கதைகள்

“ஆகுதியாள்” …. சிறுகதை – 69 …. அண்டனூர் சுரா.

+2 தேர்வு முடிவு வெளியான அன்றைக்கும் கூட அப்படித்தான். உறவினர்கள், அண்டைவாசிகள் எனப் பலரும் அவளது பிறந்த நாளையும், தேர்வு எண்ணையும் கேட்டு நச்சரித்திருந்தார்கள். அவளை விடவும் அவளது உறவினர்களுக்கே அவளது மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வமிருந்தது. ஆனால் அவள் யாரிடமும் தன்னைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளாதவளாக இருந்தாள். தேர்வுமுடிவு மட்டுமல்ல, அவள் தொடர்பான எதுவும் தனக்குத் தெரிந்ததற்குப் பிறகே அடுத்தவர்களுக்குத் தெரிய வேண்டும் என நினைக்கும் சராசரியானவளாகவே ஜெயபாரதி இருந்தாள்.

ப்ளஸ் டூ தேர்வு முடிந்த அன்றைய தினம், அவளது அப்பா வேதநாயகம் கேட்டிருந்தார், “ஜெயபாரதி எவ்ளோ மார்க் வரும்?“ என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அவள் எதிர்பார்க்கும் மார்க்கை உத்தேசமாக அவரிடம் சொல்லி வைத்தாள். “ நானூற்று ஐம்பது வரும்ம்ப்பா….”

“அறநூறுக்கு?”

“ ஆமாங்கப்பா.”

வேதநாயகம் மகளிடம் அவ்வளவு மதிப்பெண் எதிர்பார்க்கவில்லை. முந்நூறு, முந்நூற்று ஐம்பது இந்தளவுக்குள் இருந்தாலே போதுமென்று நினைத்தார்.

தேர்வுமுடிவு வெளியான அன்று, கணினி மையத்திற்குச் சென்றிருந்த ஜெயபாரதி வீடு திரும்புகையில் வீடும் தெருவும் வியப்பில் ஆழ்ந்திருந்தது. ஊரே அவள் குறித்த பேச்சுதான். அவள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விடவும் நூறு மதிப்பெண் கூடுதலாக எடுத்திருந்தாள். அவள் பெற்ற மதிப்பெண் அவளுக்கே வியப்புத் தரும்படியாக இருந்தது. இத்தனைக்கும் அவள் படித்தது அரசுப் பள்ளியில்.

அதிகாலை எழுந்து, டியூசன். டியூசன் முடிந்து ஸ்கூல். ஸ்கூல் முடிந்து திரும்பவும் டியூசன்,…அவளுக்கு வீடு என்கிற ஒன்று உறங்கவும் இரண்டு வேளை சாப்பிட மட்டுமாகவே இருந்தது. அவளது இரு வருட காலக்கடிகாரம் இப்படியான அச்சிலேயே சுற்றியிருந்தது. இரண்டு வருட உழைப்பால், அவளது குடும்பம் மட்டுமல்ல, அவள் படித்த பள்ளிக்கூடம்கூட இம்மதிப்‘பெண்’ணால் புதுப்பொலிவு பெற்றிருந்தது. ஒரு பசுங்கன்றைப் பெற்றெடுத்துவிட்ட மகிழ்ச்சியில் தழைக்கும் பசுவின் புத்துயிர்ப்பு அப்பள்ளியை ஆட்கொண்டது.

இன்று நீட் தேர்வு முடிவு. வேதநாயகம் இன்றைக்கு வேலைக்குச் செல்லவில்லை. மகளின் நீட் தேர்வு மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்வதற்காக வீட்டிலேயே இருந்தார். ஒரு செய்தித் தொலைக்காட்சியை விரித்துவைத்துக்கொண்டு, கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி கோமதி, சமையலறைக்கும் தொலைக்காட்சிக்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். சற்றுநேரத்தில், அவர்கள் எதிர்பார்த்திருந்த ப்ரேக்கிங் செய்தி கண் முன்னே விரிந்தது. “நீட் தேர்வு முடிவு வெளியீடு. தமிழக அளவில் முதலிடம் பிடித்து மாணவி கீர்த்தனா சாதனை…” செய்தியும் செய்திக்குப் பின்னே ஒலித்த இசையும் வீட்டின் நான்கு மூலைகளையும் தொலைக்காட்சியின் திரைக்குமுன் கொண்டுவந்து நிறுத்தியது.

