கோவில் கட்டி மோடியை கும்பிடுவோம்! …. மம்தா பானர்ஜி.
”பிரதமர் மோடி தன்னை கடவுள் என்கிறார். அவருக்கு கோவில் கட்டி நாங்கள் வழிபடுவோம்; பிரசாதமும் வழங்குவோம். அவர் விரும்பினால், ‘டோக்லா’ சிற்றுண்டியை வைத்து படையல் போடுவோம்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிண்டலாக தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலையொட்டி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு, சமீபத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘நான் மனிதப் பிறவி அல்ல. இந்த உலகில் ஏதோவொன்று செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, பரமாத்மா என்னை அனுப்பி உள்ளார்’ என்றார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர். இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தன்னை கடவுள்களின் கடவுள் என்கிறார். அவர் இப்படி தெரிவிக்க, பா.ஜ., நிர்வாகி ஒருவர், ‘கடவுள் ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்’ என்கிறார். பிரதமர் மோடி கடவுள் என்றால் அரசியல் செய்யக்கூடாது; கலவரத்தை துாண்டிவிடக்கூடாது.
நாங்கள் மோடிக்கு கோவில் கட்டி வழிபடுவோம். பூ, மாலை, பிரசாதம் வழங்குவோம். அவர் விருப்பப்பட்டால், ‘டோக்லா’ சிற்றுண்டியையும் வைத்து, படையல் போடுவோம்.
என்னை அதிகம் நேசித்த வாஜ்பாய் போன்ற பல பிரதமர்களுடன் நான் பணியாற்றி உள்ளேன். ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், தேவகவுடா போன்ற பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், மோடியை போல யாரையும் நான் பார்த்ததில்லை; இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவையே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.