அமைதியை நிலைநாட்ட ஆதரவு கோரும் ஸெலென்ஸ்கி!
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஷங்ரிலா கலந்துரையாடல் தற்காப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஜூன் 1ஆம் தேதி இரவு, ஜூன் 2ஆம் தேதி அதிகாலை சந்தித்துப் பேசினார்.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா 2022ஆம் ஆண்டில் படையெடுத்தது. இன்று வரை அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடர்கிறது
இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
இந்த அமைதி உச்சநிலை மாநாட்டை சுவிட்சர்லாந்தில் ஜூன் மாத நடுப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வந்திருக்கும் இந்தோனீசியாவின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் பிரபோவோ சுபியந்தோ, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பேராளர் குழு, திமோர் லெஸ்டே அதிபர் ஜோசே ராமோஸ் ஹோர்டா ஆகியோரைச் சந்தித்ததாக எக்ஸ் தளத்தில் அதிபர் ஸெலென்ஸ்கி பதிவிட்டார்.
அமைதியை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக அதிபர் ராமோஸ் ஹோர்ட்டா கூறியதாக அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
“அமைதி திரும்புவதற்கான பணிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் அது நியாயமான வகையில் இருக்க வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை. எனவே, அமைதியை நிலைநாட்ட உலக நாடுகளுடன் மிக அணுக்கமாகச் செயல்பட வேண்டும்.” என்று அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் ரஷ்யா கலந்துகொள்வதில்லை.