வேதநாயகத்திற்கு அச்செய்தியைப் பார்க்கையில் ஏக்கமாக இருந்தது. அவர் கீர்த்தனா என்கிற இடத்தில் தன் மகள் ஜெயபாரதியை வைத்து மனதிற்குள் ஆழ்ந்தார். சமையலில் கவனம் செலுத்திய கோமதி, கைக்கரண்டியுடன் இடுப்பிற்கு ஒரு கையைக் கொடுத்து, தொலைக்காட்சி முன் வந்து நின்றாள். செய்தி வாசிப்பாளர், அத்தனை பெருமிதத்துடன் நீட் தேர்வு குறித்த செய்தியை நீட்டி அளந்து வாசித்துகொண்டிருந்தார்.

வேதநாயகத்தின் கையில் ரிமோட் இருந்தது. அவர் அடுத்தடுத்த சேனலுக்கு மாறவும், சற்றுநேரம் ஒரு சேனலை நிறுத்திப் பார்க்கவும், பிறகு தாவுவதுமாக இருந்தார். எல்லாச் செய்தி தொலைக்காட்சியிலும் நீட் தேர்வு முடிவு குறித்த செய்தியே முதன்மைச் செய்தியாக இருந்தது.

ஒன்றிண்டு தொலைக்காட்சிகள் இரண்டு மூன்று கல்வியாளர்களை வட்ட மேஜையில் உட்கார வைத்து, நீட் தேர்வில் தமிழ்நாடு பிடித்திருக்கும் இடத்தையும், சிபிஎஸ் – ஸ்டேட் போர்டு, நீட் தேர்வு தேவை, தேவையற்றது குறித்தும் விவாதிக்கத் தொடங்கின. கால் மணி நேரம் அளவுக்குத்தான், அந்த விவாதம் நடந்திருந்தன. இச்செய்தி ஒன்றுக்காகதான் நாங்கள் காத்திருந்தோம் எனபதைப்போல அத்தொலைக்காட்சியில் மற்றொரு ப்ரேக்கிங் செய்தி வெளியானது. “நீட் தேர்வு முடிவு எதிரொலி. ஏமாற்றத்தில் திருச்சி மாணவி தற்கொலை..”

அச்செய்தி ப்ரேக்கிங் செய்திக்குரிய பரபரப்புடன், இரங்கல் பின்னணி இசையுடன் கூடிய செய்தியாக இருந்தது. ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் அச்சேனலுக்குரிய நீட்டல், நிறுத்தலுடன் அச்செய்தியை வாசித்து கொண்டிருந்தார்.

அச்செய்தி கோமதியைப் பதட்டத்தில் ஆழ்த்தியது. அவளது கையிலிருந்த பாத்திரங்கள் அவளையும் அறியாமல் தவறவும், உருளவும் செய்தன. அவள் தொலைக்காட்சியின் முன் வந்து நின்றாள். சற்றுமுன்பு வரைக்கும் முதன்மைச் செய்தியாக இருந்த நீட் தேர்வு முடிவும், முதல் மதிப்பெண் எடுத்த மாணவியும் இரண்டாம் செய்தியாகி ‘இதற்கிடையில்’ என்கிற பதட்டச் சொல்லுடன் கூடிய தற்கொலைச் செய்தி முதன்மை இடத்தைப் பிடித்தது.

கோமதி கணவன் பக்கமாகத் திரும்பி கேட்டாள். “எந்த ஊர் பொண்ணு.?”

