கதைகள்

“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 31 …. செங்கதிரோன்.

முதல் நாளிரவு பொத்துவிலிலிருந்து கல்முனை வந்த கோகுலன் மறுநாள் காலை கல்முனை அலுவலகம் சென்று உத்தியோகரீதியான கடமைகளை முடித்துவிட்டு மத்தியானம் தாயாரின் கையால் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கமும் போட்டெழுந்தான். காரைதீவில் டாக்டர் பரசுராமன் தருமலிங்கத்தை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் விடயம், அதனைக் கனகரட்ணத்திடமிருந்து கேள்விப்பட்ட கணத்திலிருந்தே தலைக்குள்ளே வண்டாய்க் குடைந்து கொண்டேயிருந்தது. தாயார் தந்த மாலைத் தேனீரைப் பருகிவிட்டு மீண்டும் டாக்டர் பரசுராமனைச் சந்திக்கவென்று காரைதீவுக்குப் புறப்பட்டான்.

டாக்டர் பரசுராமன் கோகுலனைத் தனது வீட்டுக் ‘கேற்’ றடியில் கண்டதும் முற்றத்தில் நின்றிருந்த அவர் சர்வசாதாரணமாக “வாங்க தம்பி!” என்றார்.

வீட்டின் உள்ளேபோய் மண்டபத்தில் அமர்ந்த கோகுலன் எப்படிப் பேச்சைத் தொடங்குவதென்று பரீட்சை எழுதப்போன மாணவன் பரீட்சை மண்டபத்தில் பரீட்சகர் வினாப்பத்திரம் வழங்கும்வரை காத்திருப்பதுபோலச் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான்.

பரசுராமனே வலிய “என்னதம்பி! நேத்துத்தான் வந்து போனீங்க. இண்டைக்கும் வந்திரிக்கீங்க. ஏதோ முக்கிய விசயம் போல” என்று பேச்சை ஆரம்பித்தார்.

“ஓம்! எனக்குக் கிடச்ச செய்தியொண்ட உங்களோட பகிர்ந்து கொள்ளலாமெண்டு வந்தனான்” என்று சுற்றிவளைக்காமல் நேரே விடயத்திற்கு வந்தான் கோகுலன்.

“சொல்லுங்க தம்பி” என்றார் பரசுராமன்.

“முஸ்தப்பாபத்தி என்னவிட உங்களுக்குக்கூடத் தெரியுந்தானே. பழய நிந்தவூர்த் தொகுதிக்குள்ள காரதீவு இருந்த காலத்தில நடந்த ‘எலக்சனு’களில அவரோட ஊடாடியும் இரிப்பீங்க. காரதீவுக் கிராமசபைக்கு நீங்க ‘சேர்மன்’ ஆக இருந்ததாலயும் ‘எம்.பி’ யாக இருந்த அவரோட நல்லாப் பழகியும் இரிப்பீங்க” என்று கோகுலன் பேச்சை ஆரம்பித்ததும்,

“ஓம்! தம்பி! அதுக்கென்ன இப்ப?” என்றார் பரசுராமன்.

“முஸ்தபா நல்லாத் திட்டம்போட்டு வேல செய்யும் கெட்டித்தனமுள்ளவர். தான் ‘எலக்சனில’ வெல்லிறதுக்கு எதயும் செய்வார். எந்தக் காரியத்தயும் எந்த மட்டத்துக்கும் போயும் செய்யக்கூடியவர். இந்தமுற பொத்துவில் தொகுதியில ரெண்டாவது ‘எம்.பி’யாகவாவது வந்திரனுமெண்டு குறியாக இரிக்கிறாரெண்டிரத்தயும்விட அதில வெறியாக இரிக்கிறார் எண்டுதான் சொல்லோணும். தமிழ் ஆக்களிர வாக்குகளப் பிரிக்கிறத்துக்காகத் தருமலிங்கத்துக்குக் காசுகுடுத்து அவரச் சுயேச்சையாப் போட்டியிட வைச்சது முஸ்தபாதான் எண்டு ஊருக்குள்ள கத அடிபடுது. அத உங்கட காதிலயும் போட்டு வைப்பம் எண்டுதான் இண்டைக்கு வந்தனான்” என்று கூறிவிட்டு அவரது பிரதிபலிப்பை ஆவலோடு எதிர்பார்த்தான் கோகுலன்.

