கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம்
கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்ட்டமை தொடர்பில் டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவை விடுவிப்பதற்கான முயற்சிகளிற்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் கடற்படை தளபதியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2008-2009 இல் 11 இளைஞர்களை கடத்தியமை கப்பம் கோரியமை மற்றும் கொலைசதி தொடர்பில் 2019ம் ஆண்டு சட்டமாஅதிபர் வசந்த கரணாகொட உட்பட 14 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
இந்த குற்றங்களின் பாரதூரதன்மை காரணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகனை உள்ளடக்கிய டிரையல் பார் விசாரணைக்காக நியமிக்கப்பட்டது.
மார்ச் 2020 இல் முன்னாள் கடற்படை தளபதி ரிட்மனுவை தாக்கல் செய்திருந்தார் அதில் தனது மனுமீதான விசாரணைகள் இடம்பெறும்வரை தனக்கும் ஏனையவர்களிற்கும் எதிரான டிரையல் அட்பார் விசாரணைகளை இடைநிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த அவர் இடைக்கால தடையை கோரியிருந்தார்
இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் சட்டமா அதிபர் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள முயல்கின்றார் என குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் விலக்கிக்கொள்வதை தடுப்பதற்காக நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என முன்னாள் கடற்படை தளபதி விடுத்த வேண்டுகோளை கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக எதிர்த்துவந்துள்ளது எனவும் பிரிட்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னாள் கடற்படை தளபதியை விடுதலை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அவரின் அரசியல் செல்வாக்கே காரணம் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்ணாண்டோ எங்கள் பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் நடத்திய விதத்திலேயே அவர்களையும் நடத்தவேண்டும் என வேண்டுகோள் வி;டுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவையாக காணப்படுகின்றன தற்போதைய சட்டமுறையில் எங்களிற்கு உள்ள உரிமைகளிற்கு எதிராக அவரே காணப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஜூன் மூன்றாம் திகதியும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.