“திருச்சியாம்”

அவளது உதடுகள், ‘இச்சூச்சூ…’ கொட்டின. கோமதியின் முகம் இருளத் தொடங்கியது. மகள் ஜெயபாரதி கண் முன் வந்து நின்றாள்.

வேதநாயகம் அச்செய்தியிலிருந்து மற்றொரு சேனலுக்கு மாறினார். அதில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி, தலைப்புச் செய்தியாக இருந்தாலும் தற்கொலை செய்துகொண்ட மாணவி குறித்த செய்தி வரிச் செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது.

கோமதி வாசலுக்கு ஓடி வந்தாள். இதுநாள் வரைக்கும் பற்றாத ஒரு பதற்றத் தீ அவளது அடிவயிற்றில் பற்றிக்கொண்டது. அவள் நீட் ரிசல்ட் பார்க்கச் சென்ற மகளின் வருகையை எதிர்பார்த்து காத்துநின்றாள். கண்கள் அவளது வருகையைத் தேடின.

தொலைக்காட்சியிலிருந்து பார்வையை எடுத்து வாசலுக்கு ஓடி வந்தார் வேதநாயகம். அவரை ஈரலை நடுங்கச் செய்யும் பதட்டம் தொற்றிக்கொண்டது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதவராய் மனைவியைப் பார்த்து, “கோமதி, ஏன் இப்படி நிற்கிறே?” எனக் கேட்டார்.

“ஜெயபாரதிய இன்னும் காணோம்ங்க…” அவளால் அதற்கும்மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் கைகளைப் பிசைவதும் தலையைச் சொறிவதுமாக இருந்தாள். வீட்டிற்குள் ஓடி அடுப்பிலிருந்த குழம்பைத் திறந்துகூட பார்க்காமல் அடுப்பை அமர்த்திவிட்டு திரும்பவும் வாசலுக்கு ஓடி வந்தாள். அவளுடைய முகம் வியர்த்தது. அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடியாமல் மார்பிற்கிடையில் ஓடிக்கிடந்த முந்தானையை எடுத்துவிடாமல் அப்படியே நின்றவாறு மகள் சென்ற திசையைக் கண்ணொட்டிப் பார்த்தாள்.

“ஏங்க, ஓடிப்போய் புள்ளய அழைச்சிட்டு வந்திடுங்க…” கோமதி சொன்னதையே வேதநாயகமும் நினைத்தார். ஆனால் அவள் சொன்னதன் பிறகு செல்ல அவரது மனம் ஒப்பவில்லை. இத்தனை நாட்கள் மகளின் மீது வைத்திருந்த அன்பும் அவள் மீது எழுப்பியிருந்த நம்பிக்கையும் சடுதியில் நொறுங்குவதைப் போல உணர்ந்தார். இரண்டடிகள் முன் எடுத்து வைத்த அவரது கால்கள் நான்கடி பின் வாங்கின.

“ போயிட்டுதான் வாங்களேங்க.”

“எங்கேடி போகச் சொல்றே. அவள் ரிசல்ட் பார்த்து திரும்ப வேண்டாமா, இரு, இன்னும் கொஞ்சநேரத்தில வந்திடுவா…”

நான் போகிறேனென கோமதி முந்தானையை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். நடையில் வேகமிருந்தாலும் எந்தப் பக்கம் போகவேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை. சாலைச் சந்திப்பில் போய் நின்று, இருபுறமும் திரும்பிப் பார்த்து, அதே வேகத்தில் வீடு திரும்பினாள். அவள் திரும்பியதும் வேதநாயகம் சாலைக்கு ஓடினார். தூரத்தில் மகன் சீமான் சைக்கிளில் வருவது தெரிந்தது.

“என்னங்க புள்ள வந்திட்டாளா?”

‘ இம்,..’ என்றவாறு அவர் வீட்டிற்குள் நுழைந்தார். கோமதி வாசலுக்கு ஓடிப்போய் பார்த்தாள். மகன் மட்டுமே வந்துகொண்டிருந்தான்.

