இலக்கியச்சோலை
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து களம் கொடுத்த கலாசூரி சிவகுருநாதன் ! பேர்த் மாநகரில் பேராசிரியர் அமீர் அலி உரை!!
பேர்த் மாநகரில் பேராசிரியர் அமீர் அலி உரை!
இலங்கையில் இளம் படைப்பாளிகளின் படைப்புகளைத் தினகரனில் தொடர்ந்து வெளியிட்டு, தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தூணாக விளங்கியவர் கலாசூரி சிவகுருநாதன். அத்தோடு இலங்கை இளம் எழுத்தாளர்களை ஜாதி மத இன பேதமின்றி ஊக்குவித்து வந்தவர். இந்த நாட்டின் முக்கிய தேசிய பத்திரிகையின் ஆசிரியராக இருந்தும் எந்த விதமான பந்தாவுமின்றி மிக எளிமையாக உறவாடியவர் என பேர்த் நகரில் ஜூன் முதலாம் நாள் நடைபெற்ற ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூல் வெளியீட்டில் பேராசிரியர் அமீர் அலி உரையாற்றினார்.
எந்தவொரு விடயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் மிகுந்த நகைச்சுவையுடன் கையாளுவார். அவரால் எழுத்து உலகில் உருவானவர்கள் நன்றி மறந்து அவருக்கு எதிராகச் செயற்பட்ட பொழுதும், அதைக் கணக்கெடுக்கமால் ஒரு மெல்லிய புன்னகையுடன் கடந்து போய் விடுவார்.
பதவியில் இருந்த காலத்தில் நடந்த எந்தவொரு ஆட்சி மாற்றமும் அவரைப் பாதிக்கவில்லை. அவர் பணியாற்றிய தினகரன் அரசு சார்ப்பான பத்திரிகையாக மாறிய பொழுதும், இலங்கை தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. அவர் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பதவியிருந்து ஓய்வு பெறும் வரை எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்றும் பேராசிரியர் அமீர் அலி உரையாற்றினார்.
இலங்கையில் ஆகக் கூடுதலான காலம் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் பதவியை வகித்து சாதனை புரிந்த இவர், இன நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகச் செயற்பட்டார்.
மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் ஜூன் முதலாம் திகதி டாக்டர் அமீர் அலி தலைமையில் வெளியிடப்பட்டது.
தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் நினைவாக இந்நூல் வெளியீடு, ஹில்வியூ இன்டர்கல்ச்சுரல் கம்யூனிட்டி சென்டர் மண்டபத்தில் இலக்கிய ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல் பேர்த் மாநாகரில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக தொடர்கின்றது என்பது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் கடந்த வருடம் (08/08/2023) இலங்கையில் சிறப்புற நினைவு கூறப்பட்டது.
தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர். அவரை நினைவு கூறும்
‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலினை ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்துள்ளார். மூத்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய ஆர்வலருமான டாக்டர் அமீர் அலி தலைமையில் இந்நூல் வெளியீடு நடைபெற்றது.
இளம் தலைமுறையினரும் எழுத்தாளுமைகளை அறியும் வண்ணம், இந்நிகழ்வின் ஆரம்ப வரவேற்புரையை இளம் மாணவன் கௌசிக்ராஜ் கதிர்காமன்குமார் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான திரு நிலக்ஷன் ஸ்வர்ணராஜா நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். அதன்பின் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி ஜனனி சிவமைந்தன் இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் நூல் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார்.
தினகரனில் சிவகுருநாதன் ஆற்றிய பணி பற்றி எடுத்தியம்பும் இந்நூலின் சிறப்புரையை எழுத்தாளரும், நூலக ஆவண காப்பாளருமான திரு.கோபிநாத் தில்லைநாதன் ஆற்றினீர். தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை அவரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக நிலை நிறுத்தியது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலின் தொகுப்பாசிரியர் திரு.ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்கினார். அத்துடன் கன்பராவில் இருந்து இலக்கிய ஆர்வலர் திரு.மயூரன் சின்னத்துரை, இலங்கையில் இருந்து மூத்த கல்வியியல் பணிப்பாளர் திரு. தணிகாசகம்பிள்ளை அவர்களும் காணொலி மூலம் உரையாற்றினர்.
இதன் பின் பேர்த் மாநகரில் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கிய புகழ் பெற்ற பாடகரும், இலக்கிய ஆர்வலருமான
திரு. ராஜன் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் இறுதியாக விழா சிறப்புற நிறைவு பெற்றது.