“அப்படி இரிக்காது தம்பி. இது ஆக்களின்ர கத. தருமலிங்கமும் அப்படிப்பட்ட ஆளில்ல.” என்றார் பரசுராமன் தருமலிங்கத்தை விட்டுக்கொடுக்காமல்.

“தருமலிங்கம் அப்படிப்பட்ட ஆளெண்டு நானும் சொல்லல்ல. ஆனா முஸ்தபா அப்படிப்பட்ட ஆள்தான். நிந்தவூர் முஸ்லீம்களுக்கூடாகத்தான் இந்தக் கத வெளியில கசிஞ்சிரிக்கி. அதத்தான் உங்களிட்டச் சொல்ல வந்தனான். அந்தக் கத பொய்தான் எண்டு வைச்சிக்கொண்டாலும் தருமலிங்கம் சுயேச்சையாப் போட்டியிடுறத்தால தம்பிலுவிலில தமிழர்களிர வாக்குகளில ஒரு ஐயாயிரத்தயாவது அவர் பிரிப்பார். அது கூடத் தமிழ்ப்வேட்பாளரிர வெற்றியப் பாதிக்கும் எலுவா?” என்று பதிலிறுத்தான் கோகுலன்.

“தமிழ் வேட்பாளரெண்டாத் தருமலிங்கமும் தமிழன்தானே தம்பி. தருமலிங்கம் வெண்டாத் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாத்தப்படாதா என்ன?” என்ற தர்க்கத்தை முன்வைத்தார் பரசுராமன்.

பரசுராமன் தனது மடிக்குள்ளே மறைவாகக்கட்டி வைத்திருந்த பூனையை அவிழ்த்துவிட்டார் என்று எண்ணிக்கொண்ட கோகுலன்,

“தருமலிங்கம் வெல்லுவாரெண்டா உங்கட தர்க்கத்தில நியாயமிரிக்கி. வெல்லிற பக்கம் எல்லாரும் ஒண்டாக நிண்டாத்தானே வெற்றி நிச்சயம். தமிழர்களிர வாக்குகளப் பிரிக்கப் போற தருமலிங்கத்தின் பக்கம் நிண்டு வெற்றி வாய்ப்ப இழக்கப்படாதெல்லவா?” என்ற எதிர்வாதத்தை முன்வைத்தான்.

“அப்படிச் சொல்லாதீங்க தம்பி! 1965 ஆம் ஆண்டு பழய பொத்துவில் தொகுதியில தருமலிங்கம் சுயேச்சையா நிண்டு சம்மாந்துற மஜீத்திட்ட ஆயிரத்துச் சொச்சம் வாக்குகளால தோத்தவன். புறகுவந்த 1970 ஆம் ஆண்டு ‘எலக்சனி’லயும் பொத்துவில் தொகுதியில தருமலிங்கம் சுயேச்சையாப் போட்டிபோட்டு வெண்ட சம்மாந்துற மஜீத்தவிட ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள்தான் குறைய எடுத்தவன். என்னப் பொறுத்தவர தருமலிங்கம் இந்தமுற வெல்லுவான் தம்பி” என்றார் பரசுராமன்.

இப்படித் தருமலிங்கத்தை வெல்லுவாரென்று வெளிப்படையாகவே ஆதரித்து நிற்கும் பரசுராமனுக்கு நல்ல விளக்கமொன்று கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தான் கோகுலன்.

1965 இலும் 1970 இலும் இருந்த பழைய பொத்துவில் ஒற்றை அங்கத்தவர் தொகுதி வேறு. 1976 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் பின்னர் இப்போது இருக்கும் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதி வேறு. இப்போதுள்ள புதிய பொத்துவில் தொகுதி தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவரும் தெரிவாக வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழர்கள் இழந்து விடக்கூடாது. தமிழர்களுடைய வாக்குகள் பிரிந்து சிதறுண்டால் தெரிவு செய்யப்படும் இரு எம்.பிக்களுமே ஜலால்டீனும் முஸ்தபாவுமாக அமைந்து இரண்டு பேரும் முஸ்லீம்களாகவே வந்துவிட்டால் பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டதன் நோக்கமே அடிபட்டுப்போய்விடும். இந்த விளக்கத்தைக் கொடுத்துத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் கோகுலன்.