“ ஏங்க, சீமான் மட்டும்தான் வாறான்…”

வேதநாயகம் வாசலுக்கு வந்தார். “உனக்கு என்னடியாச்சு. ம்? சீமான் மட்டும் வந்தால் என்ன, அவள் பின்னாடி வருவாள், ஏனடி இப்படி பதறுற…” அப்படியாக அவர் அவளைக் கடிந்துக் கொண்டாலும் அவருக்கும் ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் இருக்கவே செய்தன.

“உங்களுக்கு எப்பதான், புள்ள மேல அக்கறை இருந்துச்சாம், ம்?. நீங்க டீவியக் கட்டிக்கிட்டு அழுங்க. எனக்குள்ள பெத்த வயிறு பதைக்குது” அவளது முணங்கல், பதட்டத்தை இரட்டிப்பாக்கியது. சீமான் சைக்கிளை வாசலில் நிறுத்தினான். ஒரேநேரத்தில் தாயும், தந்தையும் கேட்டார்கள். “ரிசல்ட் என்னாச்சுடா?” அப்பா கேட்டார். “அக்கா எங்கேடா?” அம்மா கேட்டாள்.

சீமான் இருவரையும் ஒரு சேரப் பார்த்தான். முதலில் அப்பா கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொன்னான். “ அக்கா பாவம்ப்பா, நீட் தேர்வுல செலெக்ட் ஆகல.”

கோமதியின் ஈரல் நடுங்கியது. “ அடேய், அதுவா முக்கியம். அவள் எங்கேடா?”

தாயின் கேள்வியும் அதட்டலும் அவனுக்குப் பயத்தை மூட்டியது. “நீ போடா, நான் வாறேன்னு சொல்லிருச்சும்மா…”

கோமதியின் கால்கள் ஆட்டம் கண்டன. “அவள அங்கேயே விட்டுட்டு, நீ எதுக்குடா இங்கே வந்தே. உன்னைய அதுக்காகவா அவள்கூட போகச் சொன்னேன்…” அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்து கன்னத்தில் அறைந்தாள்.

வேதநாயகம் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். மகளைத் தேடிச் செல்கிறேன் என்பதை மனதிற்குள் நினைக்கையில் உள்ளுக்குள் உதைத்தது. அவரால் சைக்கிளை மிதிக்க முடியவில்லை. அவர் நேராக கணினி மையத்திற்குச் சென்றார். தன் மகளின் வருகை குறித்து

விசாரிக்கவே தயக்கமாக இருந்தது. அவளைப் பற்றி விசாரிக்காமல் அவள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைக் கேட்டார். கணினி முன் உட்கார்ந்திருந்தவர், “ஜெயபாரதியை நானும்கூட எதிர்பார்த்தேன்ண்ணே. நூத்தியெட்டு மார்க்தான் எடுத்திருக்காள். பாவம், ரொம்ப ஃபீல் பண்ணினாள். யாரையும் பார்க்க அவளுக்குப் பிடிக்கல. இவ்ளோ நேரம் இங்கேதான் நின்னாள். இப்பதான் இந்தப் பக்கமாகப் போனாள்…” அவர் கேட்க நினைத்த எல்லா கேள்விகளுக்கான பதிலும் அவரிடமிருந்து கிடைத்திருந்தன.

“ வர்றேன் தம்பி…” என்றவாறு அவர் காட்டிவிட்ட திசையில் சைக்கிளை முடுக்கினார்.

“அண்ணே, உங்க மகள் ஜெயபாரதி நீட்ல செலக்ட் ஆகிட்டாளா?” மகள் வயதையொத்த நான்கைந்து பெண்கள் அவரை வழி மறித்துக் கேட்டதும் அவர் சற்று சிரித்தவராக, “இல்லையேம்மா…” என்றார்.

