அமெரிக்கா ஆயுதத்தால் ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அனுமதி!
அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு கார்கிவ் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள ரஷ்ய இலக்குகள் மீது மாத்திரம் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.
பதில் தாக்குதல் நோக்கத்துடன் ரஷ்யா தாக்குதல் நடத்திய இடம் அல்லது தாக்குதலுக்கு தயாராகும் இலக்குகள் மீது அமெரிக்க ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவதற்கே உக்ரைனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எல்லையை ஒட்டிய உக்ரைனிய கார்கிவ் பிராந்தியத்தில் எதிர்பாராத தாக்குதலை நடத்திய ரஷ்யா அங்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய நிலப்பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டிலேயே அமெரிக்கா தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மேற்குலக கூட்டாளிகள் தமது கொள்கையில் தளர்வை ஏற்படுத்தினால், தமது நாட்டின் அணுசக்தி வல்லமையை வலியுறுத்தி ‘கடும் விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த செவ்வாய்க்கிழமை எச்சரித்திருந்தார்.
ரஷ்யாவுக்குள் இராணுவ இலக்குகள் மீது தமது ஆயுதங்களை பயடுத்துவதற்கு அனுமதி அளிக்கும் சமிக்ஞையை பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது முழு அளவில் படை நடவடிக்கையை ஆரம்பித்த ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது.