உலகத் தமிழர் பேரவையில் இருந்து கனடியத் தமிழர் பேரவை விலகியது!
உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து விலகும் முடிவை கனடியத் தமிழர் பேரவை எடுத்துள்ளதாக கனடாவை தளமாக கொண்ட ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் ஊடக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் இந்த தகவலை தமது உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட பரிசீலனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முடிவுக்கான உரிய காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எங்கள் பணியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
உலக தமிழ் பேரவையுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை முன்னெடுத்த இமாலய பிரகடனத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து கனடிய தமிழர் பேரவை உலக தமிழ் பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து விலகவேண்டும் என கடந்த பல மாதங்களாக வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறான பின்னணியிலேயே உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து விலகும் முடிவை கனடியத் தமிழர் பேரவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.