“அவளே செலெக்ட் ஆகலையா…” என்று பதிலுக்கு அவர்கள் கேட்டது அவருக்குப் பெருமையாக இருந்தாலும் அவரது கண்கள் விரிந்த சாலையில், சந்துக்குள், மகளைத் தேடின.

“ஜெயபாரதிய பார்த்தீங்களா?”

“ இல்லைங்களேண்ணே.”

அவரது கண்கள் ஆலவட்டமடித்து கைகள் பரபரத்தன.

“ என்னண்ண்ணே அவளைக் காணோமா?” ஒரு பெண் பெரிதென வாயைத் திறந்து கேட்டாள்.

அவருக்கு ‘இம்’ என்றே பதில் வந்தது. ஆனால் அதைத் தொண்டைக்குள் விழுங்கியவராக, “இல்லே, உங்க பிரண்ட்டாச்சே, பார்த்தீங்களானு கேட்டேன்.” என்று சொல்லியவராக சைக்கிளைத் திருப்பினார். மகள்மீது அவருக்கு என்றைக்குமில்லாமல் கோபம் வந்தது. இந்நேரத்திற்கு அவள் வீட்டிற்குச் சென்றிருக்க கூடும் என நினைத்தவர், சைக்கிளை நேராக வீட்டிற்கு விடுத்தார். வீட்டு வாசலில் தெருக்காரர்கள் நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள். வீட்டை நெருங்குகையில் கோமதி கேட்டாள் “எங்கேங்க புள்ள?”

“ இன்னும் வரலையா?”

“ இல்லேங்க”

அவரது சைக்கிள் அவரையும் அறியாமல் திரும்பியது. மகள் தொலைந்துவிட்டாள் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்க மனதிற்கு பாரமாக இருந்தது.

“ஏங்க ஸ்கூல்ல பார்த்தீங்களா?”

“ இல்லையே புள்ள”

“ என்ன மனுசனோ, போங்க அப்படியே டியூசன்லயும் பார்த்திட்டு வாங்க..”

அவர் சைக்கிளிலிருந்து எழுந்து உந்தி மிதித்தார். “ஏங்க, பார்த்திட்டு போன் பண்ணுங்க…” சுடுதண்ணீர் காலில் கொட்டிவிட்டதைப் போல தவித்தாள்.

வேதநாயகம் இத்தனை வேகத்தில் சைக்கிள் மிதித்து யாரும் பார்த்ததில்லை. ஒரு அசுரவேகம் அவருக்குள் கருத்தரித்தது. சைக்கிளைக் கடைத்தெருக்களின் குறுக்கே செலுத்தி, பெரியகடை வீதிகளின் வழியே சென்றார். கடைகளுக்கு மதிய தினசரிகள் வந்திருந்தன. நீட் தேர்வு முடிவும் தற்கொலை செய்துகொண்ட இரு பெண்களின் செய்தியும் முக்கிய செய்தியாக இடம் பிடித்திருந்தன. ஒரு பெட்டிக்கடையில் தொங்கிய தற்கொலை குறித்த செய்தியுடன்கூடிய வால் பேப்பரைப் பார்க்கையில் அவரது உதடுகள் விம்மின. கண்களில் தூசி விழுந்துவிட்டதைப் போல உறுத்தின. அவர் சைக்கிளைப் பள்ளி வாசலில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு அவளுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களிடம் விசாரித்தார். “ஜெயபாரதி இங்கு வரலையே. வந்திருந்தால் என்னைப் பார்க்காமல் போக மாட்டாளே…”

