பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்குமா?…. நியூசிலாந்து சிற்சபேசன்.
இந்தியப் பொதுத்தேர்தல் முடிவு ஜூன் 4ம் திகதி வெளியாகின்றது. நூறுகோடியை எட்டிப்பிடிக்கக்கூடிய எண்ணிக்கையில் வாக்காளர்கள் காணப்படுகின்றனர். அதிலே கணிசமானவர்கள் வாக்குச்சாவடிப் பக்கம் திரும்பிப்பார்ப்பதே அரிதாகின்றது. இருந்தாலும்கூட, “திரும்பிப்பார்த்தோர்” எப்படியான தீர்ப்பை எழுதினர் என்பதே வானுயர்ந்துநிற்கும் கேள்வியாகும்.
இரண்டு பெரிய கட்சிகளும், தேர்தல் ஆரம்பமாக முன்னர் கட்டியெழுப்பிய பிம்பம் கரைந்திருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினுடைய வெற்றி தொடர்பில் மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியின் தோல்வி தொடர்பிலுமான கணிப்பீடு ஆட்டம் கண்டிருக்கின்றது. இரண்டு கட்சிகளுடைய வெற்றிக்குறியீடு “ஏணியும் பாம்பும்” விளையாடுகின்றது.
காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறு நீக்கம், முத்தலாக் தடைச்சட்டம், உத்தராகண்டில் பொதுச் சிவில் சட்டம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் பாரதிய ஜனதா அரசு மீதான அபிப்பிராயத்தை வழிப்படுத்தின. அயோத்தி இராமர் கோவில் விவகாரம் மாறுபட்ட, அதேவேளையில் – காத்திரமான உணர்வலையை ஏற்படுத்தியது.
அத்தகையதொரு பின்னணியிலேயே, 400 ஆசனங்களிலே வெற்றி என்னும் கோஷத்தை பாரதிய ஜனதாக் கட்சி உரத்துச் சொல்ல ஆரம்பித்திருந்தது. ஆனால், ஏப்ரல் 19ல் ஆரம்பமாகிய வாக்குப்பதிவு, அடுத்தடுத்த கட்டங்களைத் தொட்டபோது, 400 என்னும் இலக்கு கரையத் தொடங்கிவிட்டது.
ஊழலற்ற கட்சி என்ற பிம்பத்தை பாரதிய ஜனதா உருவாக்கியிருந்தது. அதனுடைய பெறுபேறுகளை அறுவடை செய்யத் தயாராகிய வேளையில், தேர்தல் பத்திர விவகாரம் வெளிப்பட்டது. கனவுகளைச் சின்னாபின்னமாக்கியது.
பட்டகாலேபடும் என்பதுபோல, தேர்தல் பத்திர விவகாரத்தோடு கைகோர்த்துக்கொண்டு உட்கட்சியிலே கனன்றுகொண்டிருந்த விஷயமொன்றும் விஸ்வரூபமெடுத்தது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக, தேர்தலில் போட்டியிடுகின்ற வாய்ப்பை, பிறகட்சிகளிலிருந்து பிரிந்துவந்து பாரதிய ஜனதாவில் சேர்ந்தவர்கள் தட்டிச்சென்றனர். அஃது உட்கட்சியிலே கசப்பை ஏற்படுத்தியது. அதனுடைய பிரதிபலிப்பு குஜராத், இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் வெளிப்படத் தொடங்கின.
விட்டகுறை தொட்டகுறையாக, பழைய பிரச்சினைகளும் “வரிசை” கட்டி வரத்தொடங்கின.
விவசாயிகள் டெல்லிக்கு போராட வந்தபோது, அவர்களைத் தலைநகரின் எல்லைப்புறங்களிலேயே அரசு தடுத்துவிட்டது. டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அதனால், பாரதிய ஜனதாக் கட்சியினரை தமது
மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என ஹரியாணா, பஞ்சாப் விவசாயிகள் தேர்தல்வேளையிலே பொங்கியெழுந்தனர்.
