சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய தற்காப்புப் புத்தாக்க ஒப்பந்தம்!
சிங்கப்பூரும் அமெரிக்காவும் தற்காப்புப் புத்தாக்கம் தொடர்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம் கண்டுள்ளன.
இரு நாட்டு ராணுவங்களின் செயலாக்கச் சவால்களுக்குத் தீர்வுகாண செயற்கை நுண்ணறிவையும் தானியக்கக் கட்டமைப்புகளையும் பயன்படுத்துவது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டுள்ளன.
அதன்கீழ், ஆளில்லா வானூர்திகளைத் தடுத்து நிறுத்தும் திறன், கடல்துறைப் பாதுகாப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கிப் பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.
ஷங்ரிலா ஹோட்டலில் மே 31ஆம் தேதி, சிங்கப்பூரின் தலைமைத் தற்காப்பு விஞ்ஞானி டான் பெங் யாமும் அமெரிக்கத் தற்காப்புப் புத்தாக்கப் பிரிவின் இயக்குநரும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சரின் மூத்த ஆலோசகருமான டக்ளஸ் பெக்கும் அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னும் அதைப் பார்வையிட்டனர்.
மே 31ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறும் 21வது ஷங்ரிலா கலந்துரையாடல் பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ஆஸ்டின் சிங்கப்பூர் வந்துள்ளார்.
ஒப்பந்தம் குறித்துப் பேசிய டாக்டர் இங், “தற்காப்பு, வர்த்தகப் பயன்பாடு என இருவிதமாகப் பயன்படுத்தக்கூடிய ‘டூவல் யூஸ்’ தொழில்நுட்பங்கள் அதிவேகமாக உருவாகி வருகின்றன. தற்காப்பு அமைப்புகள் அதேவேகத்தில் இந்தத் தொழில்நுட்பங்களை ஆக்ககரமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
“இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரும் அமெரிக்காவும் அவற்றின் தற்காப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக்கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படி. இரு நாட்டு ஆயுதப்படைகளுக்கும் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்க இது உதவும்,” என்று கூறினார்.
டாக்டர் இங்கும் அமைச்சர் ஆஸ்டினும் இருதரப்புக்கும் நன்மை அளிக்கக்கூடிய இருநாட்டுப் பங்காளித்துவத்தை மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர். தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
முன்னதாக, அமைச்சர் ஆஸ்டின் மே 31ஆம் தேதி காலை பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால, உன்னத இருதரப்புத் தற்காப்பு உறவை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.
இதற்கிடையே, சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன், பிரதமர் லாரன்ஸ் வோங்கை மே 31ஆம் தேதி சந்தித்தார்.
இருதரப்பு நீண்டகால நல்லுறவை மறுஉறுதிப்படுத்திக்கொண்ட தலைவர்கள் இருவரும் இரு நாடுகளுக்கும் இடையில் தலைவர்கள், ராணுவம், கல்வியாளர்கள் நிலையில் நிலவும் பரிமாற்றங்களை வரவேற்றனர்.