ஆசிரியரிடம் அவள் குறித்து பேச எத்தனையோ செய்திகள் இருந்தும் அதுகுறித்து பேச அவரால் முடியவில்லை. அங்கேயே நின்றால் வாய் தவறி ஏதேனும் உளறிவிடுவேன் என்று நினைத்தவர் அந்த இடத்திலிருந்து மெல்ல நழுவினார். அடுத்ததாக அவரது தேடல் அவள் படித்த டியூசன் பக்கமாகச் சென்றது. டியூசனின் வெளிக் கதவுகள் பூட்டியிருந்தன. வீட்டுப் போனுக்கு அழைப்பு விடுத்து, விசாரிக்கலாமென்று பாக்கெட்டில் அலைபேசியைத் துழாவினார். அவசரத்தில் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு வகையில் நல்லது என்றே பட்டது. அவ்வழியே சென்ற ஒருவரை நிறுத்தி அவரது போனை வாங்கி வீட்டிற்கு அழைப்பு விடுத்தார். முதல் ‘ரிங்’லேயே அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஜெயபாரதி வீட்டுக்கு வந்திட்டாளா?”

‘“அவள் இன்னும் கிடைக்கலையா!” விம்மலுடன்கூடிய துடிப்புக் கேள்வி அவளது காதின்வழியே நெஞ்சுக்குள் இறங்கியது. அதற்கும்மேல் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் பேச வேண்டிய வார்த்தைகளை அவரது நாசிகள் பேசின. அடுத்து என்ன செய்வதாம், போலீஸ் ஸ்டேசன் போகலாம் என்று நினைத்தார். அங்கு போனால் போலீஸ்காரர்கள் என்ன கேட்பார்கள், “உன் பொண்ணு யாரையேனும்….“ அதை நினைக்கவே அவரது இதயம் அறுவதைப் போலிருந்தது. அவரது நினைவு அடுத்ததாக மாமியார் வீட்டுக்குத் தாவியது. அங்கே எதுவும் சென்றிருப்பாளோ?, இதுநாள் வரைக்கும் என்னிடம் சொல்லாமல் எங்கும் அவள் சென்றதில்லையே, எதற்கும் தொடர்பு கொண்டு கேட்டு விடலாமென, அழைப்புவிடுத்தார்.

“ஹேலோ, நான்தான் மச்சான் பேசுறேன். ஜெயபாரதி…“ கேட்பதற்குள் பதில் மச்சினனிடமிருந்து வந்தது. “அவ இங்கே வரலையே மச்சான்…“

அவருக்கு ‘இச்’ என்றிருந்தது. எனக்கு முன்பே கோமதி தொடர்புகொண்டு கேட்டிருக்கிறாள். எப்படிக் கேட்டாளோ, அழுது ஒப்பாரி வைத்திருப்பாள். காணோமென்றிருப்பாள். காலையிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறோம், என்றும்கூட சொல்லியிருப்பாள். அலைபேசியை உரியவரிடம் கொடுத்துவிட்டு அவருக்குத் தெரிந்த, அவளது தோழிகளின் வீடுகளுக்குச் சைக்கிளை விடுத்தார். யார் வீட்டுக்கும் அவள் சென்றிருக்கவில்லை.

விளக்கு வைக்கும் நேரம் வந்திருந்தது. இந்நேரத்திற்கு அவள் வீடு திரும்பியிருக்கவே செய்வாள் என்கிற நம்பிக்கையுடன் அவர் வீட்டை நோக்கி சைக்கிளை விடுத்தார். தூரத்திலிருந்து பார்க்கையில் வீட்டுவாசல் மனிதத் தலைகளாகத் தெரிந்தன. அவருக்குள் சுருள்சுருளாக கூடா நினைவுகள். நெஞ்சுக்கூட்டை அடைக்கும்படியான தவிப்பு. அவர் சைக்கிளிலிருந்து குதித்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். தெரு விளக்குகள் ஒளிரத் தொடங்கின.