கோகுலனின் விளக்கத்தையும் மன ஆதங்கத்தையும் உள்வாங்கிய பரசுராமன்,

அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவமொன்று கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான் உட்பட எல்லோரும் சேர்ந்துதான் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயக்குழுவிடம் கோரிக்கை வைத்து வென்றெடுக்கப்பட்டது. அதற்காக உரிய ஆணைக்குழுவுக்கு மகஜர் அனுப்பியதிலும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்ததிலும் தருமலிங்கமும் ஒருவர். எனவே அவரைக் கைவிடக்கூடாது என்ற சாரப்பட தனது வாதத்தை முன்வைத்தார். அவிழ்க்கப்பட்ட பூனை மடியை விட்டு இப்போது வெளியே வந்தது.

தருமலிங்கம் மற்றும் பரசுராமன் மட்டுமல்ல காரைதீவில் விநாயகமூர்த்தி – முன்னாள் மல்வத்தை கிராமசபைத் தலைவர் செல்லத்துரை – கல்முனை அந்தோனிப்பிள்ளை – பாண்டிருப்பு வேல்முருகு மாஸ்ரர் – நாவிதன்வெளி சின்னத்துரை என்று கனபேர் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று காலம்காலமாகப் பாடுபட்டவர்கள். கட்சி அரசியலுக்கு அப்பால் பொது நோக்கில் இவர்களெல்லாம் இம்முயற்சியில் ஈடுபட்டவர்கள். 1976 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயக் குழுவுக்கு – மொறகொட ‘கொமிசனுக்கு’ அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சார்பில் கையளித்த அறிக்கையையும் புள்ளி விபரங்களையும் வரைபடங்களையும் தானும் தனது வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய வகுப்பறை நண்பனான அக்கரைப்பற்றுச் சண்முநாதனும் தயாரித்துக் கொடுத்த விடயங்களையும் நினைவுபடுத்திய கோகுலன்,

“சரி. அந்தக் கதைகள் ஒருபக்கமிரிக்க, நீங்க சொல்லிறாப் போலத் தருமலிங்கம் வெல்லிறதிக்குச் சாத்தியமில்ல” என்று முடித்தான்.

கோகுலனின் கூற்றால் பரசுராமனின் முகம் கடுகடுப்பாகியது.

“தம்பி! 1965 ஆம் ஆண்டிலயும் 1970 ஆம் ஆண்டிலயும் பழய பொத்துவில் தொகுதி ஒத்தை அங்கத்தவர் தொகுதியாயிரிந்தது உண்மதான். நீங்க சொன்னத நான் மறுக்கல்ல. ஆனா, அப்பத்தயப் பொத்துவில் தொகுதியிலிரிந்த எல்லாத் தமிழ் ஆக்களும் ஒண்டாச் சேந்து நிண்டு அப்ப சுயேச்சையாப் போட்டிபோட்ட தருமலிங்கத்த எப்படியாவது வெல்லப்பண்ணி அம்பாறை மாவட்டத் தமிழ் ஆக்களுக்கு ஒரு தமிழ் ‘எம்.பி’ கிடைக்க வேணுமெண்டு படாதபாடெல்லாம் பட்டு ‘பகீரதப்பிரயத்தனம்’ பண்ணின நேரத்தில அதக் கெடுத்தது சம்மாந்துற மஜீத்திக்கு வேல செய்த தமிழரசுக்கட்சி அரியநாயகம்தானே. அரியநாயகம் தமிழனெண்டு தருமலிங்கத்தோட நிண்டிருந்தா தருமலிங்கம் அப்பவே ‘எம்.பி’ யா வந்திரிப்பான்” என்று மேசையில் கையால் அடித்துக்கூறிய பரசுராமன்,

“அந்த ‘எலக்சனில எல்லாம் தருமலிங்கம் ஆக ஆயிரத்துச் சொச்சம் ‘வோட்’ டாலதானே தம்பி தோத்தவன்” என்று மீண்டும் தனது ஆதங்கத்தை அம்பலப்படுத்தினார்.

பரசுராமன் கூறுவதிலும் உண்மைகள் இல்லாமலில்லை என்பதைக் கோகுலன் உணராமலில்லை.

