ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு…. இந்தியாவில் இருந்து இலங்கையர்களுக்கு அனுப்பப்பட்ட பணம்!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மாவனெல்ல பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் குறிப்பிட்ட நபர் ஒருவர் பணம் அனுப்பியதுடன், இந்தியாவில் கைதான சந்தேக நபர்களுக்கு பணத்தை வழங்க ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
மாவனெல்லையில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் இந்தியா செல்வதற்கு முன்னர் குறித்த நான்கு சந்தேக நபர்களுக்கும் உரிய பணத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் மாவனெல்லை ஹிகுலோயா பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றைய சந்தேக நபர் அளுத்நுவர கொட்டாபோகொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களுடன் தொடர்பில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அந்த பிரிவு தெரிவித்தது.
இவர்கள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகள் என்றும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நான்கு பேரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் அவர்கள் ஐ.எஸ் ஐ.எஸ். தீவிரவாதிகள் என்பது தெரியவரவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.