மணிப்பூர் கலவரம் கறைபடிந்த வரலாறாகிவிட்டது. அதனால், வடகிழக்கு மாநிலங்களில் தலைவைத்துப்படுப்பதே திண்டாட்டமாகிவிட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்றவற்றிலே ஏற்பட்ட பிளவுகளிலே பாரதிய ஜனதாக் கட்சியின் மறைகரத்தினால் மகராஷ்டிராவிலே அதிருப்திக்குப் பஞ்சமில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலே, பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெறக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகவே தெரிகின்றது.
மறுவளத்தில், தனித்து பாரதிய ஜனதாவுடன் மோதமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டதன் பலாபலன்களை காங்கிரஸ் கட்சி அறுவடை செய்யத் தொடங்கியிருக்கின்றது. பரந்துபட்ட “இண்டியா” கூட்டணி ஆரோக்கியமான அதிர்வுகளை ஆங்காங்கே ஏற்படுத்துகின்றது. அந்தவகையிலே, காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக்கொண்ட அணுகுமுறை மாற்றத்தின் விளைவுகளைக் களத்திலே காணமுடிகின்றது.
“ஹிந்தி பெல்ட்” என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களிலே ஏற்படக்கூடிய ஏற்றஇறக்கங்களின் அதிர்வு, டெல்லியிலே எதிரொலிக்கக்கூடியதாகும். அந்தவகையிலேயே, 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரின் தேர்தல் முடிவுகள் கவனிப்பை பெறுவனவாகும்.
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகாரில் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாரதிய ஜனதாக் கட்சிக்கு கடும் சவாலாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவருமே “இண்டியா” கூட்டணியில் உள்ளனர்.
தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலே காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்கின்றது. அதனால், இவ்விரண்டு மாநிலங்களிலேயுமான தேர்தல்களம் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகவே தெரிகின்றது.
அதேபோன்று, மகராஷ்டிரா, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், பாரதிய ஜனதாக் கட்சி மீதான அதிருப்தி, காங்கிரசுக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்பையே காணமுடிகின்றது.
தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிடைக்கக்கூடிய வெற்றி, அகில இந்திய அளவில் “இண்டியா” கூட்டணியின் கணக்கிலேயே வரவு வைக்கப்படக்கூடியதாகும்.
தன்னுடைய இருப்பைத் தக்கவைக்கக்கூடிய எண்ணிக்கையிலான தொகுதிகளிலேயேனும், வெற்றி பெற்றுவிடவேண்டும் என்னும்
இலக்குடனேயே காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் நுழைந்தது. மறுவளத்தில், பாரதிய ஜனதாக் கட்சி 400 தொகுதிகளில் வெற்றி என்னும் அலப்பறையுடன் தேர்தல் களத்துக்கு வந்திருந்தது.
இவ்வாறு எதிரும்புதிருமாகவே கட்சிகள் தேர்தல் கணக்குப் போட்டன. அதற்கான “மக்கள் தீர்ப்பு” ஜூன் 4ல் வெளியாகப்போகின்றது.
தேர்தல் முடிவு வெளியாகும்போது, கட்சிகளுடைய கணக்குகளெல்லாம் புரட்டிப்போடப்படலாம் என்றே கணிக்க முடிகின்றது.
கடந்த இரண்டு பொதுதேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுகின்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதனுடைய மறுபக்கம், பாரதிய ஜனதாக் கட்சியின் தொகுதி எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம்.
எதுஎப்படியாகிலும், “இண்டியா” கூட்டணிக்கு ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு எட்டாக்கனியாகவே தெரிகின்றது. ஆனால், பலமான எதிர் அணியாக எழுச்சியடையலாம். மறுவளத்தில், பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான “என்.டி.ஏ” கூட்டணிக்கு “மிடுக்கான” வெற்றி கிடைக்காது. ஆனால், ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு வசப்படக்கூடியதாகும்.
Thanks Sabes for your contribution
Congress party is already drowned with Rajeev
உங்களின் கருத்து சரியானதே! பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றாலும், 250-270 தொகுதிகளைப் பெற்று பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், சில பல எம்.பி-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இண்டியா கூட்டணிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாலும், தேவைப்படுகிற 272 எம்.பி-க்க்ளை அவர்களால் திரட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இ.வி.எம். இயந்திரங்களில் ஓட்டுக்களை மாற்றி பிஜேபி வெற்றி பெற்று விடுமோ என்கிற அச்சமும் பலரிடம் உள்ளது!