பழைய பொத்துவில் ஒற்றையங்கத்தவர் தொகுதியிலே 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே வெற்றியீட்டிய சம்மாந்துறை மஜீத்தும் தருமலிங்கமும் சுயேச்சையாகத்தான் போட்டியிட்டிருந்தனர். வெற்றியீட்டிய மஜீத் இரண்டாவதாக வந்த தருமலிங்கத்தைவிட 1472 வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருந்தார். இத்தேர்தலில் தமிழரசுக்கட்சி கொழும்பைச் சேர்ந்த எம்.எஸ்.காதர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அரியநாயகம் கட்சி நிறுத்திய வேட்பாளரான காதரையோ அல்லது சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழரான தருமலிங்கத்தையோ ஆதரிக்காமல் மஜீத்தையே ஆதரித்து வேலை செய்திருந்தார்.

1970 ஆம் ஆண்டுத்தேர்தலில் மஜீத் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராகவும் தருமலிங்கம் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிட்டிருந்தனர். இத்தேர்தலில் தருமலிங்கம் 1275 வாக்குகளால்தான் வெற்றிபெற்ற மஜீத்திடம் தோல்வியுற்றிருந்தார்.

இந்த இரு தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடம் நினைத்திருந்தால் தனது கட்சியின் வேட்பாளர் நியமனத்தைத் தருமலிங்கத்திற்கு அப்போது வழங்கியிருக்க முடியும். அப்படி நடைபெறாதது மட்டுமல்ல தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அரியநாயகமே தனது தோல்விகளுக்குக் காரணம் என்பதால் 1970 இன் பின்னர் வந்த காலங்களில் தமிழரசுக்கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் தருமலிங்கம் ஈடுபட்டிருந்தார். 1970 – 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில்

தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டுத் தமிழரசுக்கட்சியினதும் – தமிழர்விடுதலைக் கூட்டணியினதும் அபிமானத்தை இழந்திருந்தார்.

மேலும், தருமலிங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக விளங்கிய 1970 – 1977 காலப்பகுதியில்தான் பல்கலைக்கழக அனுமதியில் ‘தரப்படுத்தல்’ நடைமுறை – 1972 ஆம் ஆண்டு புதிய குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றம் – 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்களும் அதில் ஒன்பது உயிர்ப்பலிகளும் போன்ற சம்பவங்கள் நடந்தேறியும் இருந்தன. தமிழரசுக்கட்சிக்கு – தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் எதிரான ஒருவராகவே தருமலிங்கம் இக்காலப்பகுதியில் தன்னை அடையாளம் காட்டியிருந்தார். தமிழ் இளைஞர்களிடையே தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்ததும் இந்தக் காலப்பகுதியில் தான்.

1965 மற்றும் 1970 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் அப்போது அரசியலில் ஆர்வம் காட்டாத கனகரட்ணம் நட்பின் அடிப்படையில் மஜீத்தையே ஆதரித்திருந்தார்.

இந்தப் பின்னணியை மனதில் வைத்துக்கொண்டுதான் பரசுராமன் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினாரென்பது கோகுலனுக்கு நன்றாகவே புரிந்தது.

பரசுராமனின் பதில் கோகுலனுக்குச் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும்கூடத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“அரியநாயகம் செய்தது சரியெண்டு நான் சொல்லல்ல. அவர் அப்ப செய்தது தவறுதான். அப்போதய அக்கரைப்பற்று தெற்கு கிராமசபையில இருந்த உள்ளூர் அரசியல் போட்டியால அரியநாயகம் தருமலிங்கத்துக்கு எதிராக அப்படி நடந்திருந்தாலும் அது பிழதான். ஆரு செய்திருந்தாலும் பிழ பிழதான். அவர் விட்ட பிழயில தமிழரசுக்கட்சிக்கும் பங்கிருக்கு. அது வேற கத. காரதீவுக் கிராமசபையில இரிந்த உள்ளூர் அரசியல் போட்டியில நீங்களும் விநாயகமூர்த்தியும் எதிரிகளாக இரிந்தமாதிரித்தான் அதுவும். ஆனா தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் நியமனத்தக் கனகரட்ணத்திற்குக் குடுக்க இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமயா முன்வரல்லயா? இப்ப பிரச்சின வேற” என்று பரசுராமனிடம் பக்குவமாக எடுத்துச் சொன்ன கோகுலன்.