கோமதி தலைவிரிக் கோலமாக உட்கார்ந்திருந்தாள். இத்தனைக்கும் காரணம் தான் என்கிற குற்றவுணர்வில் சீமான் சுவரில் சாய்ந்தவாறு அழுது ஓய்ந்து போயிருந்தான். செய்தி தெரியப்பட்டு மச்சினனும் மாமியாரும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் அத்தனை நேரமிருந்த அமைதியைக் குலைத்து, பதட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் காதில் போனுடன் ஓடி வந்தார். “வேதநாயகம், பைபாஸ் ரோட்டுல யாரோ அடிப்பட்டு செத்துக் கிடக்குறாங்களாம்….” அவர் சொல்லி முடிக்கவில்லை, வீடு ‘ஓ….’ என்று ஓலமெடுத்தது. வேதநாயகம் சைக்கிளை அதேஇடத்தில் கிடத்திவிட்டு, பைபாஸ் நோக்கி ஓட்டமெடுத்தார். அவர் பின்னே நான்கைந்து பேர் ஓடினார்கள். ஒன்றிரண்டு பேர் அவரவர் வைத்திருந்த சைக்கிளையும் பைக்கையும் எடுத்துகொண்டு விரைந்தார்கள். “ஆண்டவனே, சந்நிதியானே என் மகளாக அது இருக்கக் கூடாது.” கோமதி அழுகையும் ஓலமுமாக தொடைகளைத் தட்டிக்கொண்டு வான்வெளியைப் பார்த்து கையெடுத்தாள்.

வேதநாயகம் ஒரு திருப்பதில் திரும்புகையில் ஜெயபாரதி தூரத்தில் வருவது தெரிந்தது. அவளது வருகை அத்தனை நேரம் அவரைவிட்டுப் போயிருந்த உயிர் திரும்பவும் அவருக்குள் நுழைந்த சுவாசத்தைக் கொடுத்தது. அவர் நின்று நிதானித்து பார்த்தார். ஜெயபாரதிதானே அவள்? ஆம், அவளேதான்! அவரது கண்கள் கலங்கி மகிழ்ச்சியில் பனித்தன.

ஜெயபாரதி சாவகாசமாக நடந்து வந்தாள். வெறுங்கையோடு சென்றிருந்தவளின் கைகளில் நிறைய புத்தகம், நோட்ஸ்கள் இருந்தன. அவள் பள்ளிச் செல்லும் நாட்களில், டியூசன் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவள் திரும்பிகொண்டிருந்தாள். வீட்டு வாசலில்

ஆட்கள் நிறைந்து நிற்பதைப் பார்க்கையில் அவளுக்குள் அம்மா குறித்த கவலை சுருளெடுத்தது. நான் நீட் தேர்வில் தேர்வாகவில்லையென்று அம்மாவிற்கு எதுவும் நடந்துவிட்டதோ! அவள் இதய நோயாளி வேறு. அவளது கண்கள் அம்மாவின் இருப்பைத் தேடின. அம்மா வாசலைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

ஜெயபாரதி நின்று நிதானித்து மாமா, அம்மாச்சி, அண்டை வீட்டார்களைப் பார்த்தாள். பலரின் நீளக் கண்களில் பின்னியிருந்த சிலந்தி வலை பதைப்பு மெல்ல அறுந்தது. அவளது கண்கள் அப்பாவைத் தேடின. அப்பா கீழே விழுந்து கிடந்த சைக்கிளை எடுத்து, நிமிர்த்தி சக்கரத்தைச் சுற்றிவிட்டபடி துடைத்துக்கொண்டிருந்தார். அவளது பார்வை தம்பி சீமான் பக்கம் சென்றது. அவன் சுவரில் சாய்ந்தவாறு நீள்வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனருகில் சென்று கண்கள் விரிய கேட்டாள். “தம்பி, ஏன் இங்கே எல்லாரும் கூடியிருக்காங்க?”

அவன் என்னவோ சொல்ல வாயெடுத்தான். அவனுக்கு அழுகை வந்தது.

Loading

2 Comments

  1. ஆகுதியாள்’ சிறுகதை எதையோ நினைத்து மனம் பதை பதித்து சிறப்பான முடிவை தந்துள்ள கதை…
    மிக சிறப்பு…👌👌💐💐💐🙏🙏

    பாண்டிச்செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.