்தார். மீண்டும் ஊர் மக்களின் கரைகடந்த மகிழ்ச்சிக் கரவொலியுடன் கூட்டம் கலையத் தொடங்கிற்று. கோகுலன் பரராசசிங்கத்திடம் சென்று கைலாகு கொடுத்து விடை பெற்றபின் கல்முனைக்குச் சென்றான்.

அன்றிரவு கோகுலன் நிர்ச்சலனமான மனதுடன் நிம்மதியாக உறங்கினான்.

(தொடரும் …… அங்கம் – 33)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.