“பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே” …. கவிதை …. மகாதேவஐயர் ஜெயராமசர்மா.
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்
எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்
நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்
யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்
கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தவிடம்
கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றவிடம்
பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றவிடம்
பித்தர்களின் வெறியாலே அத்தனையும் பொசுங்கியதே
கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை
கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்
தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே
நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்
தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா
எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா
அரக்ககுணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா
குத்தென்றான் ஓராள் கொழுத்தென்றான் மற்றொருவன்
சொத்தான நூல்நிலையும் சுவாலைக்குள் நின்றதுவே
எத்தனையே மகான்களது எண்ணிறந்த நூலெல்லாம்
பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே.