பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரினவாதத்தின் முகவர்கள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன் சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், இராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழின அழிப்பிலிருந்து தாயகத்தின் ஓர் அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை.
தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது.
தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.