தமிழர் விடுதலைக்கூட்டணி இத்தேர்தலை வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கென்று தமிழீழத் தனிநாட்டை அமைப்பதற்கான ஆணையைத் தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ‘சர்வஜன வாக்கெடுப்பு’ ஆக அறிவித்துள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணி முஸ்லீம் ஐக்கிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கல்முனைத் தொகுதியில் கல்முனைக்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி சம்சுதீனையும் சம்மாந்துறைத் தொகுதியில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சட்டத்தரணி காசிம்மையும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்த்தொகுதியில் மக்கீன் மாஸ்ரரையும் வடமேல் மாகாணத்தில் புத்தளம் தொகுதியில் டாக்டர் இலியாஸ்சையும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிட வைத்துள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு

மாகாணமெங்கும் ‘தமிழீழம் தமிழர் தாயகம்’ என்ற கோஷமே தாரகமந்திரமாகியுள்ளது. பொத்துவில் தொகுதியிலும் தமிழ்க்கிராமங்களெங்கும் இதுதான் நிலைமை. பொத்துவில் தொகுதித் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் கனகரட்ணத்தின் பின்னால்தான் நூற்றுக்குத் தொண்ணூறு வீதம் தமிழர்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள். எனவே கனகரட்ணம்தான் வெல்லுவார். ஆகையால் காரைதீவும் பிரிந்து நிற்காமல் ஒன்றுதிரண்டு ஒரணியாய் நின்று கனகரெட்ணத்தின் வெற்றியில் முழுமையாகப் பங்களிக்க வேண்டும். இப்படிப் பாரிய விளக்கமொன்றைக் கொடுத்தான் கோகுலன்.

“அது சரிதான் தம்பி. தருமலிங்கம் நம்ம ஊரவன். கனகரட்ணம் யாழ்ப்பாணம் எலுவா? யாழ்ப்பாணத்தான எம்.பி ஆக்கிறதவிட நம்மட ஊரவனத்தானே வெல்ல வைக்கோணும்”.

36 தனது வாதம் எடுபடாததை உணர்ந்த பரசுராமன் கடைசியாகப் ‘பிரதேசவாத’த் துரும்பை எடுத்து வீசுகிறாரென விளங்கிக் கொண்டான் கோகுலன்.

“அண்டைக்குக் கல்முன வாடி வீட்டில வைச்சி விநாயகமூர்த்தியுடன் நீங்களும் சேந்துதானே ஒருமித்த குரலில கதிரவேற்பிள்ளை எம்.பி யிட்ட கனகரட்ணத்தை வேட்பாளராகப் போடுறத்துக்கு விருப்பத்தச் சொல்லக்கொள்ள கனகரட்ணம் யாழ்ப்பாணத்தச் சேந்தவர் எண்டு உங்களுக்குத் தெரியாதா?”

கோகுலன் தன் குரலின் சுருதியை மாற்றித் தடித்த குரலில்தான் இவ்வாறு கேட்டான். அவனுள் ஆத்திரம் அடிகோலத் தொடங்கியது. ஆனாலும் அடக்கிக் கொண்டான்.

“இல்லத்தம்பி. அப்ப எனக்குத் தெரியா. முன்னப்பின்ன நான் அவரோட பழகயும் இல்ல. ஆளயும் தெரியும். பேரயும் கேள்விப்பட்டிரிக்கன். அவர் பொத்துவில் எண்டுதான் நான் நினைச்சிருந்த” என்றார் பரசுராமன்.

தனது தற்போதைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காகப் பரசுராமன் பொய் உரைக்கிறார் என்பது கோகுலனுக்கு விளங்கிற்று. அவர் கனகரட்ணத்துடன் முன்பு பழகியிருக்காதுவிட்டாலும் கனகரட்ணத்தைப் பற்றி முழுமையாகக் கேள்விப்பட்டு அறிந்திருப்பார் என்பதில் கோகுலனுக்குச் சந்தேகம் எழவில்லை. எனினும், இப்போது வந்துள்ள பிரச்சினையை நேர்வழியில் வேறு விதமாக அணுக நினைத்தான்.

(தொடரும் …… அங்கம் – 32)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.