ஆறு செயற்கைக்கோள்களை இவ்வருடம் விண்ணில் செலுத்த ‘பிக்ஸெல்’ திட்டம்!
இந்தியாவின் பெங்களூரைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘பிக்ஸெல்’ இவ்வருட இறுதிக்குள் ஆறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அவைஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினதும் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸினதும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இந்த செய்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பிக்ஸெல்’ நிறுவனத்தின் 30 ஆயிரம் அடிகள் சதுர பரப்பளவைக் கொண்ட வசதியை அங்குராரப்பணம் செய்து வைக்கும் வைபவத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இவை பாரிய செய்கைக்கோள் தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும். விவசாயம், ஆற்றல், மற்றும் வனவளம் உள்ளிட்ட முக்கிய கைத்தொழில் துறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கும் இது உதவும்.
மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான ஊக்குவிப்பு, முதலீட்டாளர்களின் தீவிர ஆர்வம் என்பவற்றின் பிரதிபலனாக 2033 க்குள் இந்திய விண்வெளி தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் 44 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடுகளாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் 40 பெரிய செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஸ்டார்ட் அப்பின் விண்கலம் தயாரிப்பு நிறுவனமான Mega Pixxel தற்போது ஒன்பது செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.