இலக்கியச்சோலை
“வீர அபிமன்யு” நாட்டுக்கூத்து பேர்த் மாநகரில் அரங்கேற்றம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான “வீர அபிமன்யு” என்ற நாட்டுக்கூத்து பேர்த் மாநகரில் கடந்த வார இறுதியில் ஜீன் இரண்டாம் திகதி சிறப்புற அரங்கேறியது.
தாயகத்தில் இந்த நாட்டுக்குத்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும், புலம் பெயர் மண்ணில் மேற்கு அவுஸ்திரேலிய மண்ணில் மேடையேற்றப்பட்டது பாராட்டுக்குரியதாகும்.
போர்க்களங்களில் நாட்டுக்கூத்து வடிவம், அக்கால நிகழ்வுகளை எடுத்தியம்பும் வண்ணம் அரங்கேறின.
இன்று அவுஸ்திரேலியாவில் இத்தகைய நிகழ்வை காணும்போது மிக்க மனம்வடைகின்றோம். ஏனெனில் இளம் கலைஞர்களின் கலைநயமும், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் சேவையையும் என்றும் போற்றி பாராட்ட வேண்டியது அவசியமாகும்.
ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான நாட்டுக்கூத்துக் கலை அருகி வந்தாலும் பேர்த் நகர் வாழ் தமிழ் நெஞ்சங்கள் “வீர அபிமன்யு” கூத்தை குறுகிய காலத்தில் நெறிப்படுத்தி வழங்குகியுள்ளார்கள்.
இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் “வீர அபிமன்யு” என்ற நாட்டுக்கூத்து இருபதாண்டுகளுக்கு முன்னர் பல மேடையேற்றங்கள் கண்டதாகும். வஞ்சகத்தால் வலையில் வீழ்த்தப்பட்டாலும் தரையில் தன்னந்தனியனாய் நின்று போரிட்டு வீரச்சாவை ஏற்றுக்கொண்ட “வீர அபிமன்யுவின்” இதிகாச புராணக் கதையைப் பறைசாற்றும் பாரம்பரிய நாட்டுக்கூத்தாகும்.
ஜூன் இரணரடாம் நாள் பேர்த் பாலமுருகன் ஆலய நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் திரு.அலங்கேஸ் அருந்தவராஜா நெறியாள்கையில்
வீர அபிமன்யு கூத்தினை மக்கள் கண்டு களித்தனர்.
குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கர வியூகம் அமைத்துப் போரிட்ட வேளையில், கடும்போர் புரிந்த அபிமன்யு சக்கர வியுகத்திலிருந்து வெளிவர முடியாமல் எதிரிகளின் வாளுக்குப் பலியான வீர வரலாற்றை பேர்த் வாழ் இளம் மாணவர்கள் கண்டு களித்தனர்.
இறுதியில் துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிரஹத்பாலன், கிருதவர்மன் ஆகிய அறுவரால் தாக்கபட்டு நிலைகுலையும் அபிமன்யு, பின் துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனைக் கொன்று தானும் மரணத்தைத் தழுவிய காட்சி பார்வையாளர்களின் மனதை நெருடியது.
பேர்த் நகரில் அரங்கேறிய “வீர அபிமன்யுவின் கூத்துக்கலையின் சிறப்பம்சம் காட்சிகளையும், காட்சிச் சூழல்களையும் கணீரென்ற குரலில் பாடிய பாடகர்களின் பாடல்கள் சிறப்பாக வரலாற்றை விபரித்தன.
அத்துடன் மேடையில் நடனமாடிய நடிகர்களின் அபிநயமும் சேரவே காட்சி கற்பனையில் தோன்ற குருசேத்திரப் போர்க்களம் கண்முன்னே மிதக்க வைத்தது.
ஈழத்தில் பல கூத்துக்கள் ஆடப்பட்ட போதிலும் வீரஅபிமன்யுவே இன்று வரை நிலைத்து நிற்கிறது. அத்துடன் எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமையும் உள்ளது.
அருகிவரும் பாரம்பரியக் கலைகளை மேற்கு அவுஸ்திரேலிய பேர்த் மாநகரில் மேடையேற்ற எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியதாகும்.