எங்கள் தமிழாம் சிங்கார சென்னைத் தமிழும்!…. சொல்…3… சங்கர சுப்பிரமணியன்.
ஒரு மொழி பேசும் இடத்தில் ஒன்றிரண்டு வேற்றுமொழிகள் உலவும் போது அம்மொழிகளின் தாக்கம் பேசும் மொழியில் ஊடுருவவே செய்யும். அதை தவிர்க்க இயலாது. மணிப்பிரவளம் தலைதூக்கியபோது அதை கண்கூடாக கண்டனர்.
போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்மொழியானது மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்று முறையே கேரளா ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் உருமாறியதுபோல் தமிழ்நாட்டிலும் தமிழ்மொழி உருமாறிவிடுமோ என்று எண்ணினர்.
அந்த எண்ணத்தின் எழுச்சியே மறைமலை அடிகளார் அவர்களால் எழுச்சியூட்டப்பட்ட தனித்தமிழ் இயக்கமாகும். அதனால் தமிழ் பிழைத்தது.
இவ்வாறு ஒருமொழியின் தாக்கத்தாலேயே உருக்குலைந்து போகவிருந்த தமிழ் காக்கப்பட்டது. சில இடங்களில் ஒரு சில மொழிகளின் தாக்கத்தாலேயே தமிழ்மொழியில் வேற்று மொழிச் சொற்கள் ஊடுருவியுள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் தமிழோடு பல்வேறு மொழிகள் கலந்துள்ளன.
மராட்டிய படையெடுப்பினால் மராட்டிய மொழி, விஜயநகர பேரரசின் வருகையால் தெலுங்கு மொழி, நவாப் ஆட்சிகாலத்தில் வந்த உருது மொழி கன்னடம் மற்றும் மலையாளம் என தமிழில் கலந்துள்ளன. இன்னும் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் கலந்துள்ளன.
இன்றும் தமிழில் ஏகப்பட்ட வடமொழிச்சொற்கள் உள்ளன. சாதாரணம், உதாரணம் போன்றவை உள்ளன. அதிதி என்ற சொல்லுக்கு விருந்தினர் என்ற தமிழ்ச்சொல் இருக்க இன்னும் அதிதி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் இந்த வட்டார வழக்கின் வேறுபாடு வினோதமாக உள்ளது. இலங்கைத் தமிழில்
சிறுவர்களை வாங்க தம்பி, இங்க இருங்க தம்பி என்று மரியாதை வழங்கும் வழக்குள்ளதைக் காண்கிறோம். ஆனால் இந்தியத் தமிழில் அப்படியா? டேய் இங்கே வா, சொல்றதக்கேளுடா என்று சொல்லும்
மரியாதையற்ற நிலை இருக்கிறது.
அதை அன்பின் வெளிப்பாடாகவும் ஏற்கலாம். கடவுளைக்கூட ஏண்டா இப்படி என்ன சோதிக்கிற? உனக்கு இரக்கம் இல்லயா? என்று கடவுளிடம் கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் அல்லவா?
ஆனால் அதே சமயம் இந்தியத் தமிழில் பெரியவர்களைப் பற்றி குறிப்பிடும்போது
மாமி வந்திருக்காங்க மாடியில் இருக்காங்க என்று மரியாதையாக சொல்வதை இலங்கைத் தமிழில் மாமி வந்தவள் மாடியில் நிற்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
இந்த வேறுபாடுதான் வட்டார வழக்கு. இதை வைத்துக்கொண்டு எந்த வட்டார வழக்கையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்ல முடியாதல்லவா?
இதுபோல வட்டார வழக்கான சென்னைத் தமிழில் மோசமானவர்களைப் பற்றி
குறிப்பிட கஸ்மாலம் என்ற சொல் உள்ளது. கெட்டவன் என்று சொல்வதில்லையா அதைப் போன்றதுதான். இந்ந கஸ்மாலம் என்ற சொல் எப்படி வந்தது என்ற நதி
மூலத்தை அறிவோமா?
நதி மூலம் ரிஷி மூலம் அறியக்கூடாது என்பதால் விட்டுவிட முடியுமா? ஐயன் திருவள்ளுவன் அப்படிச் சொல்லித் தரவில்லையே. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் அறிந்தால்தானே குட்டு வெளிப்படும். குட்டு வெளிப்படக் கூடாது என்பதற்காகத்தானே அது போன்றெல்லாம் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறோம்.
இப்போது நாமும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் வட்டார வழக்குக்குண்டான நதி மூலம் தெரிந்து உண்மை நிலையறியலாம்.
சமஸ்கிருதத்தில் கச்மல என்ற சொல் உள்ளது. இந்த சொல் பகவத்கீதையில் உள்ள ஒரு செய்யுளில் அர்சணனுக்கு அவன் மனதைப் பற்றி சொல்லும்போது சொல்வதாக சொல்லப்படுகிறது.
இந்த கச்மல என்ற சொல் மருவி தமிழில் கஸ்மாலம் ஆனது என்பதுதான் உண்மை.
கன்னடம் பேசுபவர்களை கன்னடர் என்றும் தெலுங்கு பேசுபவர்களை தெலுங்கர்
என்றும் அழைப்பதுபோல தேவபாஷை
பேசுபவர்கள் தேவர்கள் அல்லவா? பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்று அழைக்கும்போது பெரிய அளவில் தேவமொழியை பேசுபவர்களை
பெருந்தேவர்கள் என்றும் சிறிய அளவில்
பேசுபவர்களை சிறுதேவர்கள் என்று ஏன் அழைக்கக் கூடாது?
எனவே சென்னையில் கஸ்மாலம்
போன்ற சொற்கள் உலவும் ராயப்பேட்டை, தண்டையார் பேட்டை, மூலக்கொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் வட்டாரத்தில் வட்டாரமொழிபேசும் இவர்களையும் தேவர்கள் என்று அழைத்தால் தவறில்லை?
தெய்வங்களை பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்று அழைக்கும் அதிகாரத்தை யாருக்கு யார் கொடுத்தது? அது சரி என்றால் இதுவும் சரிதானே?
ஆதலால் இதுபோன்ற வட்டார வழக்கில் வழக்கிலிருக்கும் சொற்களின் மூலத்தை அறிதலே வட்டார வழக்கை தெரிந்து புரிந்து கொள்ளும் முறையாகும். அதை விடுத்து அந்த வட்டாரத்தில் வழங்கும் சொற்களை வேறு விதமாக பார்க்கக் கூடாது. அறுவறுக்கத் தக்கதை சொல்லவும் ஒரு சொல் வேண்டும். அச்சொல் எப்படி வந்தது என்பதையும் அறிதல் வேண்டும்
அறவறுக்கத் தக்கதை சொல்லும் சொல் என்பதாலேயே ஒரு சொல் அறுவறுக்கத் தக்கதாகிவிடாது. அச்சொல் எப்படி வந்தது என்பதை அறிவதுடன் அதுவும் ஒரு சொல் என்பதையும் அறிதல் வேண்டும்.
-சங்கர சுப்பிரமணியன்.